நமது அறிவு ஆசான் தந்தை பெரியார் அவர்களின் 140ஆவது பிறந்த நாள் பெருவிழா எதிரிகள் திகைத்து திணர தமிழகமெங்கிலும், இந்தியா முழுவதும், உலக அளவில் பல்வேறு நாட்டு மக்களாலும் உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது. இந்நிலையில், திராவிடர் கழகத்தின் சார்பில் 17.9.2018 அன்று சென்னை வேப்பேரி பெரியார் திடலில் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தலைமையில் மிகுந்த எழுச்சியுடன் கொண்டாடப்பட்டது.
பெரியார் திடலில் அதிகாலையிலிருந்தே கருஞ்சட்டைத் தோழர்கள் அணியணியாய்த் திரண்டனர். பெருமகிழ்ச்சியோடு பெருந்திரளாகக் கூடிய பெரியார் பற்றாளர்கள் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தலைமையில் ஊர்வலமாகச் சென்று பெரியார் ஈ.வெ.ரா. நெடுஞ்சாலையில் அமைந்துள்ள அன்னை மணியம்மையார் சிலைக்கு மாலைஅணிவித்தனர். பின்னர், அனைவரும் பெரியார் திடலை அடைந்து 21 அடி உயரமுள்ள தந்தை பெரியார் சிலைக்கு மாலைகளும் மலர் வளையங்களும் வைத்து வாழ்க பெரியார்! வளர்க பகுத்தறிவு! என உணர்ச்சி மிகுந்து உற்சாகம் மிகுந்து முழக்கமிட்டனர். அதனைத் தொடர்ந்து ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தலைமையில் தந்தை பெரியார் நினைவிடம், அன்னை மணியம்மையார் நினைவிடம் சென்று மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்திய பின் தந்தை பெரியாரின் பிறந்த நாள் உறுதிமொழியை தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் சொல்ல, அவரைத் தொடர்ந்து அனைவரும் உறுதிமொழி கூறி சூளுரை ஏற்றனர். அதனை தொடர்ந்து ஆசிரியர் அவர்கள் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.
இலவச மருத்துவ முகாம்
தந்தை பெரியாரின் 140ஆம் பிறந்த நாளையொட்டி சென்னை பெரியார் திடலில் உள்ள பெரியார்_மணியம்மை மருத்துவமனை சார்பில் பல்துறை மருத்துவ நிபுணர்கள் பங்கேற்ற இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது. இம்முகாமில் ஏழை எளிய மக்கள் எண்ணற்றோர் கலந்துகொண்டு பயனடைந்தனர்.
அன்னை நாகம்மையார் அரங்கம் திறப்பு
தந்தை பெரியார் 140ஆவது பிறந்த நாள் விழா மற்றும் 90 வயதை கடந்த தொண்டறச் செம்மல்களுக்கு பாராட்டு _ வாழ்த்து _ விருதளிப்பு விழாவிற்கு சிறப்பு விருந்தினராக கலந்துகொள்ள வருகை தந்த திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளர் இனமான பேராசிரியர் க.அன்பழகன் அவர்கள் விழா தொடங்குவதற்கு முன்பு பெரியார் திடலில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள அன்னை நாகம்மையார் அரங்கத்தை திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் முன்னிலையில் திறந்துவைத்தார்.
90 வயதை கடந்த தொண்டறச் செம்மல்களுக்கு
பாராட்டு – வாழ்த்து – விருதளிப்பு விழா
காலை 10.30 மணியளவில் ‘நடிகவேள்’ எம்.ஆர்.இராதா மன்றத்தில் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தலைமையில் 90 வயதை கடந்த தொண்டறச் செம்மல்களுக்கு பாராட்டு _- வாழ்த்து _- விருதளிப்பு விழா நடைபெற்றது. திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்கள் வரவேற்புரையாற்ற, திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ் அவர்கள் அறிமுகவுரையாற்றினார்.
விழாவிற்கு திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளர் இனமான பேராசிரியர் க.அன்பழகன் அவர்கள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவர் தோழர் சங்கரய்யா அவர்களின் சார்பில் தோழர் சுகந்தி அவர்களும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தோழர் ஆர்.நல்லக்கண்ணு ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்று விருது பெற்று சிறப்பித்தனர். இவர்களுடன் பெங்களூரு வீ.மு.வேலு (98 வயது), பொத்தனூர் க.சண்முகம் (96 வயது), ஆத்தூர் ஏ.வே.தங்கவேல் (95 வயது), இராசகிரி கோ.தங்கராசு (94 வயது), அரியலூர் து.பெரியசாமி (94 வயது), செங்கற்பட்டு இரா.கோவிந்தசாமி (93 வயது), கோவை வசந்தம் கு.இராமச்சந்திரன் (93 வயது), மா.குஞ்சுபாபு (93 வயது), சென்னை கோ.அரங்கசாமி (93 வயது), தலைவாசல் ஆர்.கிருஷ்ணசாமி (91 வயது), திருச்சி அ.மாவடியான் (91 வயது), சிதம்பரம் த.திருமலை (91 வயது), கோவை ரெங்கநாயகி (91 வயது), அறந்தாங்கி கு.கண்ணுசாமி (91 வயது), சென்னை ச.இராசரத்தினம் (91 வயது), பாலையூர் பி.காளியப்பன் (91 வயது), விருதுநகர் அ.தங்கசாமி (91 வயது), திருவாரூர் பி.எஸ்.அகமது பாய் (90 வயது), திருவாரூர் மு.வாசுதேவன் (90 வயது), திருமருகல் சி.பி.கண்ணு (90 வயது), திருப்புகழூர் டி.ஆர்.எம்.கிருட்டிணன் (90 வயது), சீர்காழி எஸ்.எம்.ஜெகதீசன் (90 வயது), திருச்சி ஞான.செபஸ்தியான் (101 வயது) (அவரது சார்பில் அவரது மகள் பெற்றுக் கொண்டார்), விருதுநகர் மு.காந்தியம்மாள் (98 வயது) (அவரது பேத்தி எழுத்தாளர் ஓவியா), அ.கோவிந்தன் (95 வயது) (அவரது மகன் கோவி.கோபால்), தூத்துக்குடி சீ.தவமணி (வயது 90) அவரது மகன் பொன்ராஜ் ஆகியோர்களுக்கு ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் விருது வழங்கி பாராட்டுகளையும், வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொண்டார். விழாவில் உரையாற்றியவர்களின் உரையிலிருந்து சில பகுதிகள்…
இனமானப் பேராசிரியர் க.அன்பழகன்
இனமான பேராசிரியர் க.அன்பழகன் சார்பில், பிரபல இதய நிபுணர் டாக்டர் சொக்கலிங்கம் ஏற்புரையாற்றினார்.
தோழர் நல்லகண்ணு
“நான் மாணவர் பருவத்தில் பொதுவுடமை இயக்கத்தில் என்னை இணைத்துக் கொண்டேன் என்றாலும், பெரியார் அவர்களின் கருத்துகள் என்னைக் கவர்ந்தவை. இன்றைக்கும்கூட மதவாத சக்திகளுக்கு மாபெரும் எதிரியாகக் காணப்படுபவர் பெரியாரே! அவர் இந்தக் காலகட்டத்தில் மிக மிகத் தேவைப்படக்கூடிய தலைவராக இருக்கிறார். அவர் மறைந்திருக்கலாம்; ஆனாலும், அவர் கொள்கைகள் மறையவில்லை; மறையக் கூடாதவை.’’
தமிழர் தலைவர் ஆசிரியர்
“இங்கே பாராட்டப்பட்ட பல பேர் சிறு வயதில் நான் பேச வந்தபோது மேடையில் ஏற்றி நிற்க வைத்தார்கள். ஆம், அவர்கள் தோள்களில்தான் நாம் நின்று கொண்டிருக்கிறோம்’’ என்று நன்றி ததும்ப தனது தலைமை மற்றும் நிறைவுரையில் பேசினார். நிறைவாக தோழர் க.பார்வதி அவர்கள் நன்றி கூறினார்.
மகளிர் கருத்தரங்கம்
தந்தை பெரியார் பிறந்த நாள் சிறப்பு கருத்தரங்கம், திராவிடர் கழகப் பிரச்சார செயலாளர் வழக்குரைஞர் அ.அருள்மொழி தலைமையில் நடைபெற்றது. பொறியாளர் இ.ச.இன்பக்கனி வரவேற்புரையாற்ற, வழக்குரைஞர் ஆ.வீரமர்த்தினி அறிமுக உரையாற்றினார். கருத்தரங்கத்திற்கு மிக நேர்த்தியாய் ப.மணியம்மை அவர்கள் இணைப்புரை வழங்கினார். கருத்தரங்கத்தில் கருத்துரையாற்றியவர்களின் பொழிவிலிருந்து சில பகுதிகள்…
உச்சநீதிமன்ற வழக்குரைஞர் கிருபா முனுசாமி
“வடக்கே அம்பேத்கர், தெற்கே தந்தை பெரியார். இருவரும் ஒரே மாதிரியாக சிந்தித்த தலைவர்கள் ஆவார்கள்.’’ என்று பேசிய உச்சநீதிமன்ற வழக்குரைஞர் கிருபா முனுசாமி தன் உரையை ஓர் ஆய்வுக் கட்டுரை போல் வழங்கி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார்.
ஊடகவியலாளர் கவிதா சொர்ணவல்லி
“பெரியார் சொன்னவற்றிலேயே முக்கியமானது பெண்களே, உங்கள் கருப்பையை தூக்கி எறியுங்கள் என்பதுதான். உண்மையிலேயே இது ஒரு பெரிய அதிர்ச்சிதான். ஆனால், அதில் உள்ள நியாயத்தை யாரும் புறந்தள்ளிட முடியாதே’’ என்று தொடக்கம் முதலே எழுத்தாளர் கவிதா சொர்ணவல்லி அவர்கள் அதிரடியாய் பேசினார்.
எழுத்தாளர் ஓவியா
“பெண்களைப் படிக்கச் சொன்ன ஒரே ஒரு தாய் இயக்கம் திராவிடர் கழகம்தான். தந்தை பெரியார் நடத்திய மாநாடுகள் அனைத்தும் சமூக நீதிக்காகத்தான், ஜாதி ஒழிப்புக்காகத்தான், பெண்ணடிமையைத் தகர்க்கத்தான்’’ என்று ஆரம்பம் முதலே இடி முழக்கமாய் எழுத்தாளர் ஓவியா அவர்கள் பேசினார்.
தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி
பெரியார் பண்பலை புதிய செயலியை வெளியிட்டு, “பெரியார் மக்களுக்காக போராடியவர். ஆனால், அந்த மக்களில் சிலர் அறியாமையால் பெரியாரை அன்று முதல் இன்று வரை எதிர்த்து வருகிறார்கள். பெரியார் சராசரி மனிதர்களைக் காட்டிலும் மாறுபட்டு செயற்கரிய பல செயல்களைச் செய்தவர். நல்ல பெயர் எடுக்க வேண்டும் என்பவர் என் பின்னால் வராதீர். கெட்ட பெயருக்கு அஞ்சாதவர் என் பின்னால் வரலாம் என்றார் பெரியார். ஏனெனில், சமூக தொண்டாற்றுபவருக்கு நல்ல பெயர் கிடைக்காது என்றவர் அவர்.’’ என்று பெரியாரைப் பற்றி பல தகவல்களை நினைவு கூர்ந்து நிறைவுரையாற்றினார். நிறைவாக, கும்மிடிப்பூண்டி செல்வி அவர்கள் நன்றி கூறிட பிற்பகல் 2.30 மணிக்குக் கருத்தரங்கம் நிறைவுற்றது.
நிகழ்ச்சி நிறைவு
மிகுந்த உற்சாகத்துடன் கொண்டாடப்பட்ட தந்தை பெரியாரின் 140ஆவது பிறந்த நாள் பெருவிழாவில் காலையில் தொடங்கி கருத்தரங்கம் முடியும் வரையில் பெரியார் திடல் அனைத்து துறை பணி தோழர்கள், திராவிடர் கழகத் தோழர்கள், பல்வேறு அமைப்பு மற்றும் கட்சிகளைச் சார்ந்தோர்கள், குடும்பம் குடும்பமாக பொதுமக்களென திரளானோர் கலந்துகொண்டு சிறப்பு செய்தனர். விழாவிற்கு வந்திருந்த அனைவருக்கும் மதிய விருந்தளித்து உபசரிக்கப்பட்டது.
– தமிழோவியன்