காவிரி உரிமைக்காக தண்ணீர் தண்ணீர் அறிக்கை வெளியிட்டேன்!
12.09.1982 அன்று வில்லிவாக்கம் அரசினர் உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியரும், சென்னை பகுத்தறிவாளர்க் கழகச் செயலாளருமாகிய கோ.அரங்கசாமி_திருமதி ராஜம் ஆகியோரின் செல்வி டாக்டர் மீனாம்பாள், கோவை ஆர்.பழனியப்பன் _அரக்காணி அம்மாள் ஆகியோரின் செல்வன் சந்திரகுமார் எம்.காம். (ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா, சென்னை) ஆகியோரின் வாழ்க்கைத் துணை ஒப்பந்த விழா சென்னை பெரியார் திடலில் சிறப்புடன் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு ஏராளமான கழகத் தோழர்களும் நண்பர்களும், பிரமுகர்களும், குறிப்பாகக் கல்வித் துறை சார்ந்தவர்கள் பலரும் வந்திருந்தனர்.
வந்திருந்த அனை வரையும் வரவேற்று உரையாற்றினேன். சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி மாண்புமிகு டி.வேணுகோபால் அவர்கள் விழாவிற்குத் தலைமை வகித்தார்.
தவத்திரு குன்றக்குடி அடிகளார் அவர்கள் வாழ்க்கைத் துணை நல ஒப்பந்தத்தை நிறைவேற்றி வைத்தார்கள். பகுத்தறிவாளர் கழக முன்னாள் தலைவர் ஆர்.பண்டரிநாதன் அய்.ஏ.எஸ். (ஓய்வு), தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநர் மா.நன்னன், இராம.அரங்கண்ணல், கழகப் பொருளாளர் தஞ்சை கா.மா.குப்புசாமி, கல்வித் தந்தை நெ.து.சுந்தரவடிவேலு, அறநிலையத்துறைச் செயலாளர் நரசிம்மன் அய்.ஏ.எஸ்., ஆட்சிமொழிக் காவலர் கீ.இராமலிங்கனார் ஆகியோரும் மணவிழாவில் கலந்துகொண்டார்கள்.
மணவிழாவில் தவத்திரு குன்றக்குடி அடிகளார் அவர்கள் பேசும்போது, தமிழ்நாட்டில் வாழ்கிறவர்களெல்லாம் தமிழர்களாகி விடமாட்டார்கள். யாருக்குத் தமிழுணர்வு இருக்கிறதோ தமிழ் நாகரீகத்தின் ஊற்றம் இருக்கிறதோ, பண்பாடு இருக்கிறதோ அவர்கள்தான் தமிழர்களே தவிர, நிலப்பரப்பில் வாழ்வதன் காரணமாகவே தமிழர்கள் என்று ஏற்றுக் கொள்ள முடியாது.
எனவே, திராவிட நாட்டின் எல்லைப் பரப்பில் வாழ்வதினாலேயே திராவிடர்களாகி விடமாட்டார்கள். பெரியாருக்கு முன்பிருந்த காலத்தைப்போல இப்பொழுது இல்லை. இன்றைக்கு இருப்பவர்கள் பெரியாரால் வளர்க்கப் பட்டவர்கள், பெரியார் தமிழர்களை விழிக்கச் செய்திருக்கிறார். தமிழர்கள் சீக்கிரமாக இனம் கண்டுகொள்வார்கள் என்று நினைவூட்டி, இந்த மணமக்கள் இந்தப் பெரிய குடும்பத்திற்கு பெரிய சொத்தாக விளங்கிய தமிழ் நாகரீகத்தைக் காக்கின்ற நல்ல பிள்ளைகளை நாட்டுக்குத் தந்து, தாங்களும் வளர்ந்து, நாட்டையும் இனத்தையும் வளர்க்க வேண்டும் என்று வாழ்த்துக்களைக் கூறினார்.
14, 15.09.1982 அன்று புதுவை மாநில அரசு எடுத்த அய்யா – அண்ணா விழாவில் நான் கலந்து கொண்டேன். புதுச்சேரி மாநில அரசின் சார்பில் காரைக்கால் காமராசர் திடலில் இரண்டு நாள்கள் குதூகலத்துடன் சீரும் சிறப்புமாகவும் வெகு விமரிசையாகவும் கொண்டாடப்பட்டது. காரை நிர்வாகி பா.கோதண்டபாணி அவர்களின் தலைமை உரையும், வேளாண்மைத் துறை அமைச்சர் வி.எம்.சி.சிவகுமாரின் தொடக்க உரையும், காரை வடக்கு சட்டமன்ற உறுப்பினர் வி.எம்.சாலிஷ மறைக்காயர் (முஸ்லிம் லீக்) அவர்களின் முன்னிலை உரையும் முடிந்தவுடன் திமுக துணைப் பொதுச்செயலாளர் நாஞ்சில் கி.மனோகரன், விஜயாமுத்துவண்ணன், புதுவை மாநில தி.க. துணைத் தலைவர் சி.மு.சிவம் ஆகியோரும் பேசினார்கள்.
இரண்டாம் நாள் நிகழ்ச்சி, பி.செல்வராசன் வரவேற்புரை ஆற்ற வேளாண்மைத் துறை அமைச்சர் வி.எம்.சி.சிவக்குமார் தலைமை உரை நிகழ்த்தினார். பின் கவியரங்கம் தொடங்கியது.
கவியரங்கத்திற்கு கவியரசர் பொன்னிவளவன் தலைமை உரையாற்ற தந்தை பெரியாரின் சொல் ஆற்றல் பற்றி காரை கவிஞர் ஏ.ஏ.அலீம், கட்சியும் காட்சியும் பற்றி புதுவை சட்டமன்ற (திமுக) கொறடா கவிஞர் நா.மணிமாறன், மறுமலர்ச்சி பற்றி கவிஞர் கவிதைப்பித்தன், இன எழுச்சி பற்றி தத்துவக் கவிஞர் குடியரசு ஆகியோர் கவிதை பாடினார்.
பிறகு ஆய்வரங்கத்திற்கு கோட்டுச்சேரி சட்டமன்ற உறுப்பினர் கோ.பஞ்சவர்ணம் வரவேற்புரை ஆற்ற, பேராசிரியர் தமிழ்க்குடிமகன் தலைமை ஏற்றார்.அண்ணாவின் படைப்புகள் பற்றியும், பெரியாரின் சமுதாயப் பார்வை பற்றியும், கோவை இளஞ்சேரன், மாதர் முன்னேற்றம் பற்றி சக்தி பெருமாள் ஆகியோர் ஆய்வுரையினை இரண்டு நாள் கூட்டத்திலும் ஆராய்ச்சி மிக்க அரிய சொற்பெருக்கை மக்கள் கலையாமல் இருந்து அமைதி காத்து ஆர்வத்தோடு கேட்டார்கள். இரண்டு நாள்களும் காரைக்கால் விழாக்கோலம் கொண்டது பெருமைபடக் கூடியதாக அமைந்தது.
டெலிவிஷனில் இந்தித் திணிப்பை எதிர்த்து 15.09.1982 அன்று என்னுடைய தலைமையில் மாபெரும் ஊர்வலம் பெரியார் திடலிலிருந்து முற்பகல் 11 மணி அளவில் புறப்பட்டு, பெரியார் ஈ.வெ.ரா நெடுஞ்சாலை வழியாக சிந்தாதிரிப்பேட்டை, அண்ணா சதுக்கம், காமராசர் சிலை வழியாக உணர்ச்சி நடைபோட்டுச் சென்று அண்ணா சாலையிலுள்ள அய்யா சிலைக்கு மாலை அணிவித்தோம். மத்திய பாலிடெக்னிக் மாணவர்கள் ஏராளமான அளவில் பேருந்துகளில் திரண்டு வந்திருந்தனர். உணர்ச்சி முழக்கமிட்டு ஊர்வலத்தில் பங்கேற்றனர்.
தொலைக்காட்சி நிலையத்திற்கு எதிரே இடம் ஒதுக்கித் தரவேண்டும் என்று நான் காவல்துறை அதிகாரியைக் கேட்டுக் கொண்டேன். என் கோரிக்கையை ஏற்று, எதிரிலேயே இடம் ஒதுக்கித் தந்தனர்.
கழகத் தோழர்கள் கட்டுப்பாடு காக்க வேண்டும் என்று குறிப்பிட்டபோது, தோழர்கள் ஒலி முழக்கங்களை எழுப்பினர். பிறகு நான், பறக்கும் படைத்தலைவர் சீனிவாசன் ஆகியோர் டி.வி. நிலைய இயக்குநரைச் சந்தித்து _ இந்தித் திணிப்பிற்கு எதிரான கோரிக்கையை அளித்தேன். டி.வி. நிலைய இயக்குநர் அவர்கள் அன்புடன் வரவேற்று மனுவை மத்திய அரசுக்கு அனுப்பி வைப்பதாகத் தெரிவித்தார். பகுத்தறிவு நிகழ்ச்சிகளுக்கு உரிய இடம் அளிக்க வேண்டும் என்று வலியுறுத்திக் கேட்டுக் கொண்டேன். என் கோரிக்கையை நிலைய இயக்குநர் ஏற்றுக் கொண்டு அதுபற்றி விரிவாகக் கலந்து பேசலாம் என்று அழைப்பை விடுத்தார். மதியம் ஒரு மணி அளவில் கண்டன ஆர்ப்பாட்டம் எழுச்சியுடன் நடைபெற்று முடிந்தது.
17.09.1982 அன்று சென்னை சைதாப்பேட்டையில் நடைபெற்ற தந்தை பெரியார் பிறந்த நாள் பொதுக்கூட்டத்தில் நான் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினேன். தென்சென்னை மாவட்ட திராவிடர் கழகத்தின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தக் கூட்டம் எழுச்சியுடன் நடைபெற்றது. எஸ்.டி.தெட்சிணா மூர்த்தி தலைமை தாங்கினார். ஆலந்தூர் இராமச்சந்திரன், சைதை மா.சுப்ரமணியம் உள்ளிட்டோர் கலந்துகொள்ள பொதுமக்களும், கழகத் தோழர்கள் பலரும் பெருந்திரளாகக் கலந்து கொண்டனர்.
விழாவில் நான் உரையாற்றும்போது, மகாராஜன் கமிட்டி அறிக்கையை வரவேற்று அறிக்கையில் கூறப்பட்டுள்ள பல்வேறு கருத்துகளை எடுத்துரைத்தேன். பூசை என்பதே தமிழ்ச் சொல்தான் என்பதை மகாராசன் அவர்கள், கீழ்க்கண்டவாறு விளக்குகிறார். பூ என்பது தமிழ்ச் சொல்லாகிய பூ, சை என்பது செய் என்ற தமிழ்ச் சொல்லிலிருந்து வந்தது. இதன் பொருளாவது பூவைக் கொண்டு வழிபாடு செய்தல் ஆகும். பூசை என்ற சொல்லை தமிழ்ச் சொல் என்றும், இது வடசொல் அல்ல என்றும் பிரசித்தி பெற்ற இந்தியப் பேரறிஞரான டாக்டர் சுநீதிகுமார் சட்டர்ஜியும் எழுதியிருக்கிறார் என்று பூசைக்கு அருமையான விளக்கம் தந்திருக்கிறார் என்று குறிப்பிட்டேன்.
பிராமணர் என்ற பெயர், சாதி அடிப்படையில் இல்லாமல், பிரம்மத்தை உணர்ந்தவன் என்ற அடிப்படையில்தான் வழங்கப்பட்டது என்று குறிப்பிடுகிறார்.
தமிழ்நாட்டில் பிராமணர் சங்கம் வைத்திருக்கிறார்களே, அதிலே இருப்பவர்கள் எல்லாம் பிரம்மத்தை உணர்ந்தவர்கள்தானா? என்று பல்வேறு கேள்விகளை எழுப்பினேன். பிற்பகல் 3 மணிக்குதான் மகாராஜன் குழுவின் அறிக்கையை தமிழ்நாடு அரசு வெளியிட்டது. அறிக்கை வந்த உடனேயே _ அதைப் பெற்று முழுமையாகப் படித்து, மாலையில் நடைபெற்ற அய்யா அவர்களின் பிறந்த நாள் கூட்டத்தில் விளக்கி உரையாற்றினேன்.
சென்னையிலிருந்து வெளிவந்த ஆங்கில மாத இதழ் அசைடு (கிவீபீமீ) இதழுக்கு செப்டம்பர் மாதம் 1982 அன்று பேட்டி அளித்து, அது விடுதலையில் 24.09.1982 முதல் 26.09.1982 வரை தொடர்ச்சியாக வெளிவந்துள்ளது. அதில் சில முக்கிய கேள்வி பதில்களை மட்டும் உங்கள் பார்வைக்கு வைத்துள்ளேன்.
பேட்டி விவரம்:
கேள்வி: பார்ப்பனர்கள் தங்களுடைய உயர்ந்த நிலையை விட்டுவிடும்போது சமத்துவ அடிப்படையில் உத்தியோக, கல்வி வாய்ப்புகளில் அவர்களை மற்றவர்களுடன் போட்டிபோட அனுமதிப்பீர்களா?
பதில்: ஒரு விஷயத்தைத் தாங்கள் நன்றாக மனதில் ஊன்றவேண்டும். சமத்துவ நிலை இல்லாதவர்கள் மத்தியிலே சமத்துவம் எப்படி இருக்க முடியும்? பல நூற்றாண்டுகளாக பார்ப்பனர்கள் சமுதாயத்தில் முதலணியில் இருந்து வருபவர்கள். இந்த நிலையில் இவ்விருசாராரையும் சமத்துவ அடிப்படையில் போட்டியிடச் சொன்னால் அது சமவாய்ப்பாகாது. பார்ப்பனர்கள் சமுதாயத்தில் பெற்றுள்ள உயர்ந்த நிலையால் அவர்களுக்குச் சில நன்மைகள் உள்ளன. எனவே, அவர்களுக்குச் சில தடைகள் விதிக்கப்பட வேண்டும். அப்போதுதான் போட்டி நேர்மையானது எனலாம்.
கேள்வி: இந்தப் பிரச்சினையை வரலாற்று அடிப்படையில் உற்று நோக்கினால் பார்ப்பனர்கள் சமுதாயத்தில் எப்படிப் பல நன்மைகள் அடைந்திருக்க முடியும்?
பதில்: அவர்கள் பெற்றிருக்கும் நன்மைகள் எல்லாம் ஜாதி அமைப்பால்தான். இந்த ஜாதி அமைப்பை அரசர்கள் காத்துப் பேணி வளர்த்து வந்தார்கள். இந்த நிலை தொன்றுதொட்டு இருந்து வருகிறது. இராமாயண காலத்தில் இருந்தே சூத்திரர்களுக்கு கல்வி வாய்ப்புகள் மறுக்கப்பட்டு வந்துள்ளன.
கேள்வி: திராவிடர் கழகம் தாழ்த்தப்பட்டவர்களுக்காக உள்ள ஒரு அமைப்புத்தானா? இல்லையா?
பதில்: உண்மையில் நாங்கள் தாழ்த்தப்பட்டவர்கள், பிற்படுத்தப்பட்டவர்கள் என்ற பேதத்தைக் கடைபிடிப்பதில்லை. நாங்கள் தாழ்த்தப்பட்டவர்கள் உரிமைக்காக முன்னுரிமையுடன் போராடுகிறோம். நாங்கள் அரிஜன் என்ற சொல்லையே ஒப்புக் கொள்வதில்லை. அரிஜன் என்ற சொல் காந்தியாரால் உருவாக்கப்பட்டது. பெரியார் அதை எப்போதுமே ஒப்புக் கொண்டதில்லை. அரிஜன் என்றால் மகாவிஷ்ணுவினுடைய குழந்தைகள் என்று பொருள். அரியினுடைய குழந்தைகளை ஏன் பெருமாள் கோவிலுக்குள் அனுமதிப்பதில்லை? உயர்ஜாதி இந்துக்கள் வாழும் தெருக்களில் செல்ல அவர்கள் ஏன் அனுமதிக்கப் படுவதில்லை? பெயரை மாற்றி அவர்களை ஏமாற்றுவானேன்?
