பத்மனாப சாமி கோவில் சம்பந்தப்பட்ட வழக்கில் இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் ஆர்.வி. ரவீந்தரன், ஏ.கே. பட்நாயக் கூறியது:
திருவனந்தபுரம் கோவில் நகைகளை மதிப்பிடு செய்யலாம் என்று முதலில் மன்னர் குடும்பத்தினர் ஒப்புக் கொண்டார்கள். இப்போது கூடாது என்கிறார்கள். இந்த வழக்கில் மன்னர் குடும்பத்தினர் அடிக்கடி தங்கள் நிலைப்பாட்டை மாற்றுவது ஏன்? இதற்குக் கண்டனம் தெரிவிக்கிறோம்.
6ஆவது அறையைத் திறப்பதா? வேண்டாமா? என்பதைத் தலைமைக் குருவிடம் எப்படி ஒப்படைத்தீர்கள்? இந்த வழக்கு கோர்ட்டில் நடக்கிறதா? அல்லது தேவபிரசன்னம் முன் நடக்கிறதா? என்பதை மன்னர் குடும்பத்தினர் உறுதிப்படுத்த வேண்டும்.
இதுவரை 5 அறைகளில் இருந்து எடுக்கப்பட்ட பொக்கிஷத்தைப் பத்திரமாகப் பாதுகாக்க வேண்டும் என்பதும் முக்கியமானது. இதற்குத் தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளைக் கேரள அரசு செய்ய வேண்டும். இதற்குக் கூடுதல் நிதியை அரசு ஒதுக்க வேண்டும். மன்னர் குடும்பத்தினரும் ஒத்துழைக்க வேண்டும்.
ரகசிய அறைகளில் இருந்து எடுக்கப்பட்ட நகைகளை மதிப்பீடு செய்வது அவசியம். இதற்கு மன்னர் குடும்பத்தினர் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். அப்போதுதான், மன்னர் குடும்பத்தினர் டிபன் பாக்சில் நகைகளை எடுத்துச் செல்கிறார்கள் என்ற குற்றச்சாட்டு வராமல் இருக்கும் என்று நீதிபதிகள் கூறியுள்ளனர்.