– ஈரோடு தமிழன்பன்
அண்ணல் காந்தியின் கைத்தடிபோல்
அகிம்சை பேசாது!
அது,
சுத்தமான அசைவக் கைத்தடி!
நீதிக்காக
நீண்ட அத்தடி
பேசாவிரதம் இருக்காது…
பேசும்…
காயங்களைத் திறந்து
நியாயங்களை விடுவிக்கும்
போதிக் கிளையிலிருந்து
செதுக்கிய கைத்தடிதான் அய்யா கையில்
இருந்தது!
வைதிகத்திற்குக் கொஞ்சமும்
வளைந்து கொடுக்காது.
அது,
ஞான ஆயுதம்!
அதைப் பார்த்ததும்
வேர்த்தது சனாதனம்
எத்தனை எலும்புகள் தனக்கு
மிஞ்சும் என்று
மூடத்தனங்கள், பெரியார்முன்
முட்டிபோட்டன.
‘அய்யா, மெதுவாய் அடித்தாலே
உடைந்து போகச் சம்மதம்’ என்று
உதடு நடுங்கின.
வல்லினத்தை மட்டுமே வாய்திறந்து
உச்சரிக்கும் அவர் கைத்தடி.
இடையினமாய், மெல்லினமாய்
இருந்தவர்கள்
கேட்டுக் கேட்டு
வலிமை பெற்றார்
வல்லினமானார்.
(‘வார்த்தைகள் கேட்ட வரம்’ நூலிலிருந்து)