வாசகர் மடல்

ஏப்ரல் 01-15 2020

ளம் தலைமுறையினரின் அன்பு வணக்கம். சில மாதங்களாக ‘உண்மை’, ‘பிஞ்சு’ முகவரின் வேண்டுகோளுக்கிணங்கி ‘உண்மை’ ‘பெரியார் பிஞ்சு’ இதழ்கள் படித்து வருகிறேன். ஆசிரியரின் தலையங்கம் அரசியல்வாதிகளுக்கும், சட்டம் பயின்றோருக்கும் விளக்கி, விளக்கம் தந்து நீங்கள் ஒரு சட்ட நிபுணராகவும், பகுத்தறிவு ஆசிரியராகவும் விளங்கி வருவதை ‘உண்மை’, ‘பெரியார் பிஞ்சு’ இவற்றின் மூலம் தெரிந்து வருகிறேன். மாதாமாதம் வரும் மூடநம்பிக்கைப் பண்டிகைகளுக்கு ஏற்றவாறு பெரியாரின் கட்டுரைகளை வெளியிட்டு, புரிதலை உண்டாக்கி, உலகமே போற்றும் தலைவராக உலா வருகிறீர்கள். பல் வேறுபட்ட கேள்விளுக்கு எளிமையான பதில் தருவது தங்களுக்குள்ள தனிச் சிறப்பை மட்டுமே காட்டுகிறது. பொன்விழா மலரிலும் தன்னடக்கம் பெற்ற, தன்னிகரில்லா தலைவர்களின் மற்றும் வாசகர், முகவர்களின் பாராட்டையும் பொன்விழா மலரிலே இடம்பெறச் செய்து ‘மலருக்கே’ மலர் சூட்டியிருக்கிறீர்கள். இயற்கைச் சூரியனைவிட பகுத்தறிவுச் சூரியனாம் தந்தை பெரியாரின் கொள்கைக் கருத்துகளே உயர்ந்தவை, சிறந்தவை, பயனுள்ளவை என்று, என்றும் பாராட்டும் ஒரு குடும்பத் தலைவியின் பாராட்டுகள் என்றென்றும் தங்களுக்கும் தங்களின் உண்மைக்கும் உரியவையே என்று வாழ்த்தும்.

அன்புப் பேத்தி,

– கிருஷ்ணவேணி, சிங்கிபுரம்.

மானமிகு ஆசிரியர் அவர்களுக்கு, வணக்கம். மார்ச் 1_15, உண்மை இதழ் படித்தேன். சி.ஏ.ஏ., என்.பி.ஆர்., என்.ஆர்.சி., பற்றிய தங்களின் தலையங்கம் தெளியாத உள்ளங்களையும், தெளிவடைய வைக்கும் என நம்புகிறேன். ஆரியத்தின் ஆணிவேரை அய்யா. வழியில் அறுத்தெவதால்தான், இன்று அலறித் துடிக்கிறது ஆரியம். மக்களை ஏமாற்றிப் பிழைக்கவோ, எதிர்ப்போரை அடக்கி அழிக்கவோ இது ஒன்றும் வேத காலமல்ல; சூது வலைகளை அறுத்தெறியும், அறிவியல் கொடிகட்டிப் பறக்கும் காலம். எனவே, விழிப்புற்ற சமுதாயம் இனியும் தூங்காது. இறுதி வெற்றி சனாதன ஆட்சிக்கல்ல; மக்களாட்சிக்கே! தமிழ்நாட்டில் நடக்கும் உரிமைப் போரிலும் வெற்றி தமிழர்களுக்கே, திராவிட இயக்கங்களுக்கே தவிர, அடக்கி ஒடுக்க நினைக்கும் ஆர்.எஸ்.எஸ். கும்பல்களுக்கல்ல. கடந்த கால வரலாறு சுட்டிக்காட்டும் உண்மை இதுதான்!

தியாகத்தாய், அன்னை மணியம்மையார் பற்றிய மஞ்சை வசந்தன் அவர்களின் கட்டுரை அன்னையாரின் ஆளுமைக்கு சிறந்த எடுத்துக்காட்டு! இயக்க வரலாற்றையே தன் வரலாறாக்கிக் கொண்ட தங்களின் தொண்டறம் காலத்தாலழியாதது! ‘பறை’ கவிதை, ஜாதிக்கோட்டையை தகர்த்தெறியும் ஏவுகணை! மருத்துவக் குறிப்புகள், அறியாமையை அகற்றும் ஊட்டச்சத்து மாத்திரைகள். ‘சஞ்சீவிச்சாலை’ சிறுகதையைப் படிக்கும்போது நித்யானந்தா போன்றோர்தான் நினைவுக்கு வருகிறார்கள். இப்படிப்பட்ட சமுதாயக் குப்பைகள் அகற்றப்பட்டே ஆகவேண்டும். மற்றும் அய்யாவின் வைக்கம் போராட்டம் பற்றிய நேயன் அவர்களின் கட்டுரை, விவேகானந்தர் பற்றிய உண்மையான விளக்கம். புராண, இதிகாசப் புரட்டுகளை அம்பலப்படுத்தும் புதுமை நாடகம் அனைத்தும், படிக்க மட்டுமல்ல, இதழைப் பாதுகாக்கவும் தூண்டுகிறது!

– நெய்வேலி க.தியாகராசன்,

கொரநாட்டுக்கருப்பூர். 

மார்ச் 1-15, 2020 உண்மை இதழின் முகப்பு அட்டைப்படமாக, தியாகமே வடிவான திராவிடத்தாய் மணியம்மையாரின் அழகுமிகு படம், ‘உண்மை’ இதழுக்கு மேலும் மெருகூட்டி, அழகுக்கு அழகு சேர்த்தது போல்அமைந்திருந்தது. தியாகமே வடிவான திராவிடத்தாய் நூற்றாண்டு நிறைவு விழா! என்னும் தலைப்பில் மஞ்சை வசந்தன் தீட்டிய முகப்புக் கட்டுரை, இதழுக்கே முத்தாய்ப்பாக அமைந்திருந்தது. இதில் அவர் (பெரியார்) தொண்டுக்கு முழுக்க முழுக்க என்னை ஆளாக்கி, அவர் நலத்தை கண்ணெனப் பாதுகாக்க ஒரு தாயாக என்னைப் பாவித்துக் கொண்டு, அவரை ஒரு குழந்தையாகவே மனதில் நிறுத்தி, அந்தக் குழந்தைக்கு ஊறு நேரா வண்ணம் பாதுகாப்பதிலேயே மகிழ்ச்சி கொண்டேன் என, பின்னாளில் அம்மையார் கூறியதை இப்போது  நம் வாசகர்களுக்கு நினைவுபடுத்திய ‘வசந்தன்’ அவர்களுக்கு கோடானகோடி நன்றி! வெல்க அம்மையாரின் நூற்றாண்டு நிறைவு விழா!

செங்கல்பட்டு சா.கா.பாரதிராஜா அவர்கள் தீட்டிய ‘பறை’ என்னும் கவிதை தேனாக இனித்தது.

இக்கதையில் நான் படித்ததில் பிடித்தது, “பறையிலும் தவிலிலும், ஒரே தோல் என்றாலும், பாகுபாடு பார்த்தது ஜாதித் தோல்!’’ என்கிற அதி அற்புத வரிகள்.

ஆசிரியர் பதில்கள் பகுதியில், பாட்டாளி மக்கள் கட்சி, ரஜினியிடமும் “முன்பதிவுக்கு’’ முற்படுவது பற்றி என்ன நினைக்கிறீர்கள் என, வந்தவாசி வாசகர் கேட்ட கேள்விக்கு ஆசிரியர் கூறிய பதிலைப் படித்தேன்; ரசித்தேன்!

உங்கள் உண்மை வாசகர்,

தி.பொ.சண்முகசுந்தரம், திட்டக்குடி.

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *