சிறந்த நூலிலிருந்து சில பகுதிகள் : திராவிடர் கழக வரலாறு

செப்டம்பர் 16-30 2019

நூல்    : திராவிடர் கழக வரலாறு       

(இரு பாகங்கள்)

ஆசிரியர்        : கி.வீரமணி

வெளியீடு: திராவிடர் கழக (இயக்க)                                           வெளியீடு,

                   பெரியார் திடல்,

       84/1 (80), ஈ.வெ.கி.சம்பத் சாலை,                                               வேப்பேரி,

                  சென்னை-600007.

                  தொலைபேசி: 044-2661 8161

                   www.dravidianbookhouse.com

பக்கங்கள்: 720

நன்கொடை: ரூ.700/-

(இரண்டு தொகுதிகளும் சேர்த்து)

 [திராவிடர் கழகத்தின் பவள விழா மாநாட்டில் வெளியிடப்பட்ட, தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களால் தொகுக்கப்பட்ட, “திராவிடர் கழக வரலாறு’’ என்னும் நூலில், தந்தை பெரியாரின் ஜாதி ஒழிப்புப் போராட்டத்தில் பங்குகொண்ட கழகத் தோழர்களின் நெஞ்சை உருக்கும் தியாகப் பதிவுகள் இடம் பெற்ற பகுதி இது ]

தமிழ்நாட்டின் பற்பல மத்திய சிறைச் சாலைகளிலும் 6 மாதம் முதல் 2லு ஆண்டுகள்,  3 ஆண்டுகளுக்கு தண்டிக்கப்பட்ட நமது கழக ஜாதி ஒழிப்பு வீரர்கள் சிறையில் இருந்தபோது, ஒவ்வொரு மத்திய சிறைச்சாலைக்கும் அன்னை மணியம்மையார் சென்றார்கள் அவர்களுடன் நான் உடன் சென்றேன்.

கழகத் தோழர்களின் நலம் விசாரித்து, வீட்டுப் பிரச்சினைகள் ஏதாவது உள்ளனவா என்று கேட்டு, அதற்குரிய தீர்வு உதவிகளையும் அன்னை மணியம்மையார் அவர்தம் வீடுகளுக்குச் சென்று, குடும்பத்தாருக்கு ஆறுதல் சொல்லி, தேவைப்பட்ட (ஒரு சிலருக்கு) உதவிகளைச் செய்வதையும் தமது கடமையாகக் கொண்டு – அய்யாவின் கட்டளைப்படி செயல்பட்டார்கள்!

புதுக்கோட்டை சிறையில் தோழர்கள் தோலி.ஆர்.சுப்ரமணியம், குடந்தை டி.மாரிமுத்து, ராஜகிரி கோ.தங்கராசு முதலானவர்களுக்கு கடுங்காவலின்படி, நெல்லை இரும்பு உலக்கை கொண்டு குத்திடும் பணி தரப்பட்டதால், கைகள் பழுத்த நிலைகண்டு, சிறையில் அவர்களைச் சந்தித்து நாங்கள் கண்ணீர் விட்டோம். அவர்களே அன்னை மணியம்மையாருக்கும் எனக்கும் ஆறுதல், தேறுதல் சொல்லி அனுப்பினர்! என்னே விநோதம்!! இதுகுறித்து விடுதலையின் பதிவு:

17.02.1958 திங்கள் காலை சுமார் 11 மணியளவில் கோவை மத்தியச் சிறையிலுள்ள கழக வீரர்களை அன்னை மணியம்மை அவர்கள் கண்டு வந்தார். தோழர்கள் தஞ்சை ஆளவந்தார், நாகை எஸ்.ஆர். ஆறுமுகம், கீவளூர் நவநீதகிருஷ்ணன், திருச்சி டி.டி.வீரப்பா, வீ.அ.பழனி, சோமு, சிறீரங்கம் கருப்பண்ணன், கரூர் வீரண்ணன், குளித்தலை சந்தானகிருஷ்ணன், மாயூரம் ஆர்.டி.வேலு, மண்ணச்சநல்லூர் அரங்கராசன், மதுரை பழனி வேலு, சேலம் தோழர்கள் அழகரசன், தனபால், பச்சைமுத்து, நடேசன், ஆத்தூர் செல்லமுத்து, பொன்னையா, அம்மாப்பேட்டை கந்தசாமி, கோவை ரங்கநாதன், ஆனைமலை நரசிம்மன், ஈரோடு ப.சண்முகவேலாயுதம், எஸ்.எஸ்.ராஜா, சுப்பண்ணா, பழனிவேலு, ஆனைமலை திருமூர்த்தி, அனீப், பவானி கிருஷ்ணசாமி, குத்தாலம் சோமசுந்தரம் மற்றும் பல தோழர்களையும் அன்னை மணியம்மையாருடன் கடலூர் கி.வீரமணி, குனியமுத்தூர் அம்மணி அம்மையார் ஆகியோரும் கண்டு பேசினர். தோழர்கள் மிக்க ஆர்வத்துடனும் கட்டுப்பாட்டுடனும் உள்ளனர் பெரியார் அவர்கள் உடல் நிலைகுறித்து ஆவலுடன் விசாரித்தனர் வெளியில் கழக ஆக்க வேலைகள் சிறந்த முறையில் ஏராளமாக நடைபெற்ற வண்ணம் உள்ளன எனக்கேட்டு மகிழ்வதாகவும் கூறினர்.

முக்கிய கழகத் தோழர்களை நடிகவேள் எம்.ஆர்.ராதா அவர்களும் கண்டார். சிறிது நேரம் உரையாடிக்கொண்டிருந்து விட்டு அன்று மாலை குனியமுத்தூரில் நடைபெற்ற கழகக் கூட்டத்தில் பேசிவிட்டு பாலக்காட்டிற்குப் புறப்பட்டார்.

அன்னை மணியம்மையார், ஆனைமலை நரசிம்மன், அவர்களது துணைவியார் திருமதி ஜானகியம்மாள் ஆகிய இருவரும் கோவை, ஆனைமலை முதலிய இடங்களில் சிறைசென்ற தோழர்களின் இல்லத்திற்குச் சென்று வீட்டிலுள்ளோரையும் பார்த்துப் பேசி வந்தனர். வீட்டிலுள்ள அனைவரும் உற்சாகமாகவே இருந்தனர். பல தாய்மார்கள் தங்கள் கணவர்மார்கள் சிறை சென்றுள்ளதைப் பெருமையாகவே கருதுவதாகவும் நல்ல காரியத்திற்காக அவர்கள் பயன்பட்டதை எண்ணி மகிழ்வதாகவும் கூறினர்.

வேலூர் மத்தியச் சிறையில் ஜாதி ஒழிப்புப் போராட்டத்தில் பங்கு கொண்டு தண்டனை அடைந்து சிறைவாசம் அனுபவித்துவரும் தாய்மார்கள் திருமதி சுசீலா அம்மையார், ஏ.பி.ஜெ.மனோரஞ்சிதம், ரஞ்சிதம் அம்மையார், பட்டம்மாள், லட்சுமி அம்மாள், அறிவுக்கொடி, அங்கம்மாள், திருச்சி சீதா அம்மையார், சின்ன சேலம் லட்சுமி, நீடாமங்கலம் சவுந்திரம் எல்லோரையும் 04.03.1958 செவ்வாய் அன்று காலை 9 மணிக்கு திருமதி ஈ.வெ.ரா. மணியம்மையார், கடலூர் வீரமணி, திருவாரூர் கே.தங்கராசு, வேலூர் ஈ.திருநாவுக்கரசு, ஆ.கி.மோகனராசு, கப்பளாம்பாடி இராமச்சந்திரன் ஆகியோர் கண்டு பேசினர். தாய்மார்கள் அனைவரும் உறுதியுடனும் உற்சாகத்துடனும் காணப்படுகின்றனர். வெளியில் கழக வேலைகள் நடைபெறுவது குறித்தும் தலைவர் பெரியார் அவர்கள் உடல்நிலை குறித்தும் ஆவலோடு கேட்டனர்.

சுமார் 10 மணியளவில் வேலூர் மத்திய (ஆண்கள்) சிறையில் வதிகின்ற கழகத் தோழர்களான தென் ஆர்க்காடு மாவட்ட தி.க.தலைவர் சிதம்பரம் கு.கிருஷ்ணசாமி, தஞ்சை ராசகோபால், வரகூர் நடராசன், குடந்தை நாதன், சாமி.நாகராசன், குடியாத்தம் கோவிந்தராசன், நீடாமங்கலம் வி.ராசகோபால், கடலூர் ஆ.செ.கணேசன், திருச்சி ஃப்ரான்ஸிஸ், முருகன், மேலச்சீதேவிமங்கலம் தங்கராசு, தஞ்சாவூர் துரை. தங்கவேலு, கடலூர் ராமச்சந்திரன், ‘குறள் முரசு’ ஆசிரியர் வே.ஆனைமுத்து, தாராசுரம் ஜி.என்.சாமி, பேட்டைவாய்த்தலை கணபதி, கரூர் புலிகேசி, நாகை பாட்சா, லால்குடி வீராசாமி, திண்டிவனம் கோ.தண்டபாணி, ரங்கநாதன் இன்னும் சில தோழர்கள் ஆகியோரையும் அன்னை .மணியம்மையாரும் மற்ற தோழர்களும் கண்டு பேசினர்.

தோழர்கள் அனைவரும் உற்சாகத்துடனும், முகமலர்ச்சியுடனும் உரையாடினர்; வெளியே கழக வேலைகள் எவ்வாறு நடைபெறுகின்றன வென்றும் அய்யா அவர்கள் உடல்நிலை குறித்தும் ஆவலோடு விசாரித்ததோடு தந்தை பெரியார் அவர்கள் கட்டளைக்கிணங்க சிறையில் கட்டுப்பாட்டுடன் இருப்பதாகவும் இன்னல்கள் எவை வரினும் ஏற்கத் தயங்கோம் என்றும் உரைத்தனர்.

மேலும் இந்தப் பயணம் தமிழ்நாடு முழுவதும் தொடர்ந்தது.

மயிலாடுதுறை ஆதிதிராவிடத் தோழர் கலியபெருமாள் மனைவி கோவிந்தம்மாளுக்கு 3 மாதம் கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டது. ஆறுமாத கர்ப்பிணி அவர். அவருடன் ஆறு வயதுள்ள ஒரு பெண்ணும் கூடவே சிறை சென்றார். இவரது துணைவர் கலியபெருமாள் இன்று திருச்சி மத்தியச் சிறைக்குப் போகும்போது உற்சாகத்துடனேயே ‘பெரியார் வாழ்க!’ என்று கோஷமிட்டுக் கொண்டே சென்றார். கூறைநாடு தோழர் ராமசாமியின் தாயார் மரண அவஸ்தையிலிருப்பது தெரிந்தும் மிகவும் உற்சாகத்துடனேயே சென்றார். 28-.11.-1957ஆம் தேதி, இரவு 7:30 மணி அளவில் மன்னார்குடியில் ரிமாண்டில் வைக்கப்பட்டிருந்த தோழர்கள் 258 பேருக்கும் அங்கு சிறையில் அன்றிரவு தரப்பட வேண்டிய உணவைக் கொடுக்காமல் 4 லாரி 5 பஸ்களில் திருச்சிக்குக் கொண்டு போனார்கள். திருச்சியிலும் இரவு உணவு அளிக்கவில்லை; அங்கு இரவு சிறைச்சாலையில் அனுமதி கிடைக்கவில்லை மறுநாள் (29.-11.19-57) காலை 11 மணிக்குத்தான் அனுமதியளித்திருக்கின்றனர். அதுவரையில் 258 தோழர்களும் 3 வேளை உணவுமில்லாமல் பட்டினி கிடந்தார்கள்.

வேலூர் சிறையில் தி.க. தோழியர்கள் நிலை மலம் எடுக்கவும், கால்வாய் கழுவவும் சொல்லி கொடுமைப்படுத்தப்பட்டார்கள் இதுகுறித்து 17.12.1957 ‘விடுதலை’ சென்னை 19ஆம் வட்டம் ஓட்டேரி தி.க. துணைத் தலைவர் டி.கே.வரதராசன் எழுதிய கடிதம்:

வேலூர் பெண்கள் சிறையில் நமது தோழியர்கள் குறைகளை நேரில் சென்று கேட்டேன். நான் 14.12.1957இல் வேலூர் தோழர் மோகனராசு உடன் வேலூர் சிறைக்குச் சென்றேன்; நமது தோழியர்களை மலம் எடுக்கச் சொல்லுவதும் கால்வாய் கழுவச் சொல்லுவதுமாகவும் ஜெயிலில் வார்டர்கள் தொந்தரவு செய்வதுமாகவும் அப்படி செய்யமாட்டோம் என்று சொன்னால் உங்களுக்கு  உணவு கொடுக்க மாட்டோம் என்று சொல்லுகிறார்களாம்; சுசீலா அம்மையார், மனோரஞ்சிதம், லஷ்மி அம்மையார், பட்டம்மாள் அம்மையார், அறிவுக்கொடி, பூங்காவனம், செண்பகவள்ளி அம்மையார் மகள் புரட்சிமணி, ருக்மாபாய் இவர்கள் முகமலர்ச்சியுடன் காணப்பட்டார்கள். குறிப்பாக என்மகள் வீரசெல்வி வி. பத்மசுந்தரி வீரநடைபோட்டு வந்து வீரமுடன் இருப்பதாக எனக்கு ஆறுதல் சொன்னாள்.

கடலூர் தோழர்கள் வழக்கு ஒத்திவைப்பு; சிறையில் தோழர்கள் உணவுக்குப் படும் அவதி:

கடலூர் ஓ.டி.யில் அரசியல் சட்ட எரிப்புப் போராட்டத்தில் கலந்து கொண்ட தோழர்கள் மீதும் கடலூர் என்.டி.தோழர்கள் மீதும் தொடரப்பட்ட வழக்கு, ஜில்லா முதல் வகுப்பு மாஜிஸ்ரேட் முன்பு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. தோழர்களுக்கு சப்_ஜெயிலில் இடமின்மை காரணமாக இரு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளனர். ஒரு பிரிவில் திரு.சாமிக்கண்ணும் மற்றும் பதினைந்து பேர்கள் சப்_ஜெயிலில் வைக்கப்பட்டனர். மறுபிரிவில் தோழர் ராமச்சந்திரனும் மற்றும் 22 பேர்களும் மத்தியச் சிறையில் வைக்கப்பட்டனர்.

சப்_ஜெயிலில் இருந்த தோழர்கள் உணவு விஷயத்தில் மிகவும் கொடுமை செய்யப்பட்டனர். இந்த நிலை நீடித்தால் அவர்களின் உயிருக்குக் கேடு விளையும் என்று அறிந்து சிறை அதிகாரிகள் ஆவன செய்யுமாறு மகஜர் மூலம் அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்திய அரசியல் சட்டத்தை எரித்துக் கைதான எடமேலையூர் தோழர்களின் வழக்குகள் 03.12.1957இல் முதல்வகுப்பு மாஜிஸ்திரேட் முன் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. தோழர்கள் குற்றவாளிகள் எனத் தீர்ப்புக்கூறி தலா 6 மாதம் கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டனர்.

தோழர்கள் 35 பேருக்கு காலை உணவுடன் மாலை 6:30 மணி வரை உணவு இன்றித் துன்பப்பட்டார்கள். கழகத் தோழர்கள் வாங்கித் தருகிறோம் என்றாலும் மறுத்து விட்டனர்: பலர் மயக்கமுற்று மாலை 4:45க்கு வீழ்ந்துவிட்டனர். உடனே அவர்களுக்குத் தோழர்கள் காஃபி வாங்கி கொடுத்து தெளிவு உண்டுபண்ணினர். அதன் பின்பு மாலை 6:-30 மணிக்கு போலீசாரால் உணவு அளிக்கப்பட்டது. அதன் பின் இரவு சுமார் 7 மணிக்கு அவர்கள் நீடாமங்கலம் ரயில்மூலம் அனுப்பப்பட்டனர். (‘விடுதலை’ _- 06.-12.-1957)

மண்ணச்சநல்லூரில் சட்ட எரிப்பில் ஈடுபட்டு கைதான வீராங்கனை அஞ்சலை அம்மையாருக்கு லால்குடி சப்_ஜெயிலில் 29.11.1957 அன்று ஆண் மகவு பிறந்தது. சட்ட எரிப்பில் அந்த அம்மையாருடன் கைதான தோழியர்கள் பதின்மர் வேண்டிய  உதவி புரிந்தனர். செய்தியறிந்த ஆங்கரை கோவிந்தராசன் சிறைக்குச் சென்று மருத்துவமனையில் சேர்க்க ஏற்பாடு செய்துவிட்டு இதன் நினைவாக அனைவருக்கும் இனிப்பும் பழமும் வழங்கினார்; மற்றவர்கள் கூறிய புகாரையும் கேட்டு அதிகாரிகளிடம் தெரிவித்தார்.

சட்டம் எரித்து மகன் சிறை சென்றார்; உடன் தாய் மாண்டார்

நீடாமங்கலம் தோழர் ராசமாணிக்கம் தந்தை பெரியாரின் கட்டளையை நிறைவேற்றச் சிறை சென்றார். சிறிது நேரத்திற்கெல்லாம் அவரது தாயார் இயற்கை எய்தினார் இருப்பினும் கடமை வழுவாது சிறையில் இருந்தார் அன்புள்ள மகன்.

வீரச்சிறுவர் லட்சுமணன் (மணக்கால்) தவுஸ் (ஆங்கரை) ஃபிரான்சிஸ் (வாளாடி) பொன்னுசாமி (வாளாடி) பெரியசாமி (வாளாடி) பேச்சிமுத்து (வாளாடி) ரகுநாதன் (புத்தகரம் தஞ்சை) கோவிந்தராசன் (நீடாமங்கலம்) ஆகியோர் சட்டப்புத்தகம் கொளுத்தி செங்கற்பட்டு சிறுவர் சிறையில் அடைக்கப்பட்டனர்.  இந்த எட்டு இயக்க வீரர்களையும் நமது இயக்கத் தோழர்கள் சென்று நலம் விசாரித்து வந்தார்கள்.

இராசபாளையம் நகரில் 25.11.1957இல் தடுப்புக்காவல் சட்டப்படி கைது செய்யப்பட்ட நகர தி.க. தலைவர்  திரு.இரா. துரைராசு, துணைச்செயலாளர் துளசிமணி நிதிக் காப்பாளர் இரா. தங்கராசு, தோழர்கள் நாகரத்தினம், இராமகிருட்டிணன், சங்கமுத்து, ‘விடுதலை’ விற்பனையாளர் எஸ்.பச்சமலை ஆகியோர் 15 நாள்கள் ரிமாண்டு செய்யப்பட்டதன் காரணமாக 26.11.1957இல் சிறீவில்லிப்புத்தூர் கொண்டு செல்லப்பட்டு சிறையில் வைக்கப்பட்டனர். பின் 30.01.1957இல் மதுரைச் சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அவர்கள் கைகளில் விலங்கு மாட்டப்பட்டு மதுரைக்கு பஸ் மூலம் அனுப்பப்பட்டனர்.  தோழர்கள் முகமலர்ச்சியுடன் பெரியார் வாழ்க! ஜாதிகள் ஒழிக! என்று பேரொலி முழங்கிக் கொண்டே சென்றனர். (‘விடுதலை’ _- 04.-12.-1957)

உலகில் எத்தனையோ போராட்டக் களங்களை வரலாறு கண்டிருக்கும். ஆனால், இதுபோல் சமூகக் கொடுமை வேராம் ஜாதி வேரை அறுத்திட அறப்போராட்டத்தில்,  அரசியல் பயன் ஏதும் கருதாமல், குற்றம் ஏதும் செய்யாமல் அய்யாவின் கட்டளையை ஏற்று அணுவளவும் பிறழாமல் போர்மறவர்கள், சொக்கத் தங்கங்கள் சிறைக்கொடுமைக்கு ஆளான வரலாறு காண்பது அரிது!

சட்டக்கல்லூரி மாணவன் நான். தந்தை இட்ட கட்டளை அன்னை மணியம்மையாருக்குத் துணையாகத் தொண்டாற்றினால் போதும் என்பது மட்டும். அதே வேளையில் சட்டக் கல்லூரிப் படிப்பையும்  கைவிட முடியாத நிலை, கழகப் போரில் இருக்க ஆவல் என்றாலும் கழகத் தலைவரின் கட்டளையை மீறாத தொண்டன். எனவே, வெளியேயிருந்து தொண்டாற்ற வேண்டிய கடமையைத் துல்லியமாக நிறைவேற்றினேன் என்பது என்நெஞ்சம் தெளிந்திடாத உண்மை. 26.11.1957 போராட்டம் அறிவிக்கப் பெற்றநாள். ஆனால், போராட்டத்திற்கு முதல் நாள் 25.11.1957இல் தந்தை பெரியார் தடுப்புக் காவல் தடைச் சட்டத்தின்படி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகக் கைது செய்யப்பட்டார் என்பதை முன்பே கண்டோம். தமிழ்நாடெங்கும் பலர் கைதாகிக் கொண்டிருந்தனர்.

திருவாரூர் முத்துக்கிருஷ்ணன் எனும் தோழர் உணவுக் கடை வைத்திருந்தார். போராட்டத்தில் ஈடுபட்டுச் சிறைப்பட்ட போது அவருடைய கடை நிருவாகத்தை மேற்பார்வையிட்டுக் குடும்பத்தை அவருடைய வாழ்விணையர் கவனித்து வந்தார். அது மட்டுமல்லாது விவசாயத்தையும் கவனித்து வந்தார். அப்போது அந்த அம்மையார் காலரா நோயின் பாதிப்பிற்கு ஆட்பட்டு இறந்தார். இறந்த மனைவியை அடக்கம் செய்யப் பரோலில் முத்துக்கிருஷ்ணன் வரவில்லை. அவருடைய மாமியார் தம் மகள்  இறப்பிற்குப் பின் எல்லாப் பொறுப்புகளையும் கவனித்து வந்தார். இதற்கிடையில் மாமியாரும் காலரா பாதிப்பில் காலமாகி மறைந்தார். கவனிப்பாரின்றி முத்துக்கிருஷ்ணனின் பிள்ளைகள் ஆதரவற்றவர்களாகியபோது கழகத் தோழர்கள் குடும்ப உறவினர் முத்துக் கிருஷ்ணன் சிறையிலிருந்துவரும் வரை ஆதரவுக் கரம் நீட்டினர். தியாக மறவர் முத்துக்கிருஷ்ணன் சிறை மீண்ட போது திருவாரூர் வீதிகளில் கழகத்தோழர்கள்  புடைசூழ ஊர்வலமாக அழைத்து வந்தபோது கண்டவர்களில் கண்ணீர் சிந்தாதோர் இல்லை.

அத்தகு உறுதிமிக்க நெஞ்சுரம் கொண்டவர்கள் நம் இயக்க வீரர்கள். நீதி மன்றத்தில் யாராவது ஒருவர் எதிர் வழக்காட வேண்டுமே? இல்லையே! நான் கொளுத்தியது அரசியல் சட்டமல்ல; அதன் பிரிவுகள் சில அச்சிடப்பட்ட ஒரு தாள்தான். அது எப்படி நீதிபதியவர்களே, தேசிய அவமதிப்பு ஆகும்? என்று வினா எழுப்பக்கூட இல்லை. அப்படி எழுப்பியிருந்தால் சிறைப்படாமல், தண்டனைக்கு ஆட்படாமல் தப்பியிருக்கக் கூடும். எனவே, இந்த மூன்று மாதம் தொடங்கி மூன்றாண்டுகள் வரையிலான தண்டனைக் காலத்தில் திராவிடர் கழகத் தோழர்கள் காட்டிய நெஞ்சுரத்திற்கும் தியாகத்திற்கும், மன உறுதிக்கும் நினைவுச் சின்னங்கள் எதுவும் அவர்கள் தொண்டிற்கு ஈடாகாது. அன்றைய சிறை நிருவாகம் சிறைப்பட்டவர்களைக் கொடுமைப்படுத்தியது. இந்த அறப்போரில் பங்கேற்றுச் சிறைப்பட்ட ஒருவரைக்கூட அரசியல் கைதிகளை நடத்த வேண்டிய தார்மீக முறையில் நடத்திடாது, கீழான சமூகக் குற்றங்கள் _- கொலை, திருட்டு, கற்பழிப்பு, கள்ளக் கடத்தல் செய்த குற்றவாளிகளைப் போலத்தான் நடத்தியது. அரைக்கால் சட்டை, அரைக்கை மேல் சட்டை _ நெஞ்சில் கைதி எண்ணிட்ட வில்லையுடன்தான் அடைத்து வைத்திருந்தது.

அது  மட்டுமல்லாது, மற்றக் கைதிகளைப் போலத் தோட்டவேலை, சமையல் வேலை, சமையல் பாத்திரங்கள் கழுவுவது முதலிய பணிகளைச் செய்ய வைத்தது. சிறையின் மோசமான உணவும், கடும் வெப்பமும் பலரின் உடலுக்கு ஒத்துக்கொள்ளாது, சிறையில் போதிய தூய தண்ணீர் வசதியோ, மருத்துவ வசதியோ இல்லாமல் பலர் நோய்வாய்ப்பட்டனர். விளைவு _ சிறைவாழ்க்கை அய்வரைச் சாகடித்தது.

கடுமையான நோய்க்கு ஆளாகி, இனி பிழைக்கப் போவதில்லை எனும் நிலையில் இருந்தமையால் தமிழக அரசினால் தண்டனைக் காலம் முன்னதாகவே சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட பதின்மூன்று பேர்  சிறைக்கு வெளியே விடுதலைக் காற்றை நுகர்ந்த போதும் இறந்தனர். ஆம்! அவர்கள் படுகொலை செய்யப்பட்டார்கள் என்றுதான் கூறவேண்டும். ஜாதி ஒழிப்புப் போருக்குத் தமிழக அரசால் படுகொலை செய்யப்பட்டவர்கள் பதினெட்டுப் பேர்.

கொலை செய்த தமிழக அரசு இது குறித்துச் சட்டமன்றத்திலோ, வெளியிலோ மூச்சுவிட வேண்டுமே? அதுதான் இல்லை. வாய் மூடி மௌனியாக இருந்தது. டெல்லி வடவருக்கு வால் பிடித்து மௌனியாகி விட்டனர்.

சிறைப்பட்டவர்கள் எத்தனை கனவான்கள். அவர்கள் நிலை சிறையில் எத்தகையது என்பதற்கு ஓர் எடுத்துக்காட்டு:

திராவிடர் கழகத்தின் மூத்த பெரும் தலைவர்களின் ஒருவரும், தந்தை பெரியாரின் பேரன்பிற்கு உரியவருமான பல நூறு வேலி நிலங்களுக்கு உரிமையுடையவரும், பல வேளாண்மைத் தோழர்கள் சேவகம் செய்யும் தகுதியுடையவரும்,  பெருநிலக்கிழாரான நீடாமங்கலம் ஆறுமுகம், சிதம்பரம் கிருஷ்ணசாமி, பெரியாரின் சம்பந்தி ஆனைமலை நரசிம்மன் உயர்ந்த ஆடை, காலணிகளுடன் தோற்றமளிப்பவர்கள் _ அரைக்கால் சட்டை, முதலிய சிறையுடையுடன் இருந்ததுடன், சிறையில் புல்புடுங்குதல், பாத்திரம் கழுவுதல் ஆகிய பணிகள் செய்தனர்.

வருமான வரி செலுத்தும் தகுதி உடையோரான வேலூர் இ.திருநாவுக்கரசு, திருச்சி டி.டி.வீரப்பா முதலான வசதிமிக்க வணிகர்கள் என்பதைக்கூட அல்ல, அவர்களுடைய வயதைக்கூடக் கருதிப் பார்க்காமல் எடுபிடி வேலை செய்ய அல்லவா பணித்தனர் அந்த இரும்பு நெஞ்சக் காவலர்கள். திருச்சியைச் சேர்ந்த தீவிரத் தொண்டனான ஓராண்டு தண்டனை பெற்ற போராளி மாணிக்கம்!  திருமணமான ஒரே வாரத்தில் போராட்டத்தில் கலந்து கொண்டு தண்டனை பெற்றுச் சிறை புகுந்தார். அடுத்தடுத்த நேர்காணல்களுக்கு வந்த – இளம் மனைவி கண்ணீர்க் கடலாய்ச் காட்சி தந்தாள். திருமணமாகி ஒரே வாரம்தான் என்பதால் மாணிக்கத்தின் மனதில் சலனம் ஏற்பட்டுவிடும் போல் நிலை. ஆனாலும், தன்னை திடப்படுத்திக் கொண்டு – கோழையாய் மன்னிப்பு கேட்டுக்கொண்டு மனைவியுடன் மணவாழ்க்கை வாழ்வதை விட, சிறையில் இருப்பதே உயர்வு எனும் தன் முடிவை மனைவியிடம், “நான் விடுதலையாகி வரும் வரையில் என்னைப் பார்க்க வராதே, என் மனம் சலனப்பட்டு நான் மன்னிப்புக் கேட்டு விடுதலையாகி வெளியே வரக்கூடாது. மனதைக் கல்லாக்கிக் கொள். போய்வா’’ என்று கூறிவிட்டார்.

கணவன் லட்சியவெறியோடு உறுதியாய் இருக்கிறான் என்று  மாணிக்கத்தின் மனைவியால் உணர இயலாமல் தன்னை  உதறிவிட்டான் என்று எண்ணி சித்தப்பிரமை பிடித்தவர் போல் சில நாள் இருந்து பின்னர் மனநோயாளியாகவே  ஆகிவிட்டாள். ஓராண்டுக்குப் பின்னர் விடுதலையான மாணிக்கம், தான் வாழ்ந்த ஒரே வாரக் கால இனிய மணவாழ்வின் நினைவுகளுடனேயே மனநோயாளியாகி விட்ட மனைவியுடன் வாழ்ந்து அவருக்கு முன்னாலேயே மடிந்தும் போனார். சிறைக்குச் சென்ற பெரியார் தொண்டர்களில் நாம் முதலில் குறிப்பிட்ட நீடாமங்கலம் ஆறுமுகம், கிருஷ்ணசாமி போன்ற ஒரு சாரார் மட்டுமே வசதியான நில உடைமையாளர்கள். வியாபாரிகள்; பலர் நடுத்தர வர்க்கத்தினர்; பலர் ஏழை விவசாயிகள், விவசாயக் கூலிகள். ஆண்டுக்கணக்கான சிறை வாசத்தால் அனைத்துப் பிரிவினருமே பாதிக்கப்பட்டார்கள். பலருடைய தொழில்கள் சீர்கெட்டன. குடும்பம் பிழைப்புத் தேடி குடிபெயரும் நிலையும்கூட ஏற்பட்டது. பல குடும்பங்களில் எதிர்பாராது ஏற்பட்ட குடும்பத் தலைவிகளின் மறைவினால் பல குடும்பங்களின் நிலை நிர்க்கதியானது உண்மை. சிறையிலிருந்து பரோலில் (விடுப்பில்) வருவதைக் கூடக் கோழைத்தனம் என்று பிடிவாதமாய்க் கருஞ்சட்டைத் தொண்டர்கள், குடும்பத்தில் தாயோ, தந்தையோ, மனைவியோ, அண்ணன், தம்பியோ நோய்வாய்ப்பட்டபோதுகூட விடுப்பில் வெளிவர மறுத்தனர். இதற்கு ஓர் எடுத்துக்காட் _ திருவாரூரைச் சேர்ந்த சிவசங்கரனும், முத்துக்கிருஷ்ணனும். பழம்பெரும் தொண்டர்கள்.

வேறு வேறு சந்தர்ப்பங்களில் மேலே சொன்ன இருவருடைய வாழ்விணையரும் கடும் நோய்வாய்ப்பட்டார்கள். அவர்களுடைய உறவினர்கள் அவர்களிருவரையும் பரோலில் அழைத்துச் செல்ல விரும்பிய போதும்,

இருவருமே வெளியே வருவதென்பது விடுதலையானால்தான் என்று உறுதியோடு கூறி விட்டார்கள். நோய்வாய்ப்பட்ட அவர்களுடைய வாழ்விணையர்கள் (வேறு வேறு சமயங்களில்) இறந்தே போனார்கள். உடன் சிறைப்பட்டிருந்தோர் நெஞ்சம் கனத்துப் போனது.  அதுமட்டுமல்லாது இறப்பு நிகழ்ச்சிகளுக்கும்கூடப் போகாமல் உயிரோடு இருக்கும்போதே பார்க்கவில்லை, பிணத்தைப் போய்ப் பார்த்து என்ன ஆகப்போகிறது என்று கண்களில் நீர் சிந்தியவாறு சொல்லிவிட்டு அன்றைய சிறைவேலைக்குப் போய் விட்டார்களாம்.

சட்ட எரிப்புப் போராட்ட வீரர்கள் தண்டனை பெற்றுச் சிறையில் இருந்தபோது அரசியல் கைதிகளாக நடத்தப்படவில்லை . சமூகக் குற்றவாளிகள் போல நடத்தப்பட்டனர். கைதி உடை அணிந்தனர். கடும் வேலைகள் செய்தனர். சிறையில் நீர் வசதியில்லை. மருத்துவக் கவனிப்பில்லை. பலர் நோய்வாய்ப்பட்டனர்.

இனி அவர்கள் குணமாவது அரிது என்று தெரிந்ததால் விடுதலை செய்யப்பட்ட 13 பேர் வெளிவந்த ஒரே வாரத்தில் இறந்து விட்டனர். இந்நிலையில், சிறைக் கொடுமைகளுக்கு ஆளாகிய 45 வயதுடைய பட்டுக் கோட்டைத் தோழர்.இராமசாமி 8.3.1958 மாலை 4 மணியளவில் இறந்து விட்டார்.

செய்தியறிந்து அன்னை மணியம்மையார், கி.வீரமணி, எம்.ஆர்.இராதா ஆகியோர் வழக்கறிஞர். தி.பொ.வேதாசலம் அவர்களுடன் திருச்சி மத்திய சிறைச்சாலை சென்று உயிர் நீத்த தோழர் இராமசாமியின் சடலத்தைக் கழகத்தினரிடம் தர வேண்டினர். சடலத்தைக் கொடுக்க மறுத்துவிட்டனர் சிறையதிகாரிகள். இதனால் மணியம்மையார், வழக்கறிஞர் திரு.பி.ரெங்கசாமி அவர்களுடன் சென்னை சென்று முதலமைச்சர் காமராசர், உள்துறை அமைச்சர் பக்தவத்சலம் முதலியவர்களுடன் சடலம் தர வேண்டி வாதாடினார். இறுதியில் அவர்களின் இசைவு பெற்று திருச்சிக்கு 10.3.1958 இல் மீண்டு வந்தனர். இராமசாமியின் சடலம் அழுகிய நிலையில் கழகத்தவரிடம் ஒப்படைக்கப்பட்டது.

9.3.1958இல் தஞ்சை மாவட்டம் மயிலாடுதுறை மணல்மேடு தோழர் வெள்ளைச்சாமியும் சிறையில் உயிர் நீத்தார். அவரது சடலம் திருச்சி பெரியார் மாளிகையில் வைக்கப்பட்டிருந்தது. 11.3.1958அன்று இறுதி ஊர்வலத்திற்கு அன்னை மணியம்மையார் சென்னையிலிருந்து காரில் வந்து கொண்டிருந்தார். தோழர்கள் பெரியார் மாளிகையில் திரண்டதால் காவல்துறையினர் உடனடியாக இறுதி ஊர்வலத்தை நடத்த வேண்டுமென்று வலியுறுத்தினர். அங்கிருந்த மத்திய நிருவாகக் குழுத் தலைவர் வழக்கறிஞர் தி.பொ.வேதாசலம் ஊர்வலத்தை கிளப்ப ஆயத்தமானார். ஆனால், தோழர்கள் அன்னையார் வந்த பின்பே ஊர்வலம் தொடங்குமென்று கூறிவிட்டனர். பின்னர் அன்னையார் வந்து சேர்ந்த பின்னே ஊர்வலம் தொடங்கியது. கடைவீதி வழியே செல்லக்கூடாது என்று காவல்துறையினர் நெருக்கடி தந்தனர். அன்னையார் சாலையில் அமர்ந்துவிட்டார். அனைத்துத் தோழர்களும் அமர்ந்து மறியல் செய்த பின்னர் கடைவீதி வழியே செல்ல அனுமதித்தனர். இருவரின் சடலங்களும் கருப்புத் துணி போர்த்தி, மாபெரும் ஊர்வலமாக வந்து காவிரிக்கரை நகராட்சி மயானம் வந்து சேர்ந்தன.

மயானத்தில் திரு.பொ.வேதாசலம் அவர்கள் தலைமையில் இரங்கற் கூட்டம் நடைபெற்றது. அன்னை மணியம்மையார், திருவாரூர் தங்கராசு, கி.வீரமணி ஆகியோர் பேசினர். தனியான இடத்தில் வீர வணக்கத்துடன் உடல்கள் அடக்கம் செய்யப்பட்டன.

ஜாதி ஒழிப்புப் போராட்டத்தில் மூன்றாம் தியாகியான மன்னார்குடி ஒன்றியம் காரைக் கோட்டை இராமய்யன் 03.05.1958 அன்று மறைந்து தோழர்களை சோகத்தில் ஆழ்த்தினார். பெரியார் கட்டளைப்படி சட்ட எரிப்புப் போரில் ஈடுபட்டு ஆறுமாதம் சிறைத் தண்டனையடைந்து திருச்சி மத்தியச் சிறையில் அடைக்கப்பட்டார், அங்கு நோய்வாய்ப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். உடல் நிலை சரியில்லாத நிலையில் அவரது தண்டனைக் காலம் 04.05.1958 அன்று முடியும் நிலையில் முன் கூட்டியே 12.04.1958 அன்று விடுதலை செய்யப்பட்டார். இந்த நிலையில் 03.05.1958 அன்று மாலை 6 மணிக்கு தமது இல்லத்தில் இராமய்யன் காலமானார்.

இப்போராட்டத்தின் நான்காவது பலி கோயில் தேவராயம் பேட்டை தோழர் மு.நடேசன் ஆவார். அவரும் 6 மாத சிறைத் தண்டனை பெற்றவர். அவர் 07.06.1958 அன்று விடுதலையாக வேண்டியவர் அதற்கு முன்பே உடல் நலம் பாதிக்கப்பட்டு 11.04.1958 அன்று மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உடல்நலம் சரியில்லாமலேயே விடுதலை செய்யப்பட்டு 23.05.1958 அன்று மறைந்தார்.

அதேபோல திருவையாற்றுத் தோழர் மஜீத் அவர்களும், திருச்சி சிறையில் மறைந்தார். அவரது தாயும், என் பிள்ளை தியாகியாகிவிட்டான் என்று உணர்ச்சி பொங்கக் கூறினார். 23.05.1958 அன்னையாரும் நானும் சமாதானம் சொன்னபோது, சோகத்தையும் வீரமாக்கிக் கொண்டார் அவர்.

அந்த ஊர்வலம் தஞ்சையில் அன்னையாரின் தலைமையில் (நான் அவர்களுடன் இருந்தேன்) துவங்கி அரண்மனை முன்பு வந்தபோது, திருச்சி போலவே, காவல்துறை அதிகாரிகள் தடுக்கவே, அன்னையார் ஆணையிட்டார். நடுச் சாலையில் அத்தனைபேரும் அமர்ந்துவிட்டனர்!

சாமி நாகராசன் ஏதோ சொன்னார்; உடனே முதுகில் ஒரு தட்டு அம்மா கொடுத்தார். அனைவரும் அமர்ந்துவிட்டனர். 10 நிமிடம் போக்குவரத்து ஸ்தம்பித்துவிட்டது. தஞ்சை பெரியார் இல்லம் என்ற கழகப் பணிமனைக்கு முன்னே இந்நிகழ்வு நடந்தது வேறு வழியின்றி காவல் துறையினர், சரி இடுகாட்டுக்கு உங்கள் விருப்பப்படியே ஊர்வலமாகச் சென்று அடக்கம் செய்யுங்கள் என்று கூறிவிட்டனர்.

அன்னையாரின் வீரமும் விவேகமும் இந்த இரு பெரும் நிகழ்வுகளில் நாட்டோருக்கும் அதிகாரிகளுக்கும் நன்கு விளங்கிற்று.

ஜாதி ஒழிப்புப் போரில் இடையாற்று மங்கலம் நாகமுத்து ஆறாவதாகப் பலியானார். தந்தை பெரியார் கட்டளை ஏற்று ஜாதி ஒழிப்புப் போரில் சிறைத் தண்டனை அடைந்து நோயுற்று இரண்டு மாதங்களுக்குள் விடுதலையான இடையாற்றுமங்கலம் தோழர் நாகமுத்து ஜாதி ஒழிப்புப் போருக்கு ஆறாவது பலியானார். 24.05.1958 அன்று இரவு 1:40 மணிக்கு இல்லத்தில் உயிர் துறந்தார். அவருடைய மனைவி சீனியம்மாள் அவர்களுக்கும், அவரது ஒரே மகனுக்கும் கழக வட்டார தோழர்களும் திராவிடக் கழகத் தோழர்களும் பொதுமக்களும் சென்று அனுதாபத்தைத் தெரிவித்துக் கொண்டனர். சுமார் 5000 மக்கள் சவ ஊர்வலத்தில் கலந்து கொண்டனர். சவ ஊர்வலம் 1 மைல் நீளம் இருந்தது. திராவிட விவசாயத் தொழிற்சங்கத்தினர் குறுகிய காலத்தில் அவருக்கு சமாதி அமைத்தனர். அனுதாபக் கூட்டம் நடைபெற்றது. 25.05.1958இல் மதுரையில் நடைபெற்ற திராவிடர் கழக மாநாட்டில் கலந்து கொண்டு வழக்குக்காக சென்னை திரும்பிக் கொண்டிருந்த அன்னை மணியம்மையாரும் நானும் (கடலூர் வீரமணி) இந்தத் துயரச் செய்தியைக் கேட்டு இடையாற்று மங்கலம் விரைந்து, சுமார் 7 மணிக்குப் போய்ச் சேர்ந்தோம்.

மழையின் காரணத்தால் அவர்கள் வந்து சேரும் முன் அடக்கம் செய்து விடவேண்டிய அவசியம் நேரிட்டதைத் தோழர்கள் தெரிவித்தனர். அம்மையார் அவர்களுடனே இடையாற்றுமங்கலம் வந்தனர். அன்னை மணியம்மையாரும் தோழர்களும் மறைந்த தோழர் இல்லத்திற்குச் சென்று ஆறுதல் கூறினர். ஊர் மக்கள் அனைவரும் சில நிமிடங்களில் ஒன்று திரண்டனர். பிறகு அனுதாபம் தெரிவிக்கும் முகத்தான் திருமதி. மணியம்மையார் அவர்களும் நானும் சில நிமிடங்கள் பேசிவிட்டுப் புறப்பட்டோம். மாண்ட தோழரின் துணைவியாருக்கு ஆறுதல் தெரிவித்த நேரத்தில் தோழர் நாகமுத்துவின் வாழ்விணையர் சீனியம்மையார் அன்னையாரிடம் தெரிவித்த இச்செய்தி ஜாதி ஒழிப்புப் போர் வரலாற்றில் இடம் பெற வேண்டிய செய்திமட்டுமல்லாது, திராவிட இயக்கம் எத்தகைய திராவிட இயக்க வீரமறவர்களின் குடும்பத்தையே பெற்றிருந்தது என்று காட்டும்.

அய்யோ! என் கணவர் தந்தை பெரியாரின் போராட்டத்தால் போய் சேர்ந்து விட்டாரே என்று புலம்பவில்லை. மாறாக,  அன்று உரைத்தது இன்றும் நெஞ்சத்தில் பதிந்து இருக்கிறது. மறக்கவியலாதது! நான் கலங்கவில்லை. என் மகன் இருக்கிறான். அய்யாவின் அடுத்த போராட்டத்திற்கு அவனையும் அனுப்பி நானும் பலியாகத் தயாராக உள்ளேன் என்று கூறியது அனைவர் உள்ளத்தையும் உலுக்கியது. மறைந்த தோழரின் ஒரே பிள்ளையான  பத்தாவது  பயிலும் மாணவரான அவருக்கும் ஆறுதல் சொல்லி புறப்பட்டோம். புறநானூற்றில் போர்க் களத்தில் கணவனை இழந்து மகனையும் அனுப்புவேன் என்ற வீரமங்கையைப் பற்றிப்  படித்துதான் இருக்கிறோம். இடையாற்றுமங்கலத்தில் அன்னையாருடன் சென்றபோது நேரில் கண்டேன் _ அத்தகு வீர மங்கையை!

அய்யா இல்லாத வேளையில் அம்மா ஆற்றிய அற்புதப் பணி இது!

தந்தை பெரியார் ஆணைப்படி சட்ட நகல் எரித்து ஆறு மாதம் சிறைத் தண்டனை அடைந்து திருச்சி சிறையில் சிறைப்பட்டு வயிற்றுப்போக்கு நோயுற்று திருச்சி அரசு மருத்துவமனையில் சில நாள் சிகிச்சை பெற்று குணமாகாமல்  எலும்பும் தோலுமாக  அனுப்பப்பட்ட தோழர் பொறையாறு என். தங்கவேலர் 28.05.1958 அன்று பகல் 11:00 அளவில் இயற்கை எய்தினார். அப்படிக் கூறுவதைவிட படுகொலை செய்யப்பட்டார் என்பதே பொருத்தமாகும். மறைந்த அவருக்கு மனைவியும் பெண் பிள்ளைகளும் ஆண் பிள்ளைகளும் இருந்தனர்.. திருச்சி சிறையின் கொடுமைக்குப் பலியானார் தங்கவேலர்.

இச்செய்தி கேட்டதும் தோழர்கள் திரண்டு சென்று வீரத் தியாக மறவருக்கு வீர வணக்கம் செலுத்தினர். ஏராளமான மக்கள் புடைசூழ உடலை எடுத்துச் சென்று நல்லடக்கம் செய்தனர். இம்மாதத்தில் இடையாற்றுமங்கலம் நாகமுத்து பலியான மூன்றாவது நாளில் அடுத்த பலி இதுவாகும்.

திருச்சி சிறையில் இவ்வாறு இருவரைப் பலி கொடுத்த சோகம் மூன்றாவது பலியாக காரக்கோட்டை இராமய்யன், நான்காவது  பலி கோவில் தேவராயன்பேட்டை நடேசன், அய்ந்தாவது பலி திருவையாறு மஜீத், ஆறாவது பலி இடையாற்றுமங்கலம் நாகமுத்து, ஏழாவது பலி பொறையாறு தங்கவேலு என்று வரிசையாகச் சிறைப்பட்ட ஓராண்டுக்குள் ஏழுபேரை இழந்தோம். இதில் திருவையாறு மஜீத் இசுலாமியர். தாராநல்லூர் மஜீத் இசுலாமியர். அவர் இறந்தபோது இசுலாமிய முறைப்படி பள்ளி வாசலில் அடக்கம் செய்யவேண்டும் என்று உள்ளூர் ஜமாத்தைச் சேர்ந்தவர்கள் மறுத்த போது அன்னையார் கழகத்தோழர்கள் புடை சூழ ஊர்வலமாக எடுத்து வந்து கருப்புக் கொடி போர்த்தி திராவிடர் கழக மரியாதைகளுடன் அடக்கம் செய்வித்தார்.

ஜாதி ஒழிப்பு அறப்போர் அதுவரை ஏழு வீரர்களைப் பலி கொண்ட செய்தியைப் பார்த்தோம். அந்த ஏழு பேரும் ஆடவர்கள். ‘ஆணுக்குப் பெண் இங்கு இளைப்பில்லை காண்’ என்பதற்கேற்ப ஆண்களுடன், மகளிர் பலரும் இந்த அறப்போரில் தாமாகவே முன்வந்து மூன்று மாதம் என்ன, மூன்றாண்டுக் கடுங்காவல் என்றாலும் ஏற்போம்; தந்தை பெரியாரின் கட்டளையை ஏற்போம்; சிறைக் கொடுமைகளுக்கு அஞ்சோம்; மன்னிப்பு எழுதிக் கொடுத்துவிட்டு வெளியே வருவதோ, நாங்கள் அரசியல் சட்டத்தை எரிக்கவில்லையே வெறும் தாளைத்தானே கொளுத்தினோம் என்று பாசாங்கு மொழிவதோ செய்யாது, சிறைக் கொடுமையை ஏற்று உயிரையும் பலி கொடுத்தனர் என்பதற்கு எடுத்துக்காட்டு இடையாற்றுமங்கலம் தெய்வயானை அம்மாள் ஆவார். இவர் 24.6.1958 காலை 6 மணியளவில் இறந்தார்.

இவர் திருச்சி சிறையில் இருந்து நோயினால் விடுதலை செய்யப்பட்டவர் ஆவார். இவரது அடக்கம் திராவிடர் விவசாய தொழிலாளர் கழகத் தலைவர் வி.ஜி.இராயப்பன் தலைமையில் நடைபெற்றது.

அரசியல் சட்டப்பகுதியை எரித்துச் சிறை சென்ற திராவிடர் கழக வீரர்களில் ஒன்பதாவதாக ஜாதி நோய் ஜூலை 30, 1958 அன்று நன்னிமங்கலம் கணேசனைப் பலி கொண்டது. கோவை சிறையில் இரண்டாண்டுத் தண்டனை ஏற்று அனுபவித்து வந்த கணேசன் மருத்துவமனையில் திடீரென மரணமுற்றார். கோவைச் சிறையிலிருந்த அவர் உடல் நலம் கெட்டுக் கோவை மருத்துவமனையில் மருத்துவம் பெற்றவர் 30.7.1958 அன்று பகல் 1:30 மணிக்குத் திடீர் என்று மாண்டார். இச்செய்தி கிடைத்ததும் சிறையில் இருந்த 300க்கும் மேற்பட்ட கழக வீரர்கள் உணவு உட்கொள்ளாது தங்கள் அனுதாபத்தைத் தெரிவித்துக் கொண்டனர்.

ஜாதி ஒழிப்புப் போரில் அவர் இறந்த செய்தி கேட்டுத் துயருறும், அவரின் தாய், தந்தை, லால்குடி சுப்பிரமணியம், கிட்டு உள்ளிட்ட எட்டுத் தோழர்கள் கோவை தி.க. செயலாளர் ரங்கநாதன் இல்லம் வந்து சேர்ந்தனர்.

மாலை 2 மணி அளவில் கணேசனின் உடல் பெரிய  மருத்துவமனையில் இருந்து வாங்கப்பட்டது. ஆனைமலை நரசிம்மன், பூந்து¬ஷ் வெங்கடாசலம், கோவை நகர தி.க. தலைவர் சுப்பிரமணி, கல்லூரி ஏ.எல்.வாசன், கே.மாரிமுத்து ஆகியோர் உள்ளிட்ட 600 தோழர்கள் அடங்கிய ஊர்வலத்துடன், எடுத்துச் சென்று கோவை குனியமுத்தூர் இடுகாட்டில் நடிகவேள் எம்.ஆர்.ராதாவின் துணைவியார் பிரேமாவதி, மகன் தமிழரசன் ஆகியோரின் கல்லறைகளுக்குப் பக்கத்தில் இறுதி மரியாதையுடன் நல்லடக்கம் செய்தனர்.

எந்த அளவிற்கு இறந்த தோழர்களுக்கு முதன்மை அளித்தனர் என்று காட்டவே இதைக் கூறுகிறோம்.

உடல் புதைக்கப் பெற்ற பின் இரவு கோவை ரங்கநாதன் வீட்டில் மறைந்த மாவீரரின் பெற்றோர்களும், லால்குடி தோழர்களும் தங்கியிருந்து விட்டு, காலை சிறைக்கு வந்து நன்னிமங்கலம் தோழர்களைச் சந்தித்த பின் மாலை கோவை கே.மாரிமுத்து புகைவண்டி நிலையத்தில் சென்று வழியனுப்பி வைத்தார் என ‘விடுதலை’ (6.8.1958) வெளியிட்ட செய்தி _ இயக்கத் தோழர்கள் அன்றும் எந்த அளவிற்குப் பொறுப்புடன் நடந்து கொண்டனர் என்று காட்டுகிறது.

ஜாதிப் பேயின் பத்தாவது பலி திருச்சி வரகநேரி தோழர் சின்னச்சாமி. ஒன்றரையாண்டு சிறைத் தண்டனை பெற்ற 37 வயதுள்ள காளை அவர். சிறையிலுள்ள மருத்துவர்களின் அலட்சியத்தாலே திருச்சி பொது மருத்துவமனையில் இறந்தார். இவரை 29.8.1958 அன்று சிறையிலிருந்து பொது மருத்துவமனைக்கு அனுப்பினர்.

அவருடைய உடலை மாலை 6 மணிக்குக் கொடுத்தபின் அவருடைய இல்லத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு. 08.09.1958 மாலை 4 மணிக்குத் தந்தை பெரியார் தலைமையில் காவிரிக் கரைக்கு எடுத்துச் சென்று அடக்கம் செய்தனர்.

அவரைத் தொடர்ந்து பதினோராவது பலியாக மயிலாடுதுறை அருகிலுள்ள மாதிரி மங்கலத்தைச் சேர்ந்த தோழர் ரத்தினம் அவர்கள் மறைந்தார்.

 திருச்சி வாளாடியைச் சேர்ந்த தியாக மறவன் வாளாடி பெரியசாமியின் வீர வரலாறு:

அரசியல் சட்டப் போராட்டத்தில் இரண்டு ஆண்டு கடுங்காவல் தண்டனை பெற்ற திருச்சி வாளாடி பெரியசாமி 14 வயதே நிரம்பிய சிறுவன். அவனுடைய அன்னைக்கு ஒரே மகன். பெரியசாமியோ தீவிரமான திராவிடர் கழகக் கருஞ்சட்டை இயக்கத்தொண்டன், தந்தை பெரியாரின் கூட்டங்கள் எங்கு நடந்தாலும் தவறாமல் பங்கேற்கும் போர் மறவரான பெரியசாமி தந்தை பெரியாரின் ஆணையை  ஏற்றுச் சட்டங்களை எரித்தான். சிறுவன் என்பதற்காகச் சட்டம் அவனை விட்டு விடாது இரண்டாண்டுக் கடுங்காவல் தண்டனை விதித்தது. ஆனால், அவன் வயதோ பதினெட்டுக்கு உட்பட்டிருந்தமையால் பெரியவர்களுக்கு உரிய சிறையிலடைக்க இடம்  கொடாத சட்டம் தொலைவில் செங்கல்பட்டு சிறுவர் சிறைக்கு அனுப்பியது. பின்னர் வேலூர் மத்தியச் சிறை; கடைசியாக தூத்துக்குடி தட்டப்பாறை சிறைக்கும் அனுப்பியது. ஏழ்மையின் காரணத்தால்  சென்று காண வசதியில்லாத அவனுடைய தாய் ஒரே மகனைக் காணாது உயிர் நீத்த பெருஞ்சோகத்தை விட அவன் குருதியில் ஊறியிருந்த அந்த திராவிட உணர்வைக் கூறவேண்டும். அந்நாளைய தமிழக ஆளுநர் விஷ்ணுராம் மேதி ஒரு நாள்     சிறையினைப் பார்வையிட வந்தார். சிறையிலிருந்த சிறுவர்களை விசாரிப்பதைப் போலவே இளைஞன் பெரியசாமியையும் விசாரித்தார், ஆளுநர். “உன்னை மன்னித்து விடுதலை செய்கிறேன். இனிமேல் இதுபோன்ற செயலில் ஈடுபடமாட்டாயா?’’ என்று கேட்டார். அவ்வாறு அவன் சொல்லி விட்டால் விடுதலை செய்யவும் எண்ணங்கொண்டே அவ்வாறே கேட்டார்.

ஆனால், அந்த இளைஞனோ, “எங்கள் தலைவர் தந்தை பெரியார் ஆணையிட்டால் மீண்டும் கொளுத்திவிட்டு வருவேன்’’ என்று பதிலளித்தான்.

“உன்னைக் கடவுள் காப்பாற்றுவாராக!’’ என்று கூறி ஆளுநர் அவ்விடம் விட்டகன்றார். சிறையில் புழு புழுத்த சோளக் கஞ்சியை உண்டு வந்ததால் வயிற்றுக் கடுப்பு வந்தது. இரத்த பேதியால் துன்பப்பட்டான். சிறைச்சாலையில் தன் நிலை தடுமாறினான். சிறை அதிகாரிகள் – உன்னை விடுதலை செய்கிறோம் என்றனர் (29.12.1958). பெரியசாமி பேச முடியாத நிலையில் கையை அசைத்து மவுனமாக மறுத்துவிட்டான். சில மணி நேரத்தில் இறந்தே விட்டான் பெரியசாமி! திருச்சி -லால்குடி சாலையில் அவனுக்கு ஒரு நினைவுச் சின்னம் உள்ளது. இன்றும் காணலாம். பதின்மூன்றாவது பலியாக  கோவை சிறையில் இருந்து விடுதலையான திண்டிவனம் தோழர் பூங்கோதை அவர்கள் 1.6.1959 அன்றும் மறைந்தார். பதினான்காவது பலியாக சென்னை புதுமனை குப்பம் மூன்றாவது வட்ட திராவிடர் கழக தோழர் எம்.கந்தசாமி 23.3.1959 அன்று சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் மறைந்தார். பதினைந்தாவது பலியாக மிகச் சில நாள்களுக்கு முன்பு சிறையிலிருந்து விடுதலையான திருச்சி பி.ஆர்.எஸ்.வாசன் 23.4.1959 அன்று மறைந்தார். பதினாறாவது பலியாக அரியலூர் கண்டராதித்தம் கழகத் தோழர் சிங்காரவேலர் ஒன்றரை ஆண்டுகள் சிறைத்தண்டனை பெற்று விடுதலையான சில நாள்களில் 20.6.1959 அன்று மறைந்தார். 17ஆவது பலியாக மயிலாடுதுறை மணல்மேடு அப்பாத்துரை அவர்கள் மயிலாடுதுறை மருத்துவமனையில் 23.8.1959 அன்று மறைந்தார்.

தந்தை பெரியார் 80 வயதில் சிறைத்தண்டனை பெற்று சிறையில் அடைக்கப்பட்டதைக் கண்டித்து நாடெங்கும் கண்டனக் கூட்டங்கள் நடந்தன. பெரியார் நடத்திய இந்திய அரசியல் சட்ட எரிப்புப் போராட்டம் தமிழகத்தை மட்டுமல்லாமல் இந்தியா முழுவதும் பெரும் பரபரப்பையும் திகைப்பையும் ஏற்படுத்தி விட்டது. 1958 மே 5 ஆம் நாள் சென்னை மத்திய சிறைச்சாலையிலிருந்து பெரியார் விடுதலையானார்.

19.01.1958 நாளிட்ட ‘விடுதலை’யில் வெளியான (பி.ஏ படித்த இளம் கல்லூரி மாணவர்) தஞ்சை நெடுமாறனால் எழுதப்பட்ட ‘இளந்தமிழா புறப்படு போருக்கு’ என்ற தலைப்பிலான கட்டுரையை வெளியிட்டதற்காக வடவரின்மீது அந்தக் கட்டுரை வெறுப்பைத் தூண்டிவிடுகிறது எனப் பொய்க் குற்றம் சுமத்தி அரசு ‘விடுதலை’யின் பதிப்பாளர் என்கிற முறையில் அன்னை மணியம்மையார்மீது வழக்குத் தொடர்ந்தது.

நீதிபதி 18.08.1958 அன்று இருவரையும் (அன்னையாரையும், நெடுமாறனையும்) குற்றவாளிகள் எனத் தீர்ப்பளித்தார். குற்றவாளிகள் இருவருக்கும் தலா ரூ.100- அபராதம் விதித்தார். தவறினால் ஒரு மாத சாதாரண சிறைத் தண்டனை என அறிவித்தார்.

திருமதி.மணியம்மையார் அபராதம் கட்ட மறுத்துச் சிறை புகுந்தார். தண்டனையை திருமதி.மணியம்மையார் முகமலர்ச்சியுடன் ஏற்றுக்கொண்டார். ‘அபராதம் கட்டுகிறீர்களா?’ என்று மாஜிஸ்திரேட் கேட்டபோது, “எங்கள் கட்சித் தலைவரின் கொள்கை அபராதம் கட்டுவதல்ல; சிறை புகுவதுதான்’’ என்று கூறி சிறை புகுவதாகப் பதில் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *