சூத்திரனின் சுயமரியாதை!
பிள்ளை பெற்றாள்
கன்னித்தாய்
பரிசுத்த ஆவி!
நீராவியில் இட்லி
பரிசுத்த ஆவியில்
தேவகுமாரன்!
அய்வருக்கும் தேவி
அழியாத பத்தினி
இந்திய மதச்சார்பின்மை!
பல்லக்குப் பவனி
இறக்கப்பட்ட பார்ப்பனன்
சூத்திரனின் சுயமரியாதை!
நீராவியில்
இரயில் எஞ்சின்
அறிவியல்!
பரிசுத்த ஆவியில்
தேவகுமாரன்
மூட (மத) நம்பிக்கை!
கூண்டுக்கிளிகளாய்
கோஷா பெண்கள்
பெண்ணடிமை!
பேருந்துகளில்
கடவுளர் படங்கள்
பிரேக் பிடிக்காமல் விபத்து!
– கு. நா. இராமண்ணா, சீர்காழி
வேண்டும்! வேண்டும்!!
ரசிகர் மன்றம் அமைக்காத
நடிகர் வேண்டும்!
மக்கள் தொகை பெருகாமல்
சட்டம் வேண்டும்!
மக்கும் குப்பை போல
பிளாஸ்டிக் செய்யவேண்டும்!
அருள்வாக்கு சொல்லாத
கிராமங்கள் வேண்டும்!
மனநல மருத்துவமனைகள்
மாவட்டந்தோறும் திறந்திட வேண்டும்!
சாலைகள் நடுவே சாமிசிலைகள்
இல்லாத தெருக்கள் வேண்டும்!
மழையில் பேராத
சாலைகள் வேண்டும்!
மனச்சாட்சி இருக்கின்ற
காண்ட்ராக்ட்டர் வேண்டும்!
மழைநீரைச் சேர்த்துவைக்க
இன்னும் ஏரிகள் வேண்டும்!
நச்சுத் தன்மை இல்லாத
உணவுகள் வேண்டும்!
வெப்பத்தைக் குறைக்கின்ற
மரங்கள் நடவேண்டும்!
வியர்வை வெளிவர உழைக்க மக்கள் முன்வர வேண்டும்!
– டி. வினாயகம், செஞ்சிவல்லம்
அறி! பகுத்து அறி!
கண்டுபிடிப்பு செய்தவரின்
கதைமுழுக்கப் படித்துமுடி
கட்டுக்கதையைக் கண்டுபிடித்து
கதைப்போரை விரட்டி அடி!
கோயில் முன்னே கூட்டம் சேர்க்க
கொண்டுவந்த யானை பார்க்க
கூடும் மனிதக் கூட்டமெல்லாம்
பக்தரென்று கூறலாமாம்
கடவுளரில் ஒரு கடவுள்
தமிழ் படித்த கடவுளாம்
தமிழ்க் கடவுள் அர்ச்சனைக்கு
தமிழ் வந்தால் தீட்டாகுமாம்!
தினைவனத்தில் கடவுளுக்கு
என்ன வேலை? வள்ளிக்குறத்தி
வம்சவளியை கடவுள் வம்சம்
ஏற்றுக்கொண்டதா, கேட்பார் – உண்டா?
கடவுளரையும் மனிதரையும்
இணைத்து இணைத்துக் கதையளந்தோர் கடவுளராய்
மாறிப்போனார் நியாயம்தானா?
ஔவையையும் கடவுளையும்
இணைத்துச் சொன்ன பக்திக் கதை
எந்தக்கால கட்டுக்கதையோ
இன்றும் நாட்டில் உலவுகின்றதே!
சொல்லும் கதையை நிசமாய் நம்பும்
நீங்களென்ன சின்னப் பிள்ளையா?
சொன்னதையே திரும்பத் திரும்பச்
சொல்லுகின்ற கிளிப்பிள்ளையா?
– முசிறி மலர்மன்னன்