முகப்புக் கட்டுரை : சாமியார்களின் மோசடிகளும் சரச சல்லாபங்களும்! பக்தி வியாபாரம் பாரீர்!

நவம்பர் 01-15 2019

 

 மஞ்சை வசந்தன்

சாமியாராய்ப் போனவன் சபலப்பட்டு லீலைகள் செய்தான் அன்று. ஆனால், காமலீலைகள் செய்வதற்கென்றே சாமியாராய் நிறைய பேர் புறப்பட்டுவிட்டார்கள் இன்று.

இப்படிப்பட்ட சாமியார்களின் தொடக்க வாழ்வைத் தோண்டினால், கஞ்சா விற்றவன், கள்ளத்தனம் செய்தவன், டீக்கடை நடத்தியவன், குதிரைவண்டி ஓட்டியவன், குறி சொன்னவன், கொலை செய்தவன் என்று வண்டவாளங்கள் வெளிப்படும்.

இப்படிப்பட்ட சாமியார்கள் பொதுவாகச் செய்வது _ பொது இடங்களை ஆக்கிரமிப்பது, அற்புதம் செய்வதாய் விளம்பரப்படுத்துவது, அரசியல்வாதிகளோடு கை கோர்ப்பது, அப்பாவிப் பெண்களை தங்கள் வலையில் வீழ்த்திச் சீரழிப்பது. அதிகப் பெண்கள் கிடைக்கும்போது அரசியல்வாதிகளோடு பங்கு போட்டு, அவர்களையும் வலையில் வீழ்த்தி தங்களைப் பாதுகாத்துக் கொள்வது என்பனவாகும்.

இந்தச் சாமியார்களில் குடியரசுத் தலைவரே காலில் விழும் “ஹை கிளாஸ்’’ சாமியார்கள் முதல், காத்தாயியும், குப்பாயியும் குறைதீரச் செல்கின்ற “லோ கிளாஸ்’’ சாமியார்களும் உண்டு. பக்தி மயக்கத்தில் செல்கின்ற பக்தர்களில் படித்தவர்களும் உண்டு; பாமரர்களும் உண்டு.

காஞ்சி காமகோடி ஜெயேந்திரர்

இந்தியாவில் பந்தா காட்டிய உயர்நிலைச் சாமியார் காஞ்சிபுரத்துக் காமகோடி பீடத்தில் அமர்ந்திருந்த “காமகோடி’’தான். நல்ல பொருத்தமான பெயர்! காமம் கரைபுரண்டு நுங்கும் நுரையுமாய் பொங்கிவழிவது மட்டுமல்லாமல், கொலை, குத்து, வெட்டு என்று எல்லாம் அங்கு அரங்கேற, காமகோடியல்ல, காமகேடி என்று பெயர் பெற்றவர்.

குடியரசுத் தலைவர், பிரதமர் முதல் உயர்நிலை அரசியல் தலைவர்கள், கார்ப்பரேட் முதலாளிகள் எல்லாம் வந்து தரிசிக்கும் தகுதி பெற்றவர். கவுண்டமணி பாணியில் சொல்ல வேண்டுமானால், இவர் ஓர் “ஆல் இன் ஆல் அழகுராஜா!’’ அனைத்திலும் எக்ஸ்பர்ட்!

இதோ சில:

தண்டத்தைவிட்டு பெண்ணோடு ஓடியவர்!

1986இல் ஜெயேந்திரர் தண்டத்தைப் போட்டுவிட்டு யாருக்கும் தெரியாமல், வெங்கட்ராமன் என்பவரின் பெண்ணை இழுத்துக் கொண்டு ஓடினார். ஒரு மாதத்திற்கு மேல் குடும்பம் நடத்தினார். அப்போது ஓடிப்போன இந்த ஓடுகாலி சங்கராச்சாரியை, சி.பி.அய். கொண்டு தேடிக் கண்டுபிடித்தனர். பின்னர் தலைக்காவிரிக்குப் போய் அந்தப் பெண்ணைப் பிரிந்து வந்த தகவல்கள் _ அப்போது ஊடகங்களுக்குப் பரபரப்புச் செய்திகள். அந்தக் கால இடைவெளியில் சின்ன சங்கராச்சாரி விஜயேந்திரனை நியமித்தது சங்கரமடம். இரண்டு சங்கராச்சாரிகள் இருந்ததன் ரகசியம் இதுதான்.

அனுராதா ரமணன் புகார்:

“1992ஆம் ஆண்டு காஞ்சி சங்கரமடத்தில் இருந்து எனக்கு அழைப்பு வந்தது. நானும் இன்னொரு பெண்ணும் (இவர்தான் சங்கராச் சாரியாரிடம் அறிமுகப்படுத்தியவர்) மடத்துக்குச் சென்றோம். அங்கு உட்கார்ந்து அவருடன் பேசிக் கொண்டு இருந்தோம். அப்போது சங்கராச்சாரியார் ஆன்மிகம் பற்றிப் பேசினார். நான் தலைகுனிந்து எழுதிக் கொண்டு இருந்தேன். ஆன்மிகவாதியின் பேச்சு திடீரென்று ஆபாசமாக மாறியது. அப்போது நான் என் தலையை நிமிர்த்தி அவரைப் பார்த்தேன். அப்போது எனக்கு தூக்கி வாரிப் போட்டது. என்னுடன் வந்து இருந்த பெண் சங்கராச்சாரியாருடன் மிக நெருக்கமாக உட்கார்ந்து கொண்டு இருந்தார்.

அவர் என்னிடம் மிக ஆபாசமாகப் பேசினார். அவரது விருப்பத்துக்கு என்னை இணங்கும்படி வற்புறுத்தினார். என்னால் கோபத்தைத் தாங்கிக் கொள்ளமுடியாமல் நீயெல்லாம் மனுஷனா என்று கேட்டு விட்டு வந்து விட்டேன்.

அப்போது ஒரு வாரப் பத்திரிகையில் எனக்கு ஏற்பட்ட துன்பத்தைத் தொடராக எழுதி வந்தேன். அப்போதும் எனக்கு மிரட்டல் வந்தது. அதேபோல போலீசில் புகார் கொடுக்க முடியாதபடி அவர்கள் எனக்குப் பல தொல்லைகள் கொடுத்தார்கள்.’’ என்று எழுத்தாளர் அனுராதா ரமணன் கூறியுள்ளார்.

ரவி சுப்பிரமணியம் வாக்குமூலம்:

ஜெயேந்திரர் பல பெண்களுடன் இருந்துள்ளதை நேரில் பார்த்த ரவி சுப்பிரமணியம் கூறிய அதிர்ச்சிகரமான தகவல்கள்:

மதிய நேரத்தில் பெண்களுடன்:

ஜெயேந்திரருக்கு பெண்கள் விஷயத்தில் நிறைய தொடர்புகள் இருந்தன. மதிய நேரத்திலேயே தனது அறைக்குள் பல பெண்களுடன் அவர் இருப்பதைப் பார்த்திருக்கிறேன்.

மடத்தின் சைல்ட் டிரஸ்ட் மருத்துவமனையின் இயக்குநர் நடராஜனின் மனைவி பிரேமா, அய்தராபாத்தில் ஆல் இந்தியா ரேடியோவில் வேலை பார்க்கும் பெண் ஆகியோரை ஜெயேந்திரருடன் தவறான நிலையில் நான் பார்த்திருக்கிறேன்.

புளூ பிலிம்:

இதைத் தவிர நிறைய புளூ பிலிம் படங்களையும் ஜெயேந்திரர் பார்ப்பார். மதியம் 1:30 மணி முதல் மாலை 3 மணி வரை இதெல்லாம் நடக்கும்.

அப்போதைய தினபூமி, ஜூனியர் விகடன், நக்கீரன், குமுதம் ரிப்போர்ட்டர் இதழ்களைப் புரட்டினால் இவர் புரண்டதெல்லாம் புற்றீசலாய்ப் புறப்படும்.

ஷிவ்முராத் திவிவேதி (பார்ப்பன சாமியார்):

சாமியார் சிவ்முராத் திவிவேதி இந்து மதத்தைக் கேடயமாக வைத்துக் கொண்டு விபசாரம் செய்து வருவதாகப் புகார்கள் வந்தன. இதனால் சந்தேகம் அடைந்த டெல்லி போலீசார் சிவ்முராத் திவிவேதியையும் அவரது கோவில், வீடுகளையும் கண்காணித்தனர். போலீஸ் விசாரணையில் கான்பூர் சாய்பாபா கோவிலில் சுரங்க அறைகள் இருப்பதும் அங்கு விபசாரம் நடப்பதும் உறுதியாகத் தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் சிவ்முராத் திவிவேதி-யின் கோவிலில் அதிரடிச் சோதனை நடத்தினார்கள். அப்போது அங்கு விபசாரம் நடந்து கொண்டிருப்பது தெரிந்தது.

இதனைத் தொடர்ந்து உடனடியாகப் போலி சாமியார் சிவ்முராத் திவிவேதி கைது செய்யப்பட்டார்.

