– டாக்டர் சு. நரேந்திரன்
வீட்டு மருத்துவத்திலும் தானே குணமாகும் நோய்களான நீர்க் கோர்வை, தொண்டைப்புண், தேள், தேனி கொட்டு ஆகியவைகளுக்கும் கண் கண்ட மருந்துகள் நவீன மருத்துவத்தைவிட மூலிகை மருத்துவத்தில் உண்டு. இதற்குச் செலவும் குறைவு, குணமாகும் காலமும் குறைவு.
இவை, இன்னும் பல கிராமங்களில் கடைப்பிடிக்கப்படுகிறது. அதாவது, கிராமப் புறங்களில் நாம் அம்மண்ணுடன் இணைந்து வாழ்கிறோம். நோயுள்ள இடத்தில் அதற்கான மூலிகையும் இருக்கும், கிடைக்கும் என்ற கொள்கையும் நமக்குப் பரம்பரையாக உண்டு. இன்றைய நிலையில் நவீன மருத்துவத்தால் ஏற்படும் பக்க விளைவுகள், நச்சு விளைவுகளைப் பற்றிய செய்திகள் உடன் நாளிதழ்களில் பளிச்சென்று செய்தியாக வெளியாகி விடுகிறது. ஏனெனில், அவை முன்னரே அறியப்பட்டவை. மேலும், மூலிகை மருந்துகளைப் பக்க விளைவுகள் அற்றது என்று ஒதுக்கிவிடுவது உண்டு.
மூலிகை மருத்துவப் பயன்பாட்டின் வரைமுறைகளும் சட்ட திட்டங்களும்
சந்தையில் தகுதிச்சான்றிதழ் இல்லாத மூலிகை மருந்துப் பொருள்களே 80 விழுக்காடு விற்பனைக்கு உள்ளது. இதை அம்மருந்துப் புட்டிகளைக் கண்டு அறியலாம். எ.கா.: செயல்படும் திறன், பாதுகாப்பு, தரம் மற்றும் பக்க விளைவுகளைப் பற்றிய குறிப்புகளும் அதில் காணப்படுவதில்லை.
மூலிகை மருந்து இன்றும் நாளையும்
மூலிகை மற்றும் சித்த, ஆயுர்வேதம் போன்றவற்றிற்கான மருத்துவக் கழகங்கள் உலகெங்கிலும் இருந்தாலும் அவை இந்தத் தகுதியுள்ள நபர்களைத்தான் உறுப்பினராகச் சேர்த்துக் கொள்ள வேண்டும்; அவர்களும் ஆய்வுக் கட்டுரைகளைச் சமர்ப்பிக்க எந்தெந்த விதிமுறைகளைப் பின்பற்ற வேண்டும் என்ற கட்டுக்கோப்பும் இல்லை என்பதும் வருத்தத்திற்குரியதே. ஆனால், இவை அனைத்தும் மேலை மருத்துவத்திற்கு உண்டு என்பதையும் இங்குக் கருத்தில் கொள்ளவேண்டும்.
தீங்கற்ற பயன்பாட்டிற்கான மூலிகை மருத்துவம்
பாரம்பரிய மூலிகை மருந்துகள் பலவகைகளில், பல பரிமாணங்களில் இயற்கையில் கிடைத்தாலும் அவற்றுக்குத் தரச்சான்று, தரக்கட்டுப்பாடு என பலதரப்பட்ட மருத்துவச் சோதனைகள் சந்தைக்கு வரும்முன் இருக்க வேண்டும். ஆனால், அப்படி இல்லாத நிலையில் அதன் தீங்கற்ற தன்மைகளையும் அதன் பயனையும் குறித்து சான்றிதழ் பெறா மருந்துகளில் பாதரசம், வெண் பாஷாணம், காரீயம், கார்டிசோன் மற்றும் உயிர்ப்பொருள் நச்சுப் பொருள்களும் உள்ளன. இவற்றால் சிறுநீரகக் கோளாறு முதல் இறப்பு வரையிலும் ஏற்படுகின்றன என்ற செய்திகள் வந்துள்ளன. சில ஆண்டுகளுக்கு முன் கருவிழி புண் நிறமிலிப் படலம் (Corhea) தான்சானியாவில் 25% சிறுவர்களுக்கு ஏற்படக் காரணம் என்றும், நைஜீரியா, மாளவி போன்ற நாடுகளில் பாரம்பரிய மருந்துகளால் உண்டாகியது என்றும் செய்திகள் கூறுகின்றன.
ஆகவே, சாதாரண மருந்துகளுடன் மூலிகை மருந்துகளை எடுத்துக் கொள்ளும்பொழுது மிகுந்த கவனத்துடன் அந்நோய் குறித்த சிறந்த மூலிகை மருத்துவர் பரிந்துரையின் பேரிலேயே எடுத்துக் கொள்ள வேண்டும். இவை இல்லாது மருந்துக்கடைகளில் விற்கப்படும் மூலிகை மருந்துகளை நாமே உட்கொள்ளும் பொழுதுதான் மிகப்பெரிய அபாய விளைவுகள் ஏற்படுகின்றன. அண்மையில் சீனாவில் உடல்பருமனைக் குறைக்க உட்கொண்ட மூலிகை மருந்துகளினால் சிறுநீரகக் கேடு மிகத் தீவிரமாக ஏற்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆகவே, கடைகளில் விற்கப்படும் இம்மருந்து களில் நச்சுத்தன்மையை மருந்தாளுநர்கள் (Pharmacist) தெரிந்திருக்க வேண்டியது அவசியமாகிறது.
இதே முறையில் தகுந்த முறையில் பாதுகாத்து சேமித்து வைக்கப்படாத மூலிகை டீயிலும் அப்லோடாக்சின் உள்ள பூஞ்சனம் வளர்ந்து கல்லீரல் புற்று உண்டாகும் வாய்ப்பு ஏற்படுகிறது.
குண பாடங்களில் இல்லாத மருந்துகள் போலியானவைகளாகவும், கலப்படம் செய்யப் பட்டு, தவறுதலாகப் பெயர் சூட்டப்பட்டு மூலிகைகள் சேகரிக்கப்பட்டு விற்கப்படுகிறது. 6 மாதமே மருந்துத் தூள்களுக்கு வீரியம் உண்டு. மேலும், மூலிகை தன் குணத்தை ஓராண்டில் இழக்கிறது. இதை அறிந்தும் இம்மருந்துகளில் காலாவதியாகும் தேதி மற்றும் பக்க விளைவுகளையும் நச்சு விளைவுகளையும் மருந்துப் புட்டிகளில் உள்ள லேபிள்களில் அல்லது தனியாக அதனுள் உள்ள மருந்தின் விவரம் அடங்கிய சீட்டுகளிலேயே போடுவ தில்லை. சில சமயங்களில் இவை அலோபதி மருந்துகளுடன் கலந்தும் விற்பனைக்கு வருகிறது. எ.கா.: மூலிகையுடன் கார்டிசோன் கலந்து ஈளைநோய்க்குக் கொடுக்கப்படுகிறது.
சில சமயம் உள்ளே உள்ள மருந்துக்கும் லேபிளில் உள்ள பொருளுக்கும் சம்பந்தம் இன்றி விற்கப்படுகின்றது. அதாவது, தரக்கட்டுப்பாடு இல்லை. சரியாக மூலிகையைக் கண்டுபிடித்து சேகரித்து மருந்தாக்கத் தெரியாது, ஒன்றுக்கு மாற்றாக ஒன்று மருந்தாகும் நிலையும் உள்ளது. ஆகவே, மருந்து வேலை செய்யும் உறுப்புகள், நுண்நோக்காடி ஆய்வு மற்றும் தொழில்நுட்ப சோதனைகளுக்கு உட்பட்ட பின்னரே விற்பனைக்கு வரவேண்டும்.
இதுபோல் மூலிகையில் உள்ள தீங்கை, நச்சை, சுத்திகரித்து நீக்கவும் தெரிந்திருப்பதில்லை. தெரிந்திருந்தும் மூலிகை மருந்து மிகப்பெரிய அளவில் உற்பத்தி செய்யும்போது இவைகளைப் பற்றிக் கவலை கொள்வதில்லை. இவைகளை மனதில் கொள்ள வேண்டும். ஏகப்பட்ட மருந்துகள் நம் நாட்டிலிருந்து ஏற்றுமதி யாகிறது. அதை நல்ல முறையில், விற்பனையைத் தகுதியான உலகத் தரம் வாய்ந்த அடிப்படை விதிகளுடன், சிறந்த தரத்துடன் மருந்துகளின் கேடுகளைக் களைந்து தயாரிக்க வேண்டும்.
பயன்பாட்டிற்கு முன் மருத்துவ சோதனை அவசியம் (Need for clinical trials)
மக்களிடம் நம்பிக்கை பெற, நிலை பெற்று மூலிகை மருந்துகளை விற்க பிரபலமடையச் செய்ய ஆராய்ச்சியாளர்கள், உற்பத்தியாளர்கள், மருத்துவர்கள் சேர்ந்து கடினமான ஆராய்ச்சி முறைகளுடன் மருத்துவப் பரிசோதனைகள் மூலம் தரக்கட்டுப்பாட்டுடன் மருந்தை உற்பத்தி செய்ய வேண்டும். தரமான மூலிகை மருந்துகளை உற்பத்தி செய்ய மூலப்பொருள் களின் தரத்தையும் பல வகையான மருத்துவ குணங்களைக் கொண்ட அம்மூலப் பொருள் களின் தன்மையையும் சரிவரக் கண்காணிப்பது அவசியம். ஆக, சிறந்த முறையில் தயாரித்து மனிதர்களிடம் சோதனை செய்வதற்குமுன் மிருகப் பரிசோதனை போன்ற பல சோதனை களும் அவசியம். இவை நவீன மருத்துவத்திற்கு இணையாகத் துணைபுரிகிறது என்பதைக் கருத்தில் கொள்ள வேண்டும்.
சோதனையாக மனிதர்களிடம் கடைசியாக நோயாளி மருந்தென்று நம்பும் மருத்துவப் பொருளையும், உண்மையான மருந்தையும் கொடுத்து ஏற்படும் பக்க விளைவுகளை ஆய்வு செய்து முடிவுகளைக் கொண்டு, தரத்தையும் மற்றும் பக்க விளைவுகளையும் அறிய வேண்டும். ஆக, மேலை மருத்துவ மருந்துகளுடன் மூலிகை மருந்து விற்பனையில் அல்லது உடல்நல மேம்பாட்டில் போட்டிபோட இச்சோதனைகள் அவசியம். இதற்குப் பணச் செலவு அதிகமாக லாம். ஆனால், இவை முடியாதவை அல்ல. இது மக்கள் நலத்திற்காகவே அன்றி ஒரு பொருளை விற்பனை செய்வதற்காக அல்ல என்பதையும் மனதில் கொள்ள வேண்டும். இதுபோன்ற சோதனை ஸ்விட்சர்லாந்தில் சின்சங்கிற்கும் இத்தாலியில் திராட்சை விதைகளுக்கும் நடைபெற்றுள்ளது. இதேபோல் ஜெர்மனியில் பூண்டிற்கான சோதனை வெற்றிகரமாகச் செய்யப்பட்டுள்ளது.
– தொடரும்