Unmai Magazine Subscription - உண்மை இதழ் உங்கள் முகவரி தேடி வர சந்தா செலுத்துங்கள்..

நீ உலகிற்கே சொந்தம்

நீ உலகிற்கே சொந்தம்

ஆண்டாண்டாய் அடிமைகளாய்
வாழ்ந்துவந்த தமிழினம் அடியோடு
மாறியது என்றால் – என் தலைவன்
ஒருவனாலேயே

ஆரியப்பேய் அடங்காமல்
ஆட்டம் போட்ட போதெல்லாம்
அறிவு போதிக்கும் தன் தடியால்
அடக்கிவைத்த மாவீரன்

மக்களுக்கு உழைத்திட காங்கிரசில் சேர்ந்தாய்
மடமைகள் நீக்காத செயல்களைக் கண்டு – அக்கட்சியையே
துச்சமெனத் தூக்கி எறிந்தாய்
சற்றே நீ வளைந்திருந்தால்
இந்தியாவிற்கே சொந்தம் – நீ
தன்மானத்துடன் வாழ்ந்து வென்றதால் இன்று
நீ இந்த உலகிற்கே சொந்தம்

புகழ்மாலையில் மயங்கிக்கிடந்த சாமிகளுக்கு
செருப்புமாலை அணிவித்த துணிச்சல்காரனே
முடங்கிக் கிடந்த சமூகத்திற்கெல்லாம்
முட்டுக்கொடுத்து வாழ்ந்தாயே
மூடநம்பிக்கைப் பிறவிகளையெல்லாம்
மூட்டைமுடிச்சுடன் ஓடோடச் செய்தாயே

இன்று நாங்கள் மனிதராய் வாழ்வதற்கு
எத்தனை பூனைகளுக்கு மணியைக் கட்டினாய்
உனது துணிச்சலால்தானே நாங்கள்
இன்று துணிவோடு வாழ்கிறோம்

வணங்குவது உனக்குப் பிடிக்காவிட்டாலும்
பயனடைந்த அனைவரும்
உன்னை வணங்கியே தீருவோம்
தமிழன்னையின் தவப்புதல்வனாய்
உன்னையே எண்ணுவோம்
உன் கொள்கைகளையேற்று – இந்த
உலகையே வெல்லுவோம், வெல்லுவோம்!!
– புதுவை ஈழன்

விடியலின் கிழக்கு!

விடியாத மக்களுக்கு.. அவர்
விடியலின் கிழக்கு!

வாடிய பயிருக்கு – அவர்
வற்றாத நீர்ப்பெருக்கு!

திக்குத் தெரியாதோருக்கு – அவர்
கலங்கரை விளக்கு!

செரியாத வயிற்றுக்கு – அவர்
செரிக்க வைக்கும் சுக்கு!

வாலையாட்டும் பகைவருக்கு – அவர்
தோலையுரிக்கும் சவுக்கு

மொழியழிக்க வருவோருக்கு – அவர்
கழுத்தை இறுக்கும் சுருக்கு!

தேடிவரும் கூட்டத்திற்கு – அவர்
மாலை நேர வகுப்பு!

பசியில் வாடுவோருக்கு – அவர்
பாயசத்தில் பருப்பு!

பாமர மக்களுக்கு – அவர்
பகுத்தறிவு நூல் தொகுப்பு!

முதலாளி – தொழிலாளியை – அவர்
பங்காளியாக்கிய பகுப்பு!

ஆண்டான் – அடிமை ஒழிப்பே- அவர்
கண்ட இயக்கத்தின் நினைப்பு!

அழும் குழந்தைகளுக்கு – அவர்
அமுதூட்டும் தாயின் அரவணைப்பு!

அறியாமையில் உழல்வோருக்கு-அவர்
அறிவூட்டும் பள்ளி வகுப்பு!

ஆரியத்தைச் சுட்டெரிக்கும் _ அவர்
அணையாப் பெருநெருப்பு!

மொத்த இனத்திற்கும் – அவரே
முடிவில்லா ஆயுள் காப்பு!

கு.நா. இராமண்ணா, சீர்காழி

யார் அவர்?

தலையில் பலம் உண்டு
கனம் இல்லை!
தீச்சுடும் பார்வை உண்டு
தீயிட்டு எரித்ததில்லை!
கையில் தடியுண்டு
யாரையும் தண்டித்ததில்லை?
முரட்டுக் குணம் உண்டு
மூர்க்கமாய்ப் பாய்ந்ததில்லை!
தடித்த உடல் உண்டு
தனிமையில் வாழ்ந்ததில்லை!
தன்மானம் நிறைய உண்டு
தன்னலமாய் வாழ்ந்ததில்லை!

– பாரதிதாசன், காஞ்சிபுரம்