ஆசாராம் பாபு:

 

குஜராத்தின் ஆமதாபாத் அருகே, ஆசிரமம் நடத்தி போலீசாரிடம் மாட்டிக்கொண்ட ஆசாராம் பாபு, லட்சக்கணக்கில் சீடர்கள் கொண்டவர். ஆசாராம் பாபு வடஇந்தியாவில் இருக்கும் பல மதகுருக்களில் ஒருவர்.

நில அபகரிப்பு, கொலை, பாலியல் பலாத்காரம் போன்ற குற்ற நடவடிக்கைகளுக்காக இவர் மீது வழக்குகள்.

மத்திய டில்லியில் உள்ள, கமலா மார்க்கெட் போலீஸ் ஸ்டேஷனுக்குச் சென்ற, பெயர் குறிப்பிடப்படாத இளம்பெண் ஒருவர், 72 வயதான ஆசாராம் பாபு தன்னை பாலியல் பலாத்காரம் செய்து விட்டதாக, புகார் கொடுத்துள்ளார். அந்தப் புகாரில், பலாத்கார சம்பவம், ராஜஸ்தானின் ஜோத்பூர் நகரில் உள்ள, ஆசாராம் ஆசிரமத்தில் நடந்ததாக அப்பெண் கூறியதால், வழக்குப் பதிவு செய்த போலீசார், விசாரிக்குமாறு, ராஜஸ்தான் போலீசாரைக் கேட்டுக் கொண்டனர். புகாரையும் அங்கு அனுப்பினர்.

உத்தரப்பிரதேசம் ஷாஜகான்பூரைச் சேர்ந்த அப்பெண், சாமியார் ஆசாராம் பாபுவிடம் ஆசி பெறுவதற்காக, தனது 15 வயது மகளுடன் 13.8.2013 அன்று ஜோத்பூர் சென்றுள்ளார். தனது மகளுக்கு பேய் பிடித்திருப்பதாகச் சொல்லி அவரிடம் சென்று முறையிட்டுள்ளார். 15.8.2013 அன்று அதற்கான சடங்குகளைச் செய்கிறேன் என்று ஆசாராம் பாபு சொல்லியிருந்தார். கிரியைகள் செய்யும்போது, நீங்கள் இருக்கவேண்டிய அவசியம் இல்லை என்று சொன்னாலும், அந்தப் பெண்ணின் குடும்பம் அங்கேயே தங்கி இருந்தது.

அப்போது ஆசாராம் பாபு தன்னை மானபங்கம் செய்ததாக மைனர் பெண், தனது தந்தையிடம் கூறினார். இதுகுறித்து மைனர் பெண் 22-.8.2013 மாலை புகார்அளித்தார். இவன் பல மைனர் பெண்களை வன்புணர்வு செய்து கொன்றவன். அவனுடைய குற்றச் செயல்களுக்காகச் சிறையில் அடைக்கப்பட்டான்.

பிரம்மரிஷி சுபாஷ் பத்திரி: 

தன்னிடம் வரும் பெண்களை இறுக்கி அணைத்தும், பாலுறவுத் தொல்லைகள் கொடுத்தும் புகாருக்கு உள்ளாகி விசாரிக்கப்பட்டவன். ஆந்திராவில் மெகபூப் நகர் மாவட்டம் படுதால் கிராமத்தில் மகேஸ்வரா மகாபிரமிடு என்கிற பெயரில் தியான மண்டபம் அமைத்து 136 ஏக்கரில் ஆசிரமமே நடத்தியவன். தினம் ஒரு லட்சம் பேர் தியானத்தில் கலந்து கொள்ள, அங்குவந்த பெண்களிடம் தவறாக நடக்க, அப்படங்கள் ஊடகங்களில் வெளிவந்து சந்தி சிரிக்க, போலீஸ் வழக்குப் பதிந்து விசாரிக்க, பிரச்சனை பெரிதானதால் ஆசிரமத்தை விட்டே ஓடிவிட்டான்.

ரஜினீஷ் குரோவா:

இவன் பிரசாதம் என்னும் பெயரில் மயக்க பிஸ்கட்டுகளைக் கொடுத்து, பெண்களை வன்புணர்ச்சி செய்தவன்.

ஜெய்பூரில் இரு பெண்களை இவ்வாறு வன்புணர்ச்சி செய்தான். இதுசார்ந்த படங்கள் ஊடகங்களில் வெளிவந்து பரபரப்பாகியது.

22 வயதுடைய பெண் ஜெய்பூர் காவல் நிலையத்தில் இச்சாமியாருக்கு எதிராகப் புகார் அளித்தார்.

சந்தோஷ் மாதவன் (சாமி அமிர்த் சைத்தன்யா):

கேரளாவில் இவன் நடத்திய காமலீலைகள் நீதிமன்றம்வரை சென்று, கேரள நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டான். நான்கு மைனர் பெண்களை கற்பழித்த கொடூரனான இவன், பக்தர்களிடம் பணமும் ஏராளமாய்ப் பறித்துள்ளான்.

ஆணுறுப்பு அறுபட்ட கேரள சாமியார்!

கேரள மாநிலம் கோலாஞ்சேரியைச் சேர்ந்த ஸ்ரீஹரி என்பவன் அவ்வூரில் டீ கடை நடத்திவந்தான். கொல்லம் நகரில் உள்ள ஒரு சாமியாரின் சமாதிக்குச் சென்று சாமியார் வேடம் பூண்டு காவி கட்டிக்கொண்டான்.

காவியைக் கண்டால் கவிழும் மக்கள் அல்லவா! அவனிடமும் கவிழ்ந்தார்கள். பிறகு கொல்லம் பன்மனை ஆசிரமத்தின் கிளையில் தங்கினான். தன் பெயரை கங்கேஷ் ஆனந்த தீர்த்தபாத சாமி என்று மாற்றிக்கொண்டான். அருகிலுள்ள வீடுகளுக்குச் சென்று பூஜைகள் செய்து அவர்களின் குறை தீர்ப்பதாய் நடித்தான். அப்படிச் சென்ற வீடுகளில் ஒன்று சட்டக்கல்லூரி மாணவியின் வீடு.

அந்த மாணவியின் தந்தை பக்கவாதத்தால் படுக்கையில் கிடக்க, அவரது மனைவியை தன்வயப்படுத்தினான். செயலற்ற கணவன் என்பதால் அப்பெண் இச்சாமியாரிடம் எளிதில் இணங்கினாள். சாமியாரிடம் நெருக்கம் அதிகமானதால், அப்போது 16 வயதுடையவளாய் இருந்த அச்சட்டக் கல்லூரி மாணவியையும் அனுபவிக்க எண்ணி, அவளின் தாயின் துணையுடன் அதை நிறைவேற்றினான்.

இந்த இளம் பெண்ணை 16 வயது முதல் வன்புணர்வு செய்து 7 ஆண்டுகள் கொடுமைப்படுத்தினான்.

அச்சாமியாரின் கொடுமை தாங்க முடியாத அப்பெண் அவனது ஆணுறுப்பையே அறுத்து எறிந்துவிட்டாள்.

நித்தியானந்தா:

திருவண்ணாமலையில் ராஜசேகரன் என்னும் ஓர் இளைஞன். சிறு வயதிலேயே வீட்டை விட்டு ஓடி காவிகளுடன் அலைந்து திரிந்தான். அந்தக் காவிகளின் எல்லாப் பழக்கங்களும் தொற்றிக்கொண்டு நான்தான் ரமணரின் அவதாரம் என்று கூறிக்கொண்டு நித்யானந்தா என்று புதுப்பெயர் சூட்டிக்கொண்டான்; ஆசிரமம் அமைத்தான். சாமியார் தொழில் அதிகம் கல்லா கட்டும் தொழில் ஆயிற்றே! கல்லாப் பெட்டி நிரம்பியது.

காலத்திற்குத் தகுந்தவாறு நவீனத் தொழில் நுட்பங்களைக் கையாண்டு பக்த கோடிகளைச் சேர்த்துக் கொண்டார். பேச்சில் வல்லவராகப் பேசப்பட்டார். பல எழுத்து வியாபாரிகள் பணம் பெற்றுக்கொண்டு எழுதிக் கொடுத்ததை யெல்லாம் இவரது பெயரிலேயே வெளியிட்டுக் கொண்டார். ‘கதவைத் திற! காற்று வரும்’ என்று முன்னணி ஏட்டில் தொடரும் வந்தது. ஆசிரமம் வளர்ந்து விரிந்தது.

ஒரு மார்க்கெட் இழந்த நடிகை ஆசிரமத்தில் அடைக்கலமானார். அவரே சாமியாருக்குப் பணிவிடைகள் செய்தார். இது நித்யானந்தாவே  சொல்லிய வாக்குமூலம். ஆசிரமத்துக்குள் சிக்கல் உருவாக சாமியாரின் அந்தரங்கம் சி.டி.யில் பதிவாகி இந்தியத் தொலைக்காட்சி வரலாற்றில் முதல்முறையாக ஒளிபரப்பானது. ‘நக்கீரன்’ பத்திரிகையில் நித்யானந்தாவின் உண்மை முகத்தை அவரது சீடர் லெனின் கருப்பன் என்கிற தர்மானந்தா வெளிக்கொணர்ந்தார்.

நித்யானந்தா மீது பாலியல் குற்றச்சாட்டுகள் எழ, இவரது பிடதி ஆசிரமம் கருநாடகாவில் இருப்பதால் வழக்குப் பதிவானது. சில நாள் வட மாநிலங்களில் ஓடி ஒளிந்து பின் கைது செய்யப்பட்டு சாமியார் கம்பி எண்ணினார். அவருடன் இருந்த நடிகை ரஞ்சிதாவோ தலைமறைவானார்.

சி.டி. புகழ் நித்தியானந்தா  மதுரை ஆதினத்தின் 293ஆவது தலைவராக  நியமிக்கப்பட்டார். நியமித்தது  292ஆவது நடப்பு மதுரை  ஆதீனம். இந்த அறிவிப்பை யடுத்து நித்தியானந்தா 1 கோடி ரூபாய்க்கான காசோலையை வழங்கினார். திருவாளர் 292ஆவது ஆதினமோ பதிலுக்கு தங்கச் செங்கோல் வழங்கி, நித்திக்கு தங்க கிரீடத்தையும் சூட்டினார்.

ரஞ்சிதாவுடன் இருக்கும் நித்தியானந்தாவை, மதுரை ஆதினமாக ஏற்றுக்கொள்ளக் கூடாது என்று ஜெயேந்திரர் கூறியதற்கு எதிர்ப்பைத் தெரிவித்த நித்யானந்தா, “என் மீது எந்தக் கொலை வழக்கும் இல்லை. அவர் மீது கொலை வழக்கு உள்ளது. குற்றப் பின்னணி உள்ள அவர் என்னைப் பற்றி குற்றம் சொல்ல அருகதை இல்லை. அவர்தான் போதை ஊசி போட்டு காஞ்சிப் பெரியவரைக் கொன்றார். நான் மதுரை ஆதினத்துக்கு எந்த ஊசியும் போடவில்லை.’’ என்று கூற சாமியார்கள் சண்டை சந்தி சிரித்தது.

ஜக்கி வாசுதேவ்:

கேடியாகத் தன் வாழ்வைத் தொடங்கி, இன்று கோடிகளில் புரளும் ஜக்கி வாசுதேவ்.

சுமார் 40 ஆண்டுகளுக்கு முன் கோவையில் உள்ள “ப்ரூக்பாண்ட் ரோடு’’ மேம்பாலத்தின் கீழ்ப்புரம் குதிரை வண்டிகள் நிறுத்தும் இடத்தில் சமூக விரோதிகளுக்கு கள்ளத்தனமாகக் கஞ்சா விற்பனை செய்த ஒரு கயவாளிதான் இந்த ஜக்கி வாசுதேவ். இந்த ஆளுக்கு ஒரு பெண்ணுடன் கள்ளத்தொடர்பு உண்டு.

இந்தக் கேடிக்கு ரிச்சர்டு என்கிற ரவுடி நெருங்கிய நண்பன். அவன் எல்லா வகையிலும் இந்த ஆளுக்கு உதவியாய் இருந்தான். இந்த நிலையில் ரிச்சர்டுக்கும் ஜக்கிக்கும் நடந்த வியாபார மோதலில் அந்தப் பெண் மாயமாக, ரிச்சர்டு கொலை செய்யப்பட்டான்.

அது மட்டுமல்லாது ஜக்கி தனது மனைவியையும் கொலை செய்ததால். அது சார்ந்த வழக்கு நீதிமன்றத்தில் பல ஆண்டுகளாக நிலுவையில் உள்ளது. மத்தியப் புலனாய்வுத் துறையால் தேடப்படும் குற்றவாளியாகவும் இந்த ஜக்கி அறிவிக்கப்பட்டதாகத் தகவல் உள்ளது.

சட்டவிரோதமான ஈஷா மய்யம்

இப்படிப்பட்ட கிரிமினல் பேர்வழியான ஜக்கி வாசுதேவால், கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள இக்கரை பொல்லுவபட்டி என்னும் ஊராட்சிக்கு உட்பட்ட வனப்பகுதியைச் சட்டவிரோதமாக ஆக்கிரமித்து உருவாக்கப் பட்டதுதான் ஈஷா மய்யம்!.

ஆர்.எஸ்.எஸ். பின்னணி: இந்து மதத்தையும், சமஸ்கிருதத்தையும் பரப்புவதற்காக, இந்த ஜக்கி என்கிற கிரிமினல் குற்றவாளியுடன் ஆர்.எஸ்.எஸ்.ஸும், இந்து மதவெறி அமைப்புகளும் கைகோத்துச் செயல்படுகின்றன. அதனால்தான் இவ்வளவு பெரிய கிரிமினல் வேலைகளை இந்த ஜக்கி செய்தும், அந்த ஆள் மீது எந்த நடவடிக்கையும் இல்லை. இந்த ஆள் மீது பல பொதுநல வழக்குகள், கொலை, மோசடி வழக்குகள் இருந்தும், எந்த நடவடிக்கையும் இல்லாததற்கு ஆர்.எஸ்.எஸ்.ஸும், பி.ஜே.பி. மத்திய அரசுமே காரணம்.

எல்.அய்.சி. ஊழியர் ‘கல்கி’ சாமியார்:

அண்மையில் பரபரப்பாகப் பத்திரிகைகளில் பேசப்படும் மோசடி சாமியார் இவர். இவர் தொடக்ககால வாழ்க்கையைத் தோண்டித் துருவினால் சாமியார்கள் எப்படி உருவாகிறார்கள் என்பதை எவரும் எளிதில் அறியலாம். குறிப்பாக குற்றவாளிகளே சாமியார்களாகிறார்கள் என்பதை இவர் சாமியாரான வரலாறு உறுதி செய்யும்.

கல்கி பகவானின் உண்மையான பெயர் விஜயகுமார். ஆரம்பத்தில் எல்.அய்.சி. ஊழியராக இருந்த இவர், தன்னை விஷ்ணுவின் 10ஆவது அவதாரமான கல்கி அவதாரம் என அறிவித்து கல்கி பகவான் என்று கூறிக்கொண்டார்.

கல்கி பகவானின் சொந்த ஊர் வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே உள்ள நத்தம் கிராமம் ஆகும். இவரது தந்தை வரதராஜுலு நாயுடு, தாய் வைதரபாய் அம்மாள், 7.3.1949இல் பிறந்தார்.

இவரது தந்தை தெற்கு ரெயில்வேயில் அக்கவுண்டன்ட்டாக பணியாற்றி வந்தார். கல்கி பகவானுக்கு 6 வயது இருந்தபோது அவரது குடும்பம் சென்னைக்கு இடம்பெயர்ந்துவிட்டது. இங்குதான் ஆரம்பக் கல்வியைப் படித்தார்.

சென்னையில் புகழ் பெற்ற டான் போஸ்கோ பள்ளியில் படித்த அவர், பின்னர் வைஷ்ணவா கல்லூரியில் கணிதத்தில் பட்டப் படிப்பு முடித்தார். 1971இல் அவருக்கு எல்.அய்.சி.யில், வேலை கிடைத்தது.

அதில், குமாஸ்தாவாகப் பணியாற்றி வந்தார். 1977 ஜூன் மாதம் 6ஆம் தேதி பத்மாவதியை திருமணம் செய்து கொண்டார். 1980ஆடத ஆண்டு வாக்கில் திடீரென எல்.அய்.சி. அலுவலகத்தில் நீண்ட விடுமுறை எடுத்த அவர் மதனபள்ளியில் ஜே.கிருஷ்ணமூர்த்தி அறக்கட்டளை நடத்திய பள்ளியில் ஆசிரியராக பணிக்குச் சேர்ந்தார்.

அவர், சில தவறுகளில் ஈடுபட்டதாகக் கூறி பள்ளி நிருவாகம் அவரை பணியை விட்டு நீக்கியது. அதன் பிறகு ஆந்திராவில் இப்போது ஆசிரமம் அமைந்துள்ள சித்தூர் மாவட்டம் வரதய் பாளையத்தில் தனியாக ஒரு பள்ளியைத் தொடங்கினார். அந்த பகுதி மக்களின் வளர்ச்சிக்குப் பாடுபடப் போவதாக அப்போது அறிவித்தார்.

இதனால் அந்தப் பகுதியைச் சேர்ந்த தொழில் அதிபர் ஹரிகோதாய் அவருக்கு தாராளமாக உதவினார். இதன் மூலம் விடுதியுடன் கூடிய பள்ளியைத் தொடங்கி நடத்தி வந்தார். விடுதியில் 180 மாணவர்கள் தங்கி இருந்தனர். உள்ளூர் மாணவர்கள் 200 பேர் தினமும் வந்து சென்றனர். அங்கு ஆன்மிக போதனைகளும் நடத்தப்பட்டன. அப்போது அங்குள்ள பள்ளி மாணவர் ஒருவர், “நான் கடவுளைக் கண்டேன்’’ என்று திடீரென அறிவித்தார். இதன் பின்னர் பல மாணவர்களும் இவ்வாறு சொல்ல ஆரம்பித்தனர்.

அப்போது கல்கி பகவான், கடவுள் இங்கு தோன்றி இருப்பதாக மாணவர்களிடம் கூறினார்.

இந்த நிலையில் திடீரென தன்னை விஷ்ணுவின் 10ஆம் அவதாரம் கல்கி என கூறினார். அங்கு கல்கி ஆசிரமத்தையும் உருவாக்கினார். அவருடைய ஆன்மிக சொற்பொழிவு உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. நடனம், ஆட்டம், பாட்டம் என வித்தியாசமான முறையில் ஆன்மிக நிகழ்ச்சிகள் அரங்கேற்றமாகின. இதில் ஏராளமான இளம்பெண்கள், ஆண்கள் என பலரும் பங்கேற்று கல்கியின் பக்தர்களானார்கள். வெளிநாட்டுப் பக்தர்களும் ஏராளமானோர் ஆசிரம உறுப்பினர்களாகச் சேர்ந்தனர்.

அதைத் தொடர்ந்து சென்னை, பெங்களூர், அய்தராபாத் என இந்தியா முழுவதும் ஆசிரம கிளைகள் தொடங்கப்பட்டன. கல்கி பகவானுக்கு லட்சக்கணக்கான பக்தர்கள் உருவானார்கள். கோடி, கோடியாக பணத்தை காணிக்கையாகச் செலுத்தினார்கள்.

சென்னை பூந்தமல்லி அருகேயுள்ள நேமம் கிராமத்தில் கல்கி ஆசிரமத்தை ஆரம்பித்து, தமிழக _ ஆந்திரா மக்களைக் கவர ஆரம்பித்தார். தன்னையே கடவுள் என சொல்லிக்கொண்டு வலம்வந்த இவரின் ஆன்மிகச் சேவையில் மயங்கிய அப்பாவி மக்களைவிட பாலிவுட், கோலிவுட் திரையுலகப் பிரபலங்கள், அரசியல்வாதிகள், அதிகாரிகள் என அதிகாரவர்க்கப் பட்டாளமே வீழ்ந்து கிடந்தது.

ஆன்மிகப் பாதை அடாவடிப் பாதையாக மாறியது. கல்கியைச் சந்திக்க வேண்டும் என்றால் 50 ஆயிரம் ரூபாய் தட்சணை என கட்டாய வசூலில் இறங்கியதால் கல்கி கட்டிய மாயக்கோட்டையில் மக்கள் கற்களை வீசி எறிய ஆரம்பித்தனர். கூடா நட்பு கேடாய் முடியும் என்பதைப் போல அன்றைய ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவுடன் சேர்ந்து ரியல் எஸ்டேட், அய்.டி. துறையில் உள்நாடு, வெளிநாடுகளில் பல்வேறு முதலீடுகளைச் செய்தார். நாயுடுவை வீழ்த்தி ஆந்திராவில் ஆட்சியைப் பிடித்துள்ள ஜெகன்மோகன் ரெட்டிக்கு இந்த விவகாரம் தெரியவரவே, டெல்லிக்கு தகவல் கொடுத்து கல்கி ஆசிரமத்தில் ரெய்டு தீயைப் பற்றவைத்து விட்டார் என்று பத்திரிகைகள் கூறுகின்றன.

கல்கி குடும்பத்திற்குச் சொந்தமான 20க்கும் மேற்பட்ட இடங்கள், ஆசிரமங்களில் மூன்று நாள்களாக நடத்திய ரெய்டின் முடிவில், கணக்கில் காட்டப்படாத 500 கோடி ரூபாய்க்கு சொத்து ஆவணங்கள் கண்டுபிடிக்கப் பட்டுள்ளன. 43.9 கோடி ரூபாய் இந்திய பணமும், 21 கோடி அமெரிக்க டாலர் கரன்சிகள், 9 கோடி வைரங்கள்,  மேலும் 26 கோடி ரூபாய் மதிப்பிலான 95 கிலோ தங்க நகைகளும், 31 கோடி ரூபாய் மதிப்பிலான ஆபரணங்கள் என கிட்டத்தட்ட 600 கோடி ரூபாய்க்கும் மேலான பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

கல்கி, அவரது மனைவி பத்மா, அவரது மகன் கிருஷ்ணா, இவர்களது ஆடிட்டர் மற்றும் பினாமி பெயர்களில் உலகம் முழுவதும் பல்வேறு பெயர்களில் ஹோட்டல்கள், மால்கள், பண்ணை வீடுகள், ரியல் எஸ்டேட், உல்லாச கப்பல்கள், சிறிய சொகுசு ரக ஃபிளைட் என ஏகத்துக்கும் வாங்கிக் குவித்துள்ளனர்.

இதுதவிர, இந்தியாவில் கிருஷ்ணாவின் பெயர்களிலும் கோல்டன் லோட்டஸ், ட்ரீம், வியூ, ப்ளூ வாட்டர் என கட்டுமான நிறுவனங்களின் பெயர்களில் தமிழகத்திலும் ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் வாங்கியுள்ளார். இவ்வளவு சொத்துகள், நிறுவனங்கள் வாங்குவதற்கான மூலதனம் எங்கிருந்து வந்தது?

சென்னை, ஆந்திரா, தெலங்கானா, கருநாடகா ஆகிய பகுதிகளில் உள்ள கல்கி ஆசிரமங்கள் உள்பட 40 இடங்களில் வருமான வரி அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினார்கள்.

இதில் ரூ.43 கோடியே 90 லட்சம் பணம், ரூ.18 கோடி மதிப்புள்ள அமெரிக்க டாலர், 88 கிலோ தங்க கட்டிகள், நகைகள், ரூ.5 கோடி மதிப்புள்ள வைரக்கற்கள் மேலும் கணக்கில் வராத ரூ-500 கோடிக்கு மேல் பணம் கண்டு பிடிக்கப்பட்டு உள்ளது. கல்கி பகவான் குழுமம் சார்பில் இந்தியாவைத் தவிர வெளிநாடுகளில் உள்ள கம்பெனிகளில்  பெரிய  அளவில் முதலீடு செய்யப்பட்டுள்ளது.

சாமியார் கல்கி விஜயகுமார் ஆந்திர மாநிலம் வரதய்ய பாளையத்தில் உள்ள ஆசிரமத்தில் வசிப்பதாகக் கூறப்படுகிறது. சோதனையின்போது அவர் அங்கு இல்லை. ஆசிரமத்தில் தொடர்ந்து சோதனை நடத்தப்பட்டு வருகிறது. இதில் ஆசிரம நிருவாகிகளிடம் விசாரணை நடத்தப்பட்டது . ரூ.500 கோடிக்கு மேல் வரி ஏய்ப்பு செய்யப்பட்டுள்ளதால் கல்கி பகவான் விஜயகுமாரிடம் விசாரணை நடத்த வருமான வரித் துறை அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். ஆனால், கல்கி விஜயகுமார் எங்கு இருக்கிறார் என்பது ஆசிரமத்தில் உள்ளவர்களுக்குத் தெரிய வில்லை. அவரைப் பார்த்து 2 ஆண்டுகள் ஆனதாக ஆசிரம நிருவாகிகள் தெரிவித்தனர்.

இதனையடுத்து கல்கி விஜயகுமார் தனது மனைவி பத்மாவதியுடன் வெளி நாட்டுக்குத் தப்பிச் சென்றதாக தகவல் வெளியாகி இருக்கிறது. அவரது கடவுச் சீட்டை வருமான வரித்துறையினர் தீவிரமாகத் தேடினர். ஆனால், அது கிடைக்கவில்லை. இதனால் அவர் வெளிநாட்டுக்குத் தப்பிச் சென்று இருக்கலாம் என்று அதிகாரிகள்  கருதுகிறார்கள்.

இதையடுத்து வழக்கை சி.பி.அய்.க்கு மாற்றலாமா என்று வருமானவரித் துறை அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகிறார்கள்.

ஆக, மத்திய அரசு, உளவுத் துறை எல்லாவற்றையும் ஏமாற்றி எங்கு இருக்கிறார் என்றே தெரியாமல் ஒளிந்துள்ள ‘கல்கி’ சாமியார் என்றால், இது சாமியாரின் சாமர்த்தியமா? அல்லது மத்திய அரசின் கையாலாகாத்தனமா? அப்பாவி மக்களைத் தண்டிக்கத்தான் சட்டமா? கார்ப்பரேட் சாமியார்களுக்கு சட்டமும் நீதியும் கிடையாதா? பக்தியின் பெயரால் எல்லாம் பாழ்பட்டுக் கிடக்கிறது என்பதற்கு இவையெல்லாம் கண்முன்னே நிற்கும் ஆதாரங்கள்!

பக்தி போதையிலிருந்து மக்கள் விடுபட்டுத் தெளிந்து விடுவதுதான் ஒரே தீர்வு! அந்தப் போதை தெளிய பெரியாரே ஒரே மருந்து!

 

 

 

 

 

 

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *