கி.வீரமணி
நம் இனத்தின் மூச்சுக்காற்று தந்தை பெரியார் தந்த லட்சியங்கள் _ கொள்கைகள் என்றால், அவற்றை வென்றெடுக்க நாம் களத்தில் நின்று போராட நம் அறிவாசான் தந்த அறிவாயுதம்தான் ‘விடுதலை’ என்னும் முனை மழுங்காத போர்க் கருவி!
கரோனா (கோவிட் 19) தொற்று உலகத்தையே அச்சுறுத்தி, பல லட்சம் உயிர்களுக்கு-மேல் பலி கொண்டு, 200 நாடுகளுக்குமேல் உலகமெங்கும் பரவியபோது, ஊரடங்கு-மூலம், ஒதுங்கி, தனி நபர் இடைவெளிமூலம் தன்னெழுச்சியான தனிமைப்படுத்திக் கொள்ளும் பாதுகாப்புமூலம்-தான் இதன் வீச்சிலிருந்து மனித குலம் தப்ப முடியும் என்ற நிலை இருந்தபோதும், ஏனைய பெரிய ‘பிரபல’ நாளேடுகள் எல்லாம் தங்களை முடக்கிப் போட்டு ஓய்ந்திருந்தாலும், ‘விடுதலை’ என்ற நம் ஏடு, அது அடக்கமாக முன்னிலும் வேகமாக தனது பயணத்தை _ களங்களில் கலங்காது போரிடும் ஒரு படை வீரனைப்போல நின்று, வென்று காட்டி இடையறாது போராடுகிறது!
இப்படையில் சேரும் வீரர்களும், இந்த அறி வாயுதத்தின் வீச்சை _ புது விளைச்சல்களாக்கி (பரப்புவது மூலம்), களத்து மேட்டில் கொணர்ந்து கதிர் அடித்து, மூட்டை மூட்டையாக விளைச்சலைக் கண்டு மகிழ்ச்சியுறும் உழவனைப் போல நம்மை மகிழ்விக்கிறார்கள்!
அறியாமை இருட்டினைப் போக்கி, ஆழ் கடலில் பயணிக்கும் பெருங் கப்பல்களுக்கும்கூட நிலைத்து நின்று வெளிச்சம் காட்டும் கலங்கரை விளக்கு வெளிச்சம்தானே முக்கியம்! அதுதான் நம் ‘விடுதலை’யின் நிரந்தரப் பணி!
இந்த 88 ஆண்டுகால வாழ்வில் ‘விடுதலை’ சந்தித்த சோதனைகளும், வேதனைகளும் ஏராளம் ஏராளம் என்றாலும், சோர்ந்து-விடவில்லை அதன் பயணம்! இலக்கை நோக்கிய _ இடர்களைத் துச்சமென மதித்த பயணம்.
கரோனா தொற்று என்பது அச்சுறுத்தும் கொடூரமானதுதான். ஆனாலும், நம்மைப் பொறுத்தவரை அது ஜாதி, தீண்டாமையைவிட கொடிய தொற்றா?
பெண்ணடிமையைவிடவா கேவலமான தொற்று? மூடநம்பிக்கை நோய்களைவிடவா தீராதா தொற்று? இல்லை! இல்லவே இல்லை!
கரோனா வந்தவர்கள் குணமாகி வீடு திரும்பியுள்ளனர்.
ஜாதி, தீண்டாமை, பெண்ணடிமை, மூடநம்பிக்கைத் தொற்று நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஒரே ஒரு மருந்து தந்தை பெரியாரின் சுயமரியாதைச் சூரணம்தானே! அதுதானே அவர்களைக் ‘குணப்படுத்தி’ மனிதம் கொழிக்கச் செய்யும் _ மனிதர்களாக்கிடும் ஒரே சிகிச்சை மருத்துவம்!
அதனை நாள்தோறும் நடத்தவே நம் ஏடு 88ஆம் வயதிலும் ஏறு போன்று, உலக சுற்றுப் பயணத்தை, பெரியார் கண்ட இனிவரும் உலகம் _ கனவல்ல, இதோ வந்துவிட்ட உலகம் என்பதாக வீறுகொண்டு நடைபோடுவதற்கு, மேலும் நம் வாசக நேயர்களின் வற்றாத ஒத்துழைப்பை இருகரம் கூப்பி _ நன்றி சொல்லி வேண்டுகிறது!
‘விடுதலை’ வாழ்ந்தால் எவரே வீழ்வர்?
‘விடுதலை’ வீழ்ந்தால் எவரே வாழ்வர்?
என்றுணர்ந்த எம் வாசகர்களே! பயணங்-களை வெற்றிப் பயணமாக்கிட விளைச்சலைப் பெருக்குவீர்!ஸீ