– இனியன்
சட்டப் புத்தகங்களை மட்டுமே பார்த்துத் தீர்ப்பளித்த நீதிபதிகளின் மத்தியில் சமூகப் பார்வையுடன் தீர்ப்பளித்த நீதிபதி எஸ்.ரத்தினவேல் பாண்டியன் அவர்கள் தனது 89ஆவது வயதில் கடந்த பிப்ரவரி 28 அன்று இறந்துபோனார்.
திருநெல்வேலி மாவட்டத்தில், திருப்புடைமருதூர் கிராமத்தில் 1929இல் பிறந்தவர் திரு.ரத்னவேல் பாண்டியன் அவர்கள். அம்பாசமுத்திரம் தீர்த்தபதி உயர்நிலைப் பள்ளியில் படித்தவர். பாளையங்கோட்டை தூய சேவியர் கல்லூரியில் பட்டப்படிப்பை நிறைவு செய்து, சென்னை சட்டக் கல்லூரியில் 1954இல் சட்டப் படிப்பை முடித்தார்.
சிறு வயது முதலே திராவிட இயக்கத்தின்பால் ஈர்ப்பு கொண்டதால் படித்து முடித்ததும் அரசியலில் ஈடுபட்டார். 1960களில் திருநெல்வேலி மாவட்டத்தின் தி.மு.க. மாவட்டச் செயலாளர் பதவி வகித்தார். 1967இல் தொடங்கி நெல்லை மாவட்டத்தின் அரசு வழக்கறிஞராகவும் பணியாற்றினார். 1971இல் சென்னை உயர்நீதிமன்றத்தில் அரசு வழக்கறிஞராக நியமிக்கப்பட்டார். 1974இல் சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதியானார். அப்போது அவருக்கு வயது 39. அயராத உழைப்பினாலும் ஆற்றலாலும், திறமையாலும் 1988இல் உச்சநீதிமன்ற நீதிபதியானார். 1994 வரை அப்பதவியில் மிகச் சிறப்பாய்ச் செயல்பட்டார்.
மண்டல் கமிஷன் பரிந்துரைகளின்படி மத்திய அரசுப் பணிகளில் பிற்படுத்தப்பட்டோருக்கு 27 சதவீத இடஒதுக்கீட்டை உறுதிப்படுத்திய நீதிபதிகள் குழுவில் இடம் பெற்றிருந்தவர். அந்தத் தீர்ப்பில் பெரியாரின் பெயரைக் குறிப்பிட்டு சமூகநீதிக்கான பெரியாரின் பங்களிப்பைப் பதிவு செய்திருந்தார். மாநில உரிமையை மீட்டளித்து வழங்கிய தீர்ப்பும் ஓய்வு பெற்ற பின்னர் தேசிய பிற்படுத்தப்பட்டோர் நல வாரியத்தின் தலைவராக பொறுப்பு ஏற்று தமிழகத்தின் தென் மாவட்டங்களில் ஜாதிப் பூசல்களைத் தகர்த்து, தொழில் வாய்ப்புகள் பெருக இவர் முன்வைத்த பரிந்துரைகளும் முக்கியமானவை.
தனது கிராமத்தில் இருந்த நிலத்தில் கிடைக்கும் லாபத்தில் ஒரு குறிப்பிட்ட பங்கை அந்த நிலத்தில் வேலைபார்த்த விவசாயத் தொழிலாளர்களுக்கே கொடுத்தார்.
நீதியரசர்களுள் இவர் முற்றிலும் வேறுபட்டவர். சட்டப்படியான நீதியை நிலைநாட்டுகிறவர்கள் மத்தியில் சமூகநீதியை நிலைநாட்டுகிறவராக இருந்தார். சட்ட நீதியை சமூகநீதிக் கண்ணாடியுடன் அவர் பார்வை யிட்டதற்குக் காரணம், திராவிட இயக்கமும் பெரியார் _ அண்ணா _ கலைஞர் ஆகியோரின் நெருக்கமான தொடர்பும்தான் காரணமாக இருந்தது என்றால் அது மிகையில்லை.
தன் குழந்தைகளை மனைவி கடத்திச் சென்றுவிட்டதாக ஒருவர் வழக்குத் தொடுத்தார். குழந்தைகளோடு மனைவியை ஆஜராக உத்தரவிட்டார் நீதிபதி ரத்தினவேல் பாண்டியன். இரண்டு முறை நோட்டீஸ் போன பிறகும் அந்தப் பெண் ஆஜராகவில்லை. அதன் பிறகு காவல்துறை மூலம் அழைத்துவர வைத்தார். ஏன் இரண்டு முறையும் வரவில்லை என்று நீதிபதி கேட்டபோது, என்னிடம் பணம் கிடையாது அய்யா, இப்போது காவல்துறை வேனில்தான் வந்தேன். காவல்துறை வேனிலேயே கொண்டுபோய் விடச் சொல்லுங்கய்யா என்று அந்தப் பெண் சொன்னபோது, நான்தான் தப்பு செய்துவிட்டேன் என்று சொல்லி தனது சொந்த காசை எடுத்துக் கொடுத்து அனுப்பிவைத்து சட்ட நீதியை மட்டுமல்ல, மனிதாபிமான நீதியையும் காப்பாற்றினார்.
நெல்லை மாவட்டத்தில இவர் வழக்கறிஞராக இருந்தபோதுதான் சீவலப்பேரி பாண்டி வழக்கு நடந்தது. சீவலப்பேரி பாண்டிக்கு வழக்கறிஞராக இருந்தவர் இவர்.