கேள்வி: ஆனால் தங்களுடைய அமைப்பு அந்த ஜாதிக் கலவரங்களைக் கடுமையாகக் கண்டித்ததில்லையே?
பதில்: தாங்கள் கூறுவது சரியல்ல. மரத்தை வெட்டிவிட்டால் பின் கிளைகளையும், இலைகளையும் வெட்டவேண்டிய அவசியமில்லையே என்று நாங்கள் நம்புகிறோம். என்னுடைய தலையாய தொண்டெல்லாம் ஜாதி அமைப்பின் வேரை வெட்டவேண்டுமென்பதே.
கேள்வி: வீரமணி அவர்களே! பார்ப்பனர்கள் என்ன செய்ய வேண்டும் என்று விரும்புகிறீர்கள்?
பதில்: பார்ப்பனர்கள் மனிதர்களாக மட்டும்தான் இருக்க வேண்டும் என்பது எங்களுடைய விருப்பம். சமுதாயத்தில் அவர்களுக்கு உயர்ந்த இடம் வேண்டும் என்று கேட்கக் கூடாது. சமுதாய அமைப்பில் பார்ப்பனர்களின் கை ஓங்கியிருக்கக் கூடாது. இப்படிப் பல்வேறு கேள்விகளுக்கு அசைடு ஆங்கில மாத இதழுக்கு நான் பேட்டி அளித்தேன்.
06.10.1982 அன்று சென்னையில் நடைபெற்ற சிந்தனையாளர் மன்றக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றினேன். மண்டல் கமிஷன் அறிக்கை இந்தியாவிலே இதுவரை சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கைகளிலே மிகச் சிறந்த விஞ்ஞானபூர்வமான அறிக்கையாகும்!
இந்த அறிக்கைக்கு செல்வாக்கு வளர்ந்து கொண்டு வருகிறது நாடாளுமன்றத்திலே 150 உறுப்பினர்கள் _ எல்லா கட்சிகளையும் சேர்ந்த உறுப்பினர்கள் _ சிவீஸீரீ கிநீக்ஷீஷீ றிணீக்ஷீஹ் லிவீஸீமீ என்று சொல்லும் அளவுக்கு _ கையெழுத்திட்டு ஒரு மனுவை பிரதமரிடம் கொடுத்து இருக்கிறார்கள்! மண்டல் குழு அறிக்கையை அமல்படுத்த வேண்டும் என்று அவர்கள் பிரதமரை வற்புறுத்துகிறார்கள்! அந்த 150 நாடாளுமன்ற உறுப்பினர்களிலே 53 பேர் ஆளும் கட்சியான இந்திரா காங்கிரசைச் சார்ந்தவர்கள் என்பது மிகவும் வரவேற்கத்தக்க ஒன்றாகும் என்று சிந்தனையாளர்கள் மன்றத்திலே எடுத்து விளக்கினேன். சிந்தனையாளர்கள் கழகத்தின் சார்பில் நேற்று சென்னை மகாஜன சபாவில் அய்யா_அண்ணா அவர்களின் பிறந்த நாளையொட்டி, மண்டல் குழு அறிக்கை விளக்கச் சிறப்புப் பொதுக்கூட்டம் நடைபெற்றது. நிகழ்ச்சியில் ஏராளமான அளவில் மத்திய_மாநில அரசு ஊழியர்கள் கலந்துகொண்டனர். நிகழ்ச்சிக்கு கே.ஜி.பழனி அவர்கள் தலைமை தாங்கினர். பொதுமக்கள் பலரும் கலந்துகொண்டனர்.
மண்டல் குழு அறிக்கை குறித்து மகாஜன சபாவில் ஆற்றிய உரையைப் பாராட்டி எதிரொலி என்ற இதழ் 08.10.1982 அன்று சிறப்புக் கட்டுரை ஒன்றை வெளியிட்டிருந்தது. அதனை விடுதலையில் வெளியிட்டிருந்தோம். அதிலிருந்து சில பகுதிகள் இங்கே தருகின்றேன்.
மண்டல் குழுப் பரிந்துரையிலிருந்து பல பகுதிகளை வீரமணி தமது பேச்சினூடே _ மேற்கோளாகப் படித்துக் காட்டினார்!
கேட்டுக் கொண்டிருந்தவர்களுக்கெல்லாம் ஒரே ஆச்சரியம் _ மண்டல் குழு அறிக்கையைத் தான் வீரமணி படித்துக் காட்டுகிறாரா? அல்லது சுயமரியாதை இயக்க காலத்து _ விடுதலை தலையங்கங்களை _ பெரியார் கட்டுரைகளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து வைத்துக் கொண்டு மண்டலின் பேரால் படித்துக்காட்டிக் கொண்டிருக்கிறாரா என்று!
நம்மைப் பொறுத்தவரையில் வீரமணி மண்டல் அறிக்கையிலிருந்து மேற்கோள் காட்டிப் பேசிய அந்தப் பேச்சு _ நம்மை முப்பது வருடத்திற்கு முன்பு திராவிடர் இயக்க காலத்தில் பொங்கிப் பிரவகித்த இன எழுச்சிக் காலத்திற்கே அழைத்துச் செல்வதாக இருந்தது!
கூட்டம் முடிந்து வெளியே _ வந்தபோது _ கூட்டத்தில் கலந்துகொண்ட எல்.அய்.சி. ஊழியர்கள் பலர் மண்டல் அறிக்கையில் நமது சமூக முன்னேற்றத்திற்கு இத்தனை வழிவகைகள் _ ஆக்கங்கள் இருக்கின்றனவா _ இதுவரையில் யாரும் இந்த அறிக்கையை இவ்வளவு சிறப்பாக எடுத்து விளக்கவில்லையே _ என்று வியந்து பேசிக்கொண்டு போனதை நம்மால் கேட்க முடிந்தது!
கூட்டம் தொடங்குவதற்கு முன்னால் மாலை 5 மணி அளவில் _ மகாஜனசபை மொட்டை மாடியில் மண்டல்குழு பரிந்துரைபற்றிய _ ஒரு ரூபாய் விலையுள்ள புத்தகத்தை _ வெளிச்சத்தில் பரப்பி வைத்துக் கொண்டு ஒரு திராவிடர் கழகத்தோழர் அமர்ந்திருந்தார். அப்போது பலபேர் அந்தப் புத்தகத்தின்மீது கண்ணோட்டம் இட்டுவிட்டு சென்றார்களே தவிர _ அதனை வாங்குவதற்கு முயற்சிக்கவில்லை.
ஆனால் வீரமணி பேசி முடித்த பின்னர் அதே இடத்தில் _ விளக்கு வெளிச்சம்கூட போதுமானதாக இல்லை _ இருட்டிலே _ எல்லோரும் போட்டிப் போட்டுக்கொண்டு _ அந்தப் புத்தகத்தை வாங்குவதையும் நம்மால் பார்க்க முடிந்தது!
பிற்படுத்தப்பட்ட மக்களுக்கான மாக்ன கார்ட்டா (விணீரீஸீணீ சிணீக்ஷீணீ) _ சாசனமாக வழங்கப்பட்டுள்ள மண்டல் கமிஷன் பரிந்துரைகளைப் பற்றி தமிழ்மக்கள் எல்லோரும் தெளிவாகத் தெரிந்துகொள்ள வேண்டும்!
இது ஏதோ திராவிடர் கழகத்துக்காரனுக்கும் தி.மு.கழகத்தவனுக்கும் உரிய சங்கதி என்று யாரும் நினைத்துவிடக் கூடாது; இது கட்சிகளுக்கு அப்பாற்பட்ட வருங்காலத் தலைமுறைகளின் நன்மை _ முன்னேற்றம்பற்றிய மகோன்னத நோக்கம் கொண்ட பிரச்சினை. இதிலே எல்லா கட்சியினரும் முன்கை எடுத்துவைத்து _ ஒன்றுபட்ட முயற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்பதை புரிந்துகொள்ள வேண்டும்.
மண்டல் கமிஷன் பரிந்துரைகள்பற்றி மத்திய அரசுக்கு வலியுறுத்தக் கட்டப்படும் இயக்கம் மகத்தான வெற்றியை பெறும் என்பதை _ மகாஜனசபை மன்றத்தில் வீரமணி ஆற்றிய உரை மிகத் தெளிவாகப் படம் பிடித்துக் காட்டுவதாக இருந்தது! (எதிரொலி, 08.10.1982)
06.10.1982 அன்று தண்ணீர், தண்ணீர் காவிரி பிரச்சினை என்ற தலைப்பில் அறிக்கை ஒன்று வெளியிட்டிருந்தேன். காவிரி நீரால் பாசனம் பெறவேண்டிய தஞ்சை, காரைக்கால், திருச்சி, தெ.ஆ. போன்ற மாவட்டங்களில் பல பகுதிகளில் நிலம் பயிரிடப்படாவிட்டாலும், பயிரிட்ட பகுதிகளில் பயிர்கள் வாடிய பயிர்களாகி பயனற்றவைகளாகும் பேரபாயம் தோன்றியுள்ளதை அதில் சுட்டிக்காட்டி விளக்கியிருந்தேன்.
தஞ்சை மாவட்டத்தில் காவிரி நீர் வரத்துத் தட்டுப்பாடு காரணமாக ஏற்பட்டுள்ள நிலவரங்கள் குறித்து ஆராய _ கழகத்தின் சார்பில் அனைத்துக் கட்சி கூட்டம் 08.10.1982 அன்று தஞ்சை அரண்மனை சங்கீதா மகாலில் சிறப்பான முறையில் நடைபெற்றது.
காவிரி நீர் தட்டுப்பாட்டை அவர்களுக்கு உணர்த்த தமிழ்நாடு முழுவதும் விரைவில் முழு அடைப்பு நடத்திடவும், பிரதமர் இந்திராவை சந்திக்கவும் அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
கழகம் கூட்டிய அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் தி.மு.க., காமராஜ் காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, பாரதீய ஜனதா கட்சி, கரும்பு உற்பத்தியாளர்கள் சங்கம் உள்ளிட்ட அமைப்புகள் கலந்துகொண்டன என்பது குறிப்பிடத்தக்கது. பட்டுக்கோட்டை சீனுவாசன் முன்னாள் எம்.எல்.ஏ. உடன் கலந்துகொண்டார்.
08.10.1982 அன்று இரவு தஞ்சையில் நடைபெற்ற கருவூல ஊரியர்களின் போராட்ட ஆதரவு சர்வகட்சி கூட்டத்தில் நான் கலந்துகொண்டு உரையாற்றினேன்.
இதனை நான் கண்டித்து 14.10.1982 அன்று விடுதலையில் மண்டல் பரிந்துரைக்கு எதிராக பார்ப்பனர் போர்க்கொடி என்ற தலைப்பில் முக்கிய அறிக்கையை வெளியிட்டிருந்தேன். முதன்முறையாக டாக்டர் ரஃபிக் ஜக்காரியா என்ற இ.காங்கிரஸ் உறுப்பினர் மண்டல் கமிஷன் பரிந்துரைகளை எதிர்த்துப் பேசியுள்ளார். ஆளுங்கட்சி _ எதிர்க்கட்சி என்ற பேதமின்றி கிட்டத்தட்ட அனைத்து உறுப்பினர்களுமே மண்டல் குழு பரிந்துரைகளை வரவேற்றே பேசினர். ஒரே ஒரு தனிக்குரல்தான் இதற்கு எதிராகக் கேட்டது. ஆளும் கட்சி (காங்கிரஸ்) உறுப்பினரான திரு.டாக்டர் ரஃபிக் ஜக்காரியாதான் இவ்வாறு எதிர்த்துப் பேசியதன் மூலம் தன் எதிர்ப்பைத் தெளிவாகக் காட்டிக்கொண்டார்.
இந்த உணர்வினை மத்திய அரசு புரிந்துகொண்டு செயலாற்ற உடனடியாக முன்வர வேண்டும் என்று அந்த அறிக்கையில் எடுத்துக்காட்டி விளக்கியிருந்தேன்.
09.10.1982இல் காரைக்குடி பகுத்தறிவாளர் கழகத்தின் சார்பில் நகராட்சி பள்ளிகளுக்கு அய்யா படம் வழங்கும் விழாவில் நான் கலந்துகொண்டு உரையாற்றினேன். விழாவில் தவத்திரு குன்றக்குடி அடிகளார் அவர்கள் அய்யா படத்தைத் திறந்து வைத்து நகராட்சி பள்ளிகளுக்கு அய்யா படம் வழங்கினார். விழாவில், ஆணையர் வே.அண்ணாமலை, என்.ஆர்.சாமி, குன்றக்குடி அடிகளார், ப.க. தலைவர் மு.சொக்கலிங்கம், செயலாளர் மு.அரங்கநாதன், மாவட்ட அமைப்பாளர் சாமி.திராவிடமணி உள்ளிட்ட ஏராளமான கழக நிர்வாகிகளும், பொதுமக்களும் மாணவ, மாணவிகள், ஆசிரியர் பெருமக்களும் பெருந்திரளாகக் கலந்துகொண்டனர்.
15.10.1982 அன்று சுஜாதா என்ற இதழிலிருந்து என்னை பேட்டி கண்டார்கள். எடுத்துக்காட்டாக ஒரு கேள்விக்கான பதிலை இங்கு சுட்டிக்காட்டியுள்ளேன்.
கேள்வி: திராவிடர் கழகம் என்று பெயர் வைத்துக் கொண்டு தமிழர்-தமிழ்நாடு என்று மட்டுமே செயல்படுகிறீர்களே அது ஏன்?
பதில்: அய்யா (பெரியார்) சொல்லிவிட்டுப் போனதின் அடிப்படையிலேயே இதற்குப் பதில் சொல்ல வேண்டும்.
திராவிட மொழிகளின் அடிப்படையில் தோன்றிய இயக்கமல்ல இது. ஆரியர்களின் நேர்எதிரான இயக்கம். தங்களை தமிழர்கள் என்று பிராமணர்கள்கூட சொல்லிக் கொள்கிறார்களே தவிர, திராவிடர்கள் என்று சொல்லிக் கொள்வதில்லை. நாம் இனத்தால் திராவிடர்கள். மொழியால் தமிழர்கள் என்பதால் இது திராவிடர் கழகமே! சென்னை ராஜதானி என்று அழைக்கப்பட்ட பழைய மாநிலத்தில் கன்னட, ஆந்திர பகுதி மக்களும்கூட அடக்கம். அதனால் மொழியைக் கருதி இல்லாமல் இனத்தைக் கருதியே இந்த இயக்கம் ஆரம்பமானது. மற்ற திராவிட மொழியினரிடையே இந்த இயக்கம் எதிர்பார்த்த அளவு பரவவில்லை என்பது மறுக்க முடியாத உண்மைதான். குறிப்பாக மலையாளத்தில் சமஸ்கிருதமும் _ அதன் கலாச்சார ஆதிக்கமும் அதிகம். அதன் அடிப்படையில் பகுத்தறிவு எண்ணமே அங்கு பரவவில்லை.
கேள்வி: கடவுள் நம்பிக்கையே இல்லாத உங்களுக்கு அனைத்து ஜாதியினரையும் அர்ச்சகராக்கும் போராட்டம் எதற்கு? இது கடவுள் நம்பிக்கையை ஏற்பது ஆகாதா?
பதில்: குருவி தனக்கு மட்டும் கூடு கட்டும். மனிதன் மற்றவர்களுக்காகவும் வாழ வேண்டும்! சக மனிதனுக்கு வருகிற பாதிப்பை அல்லது உரிமை மறுக்கப்படுவதை பகுத்தறிவாளன் பார்த்துக் கொண்டிருக்க மாட்டான்.
கடவுள் மறுப்பு என்பது எங்கள் கொள்கை. எல்லா ஜாதியினருக்கும் அர்ச்சகர் என்பது மனித உரிமை! இதில் நாத்திகம், ஆத்திகப் போராளிகள் என்பதற்கே இடமில்லை. உரிமையை மீட்டுத் தர யார் வேண்டுமானாலும் போராடலாம் என்று கூறினேன்.
(நினைவுகள் நீளும்…)