பாடப்புத்தகத்தில் கடல் பூதம்

செப்டம்பர் 16-30

– மு.வி.சோமசுந்தரம்

அப்பா! – எனக்கு ஸ்கூட்டி வாங்கிக் கொடுங்கப்பா. நான் பத்தாம் வகுப்பு வந்துட்டேன். படிப்புக்கு உதவியாக இருக்கும்.

ஆமா! நீ படிச்சிக் கிழிச்சே… ஸ்கூட்டி ஒன்னுதான் பாக்கி

இப்பதானப்பா கிழிச்சி எடுத்து, புத்தகமெல்லாம் வந்திருக்கு. இனிமேதானப்பா படிக்கணும்.

 

கல்வித் திட்டத்திற்கு, குறிப்பாக வகுப்பறைக் கல்விக்கு, மாணவர்களின் உற்ற துணைவனாக, வழிகாட்டியாக விளங்குவது பாடப்புத்தகங்கள். பாடப்புத்தகங்களில் உள்ள எழுத்தும், விளக்கங்களும்,  படங்களும் மாணவர்களின் கண்ணுக்கும் கருத்துக்கும்  விருந்தாக அமைவதோடல்லாமல், ஊட்டச் சத்தாகவும் அமைய வேண்டும். ஊருக்கு உரியவனாகவும் (திராவிட இன உணர்வாளனாகவும்) உலகக் குடிமகனாகவும் விளங்க பாடப் புத்தகம் அமைய வேண்டும். சிந்தனையைத் தூண்டவும், பொது அறிவு, அறிவியலை வளர்க்கவும், அவரவர் மொழி, இலக்கியம், பண்பாட்டின் சீர்மையை அறிந்து பெருமை அடையவும் கல்வித் திட்டம் வழிவகை செய்ய வேண்டும். கட்டித் தங்கமான கல்வித் திட்டம், மாணவர்களின் முன்னேற்றத்திற்கும், பண்பாட்டுப் பாதுகாப்புக்கும் உகந்ததான ஆபரணமாக அமைக்கப்பட வேண்டியது அந்த மக்களின் அரசின் கடமை.

அத்தகைய கடமையை ஆற்றாத அரசு அந்த மக்களின் அரசு என்று ஏற்றுக்கொள்ள முடியாது. ஆனால், இன்றைய தமிழக அரசு, திராவிட இன மாணவர்கள், அவர்களின் வரலாற்றுச் சிறப்பை அறிந்து கொள்வதையும், இலக்கிய வளத்தையும், அவர்களின் சமூக, சமூக நீதிக்காகப் பாடுபட்டவர்களைப் பற்றியும் தெரிந்து கொள்வதை விரும்பாத ஒரு அரசு என்ற நிலையையும் கடந்து, சமணர்களைக் கழுவேற்றிய மதப் பித்தர்கள் மனப்போக்கில் உள்ளது என்பதை, உள்ளங்கை நெல்லிக்கனியாக அறிய முடிகின்றது.

சமச்சீர் கல்வி பாடத்திட்டத்தை வேட்டையாடித் தோற்ற அவலத்தில், கல்வித்துறைக்கு அரசாணை என்ற மதுவை ஊற்றி, பாடப் புத்தகக் குவியலில், ஆசிரியர்களைப் பேயாட்டம் போட வைத்துள்ளது சவுபாக்கியவதி ஜெயலலிதா அரசு. நரக லோகம் என்று ஆன்மிகவாதிகள் கூறும் உலகத்தில் பல வகையான சித்திரவதைகள் நடக்குமாம். அதுபோல, பாடப் புத்தகத்தின் சில கருத்துகளை எப்படித் துல்லியமாக மறைப்பது அல்லது நீக்குவது (Hidden or deleted) என்றும் அதற்குப் பசைத்தாளைப் (Sticker) பயன்படுத்தலாம் அல்லது அழிக்க முடியாத கருப்பு மையைப் பயன்படுத்தலாம் என்று வழிமுறைகள் கூறப்பட்டுள்ளன. கிழிக்கப்பட வேண்டியவை எவை என்றும், வகுப்புவாரியாகப் பட்டியலிட்டுக் கொடுத்துள்ளது அரசு. மாணவர்கள் பெறும் புத்தகங்கள் விபத்துக்குள்ளான பேருந்தில் காயப்பட்டவர்கள் மருத்துவமனையில் காட்சியளிப்பதுபோல் இருக்கும். எவை எவை கிழிக்கப்பட வேண்டும், ஒட்டப்பட வேண்டும், மறைக்கப்பட வேண்டும் என்று தீர்மானித்த நிபுணர் குழுவில் இடம்பெற்றவர்களின் பெயர்களை அரசு அறிவித்தால் நன்றாக இருக்கும். அவர்களின் கூர்மதியைப் பாராட்டலாம்.

இந்த நிபுணர் குழுவின் கடைக்கண் பார்வைக்குப் பலியாகியவை என்று பார்க்கும்முன் உச்ச நீதிமன்றத் தீர்ப்பில் கூறப்பட்டுள்ள கருத்தைக் கவனிக்கலாம்.

கட்சியின் தலைவராகவும், இதற்குமுன், ஆட்சிப் பொறுப்பிலிருந்தவருமான கருணாநிதி தன்னைப் பற்றிக் கூறிக்கொள்வதாக அமைந்த ஒருசில செய்திகள் உள்ளன என்பதில் சந்தேகமில்லை. அதாவது, தன்னைப் பெருமைப்படுத்தும் வகையில் அமைந்தது, சுயவிளம்பரமாக அமைந்தது, அவருடைய கொள்கை, தத்துவங்களுக்கு ஊக்கம் அளிப்பதுபோல் அமைந்தது ஆகியவை அவருடைய அரசியல் தோற்றத்துக்கு ஆதரவாக அமையும். இது குறிப்பாக, துவக்கப்பள்ளி சிறார்களிடையே பற்றுதலை ஏற்படுத்தும். அத்தகைய, மறுப்புக்குரிய கருத்துகள் ஏதேனும் இருந்தால், அவற்றை நீக்கலாம். (Such objectionable material, if any could be deleted) The Hindu (10-08-2011).

நீதி அரசர்கள், தெளிவான, ஒளிவு மறைவு அற்ற வழிகாட்டுதலான கருத்தைத் தெரிவித்துள்ளார்கள். முத்தமிழறிஞர் கலைஞர் கருணாநிதி அவர்கள் ஆரம்பத்தில் நடந்து வந்த பாதை கரடுமுரடான ஈரோட்டுப் பாதை. அடுத்து வந்ததே, அண்ணா அமைத்துக் கொடுத்த திராவிட இனநலத்துக்கான அரசியல் பாதை (Service Lane).  இதைத்தான் நீதி அரசர்கள் கலைஞரின் கொள்கை, தத்துவம்  (Promotion of his own cult and philosophy) என்று குறிப்பிடுவதாகக் கொள்ளலாம். தன்னை மானமிகு சுயமரியாதைக்காரன் என்று கூறியது, பெரியார் குருகுல மாணவன் என்று பெருமையுடன் கூறிக்கொள்வது, நாலாந்தர மக்களுக்காக நடத்தப்படும் அரசு என்று சட்டமன்றத்தில் தெளிவுபடுத்தியது. (தன்னை முதல்தட்டுப் பார்ப்பன இனத்தவர் என்று கூறிக்கொண்ட செல்வி ஜெயலலிதாவின் கோட்பாட்டையும் ஒப்பிட்டுக் காண வேண்டும்). கலைஞரின் கொள்கை, தத்துவம். பொதுநலனும், இனநலனும் கொண்ட கலைஞரின் சுயவிளம்பரம் விரியட்டும், வலுப் பெறட்டும் இந்த விளம்பரம்.

அடுத்து, மறுக்கத்தக்க கருத்துகள் ஏதேனும் இருந்தால், அவற்றை நீக்கலாம் என்று நீதி அரசர்கள் கூறியபடி, அரசு நிபுணர் குழு நீக்கிய பகுதிகள் எந்த அளவு மறைக்கப்பட வேண்டியவை என்று அவர்கள் கருதியுள்ளனர் என்பதைப் பார்த்தால், அவர்கள், மஞ்சள் காமாலைப் பார்வை கொண்ட கூலிப்படையாக  (Jaundiced eye Mercenary)  இருக்குமோ என்ற அய்யம்தான் தோன்றுகிறது. தி இந்து, 11-.08.2011 இதழில் குறிப்பிட்டுள்ளவை பற்றியே எண்ணிப் பார்க்க முடிகிறது.

1. முழுமையான முதல் தாக்குதல், தமிழர்களின் உயிர் மூச்சாகிய தாய்த் தமிழ் சிறப்பு விழாவின் மேல் விழுந்தது. தமிழ் மொழி முன்னேற்ற வரலாற்றில் 12.10.2004 ஒரு பொன்னான நாள். காலமெல்லாம் கால் கடுக்கக் காத்திருந்த கன்னித்தமிழ் செம்மொழி என்ற புகழ் சேர்க்கும் வரவேற்பைப் பெற்றது. இதனால் பூரித்துப்போன உலகத் தமிழர் அனைவரும் கோவையில் ஒன்றுகூடி கைகுலுக்கி தமிழ்த்தாய் துதிபாடி, தகுதித் தங்க முடிசூடி நன்றி உணர்வைப் பதிய வைத்தனர். ஜூன் திங்கள் 2010இல் கோவை மாநகர் விழாக்கோலம் கொண்டிருந்தது. மக்கள் அடர்த்தி, அவர்களின் ஆனந்தம் அளவிட முடியாதது. இந்த வரலாற்று நிகழ்ச்சி, எல்லா வகுப்பு தமிழ்ப் பாடப் புத்தகங்களிலும் இடம் பெறக்கூடாது. விழா பற்றிய எந்தக் குறிப்பும் கண்ணில் படக்கூடாது. இந்தக் கொலைச் செயல் நடப்பது தமிழ்நாட்டில், தமிழக அரசால்.

2. தமிழ் இலக்கியப் பெயர்களை இணைத்து அணிசெய் வாழ்த்துப் பாவாக கலைஞர் அமைக்க ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்து காற்றினில் வரும் கீதமாக தமிழகமெங்கும் தவழ்ந்தது. மக்கள் அந்த இசைப் பாடலை இன்பமாக முணுமுணுத்துக் கொண்டே இருந்தனர். இந்தப் பாடலின் துவக்கத்தில் கம்பர் இடபெறவில்லை என்று தினமணி அய்யர் கலைஞருக்கு வேண்டுகோள் விடுத்து, கலைஞர் சேர்த்தார். இது மறைக்கப்படுகிறது. வைத்தியநாத அய்யர், அரசைக் கண்டித்தாரா? இல்லை. இதுதான் பார்ப்பனத்தனம்.

3. மாநாட்டின் இலச்சினையாக, திருவள்ளுவர் படமும், குறள்பாவும் எழில் வடிவத்தில் தமிழகமெங்கும் உலா வந்தது. இது இடம்பெறக் கூடாதாம். தமிழகத்தில் இந்த இழிச்செயல்.

4. மாநாடு முடிந்தும், காட்சிப் பொருள்களைக் காண, மக்கள் வேண்டுகோளை ஏற்று, கண்காட்சி அரங்கத்தையும், கணினி ஆராய்ச்சிக் கூடத்தையும் பார்ப்பதற்கு நாட்கள் நீடிக்கப்பட்டன. மாநாட்டின் மகுடமாக, மக்கள் மனதில் அழியா இடம் பெற்றது இனியவை நாற்பது என்ற தலைப்பில், திராவிட வரலாற்று, தமிழ் இலக்கியப் பண்பாட்டுக் காட்சி ஊர்திகள். கண்ணையும், கருத்தையும் கவர்ந்த கவின்மி-கு ஊர்திகள். குடும்பம் குடும்பமாகப் பார்த்து மகிழ்ந்தனர். நாங்களும் கண்டோம்.

தமிழகத்தை அய்வகை நிலமாக மண்ணைப் பகுத்து வாழ்ந்த தமிழகக் காட்சிகள், சேரன் செங்குட்டுவன் கனகவிசயன் தலையில் கல் ஏற்றி வந்த காட்சி, அவ்வைக்கு அதியமான் நெல்லிக்கனி ஈந்த காட்சி என்று ஊர்திகள் 40. பள்ளி, கல்லூரி மாணவர்கள், கூட்டம் கூட்டமாக நின்று, ஆசிரியர்கள் விளக்கம் கூற, மாணவர்கள் குறிப்பேடுகளில் எழுதிக் கொண்டிருந்த காட்சி ஊர்திகளின் சிறப்பைக் கூறின. இந்தக் காட்சிப் படங்கள் கருப்பு மை பூசப்பட்டன கடுகு உள்ளம் கொண்ட ஆட்சியரால்.

5. நாடகம், திரைப்படம், தமிழகத்தில் வளர்ச்சி பெற்ற வரலாற்றில் பங்களிப்பார்களின் செய்தி நீக்கப்படுகிறது. அண்ணா, கலைவாணர், கலைஞர் பெயர்கள் உள்ளதால்.

தமிழ் உள்ளங்கள் தீயாக எரிகிறது தேர்தல் முடிவால். ஏ! தாழ்த்தப்பட்ட தமிழகமே! தலைநிமிர வேண்டாமா? கடல் சுனாமியால் பல உயிர்கள் மாண்ட வேதனை. கல்வித் துறை சுனாமியினால் இன்று மாணவர்கள் படும் வேதனை!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *