ஒரு நாள் ஒரு கவிதை
www.orukavithai.com
கவிதைக்கென எண்ணற்ற தளங்கள் செயல்படுகின்றன. தடுக்கி விழுந்தால் கவிதைத் தளம் என்கிற சூழல் இருந்த காலகட்டமும் தமிழ் இணையச் சூழலில் இருந்தது. ஆனால் அவற்றுள் சற்றே மாறுபட்டு இருக்கிறது ஒருகவிதை.காம். காரணமும் அதுவே – ஒரு நாள் ஒரு கவிதை!
புதிய பல கவிஞர்களின் கவிதைகள், பழந்தமிழ் இலக்கியங்களில் இருந்து கவிதைச் செறிவுள்ள பாக்கள், நயம் பொருந்திய திரைக் கவிதைகள், ஹைக்கூ என அனைத்தும் உண்டு. முதல் பக்கத்தில் நாளொன்றுக்கு ஒரு கவிதை என்ற அளவில் அறிமுகப்படுத்தும் இத்தளத்தில் நாம் பதிவு செய்துகொள்வதன் மூலம் நம் மின்னஞ்சல் முகவரிக்கே கவிதை வந்து கதவைத் தட்டும். இதைத் தவிர ஏனைய முயற்சிகளாக, கவிஞர்கள் குறித்த அறிமுகங்கள், கவியசைப் படங்கள் (காணொளிகள்) என கவிதைகளை ஒட்டிய பிற தொகுப்புகளையும் செய்ய இத்தளம் முயல்கிறது. அண்மையில் பாண்டூ என்பவர் எழுதி வெளிவந்த கவிதைகளிலிருந்து சில வரிகள்: ——————-சாமி(யார்)?——————–
இவர்களது ஆசிரமங்கள்
கருப்புப் பணத்தின்
காக்கைக் கூடுகள் ! … … …
தீராத நோயெல்லாம் ‘சத்ய’மாய்
தீர்ப்பார்கள்…
இவர்களுக்கொன்றென்றால்
அவசரச் சிகிச்சைப் பிரிவில்
சேர்ப்பார்கள்! … … …
கால் கழுவக்கூட
காசு வாங்கும் இவர்களைக்
கை கழுவுங்கள்!
பணியிட மாற்றம்
நிலம் பார்த்து நின்ற
நாற்றங்கால்களுக்கு மாற்றாய்,
வானம் பார்த்து நிற்கும்
அடுக்கு மாடிக் குடியிருப்புகள்! … … …
புழுக்கையிடும் ஆடும்
சாணமிடும் மாடும்
மேய்ந்த இடத்தில்
ஓய்வாய் நிற்கும்
புகையைக் கக்கும் வாகனங்கள்! … … …
விலை நிலமாகிப் போன
விளை நிலத்தை…
ஏக்கப் பார்வை பார்த்தபடி
செக்யூரிட்டியாய் நிற்கும்
முன்னால் விவசாயி!