ஆத்திகத்தின் சலசலப்புக்கு அஞ்சிவிடுமா நாத்திகம்? – 2

செப்டம்பர் 16-30

விலக்கப்பட்ட கனியைப் படைத்தது ஏன்?

– பேராசிரியர் ந. வெற்றியழகன்

குறிக்கோள் உண்டாமே?

நாத்திகர்கள் எல்லாமே குறிக்கோளின்றி குருட்டாம்போக்கில் வந்ததென்று நம்பு கிறார்கள். ஆத்திகர்களோ, புத்திக்கூர்மையுள்ள காரணகர்த்தா இருக்கிறார் என நம்புகிறார்கள் என எழுதியுள்ளார்.

உலகிலுள்ள உயிரற்ற, உயிருள்ள அனைத்தும், படிப்படியாக பரிணாம வளர்ச்சிப் படிநிலையில் உருமலர்ச்சி பெற்றது.

 

நுண்ணிய ஆற்றலிலிருந்து பேரண்டம்  (Universal) எவ்வித நோக்கமுமின்றி இயற்கைப்போக்கில் தானாகவே உண்டானது;  அதுபோல, வைரஸ், பாக்டீரியாவிலிருந்து ஒரு செல் (Cell) உயிரிலிருந்து படிப்படியாக உருமலர்ச்சி பெற்று சடுதி மாற்றம் (Mutation) காரணமாக….. மனிதர்வரை மாற்றம் பெற்று வந்துள்ளது என்று, நாத்திகர்கள்அறிவியல் நெறிப்படி குறிக்கோள் எதுவுமின்றி உண்டானவை என்று கூறி வருகின்றனர்.

இவர்கள்தான் சொல்லட்டுமே?

ஆனால், இந்த ஆத்திகப் பேரறிவாளர் (?)களோ குறிக்கோளோடு படைக்கப்பட்டது; புத்திக்கூர்மையுள்ள கடவுளால் படைக்கப் பட்டது என்று கிளிப்பிள்ளைப் பாடம் படித்துக் கொண்டிருக்கிறார்கள்.

குறிக்கோளோடு புத்திக்கூர்மையுள்ள கடவுள் படைத்தார் என்று உளறிக் கொட்டித் தீர்க்கும் இவர்கள் என்ன குறிக்கோளோடு படைத்தார் என்று சொல்ல வேண்டாமா? சொல்ல முடியுமா? சொன்னார்களா இதுவரை? இனியும்தான் சொல்வார்களா?

ஞானப்பழத்தைப் பிழிந்து….

கடவுள் புத்திக்கூர்மையுள்ளவராமே? நல்ல நகைச்சுவை! இவரது நுண்ணறிவுக்கு, புத்திகூர்மைக்கு ஒரே ஒரு சான்றினை மட்டும் பார்ப்போமா?

விலக்கப்பட்ட கனிபற்றி புத்திக் கூர்மையுள்ள கடவுள் கர்த்தர் ஆதாமிடம் என்ன சொன்னார்? நன்மை தீமை அறியத்தக்க மரத்தின் கனியைப் புசிக்க வேண்டாம்! _ (ஆதியாகமம் -2-17)

ஆதாம், ஏவாளின் சொல்லைத் தட்டாது அந்த மரத்தின் கனியை உண்டார்.

விலக்கப்பட்ட பொருளை – சாகடிக்கும் அளவுக்கு நஞ்சுடைய கனியைக் கர்த்தர் ஏன் படைக்க வேண்டும்? தேவையில்லாமல் படைத்துவிட்டு அதனை முதல் மனிதர் உண்ணக்கூடாது என்று ஏன் சொல்ல வேண்டும்? நம் ஆணையை ஆதாம் மீறுவான் என்ற முன்னறிவு கர்த்தருக்குக் கிடையாதா? நுண்ணறிவு இவ்வளவுதானா? இதுதான் கர்த்தரின் புத்திக்கூர்மையா? வெட்கம்! வெட்கம்!

கற்பனையாம்! கட்டுக்கதையாம்!

மைக்கேல் டென்டன் என்பவர், தம்முடைய பரிணாமம் – சர்ச்சையிலுள்ள ஒரு கோட்பாடு (ஆங்கிலம்) என்ற நூலில், பரிணாமக் கோட்பாடு ஒரு முக்கியமான விஞ்ஞானக் கோட்பாடாக இருப்பதற்குப் பதிலாக, அந்தக் காலத்து ஜோதிடர்களின் கற்பனைபோலவே இருக்கிறது; நம் நாளில் உள்ள பிரபலமான கட்டுக்கதைகளில் ஒன்று டார்வினின் பரிணாமக் கோட்பாடு என்பதாகக் குறிப்பிட்டுள்ளது கட்டுரையின் ஒரு பகுதி, டார்வினின் பரிணாமக் கோட்பாடு கட்டுக்கதையாம்! ஜோசியக் கற்பனையாம்!

போப் ஏன் அங்கீகரித்தார்?

ஜோசியர்களின் கட்டுக்கதை எனக் கூறும் இந்தக் கோட்பாட்டை ஏன் ரோமிலுள்ள போப் ஜான்பால் அங்கீகரிக்க வேண்டும்? ஃபோண்டிபிகல் அகாடமி ஆஃப் சயின்ஸ் என்று 5.10.1996 நாளிட்ட செய்தியில்,  புதிய அறிவு, பரிணாம வளர்ச்சித் தத்துவத்தினை அங்கீகரிக்கச் செய்கிறது. டார்வின் கொள்கைகளைப் பள்ளிகளில் போதிக்க வேண்டும் என்று கூறியிருக்கிறார்.

(செய்தி: The Hindu – 26/10/1996).

“With a formal statement sent to the pontifical Academy of Science on Wednesday, the Pope John Paul said that fresh knowledge leads to recognition of the theory of evolution as more than a hypothesis” –
(The Hindu. 26/10/1996).

மாற்றம் பெற்ற போப் மனநோயாளியா?

வெறும் ஜோசியக் கட்டுக்கதை யாயிற்றே, டார்வின் பரிணாமக் கோட்பாடு, அப்படியிருக்க அதனை ஏன் பரிணாமக் கோட்பாடு (Theory) என்றும், அதனைப் புதிய அறிவுபெற கல்வி நிலையங்களில் கற்பிக்க வேண்டும் என்றும் கடிதம் அனுப்ப வேண்டும்?

ஜோசியக் கட்டுக்கதை என்று மைக்கேல் கென்டன் கூறியுள்ளாரே, யாராவது கட்டுக்கதையைப் பள்ளிகளில் பயிற்ற வேண்டும் என்பார்களா? போப்பாண்டவர் அறிவு அற்றவரா? அல்லது மனநோயாளரா? இதனை, மைக்கேல் டென்டனும், விழித்தெழு இதழின் கட்டுரையாளரும் விளக்க வேண்டும்! என்ன பிதற்றல்!

பாமரத்தனமான பல்கலைக்கழகப் பேராசிரியர்

ஒரு காலத்தில் நாத்திகராக இருந்து இப்போது கடவுள் நம்பிக்கையாளராக மாறிவிட்டராம் பிராக் நகரிலுள்ள சார்லஸ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் ஃபிராண்டீ ஷேக் விஸ்கோசில், தமது மாற்றத்திற்கான காரணங்கள் பலவற்றைக் கூறியுள்ளாராம். அவை அத்தனையும் ஒரு பேராசிரியருக்குரிய விளக்கமாகத் தெரியவில்லை. பொருந்தாக்கூற்றாக _பாமரனின் விளக்கமாகத்தான் தெரிகிறது. அவற்றுள் ஒன்றை மட்டும் பார்ப்போம்!

படி, படி, பைபிள்படி!

உயிரினங்களின் தோற்றம் பற்றிய ரஷ்யாவின் பிரபலமான விஞ்ஞானியின் சொற்பொழிவில் கலந்து கொண்டாராம் இவர் 1970இல். அவர் உயிரினத் தோற்றம் பற்றிப் பதில் தெரிய வேண்டும் என்றால் பைபிளைப் படியுங்கள். முக்கியமாக, ஆதியாகமத்தில் படைப்பைப் பற்றிச் சொல்லியிருக்கிற தகவலைப் படியுங்கள் என்றாராம். அவரும் படித்தாராம்… புரிந்து கொண்டாராம்! என்ன வேடிக்கை! என்ன கோமாளித்தனம்! என்ன பைத்தியக்காரத்தனம் பார்த்தீர்களா? இவர் ஒரு பல்கலைக்கழகப் பேராசிரியர்!

படைப்புபற்றி பைபிள் பகர்வது:

பைபிள் ஆதியாகமத்திலுள்ள உயிரினத் தோற்றம் பற்றித்தான் தெரிந்து கொள்வோமே! இல்லை, நினைவுபடுத்திக் கொள்வோமே? பைபிள் ஆதியாகமப்படி,

முதல் இரண்டு நாட்களில், பகல், இரவு, வானம், இவற்றைப் படைத்தார் கர்த்தர்.

3ஆம் நாள்: புவி, கடல், புல், பூண்டு, கனிமரங்கள்.

4ஆம் நாள்: சூரியன், சந்திரன், விண்மீன்கள்

5ஆம் நாள்: நீர்வாழ் உயிரினங்கள், பறவைகள்.

6ஆம் நாள்: காட்டு விலங்குகள், ஊர்வன.

கடைசியில், முதல் மனிதன் ஆதாம், முதல் மனுசி ஏவாள் (Adam and Eval) படைத்தார் கடவுள்.

பரிதிக்கு முன் பயிருயிரியா?

3ஆம் நாள்: புல், பூண்டு, மரங்களைப் படைத்தாராம். 4ஆம் நாள்தான் சூரியனைப் படைத்தாராம். சூரியன் இல்லாமல், ஒளிச்சேர்க்கை இல்லாமல், மாவுச்சத்து (Starch) உருவாக்காமல் தாவரம் தழைக்க முடியுமா? பைபிள் ஆதிகயாகமம் சொல்வது அறிவியலுக்கு அடிப்படையாமே! பினாத்தலாக இல்லை? கோடிக்கணக்கான ஆண்டுகள் இடைவெளியில் பேரண்டம், விண்மீன்கள், கோள்கள், உயிரினங்கள் உண்டானவை என அறிவியல் கூற, இவற்றை வெறும் ஆறே நாளில் ஆண்டவர் படைத்தாராமே? இது எந்த வகை அறிவியல்?

பாக்டீரியா – வைரஸ் பற்றி பைபிளில் இல்லையே?

பிற உயிரினங்கள் படைக்கப்பட்டனவே, வைரஸ், (Virus), பாக்டீரியா (Bacteria) இவற்றை ஆண்டவர் படைக்கவில்லையா? யார் படைத்தது? இவைபற்றி மூச்சு_பேச்சு இல்லையே பைபிள் ஆதியாகமத்தில்? ஏன்? இவற்றைப்பற்றி அறிவியல் என்ன கூறுகிறது? பாக்டீரியா மிகவும் எளிமையான உட்கரு செல் (cell),  நுண்ணுறுப்புகள் இல்லாத தொன்மையான செல் ஆகும்.

ஒரு செல் பச்சைப்பாசிகளிலிருந்து, பச்சையத்தை (Chlorophil) இழந்து பரிணாமத்தில் சாறுண்ணி (அ) ஒட்டுண்ணி வாழ்க்கைக்கேற்ப தகவமைப்புகளைப் பெற்று பாக்டீரியா உருவாக்கியிருக்கலாம் என்கிறது அறிவியல்.

வைரஸ் எனப்படுவது ஒரு சாதாரண உயிரியைப்போல செயல்படுவது அன்று: அது, தனித்து இருக்கும்போது. உயிரற்றதனைப் போலவும், ஒரு செல்லினுள்ளோ பாக்டீரியாவினுள்ளோ நுழைந்து செயல்படும்போது உயிருள்ளது போலவும் இயங்கும்.

விழித்தெழு ஏடு விடையளிக்குமா?

இவைபற்றி, பைபிள் ஆதியாகமம் சொல்லவில்லையே, ஏன்? பேராசிரியர் விஸ்கோசில் ஆவது பதில் சொல்வாரா? ஆதியாகமம் பயின்றவராயிற்றே அவர்? அல்லது, விழித்தெழு இதழாவது விடை சொல்லுமா? சொல்லத் தெரியாவிட்டால் இப்படியெல்லாம் எழுதாமல் அடங்கிப்போகுமா? அதுதான் அதற்கும் நல்லது; அனைவருக்கும் நல்லது! விரிவஞ்சி, முதன்மையான சில கருத்துகளுக்கு மட்டுமே மறுப்பு வரைந்துள்ளோம். வேண்டாத இந்த வேலையை இத்துடன் நிறுத்திக் கொள்ளுமா, விழித்தெழு இதழ்? இல்லையேல், நன்றாக வாங்கிக் கட்டிக்கொள்ளும்! வசதி எப்படி?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *