பறை-2

ஜுன் 1-15,2021

– முனைவர் மு.வளர்மதி

 

‘பறை’ – ஒரு பொதுப்பெயர்

‘பறை’ என்பது தொடக்கக் காலத்தில் தோற்கருவிகளுக்கு ஒரு பொதுப்பெயராக வழங்கப்பட்டு வந்துள்ளது. தமிழர் பண்டைக் காலத்தில் சுமார் 70 வகையான தோற்கருவிகளைப் பயன்படுத்தி வந்துள்ளார்.

இவை, ‘அடக்கம், அந்தரி, அமுதகுண்டலி, அரிப்பறை, ஆகுளி, ஆமந்திரிகை, ஆவஞ்சி, உடல், உடுக்கை, உறுமி, எல்லரி, ஏறங்கோள், ஒருவாய்க்கோதை, கஞ்சிரா, கண்விடுதூம்பு, கணப்பறை, கண்டிகை, கரடிகை, கல்லல், கல்லலகு, கல்லவடத்திரள், கிணை, கிரிக்கட்டி, குடமுழா, குண்டலம், கும்மடி, கைத்திரி, கொட்டு, கோட்பறை, சகடை, சந்திரபிறை _ சூரியபிறை, சந்திரவளையம், சல்லரி, சல்லிகை, சிறுபறை, சுத்தமத்தளம், செண்டா, டமாரம், தக்கை, தகுணித்தம், தட்டை, தடாரி, தண்டோல், தண்ணுமை, தபலா, தமருகம், தமுக்கு, தவண்டை, தவில், தாசரிதப்பட்டை, திமிலா, துடி, துடுமை, துத்திரி, துந்துபி, தூரியம், தொண்டகச் சிறுபறை தோலக், நகரி, நிசாளம், படவம், படலிகை, பம்பை, பதலை, பறை, பாகம், பூமாடுவாத்தியம், பெரும்பறை, பெல்ஜியக்கண்ணாடி மத்தளம், பேரி, மகுளி, மத்தளம், முரசு, முருடு, முழவு, மேளம், மொந்தை, விரலேறு என்பனவாகும். இவை நூல்களிலிருந்தும் வழக்காற்றிலிருந்தும் பெறப்பட்டவையாகும்.

சந்திர பிறை _ சூரியபிறை, சந்திரவளையம், தபலா, பெல்ஜியக் கண்ணாடி, ஜமலிகா போன்ற தாளக் கருவிகள் பிற்காலத்தவையாகும்.

இக்கருவிகள் யாவும் ‘பறை’ எனும் சிறு கருவியிலிருந்து சிறிதுசிறிதாக தேவைக்கேற்றபடி, ஒலி வேறுபாடுகள் உடையனவாக அளவுகளிலும், வடிவத்திலும் வேறுபாடுகள் உடையனவாக, பல்வேறு முழவுக் கருவிகளாக உருவாகியுள்ளன. கருவியின் தன்மைக்கேற்ப, கருவியில் எழும் ஒலியின் தன்மைக்கேற்ப கருவிகள் பயன்பட்ட காலங்களும், பொழுதுகளும் வேறுபட்டு விளங்குகின்றன. (இதற்குரிய விளக்கங்கள் ‘பறை வகைகள்’ பகுதியில் காணலாம்.) இவற்றுள் பல கருவிகள் இலக்கியக் குறிப்புகளின் மூலமாக மட்டுமே அறிய முடிகிறது. தற்காலத்தில் இவை காணுதற்கில்லை என்றளவில் உள்ளன. இசையுணர்வுடன் இயற்றப்பட்ட தமிழ் இலக்கியங்களில் இசைக்கருவிகள் பற்றிய குறிப்புகள் மிகுதியாக உள்ளன என்பது அனைவரும் அறிந்த உண்மை. எனினும் அனைத்துத் தோற்கருவிகளான _ இசைக் கருவிகளுக்கும் தாயாக விளங்கிய ‘பறை’ பிற்காலத்தில் தீண்டாமையைக் குறிக்கும் நோக்கில் ‘பறை’ கொட்டி இசைத்த ஒரு பிரிவினரைப் ‘பறையர்’ எனக் குறிப்பிடப் பயன்படுத்தப்பட்டது என்பதை நினைவில் கொள்ள வேண்டும். பறையை அறைவோர் பறையர், கோடியர், துடியர், வள்ளுவர் எனப்பட்டனர்.

பறை – இலக்கியச் சொல்வழக்கு

பற+ஐ=பறை -_ ‘பறபற’ என்று ஒலித்தது பறை அல்லது ‘பர் பர்’ என ஒலித்தது. பறை என்பது முதன்மைப் பொருள் (றிக்ஷீவீனீணீக்ஷீஹ் னீமீணீஸீவீஸீரீ) ‘பறை’ எனும் பெயர் ஒலியினடியாகப் பிறந்தது. ‘பறைதல்’ என்ற சொல் சொல்லுதல், உரைத்தல், அறிவித்தல் என வழிப்பட்ட பொருளை (ஷிமீநீஷீஸீபீணீக்ஷீஹ் னீமீணீஸீவீஸீரீ) உடையது. ‘பறைதல்’ என்ற சொல் வழக்கு மலையாளத்திலும் யாழ்ப்பாணத் தமிழ் மக்களிடையேயும் இன்றும் வழக்கில் உள்ளது.

‘பறை’ என்ற சொல் பேச்சைக் குறிப்பதாகும். ‘பேசு’ எனப் பொருள்படும் ‘அறை’ என்ற சொல்லினின்று ‘பறை’ தோன்றிற்று. ப்+அறை–_பறை, அறை_பேசு அற். (அடக்கியிருந்து நெருங்கிச்சேர்) +ஐ_அறை, அடிஅடித்து உரக்க ஒலி எழுப்புவது போலச் சொல் ‘அறை’ (பெயர்) சொல் (நன்னூல் 458).

பேசுவதை இசைக்கவல்ல தாளக்கருவி ‘பறை’ எனப்பட்டது. இதனைச் சங்கப் புலவர் ‘ஓர்த்தது இசைக்கும் பறை’ (கலி. 92:21, பழ.37:4) என்று குறிப்பர். போரில் அடைந்த வெற்றியைப் பறையால் சாற்றியதை, ‘இன்னிசைப் பறையொடு வென்றி நுவல’ (புற 225:10) என்றும் திருமணத்தின் போது பறையால் நாள் குறித்த செய்தியை நாலடியார்.

‘பல்லார் அறியப் பறையறைந்து நாள்கேட்டுக்

கல்யாணம் செய்து கடிப்புக்க… (86)

என்றும் குறிப்பிடப்படுகின்றன.

ஒரு செய்தியைப் பலரிடத்தும் சொல்லிக் கொண்டு திரிவதைப் ‘பறையடித்தல்’ என்று கூறுவது நாட்டுப்புற வழக்கு. இவற்றால் செய்தி அறிவித்தல் என்ற பொருளில் வழங்கிய ‘பறை’ என்ற சொல் நாளடைவில் செய்தியறி விப்பதற்குப் பயன்படுத்தப்பட்ட தோற்கருவிக்கு உரிய சிறப்புப் பெயராகி வழங்கியுள்ளமை புலனாகின்றது. காலவோட்டத்தில் அதன் புழக்க மிகுதியால் பறையுடன் தொடர்புடைய பலவித தோற்கருவிகளின் பொதுப்பெயராக ஆகிய ஒரு பரந்தப் பொருளைப் பெற்றிருக்க வேண்டும் என்ற கருத்தையும் நாம் அறிதல் வேண்டும்.

‘அறைபறை’ -_ வினைத்தொகை. அறை _ தெரிவி, சொல்லு, வரையறுத்துச் சொல்லுதல். அறைதல் _ இது வழிப்பொருள்

“அறைபறை யன்னர் கயவர்’’ (குறள்:1076)

“எம்போல் அறைபறை கன்னாரகத்து’’ (குறள்:1180)

“அறைபறை யெழுந்ததால்’’ (சிலப்:3.25:194)

“அறைபறை யெழுந்தபின்’’ (சிலப்.: 3.26:1)

“அறைபறை’ என்றன அரசர் கோமான்’’

                                                            (கம்ப.பால 290:4)

“அறைபறை நின்று மோதிட’’ (திருப்புகழ். 774)

என அனைத்து இடங்களிலும் ஓங்கி ஒலிக்கச் செய்தல், சொல்லுதல் என்ற வழிப்பொருளில் குறிப்பிடப்பட்டுள்ளது. தொடக்க காலத்தில் அறைந்து ஒலியெழுப்பப் பயன்படுத்திய தோற்கருவிகளைப் ‘பறை’ எனும் பொதுப்பெயரால் குறிப்பிட்டுள்ளனர்.

பறை என்பது ஓடும் இசையை ஒழுங்குபெற நிறுத்தி ஓர் அளவோடு சீரோடு, ஒத்த அழகோடு நடக்க இசைக்கு நடை கற்பிக்கும் கருவி என்பர். பறை என்பதனைக் கொட்டு, மேளம், முழவு என்று குறிப்பிடுவர்.

(தொடரும்…)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *