அய்யாவின் அடிச்சுவட்டில்….

செப்டம்பர் 16-30

“பிரிவினைக்காக நாம் பிரிவினை கேட்கவில்லை”

– கி.வீரமணி

இந்த மாநாட்டுச் செலவுகளையெல்லாம் அய்யா அவர்களே கண்காணிப்பாளராக இருந்தபடியால், எங்களால் விரிவாகவோ, ஆடம்பரமாகவோ எதுவும் செய்ய முடியவில்லை. ஒவ்வொன்றுக்கும் அய்யா அவர்களிடம் (Sanction) அனுமதி  வாங்கித்தான் செலவழித்து, வவுச்சரில் கையொப்பமிட்டு செலவுத் தொகை, மிச்சக் கணக்கினை ஒப்படைக்க வேண்டும் என்பது நடைமுறை – அவ்வளவு கட்டுப்பாடு!

முதல் நாள் திடலில் விடுதலை அலுவலகத்தினை ஒட்டி அய்யா வழக்கமாகத் தங்கும் பகுதியில் அய்யா அவர்கள் கட்டிலில் அமர்ந்து ஜன்னல்வழியே பார்ப்பார்கள். தள்ளும் சக்கர நாற்காலியை சம்பந்தம் மற்றும் நண்பர்களாகிய நாங்கள் ஒளித்துவைத்துவிட்டு, அய்யாவை வெளிவந்து பார்வையிடாமல், மாநாடு அன்று காலையில்தான் அய்யா பார்த்து மகிழ வேண்டும் என்று ஏற்பாடுகளைச் செய்து கொண்டிருந்தோம்.

கீற்றுப் பந்தல் துவங்குமுன்பு தற்போது உள்ள பெரியார் சிலையை – சிற்பி எம்.என். நாகப்பா அவர்களது மகன் எம்.என்.என். ஜெயராமன் அவர்களைக் கேட்டு (சிமெண்ட்தான் – பெயிண்ட் அடித்தது) முகப்பில் ஒரு பீடம் கற்களாலும் கட்டி, சிமெண்ட் பூசி, அய்யா பற்றிய வாசகங்களை அமைத்து அய்யா நிற்கும்படி அமைத்துவிட்டோம்! அய்யா பார்வைக்குப் படாமலேயே – அய்யா அதை அப்போது முகப்பில் வைக்க அனுமதித்து இருக்கமாட்டார்கள் என்பதால் அய்யாவிடம் மாநாட்டுப் பந்தல் வேலை முடியவில்லை, முடிந்தவுடன் அய்யாவை அழைத்துப் போகிறோம் என்று காட்டிக்கொண்டே வந்தோம், காலமும் ஓடியது!

ஒரு எளிய – லித்தோ போஸ்டர் அடித்து நகர் முழுவதும் ஒட்டினோம் – அய்யா அனுமதியில்லாமலேயே – அய்யா அவர்கள் விடுதலை அலுவலகத்தில் மரக்கட்டை எழுத்துகளைக் கொண்ட விடுதலை நாளிதழ் டெய்லி விற்பனை போஸ்டர் போலத்தான் மாநாட்டின் போஸ்டர்கள் நமது போஸ்டர் மெஷினிலேயே அடிக்க வைத்து வெளி மாவட்டங்களுக்கும், சென்னை, உள்ளூருக்கும் அனுப்பலாம் என்றே கூறி நடைமுறைப்படுத் துவது வாடிக்கை; இம்மாநாட்டிலும் அதே முறை கடைப்பிடிக்கப்பட்டது! அய்யாவுக்குத் தெரியாமலேயே லித்தோ (ஒரு கலர்தான்) போஸ்டர்கள் ஒட்டப்பட்டன.

பார்ப்பனர்கள் எதிரிகள் – ஏடுகள், மாநாட்டிற்கு எதிரான கலவரங்களுக்குத் தூபம்போட்டன. அறிக்கைகள் விட்டார்கள். தி.மு.க. அரசு எப்படி இந்தப் பிரிவினை மாநாட்டிற்கு ஆதரவு தருகிறது என்றெல்லாம் கற்பனையாக பழிதூற்றத் துவங்கினர்.

உடனே தி.மு.க. அரசுக்கு எவ்வகையிலும் ஆபத்து (டெல்லி மூலம்) வந்துவிடக் கூடாது என்பதால், தந்தை பெரியார் அவர்கள் தி.மு.க. அமைச்சர்கள் எவரையும் இம்மாநாட்டிற்கு அழைக்கவில்லை என்பதோடு, பார்வையாள ராகக் கூட வரக்கூடாது என்ற அன்புக் கட்டளையையும் போட்டு தாக்கீது அனுப்பிவிட்டார்கள்.
ஆனால், திருச்சியில் எப்போதும் பெரியாரின் செல்லப் பிள்ளைகளாகவே நடந்துகொண்ட கொள்கை உறவுக்காரரும் பாசப் பிணைப்பாளரு மான உள்ளாட்சித் துறை அமைச்சர் அன்பில் தர்மலிங்கம் அவர்கள் மட்டும் முதல்நாள் இரவு தலையில் முண்டாசு கட்டிக்கொண்டு பெரியார் திடலுக்கு வந்து பார்த்து, மாநாட்டு வேலைகள் நடப்பதைப் பார்த்து (இரவு 10 மணிக்குமேல்) விட்டு, எங்களிடம் பேசிக் கொண்டிருந்து விட்டுப் போனார்கள்.

கூலிப்படைகள் கருப்புக்கொடி காட்டுவதைக்கண்டு, திரண்டெழுந்த கருஞ்சட்டையை ஆசிரியர் அமைதிப்படுத்துகிறார்.

பொழுது புலர்ந்த நிலையில், அய்யா 6 மணிக்கே தயாராகிவிட்டார்கள். சிங்கம் குகையைவிட்டு வெளியே வந்து கர்ஜிக்க ஆயத்தமாகிவிட்டது. கழக கருஞ்சட்டைப் படைப் பெண்கள் – ஆண்கள், பெரியார் பிஞ்சுகள் உள்பட குடும்பம் குடும்பமாக வந்து அய்யாவைப் பார்த்து வணக்கம் தெரிவித்த வண்ணம் இருந்தனர்.

காலை மாநாடு துவங்கும் முன்னர் சுமார் 50, 60 பேர்கள் கொண்ட பார்ப்பனர்கள் – பார்ப்பன அடிமைகள் கைகளில் கருப்புக் கொடியுடன் – பழைய பூவிருந்தமல்லி நெடுஞ்சாலை (தற்போது பெயர் ஈ.வெ.ரா. நெடுஞ்சாலை) வழி வருகின்ற செய்தியைக் கேள்விப்பட்டதுதான் தாமதம் – திடலுக்குள் இருந்த கருஞ்சட்டைப் பட்டாளம், எழும்பூர், சென்ட்ரல் ரயில் நிலையங்களிலும், கார்கள் வேன்களில் வந்த ஆயிரக்கணக்கான கழக வீரர்களும் வீராங்கனைகளும் திடலுக்கு வெளியே ஓடோடிவந்து – வெறிப்பிடித்தவர்கள் போல் பார்ப்பனியம் ஒழிக! இந்தப் படையிடமா விளையாட்டு என்று முழக்கமிட்டுக் கொண்டே வந்தனர். மோதல் வெடித்துக் கிளம்பும் நிலை.

நகர காவல்துறை ஆணையர் – போலீஸ் கமிஷனர் திரு. ஷெனாய் அவர்கள், டிப்டி கமிஷனர்  திரு.துரை அய்.பி.எஸ். மற்றும் அதிகாரிகள், போலீஸ் வந்தும் கழகத் தோழர்கள் குமுறலை, எதிர்ப்பை அடக்கிக் கட்டுக்குள் கொண்டுவர முடியவில்லை. கருப்புக் கொடியு டன் வந்த சில 50, 60 பேர் பார்ப்பனக் கும்பலே. தாசப்பிரகாஷ் ஓட்டலருகே பின்வாங்கி – உயிர்காக்க ஓடிக் கொண்டிருந்தனர்.

அவர்களை போலீசார் விரட்டுகின்றதைவிட, பெரியார் திடலில் உள்ள கருஞ்சட்டைக் கடலைத் தடுப்பதே பெரிய பிரயாசை ஆகிவிட்டது! விட்டால் ரணகளம்தான்! அவ்வளவு டென்ஷன் – உடனே திரு. துரை அய்.பி.எஸ். (D.C.) உள்ளே வந்து அய்யாவிடம் எப்படியாவது உங்க தோழர்களைக் கட்டுப்படுத்த அய்யா சொல்லி அனுப்புங்க என்று கேட்டுக் கொண்டார்.

அய்யா உடனே என்னை அழைத்து. நம் தோழர்கள் யாரும் திடலுக்கு வெளியே போய் கலவரம் நடக்க இடம் தந்துவிடக்கூடாது. காவல்துறையினர் அவர்கள் கடமையைச் செய்ய நாம் ஒத்துழைக்க வேண்டும் என்று நான் சொல்வதாக நீங்கள் சொல்லிவிட்டு உள்ளே அழைத்து வாங்க; உடனே போங்க, என்று ஆணை பிறப்பித்தார்.

நான் உடனே ஓடோடி ஒலி பெருக்கியில் (காவல்துறை மைக்தான்) தோழர்களிடம் அய்யா ஆணை இது என்று கூறி அமைதிப்படுத்த முயன்றேன். தினத்தந்தி அலுவலகம் எதிரே உள்ள ரண்டால்ஸ் சாலைமுனையில் (இப்போது ஈ.வெ.கி.சம்பத் சாலை) நின்றுகொண்டு, ஒரு கருப்புச்சட்டைகூட வெளியே நிற்கக்கூடாது என்பது அய்யா கட்டளை என்று அறிவித்தேன்; என்றாலும் ஆத்திரம் தோழர்களுக்கு அடங்கியதாகவே இல்லை.

உடனே அம்பாசிடர் கார் ஒன்றின் (ஒரு தோழரது) மேலே (டாப்பில்) ஏறி நின்றுகொண்டு, கடவுள் இல்லை, கடவுள் இல்லை என்ற கடவுள் மறுப்பு வாசகம், பெரியார் வாழ்க என்ற முழக்கங்கள் தொடர் முழக்கங்களாகவே கூறி அவர்களது ஆத்திரத்தினை ஒரு எல்லைக்குள் கொண்டு வர முயன்று வெற்றி கண்டோம்.

தோழர்கள் அப்படியே என்னைப் பின்பற்றி முழக்கத்தோடு, திடலுக்குள் வந்துவிட்டனர். காவல்துறை அதிகாரிகள் இந்த உத்தியினை மிகவும் பாராட்டி, அய்யாவிடம் வந்து நன்றி சொன்னார்கள்.

வந்த பார்ப்பனர்கள் கொண்டுவந்த கருப்புக்கொடியில் இருந்த தடிகளையே எடுத்து நையப்புடைத்து அப்பகுதி தி.மு.க.- தி.க. பிரமுகர்கள் – ஆதரவாளர்களே அடித்து விரட்டிவிட்டனர். காவல்துறையினருக்கு நிம்மதிப் பெருமூச்சு!

இது 8.12.1973 விடுதலையில் கோழைகள் ஓட்டம் என்ற தலைப்பில் பெட்டிச் செய்தியாகவும் வெளிவந்துள்ளது.

எனது மாநாட்டின் வரவேற்புரை மற்றும் கொடியேற்று விழா, பகுத்தறிவுக் கண்காட்சி விழா, மாநாட்டுத் துவக்க விழா முடிந்துதான் – அய்யா ஆணைப்படி நிகழ்ந்தது.

அதில் சட்டப்பூர்வமாக நாம் எப்படி சூத்திரர் _- பார்ப்பனரின் தாசிமக்கள் என்று உள்ளது என்பதை மனுநீதியில் துவங்கி இந்திய அரசியல் சட்டத்தின் 372ஆவது விதிவரை விளக்கிப் பேசினேன். துவக்கத்தில் மிகுந்த ஆத்திரத்துடன் பேசும்போது, இந்த மாநாட்டினை எதிர்த்து இங்கே கூலிகள் கருப்புக்கொடி காட்டினர்; இதுவும் நன்மைக்குத்தான். இனி பார்ப்பன மதத்தலைவர் சங்கராச்சாரி இங்கு வரட்டும். எங்கு வந்தாலும் நாம் கருப்புக்கொடி காட்டத் தயாராக இருக்கிறோம்.

கதாகாலேட்சேபங்கள் நடக்குமிடம் அங்கெல்லாம் கருப்புக் கொடி காட்டுவோம். பார்ப்பனர் -_ அவர்கள் தலைவர்கள் வரும் கோவில், திருவிழாக்கள் அங்கெல்லாம் சென்று கருப்புக் கொடி காட்டி மறியல் செய்ய நாங்களும் தயாராக இருக்கின்றோம். அய்யா அவர்களே, தயவுசெய்து அனுமதி கொடுங்கள் என்று நான் பேசியவுடன் கூடியிருந்த கருஞ்சட்டைக் கடல் ஆணையிடுங்கள், ஆணையிடுங்கள் என்று உணர்ச்சி அலைகள் பொங்க, பெருங்குரல் எழுப்பி நீண்ட கையொலி எழுப்பியது.

எனது உரை முடிய பகல் சுமார் 1.30 மணி அளவில் ஆகிவிட்ட நிலையில், அடுத்து அய்யா அவர்கள் பேசத் துவங்கினார்கள். இவ்வளவு அருமையான உரையை வீரமணி அவர்கள் நிகழ்த்திய பிறகு நான் பேசவேண்டாம்; பேசி அவர் உருவாக்கிய உணர்வைக் கலைத்துவிடக் கூடாதே என்று கருதி பேசாமலே முடித்து விடலாம் என்று கருதுகிறேன்; என்றாலும் நீங்கள் ஏமாற்றம் அடைவீர்களே நான் பேசாவிட்டால் என்பதால்தான் ஒருசில வார்த்தைகள் கூற முன்வந்துள்ளேன் என்று கூறினார்கள்.

இதைவிட என் வாழ்வில் யான் பெற்ற பேறுதான் என்னே!

இதேபோல் சேலம் செவ்வாய்ப்பேட்டையில் பேசும்போது அய்யாவுக்கு முன் ஆச்சாரியார் _- சுதந்திரா கட்சி – ஆரிய- _ திராவிடர் போராட் டம் பற்றி விளக்கி சுமார் 1 மணி நேரம் பேசியபின், இத்தகைய கருத்துகளையே கூறி என்னை ஊக்குவித் தாரே என்பதை நினைக்கும்போது எனக்குக் கிடைத்த பெரும்பேறுதான் என்று சொல்ல வேண்டும்.

இரண்டாண்டுகளுக்கு முன்பு சேலத்தில் நாம் நடத்திய மாநாட் டிற்கும் ஊர்வலத் திற்கும் தேர்தல் நேரத்தில் எப்படி எல்லாம் விளம்பரம் கொடுத்தார்கள்!  சேலம் மாநாட்டிற்கு விளம்பரம் பின்னால், சென்னை மாநாட்டிற்கு எதிரிகள் செய்த விளம்பரம் முன்னால்!  உணர்ச்சி குறைவாக இருந்தவர்களுக்குப்  புத்துணர்ச்சி பெறும்படியாகச் செய்திட்ட அவர்கள் பணி, எதிர்ப்பு எதுவானாலும் நம் கொள்கைப் பயிருக்கு இடப்படும் உரமேயாகும்!  எனவே,  இது குறித்து நாம் கவலை அடைய வில்லை.  மகிழ்ச்சியே அடைகிறோம்.

தமிழர் சமுதாயத் திற்குள்ள இழிவு எத்தன்மையானது என்பது குறித்து தந்தை பெரியார் அவர்களும் நமது இயக்கமான திராவிடர் கழகமும் எடுத்துச் சொல்லாத நாள் இல்லை.  கடந்த ஒரு மாதகாலமாக தந்தை பெரியார் அவர்கள் விடுதலை வாயிலாக தமிழ் மக்களுக்கு விடுத்துவந்த அறிக்கையில் நாம் கேட்பது என்னவென்பதை, சாதாரண பாமர மக்கள்கூட புரிந்து தெளிவடையும் வகையில் விளக்கி எழுதி வந்திருக்கிறார்கள்.

நம்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்,  அடக்க வேண்டும்,  ஒடுக்க வேண்டும் என்று கீர்த்தி, கித்தாப்பு பேசும் டில்லி ஆட்சி அதிபர்களான பிரதமர், உள்துறை அமைச்சர் போன்றவர்கள் 4 1/2 கோடி தமிழர்களின் மானப்பிரச்சினையான இப்பிரச்சினையைப் புரிந்து கொண்டதாகக்கூட காட்டிக்கொள்ளவே இல்லை.  இதைவிட தலையாய அரசியல் நாணயக்கேடு (Political dishonesty) வேறு இருக்கவே முடியாது.

இது குறித்து தந்தை பெரியார் அவர்கள் 15.11.73 விடுதலையில் வெளியிட்ட ஓர் அறிக்கையில் தெளிவுபடுத்தினார்கள்.

நமது கழகத்தின் நிலை என்ன என்பதைத் தெளிவாக விளக்குகின்ற வகையில், தமிழர்களே, பிரிவினைக்காக நாம் பிரிவினை கேட்கவில்லை. நாம் சூத்திரன், தாசி மகன் என்ற இழிவு நீங்க வேண்டும். அதை நீக்க முடியாதென்றால் பிரிவினை தவிர வேறு வழி என்ன? என்று தந்தை பெரியார் அவர்கள் கையெழுத்திட்டு,  ஒரு சுருக்கமான ஆனால் மிகவும் தெளிவான அறிக்கையை வெளியிட்டார்களே! அந்த அறிக்கையில், நம்மீது சுமத்தப்பட்டிருக்கும் சமுதாய இழிவிற்குக் காரணமானவைகளை டில்லி அரசு மாற்ற வேண்டும், திருத்த வேண்டும் என்று கேட்கிறோம்.  அதைத் திருத்த முடியாது; நீங்கள் காலமெல்லாம், கல்லுங் காவிரியும் உள்ள வரையில் சூத்திரர்களாக, பார்ப்பனரின் வைப்பாட்டி மக்களாக, தாசி புத்திரராகத்தான் இருக்க வேண்டும் என்றால் அதை மானமுள்ள எங்களால் சகிக்க முடியாது. உங்கள் ஆட்சியை விட்டு விலகிக்கொள்வதைத் தவிர வேறு வழிதான் என்ன என்று யோசிக்காமல் இருக்க முடியுமா? என்று அய்யா வினவினார்கள்.

Caste is abolished and its practice in any form is forbidden by law என்று எழுத நேரம்கூடப் பிடித்திருக்காதே!  ஏன் செய்யவில்லை?

அந்த சூட்சமத்தைத்தான் – ரகசியத்தைத்தான் நாம் புரிந்துகொள்ள வேண்டும்.  அரசியல் சட்டத்தினை எழுதிய 6 பேர் கொண்ட கமிட்டியில் டாக்டர் அம்பேத்கர், மகமது சாதுல்லா என்ற இருவரையும் தவிர்த்த எஞ்சிய 4 பேர்கள் (டி.டி.கே, அல்லாடி,  முன்ஷி, சர்.என். கோபால்சாமி அய்யங்கார்) பச்சைப் பார்ப்பனர்கள்!  ஜீவகாருண்யத்தை நரி போதிக்குமா?  ஜாதி ஒழிப்பைப் பார்ப்பான் மனமாரச் சொல்வானா?  அது மட்டுமல்ல, அந்தத் தீண்டாமை ஒழிப்பு ஏன் பதில் கூட கொஞ்சம் சட்டப்புள்ளியை வைத்துவிட்டனர்!  தீண்டாமை என்ற சொல்லுக்கு மேல் அடைப்புக்குறிகளை (Inverted Commas) போட்டு, அதன் எல்லையையும் குறுக்கினர்!

அதன்படி, மனிதனை மனிதன் தீண்டிக் கொள்ளலாம் – ஆனால், சாமி என்ற பெயரில் உள்ள விக்கிரகத்தினை – கற்சிலைகளைத் தொடமுடியாது!  அர்ச்சகப் பார்ப்பனரைக் கூட மற்றவர் தொடக்கூடாது; தொட முடியாது!  எவ்வளவு விசித்திரம், வேடிக்கை பார்த்தீர்களா? அரசியல் சட்டத்தில் இது மட்டுமல்ல, 372 ஆம் பிரிவின்படி , இந்து லா போன்ற சட்டங்கள் அமலில் இருக்க வழிவகை செய்யப்படுகிறது.

– நினைவுகள் நீளும்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *