மஞ்சை வசந்தன்
“விடுதலை’ பெரியார் தொடங்கிய நாளேடு! பெயருக்கு ஏற்ப, ஆரிய ஆதிக்கத்திலிருந்து விடுதலை! ஆணாதிக்கத்திலிருந்து விடுதலை! மூடநம்பிக்கை-களிலிருந்து விடுதலை! மத மவுடீகங்களிலிருந்து விடுதலை! ஜாதிப் பிணைப்பிலிருந்து விடுதலை! அறியாமை யிலிருந்து விடுதலை! அடிமைத் தளையிலிருந்து விடுதலை! ஆதிக்கம் எந்த வடிவில் வந்தாலும் அதிலிருந்து விடுதலை பெற வேண்டும்! அதற்கு என்ன வழி என்று ஒவ்வொரு நாளும் விழிப்பூட்டும், தீர்வு கூறும், வழிகாட்டும் ஏடு விடுதலை!
சமூகநீதிக்கு எதிரானவற்றிற்கு எதிராய் சமர் புரிவது விடுதலை! சதிகாரர்களின் சதிகளை முறியடித்து, சாமானிய மக்களை கை தூக்கி விடுவது விடுதலை! ஆட்சியாளர்களை இடித்துரைத்து சரியான தடத்தில் செல்ல வழிகாட்டுவது விடுதலை! சமூகநீதிக்கு எதிராய் இருப்பது அரசியல் சாசனமேயானாலும், நீதிமன்றங்களேயானாலும், தயங்காது தட்டிக் கேட்டு நீதி கிடைக்கச் செய்யும் துணிவுமிக்க, உறுதிமிக்க ஏடு விடுதலை!
எதிர்காலத் தலைமுறை விழிப்போடும், அறிவோடும், துணிவோடும், தன்மானத்தோடும், தடையில்லா, தளையில்லா சுதந்திர வாழ்வுக்கு வழிகாட்டுவது விடுதலை! 88 ஆண்டுகளாகத் தொடர்ந்து வெளிவரும் உலகளவில் ஒரே பகுத்தறிவு ஏடு விடுதலை!
இலாப நோக்கம் இன்றி, மக்கள் நலன் ஒன்றையே நோக்காகக் கொண்டு வெளியிடப்படும் ஒரே ஏடு விடுதலை!
ஆட்சியாளர்களுக்கும், அரசியல் கட்சிகளுக்கும் பொது மக்களுக்கும், அலுவலக ஊழியர்களுக்கும் ஒவ்வொரு நாளும் திசைகாட்டி, வழிகாட்டி வரும் ஒரே நாளேடு விடுதலை! ஆசிரியர் அவர்கள் விடுதலையில் வெளியிடும் அறிக்கைகள் ஒவ்வொன்றும் மேற்கண்ட இலக்குடன் எழுதப்-படுபவை! அப்படி எழுதப்படும் அறிக்கைகள் எத்தனையோ வரலாற்றுச் சிறப்புமிக்க மாற்றங்களை உருவாக்கி இருக்கின்றன. போராட்டங்களுக்கும், அதன் வழி மக்கள் எழுச்சிக்கும் வழி வகுத்துள்ளன.
கலைஞர் ஆட்சிக் காலத்திலும், தற்போது திராவிட மாடல் ஆட்சி நடத்தும் மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் ஆட்சிக் காலத்திலும், விடுதலை சிறந்ததொரு வழிகாட்டியாகச் செயல்படுவதை அவர்களே பல நேரங்களில் கூறிப் பாராட்டியுள்ளனர்.
“விடுதலை”ஏட்டில் வெளிவரும் ஆசிரியர் அவர்களின் அறிக்கைகள் தொலைக்காட்சியின் விவாத நிகழ்ச்சிகளுக்கு வித்தாக அமைந்து வருவதைப் பலரும் கூறியுள்ளனர். பிற்பகல் 3:00 மணி அளவில் ஆசிரியர் அறிக்கையைப் படித்து விவாதத் தலைப்புகள் தொலைக்காட்சி நெறியாளர்களால் முடிவு செய்யப்படுவது வழக்கமாகவுள்ளது.
அச்சிடப்பட்ட ‘விடுதலை’யைப் படிப்பவர்கள் ஒருபுறம் என்றால், இணையவழி படிப்பவர்கள் உலக அளவில் ஏராளம்! அனைத்து தரப்பு மக்களுக்கும் அறிவு, விழிப்பு, மானம், சமத்துவம், நல்லிணக்கம், நல்லொழுக்கம் என்று வாழ்க்கைக் கூறுகளை விளக்கும் ஏடு.ஆசிரியர் எழுதும் வாழ்வியல் சிந்தனைகள் இந்த ஏட்டில்தான் தொடர்ந்து வெளிவந்து, உலக சாதனை படைத்துவருகிறது.
இத்தகு விடுதலைக்கு இப்போது வயது 88. தமிழர் தலைவர் ஆசிரியராய்ப் பொறுப்பேற்று 60 ஆண்டுகள் நிறைவு பெறுகிறது. அதன் சிறப்புக் கருதி 60 ஆயிரம் “விடுதலை” சந்தாக்கள் வழங்க தமிழர்கள் தொடர்ந்து முயன்று வருகின்றனர்.
இந்த முயற்சியின் மூலம் ‘வீடுதோறும் விடுதலை’ என்கிற உயரிய இலக்கை எட்ட வேண்டும். இதற்கு அனைவரும் உதவ வேண்டும்.
அரசியல், வாழ்வியல், அறிவியல், மருத்துவம், சட்டம், கல்வி, வரலாறு, உடல்நலம் என்று பல்துறைச் செய்திகளையும், அன்றாடச் செய்திகளையும் வெளியிடுவதன் மூலம் விடுதலை ஏட்டைப் படிப்பதன் மூலம் பல்துறை அறிவையும் பெற முடியும்.
இப்படிப்பட்ட சிறப்புகளைக் கொண்டிருப்பதால் வீடுதோறும் விடுதலை வேண்டும் என்பது கட்டாயம். ‘விடுதலை’ நாட்டுக்கும் வீட்டுக்கும் பாதுகாப்பு! ‘விடுதலை’ ஏடு இனத்தின் காப்பரண்! அறிவு ஒளியும் தன்மானச் சூடும் தரும் சுடர் நெருப்பு!
குன்றக்குடி அடிகளார் கூறியது போல தமிழர் இல்லம் என்பதன் அடையாளம் விடுதலை ஏடு இருப்பதுதான்!
இல்லத்தில் அதன் இருப்பு -_ என்றும் இணையில்லாப் பாதுகாப்பு!ஸீ