நீதியும், நியாயமும், தீர்ப்புகளும் தமிழ்நாட்டுக்குச் சாதகமாக இருந்தாலும் – தமிழ்நாடு வஞ்சிக்கப்படுவது ஏன்?
கருநாடகத்தின் ஒற்றுமையும் – தமிழ்நாட்டின் ஒன்றுபடாத்தன்மையுமே முக்கிய காரணம்
25 ஆம் தேதி முழு அடைப்பை வெற்றி பெறச் செய்வோம்!
மத்திய – மாநில அரசுகளை செயல்பட வைப்போம்!!
தமிழர் தலைவர் ஆசிரியர் விடுத்துள்ள முக்கிய அறிக்கை
காவிரி நதிநீர்ப் பிரச்சினை, தமிழக விவசாயி களின் அவல நிலை – நீட் தேர்வு, முழு மதுவிலக்கு இவற்றை மய்யப்படுத்தி, தி.மு.க. கூட்டிய அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களின் முக்கியத்துவத்தை விளக்கி திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள முக்கிய அறிக்கை வருமாறு:
காவிரி நதிநீர்ப் பிரச்சினை, பாதிக்கப்பட்டுள்ள விவசாயி கள் பிரச்சினை, சமூகநீதியைப் பாதிக்கும் மத்திய அரசின் நீட் தேர்வு, மது விலக்கு உள்ளிட்ட பிரச்சினைகளை மய்யப்படுத்தி – தி.மு.க. சார்பில் அதன் செயல் தலைவரும், தமிழ்நாடு சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான தளபதி மு.க.ஸ்டாலின் அவர்கள் அனைத்துக் கட்சிக் கூட்டம் ஒன்றை (16.4.2017) கூட்டியது காலத்தாற் மேற்கொள்ளப்பட்ட தேவையான நடவடிக்கையாகும்.
19 தீர்மானங்கள்
இரங்கல் தீர்மானம் உள்பட 19 அரிய தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளன.
விவசாயிகளும், அனைத்துக் கட்சித் தலைவர்களும் இந்தியப் பிரதமருடன் சந்திப்பு – காவிரி மேலாண்மை வாரியம் – காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழு உருவாக்கம் – விவசாயிகளின் அனைத்துக் கடனையும் தள்ளுபடி – தற்கொலை செய்துகொண்டுள்ள விவசாயிகளின் குடும்பங்களுக்குப் பாதுகாப்பு – காவிரி டெல்டா பகுதிகளை வேளாண் மண்டலமாக அறிவிக்கக் கோருதல் – விவசாயக் கூலித் தொழிலாளர்களுக்கு நிவாரணம் – அண்டை மாநிலங்கள் தடுப்பணைக் கட்டுவதைத் தடை செய்தல் – மீத்தேன் திட்டம் – ஹைட்ரோ கார்பன் திட்டங்களைக் கைவிடக் கோருதல் – நெல், கரும்புக்கு நியாய விலை – கரும்புக்கான நிலுவைத் தொகையை உடனே வழங்கக் கோருதல் – முல்லைப் பெரியாற்றின் நீர் மட்டத்தை 152 அடிவரை உயர்த்துதல் – தமிழ்நாடு சட்டப்பேரவையை உடனே கூட்ட வலியுறுத்தல் – குடிநீர்ப் பிரச்சினையைப் போக்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகள் – முழு மது விலக்கைச் செயல்படுத்துதல் – தமிழ்நாட்டுக்கு ‘நீட்’ தேர்விலிருந்து விதிவிலக்குக் கோருதல் – கடும் வறட்சி நிலவும் இந்நேரத்தில் ரேசன் கடைகளில் பொருள்கள் தங்குத் தடையின்றி வழங்கப்பட வலியுறுத்தல் – தேசிய பேரிடர் மாநிலமாகத் தமிழ்நாட்டை அறிவிக்கக் கோருதல் ஆகியவற்றை உள்ளடக்கிய அரிய தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளன.
25 ஆம் தேதி – முழு அடைப்புப் போராட்டம்
இவற்றினை வலியுறுத்தி மத்திய – மாநில அரசு களைச் செயல்பட வைக்கும் வகையில் வரும் 25 ஆம் தேதியன்று தமிழ்நாடு தழுவிய அளவில் முழு அடைப் புப் போராட்டத்தை நடத்துவது என்கிற தீர்மானம் முக்கியத்துவம் வாய்ந்ததாகும்,
நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை விளக்கி அனைத் துக் கட்சித் தலைவர்களும் பங்கேற்கும் மாபெரும் பொதுக் கூட்டம் ஒன்றை சென்னையில் வரும் 22 ஆம் தேதி நடத்துவது என்றும் தீரமானிக்கப்பட்டுள்ளது.
தி.மு.க. கூட்டிய அனைத்துக்கட்சிக் கூட்டமும், நிறை வேற்றப்பட்ட தீர்மானங்களும் என்றென்றும் பேசப்படக் கூடியவைகளாக இருக்கும் என்பதில் அய்யமில்லை.
‘செயல்படும்‘ மத்திய அரசும் – ‘செயல்படாத’ மாநில அரசும்!
மாநில அரசைப் பொறுத்தவரை ‘செயல்படாத’ அரசு – மத்திய அரசைப் பொறுத்தவரை ‘செயல்படக்கூடிய’ அரசே. ஆனால்…!
எப்படியும் தமிழ்நாட்டு மக்களுக்கு நல்லது நடந்துவிடக்கூடாது – அவர்கள் உரிமைகளுக்கான நியா யங்கள் நிறைவேறிவிடக் கூடாது என்பதிலே கண்ணும் கருத்துமாக இருந்து ‘செயல்படக் கூடிய’தாகத்தான் மத்திய பி.ஜே.பி. அரசு இருந்து வருகிறது.
தலைநகரிலே தமிழக விவசாயிகளும் – பிரதமரின் பாராமுகமும்!
தமிழ்நாட்டைச் சேர்ந்த விவசாயிகள் இந்தியத் தலைநகரிலே பல வடிவங்களில் – நிர்வாணப் போராட்டம்வரை நடத்த வேண்டிய நிலை ஏற்பட்டும், ஒரு பிரதமர் அவர்களைச் சந்திக்க மறுக்கிறார் என்றால், அதன் பொருள் என்ன? ஜனநாயகப் போர்வையில் எதேச் சதிகாரம் நடக்கிறது என்றுதானே பொருள்! விவசாயம் பாவத் தொழில் என்பதுதானே இந்துத்துவாவின் கோட் பாடு. பிரதமரின் அலட்சியத்துக்கு இதுதான் காரணமோ!
தமிழ்நாட்டைச் சேர்ந்த இணை அமைச்சர் ஒருவர் இருக்கிறார்; அவ்வப்போது எதையோ சாதிப்பதுபோல, எதையாவது சொல்லிக் கொண்டே இருப்பார்.
அவற்றைத் தமிழ்நாட்டு மக்கள் பொருட்படுத்துவ தில்லை. ஏனெனில், அவர் சொல்லுவது எதுவும் நடை பெறுவதில்லையே! இந்தப் பிரச்சினைக்குக்கூட அவர் சொன்ன பதில், சமாதானம் என்ன தெரியுமா?
எந்தப் போராளிகளையும் பிரதமர் சந்திப்பதில்லை என்பதுதான் அந்தப் பதில். இந்தப் பதில் பிரதமருக்குப் பெருமை சேர்க்கக்கூடியதுதானா?
நம் பக்கம் நியாயம் இருந்தும்…
காவிரி நதி நீர்ப் பிரச்சினையைப் பொறுத்தவரை நம் பக்கம் நியாயமும், சட்டமும், நியதிகளும், நீதிமன்ற தீர்ப்புகளும் இருந்தாலும் நாம் ‘தோல்விகளைச்‘ சுமந்துகொண்டே இருக்கிறோம்.
அதேநேரத்தில் நீதி, நியாயம், நியதி, சட்டம், தீர்ப்புகள் இவற்றிற்கு நேர்மாறாக கருநாடகம் நடந்துகொண்டாலும், அவர்களின் காட்டில்தான் மழை பொழிந்து கொண்டுள்ளது.
கருநாடகம் வெற்றி பெற்று வருவது ஏன்?
இந்த நிலைக்கு மிக முக்கிய காரணம், அம்மாநிலத்தின் கட்சிகள், மதங்கள், ஜாதிகள் இவற்றைத் தாண்டி இன்னும் சொல்லப்போனால், மாநில அமைச்சர்கள், மத்திய அமைச்சர்கள் என்ற வேறுபாடின்றி அடாவடித்தனத் துக்காக ஒரே அணியாய் ஆவேசக் குரல் கொடுத்து ஒன்று திரண்டு நிற்கின்றனர்.
அரசியல் காழ்ப்புணர்வைக் கைவிடுக!
இவ்வளவுப் பாதிப்புக்கு ஆளாகியும் இன்னும் குதர்க் கம் பேசும் நிலைகளும் இங்கு உள்ளனவே! அரசியல் காழ்ப்புணர்ச்சி அரசியல் இன்னும் இருப்பது சரியானதுதானா?
நேற்றைய அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் கலந்து கொள்ளாதவர்கள் தங்கள் நிலையை மறுபரிசீலனை செய்யவேண்டும். இந்தத் தருணத்தில்கூட ஒன்றுபட்டு நிற்க முன்வராவிட்டால், வரலாறு அவர்களை மன்னிக் கவே மன்னிக்காது.
தமிழ்நாட்டுக்கு இழைக்கப்பட்டுள்ள அநீதிகள் கொஞ்சமல்ல!
காவிரி நதிநீர்ப் பிரச்சினையில் நமக்கு ஏற்பட்டு இருக்கும் அநீதி, வஞ்சனை போல வேறு எங்குமே நடந்திருக்காது.
காவிரி நடுவர் மன்றம் அமைக்கப்பட்டு 17 ஆண்டு களுக்குப்பின் தீர்ப்பு வந்ததை நினைத்துப் பார்க்கவேண்டும். 588 முறை வாய்தாக்கள் தாராளமாக அளிக்கப்பட்டனவே – என்ன சொல்ல!
நடுவர் மன்றத் தீர்ப்பு வந்து ஆறு ஆண்டுகள் கழித்து கெசட்டில் பதிவாகிறது. நடுவர் மன்றத் தீர்ப்பு என்பது உச்சநீதிமன்றத் தீர்ப்புக்கு நிகரானது என்பதே சட்டத்தின் நிலை!
உச்சநீதிமன்றத் தீர்ப்பையே மறுதலிக்கும் மத்திய பி.ஜே.பி. அரசு
உச்சநீதிமன்றம் திட்டவட்டமாக, காவிரி மேலாண்மை ஆணையத்தை அமைக்கவேண்டும் என்று மத்திய அரசுக்கு உத்தரவிட்ட நிலையில், அப்படி ஆணையிடும் அதிகாரம் உச்சநீதிமன்றத்திற்கே கிடையாது என்று உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசின் கருத்தாக வழக்குரைஞர் கூறுகிறார் என்றால், இது எவ்வளவுப் பெரிய விபரீதம்?
உச்சநீதிமன்றம் மத்திய அரசுக்கு வைத்த குட்டுகள்!
இந்திய அரசமைப்பு சாசனத்துக்கு விரோதமாகவும், கூட்டாட்சித் தத்துவத்துக்கு விரோதமாகவும் மத்திய அரசு நடந்துகொள்கிறது என்று உச்சநீதிமன்றமே சொன்னது – தலையில் குட்டியது என்றால், இன்றைய மத்திய பி.ஜே.பி. அரசின் மக்கள் விரோத – நியாய விரோத – சட்ட விரோத போக்கைத் தெளிவாக அறிந்துகொள்ள முடியுமே!
கருநாடகத்துக்கு வந்த தைரியம்!
காவிரி நீர்ப் பாசனத்தைப் பயன்படுத்தி 11.2 லட்சம் ஏக்கர் அளவுக்குத்தான் விவசாயம் செய்யவேண்டும் என்று நீதிமன்றம் அறுதியிட்ட நிலையில், 18.85 லட்சம் ஏக்கர் நிலம் சாகுபடி செய்யப்பட்டது என்று கருநாடக மாநில அரசு கூறுவதற்கு எவ்வளவுத் ‘துணிச்சல்’ வேண்டும்?
நீங்கள் என்ன சொன்னாலும், நாங்கள் செய்வ தைச் செய்துகொண்டுதான் இருப்போம் என்று அடாவடித் தனமாகக் கருநாடக மாநில அரசு நடந்துகொள்வது எந்த அடிப்படையில்?
இவ்வளவுக்கும் கருநாடகம் காவிரியை மட்டும் நம்பிக் கொண்டிருக்கும் மாநிலமல்ல – 13 ஆறுகள் அங்கு ஓடிக் கொண்டுதான் இருக்கின்றன.
கடலில் விழும் 2000 டி.எம்.சி. நீர்
மேலும் 2000 டி.எம்.சி. தண்ணீர் பயன்படுத்தப்படாமல் கடலில் வீணாகக் கலக்கிறது. இவற்றின்மீது கவனத்தைச் செலுத்தியிருந்தால், தமிழ்நாட்டு மக்களின் தலையில் கைவைக்கும் வேலை கருநாடகத்துக்கு ஏற்பட்டு இருக்காதே!
உறங்காதே தமிழா!
தமிழ்நாட்டு மக்கள் இன்னமும் உறங்கிக் கொண்டிருந்தால், வரும் காலத்தில் இந்தியத் துணைக் கண்டத்தில் தமிழ்நாடு என்னும் பாலைவனம் உண்டு என்று மாணவர் கள் பாடப் புத்தகத்தில் படிக்கும் நிலைதான் ஏற்படும்.
‘நீட்’ எனும் ஆபத்து!
அதேபோல, தமிழ்நாட்டில் 2007 ஆம் ஆண்டே தி.மு.க. ஆட்சியில் மானமிகு மாண்புமிகு கலைஞர் அவர்கள் முதலமைச்சராக இருந்தபோது ஒழிக்கப்பட்ட நுழைவுத் தேர்வை – மத்திய பி.ஜே.பி. அரசு இப்பொழுது ‘நீட்’ என்ற பெயரால் திணிக்கிறது.
பிளஸ் 2 தேர்வில் பெற்ற மதிப்பெண் அடிப்படையில் மருத்துவக் கல்லூரிகளுக்கான சேர்க்கை இருந்ததால், ஒடுக்கப்பட்ட மாணவர்களும், தாழ்த்தப்பட்ட மாணவர்களும், சிறுபான்மையினரும், கிராமப்புறத்தைச் சேர்ந்த மாணவர்களும் முதல் தலைமுறையாகப் படித்த குடும்பத்தைச் சேர்ந்தவர்களும் அதிக இடம்பெற்று வந்த நிலையில், அதனைப் பொறாத உயர்ஜாதி ஆதிக்க வர்க்கம், குறுக்கு வழியில் பாய்ந்து, அதனை ஒழித்துக் கட்டவே ‘நீட்’ என்னும் அகில இந்திய நுழைவுத் தேர்வைத் திணித்துள்ளனர்.
இந்த ‘நீட்’ தேர்விலிருந்து தமிழ்நாட்டுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்ற வகையில், தமிழ்நாடு சட்டப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாவைக் குப்பைக் கூடையில் வீசியெறிந்து, விதிவிலக்குக் கொடுக்க முடியாது என்று ஆணவப் பொறி பறக்க மத்திய அமைச்சர் கூறி யிருப்பது ஆணவமானது – மாநில உரிமையைக் காலில் போட்டு மிதிக்கும் அடாவடித்தனமானதே! அத்துடன் அரசியல் சட்ட மீறலும் ஆகும்; பொதுப் பட்டியல் உரிமை என்பதை மத்திய அரசு அலட்சியம் செய்வது எவ்வகையில் நியாயம் – சட்டப்படி!
நேற்று நடந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் இந்த மிக முக்கிய பிரச்சினை குறித்தும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு இருப்பது, நேற்றைய ஆலோசனைக் கூட்டத்தின் மதிப்பை வெகுவாக மேலும் உயர்த்தக் கூடியதாகும். முழு மதுவிலக்குக் குறித்த தீர்மானமும் இந்தக் காலகட்டத்தில் மிகவும் அவசியமானதே!
தமிழ்நாட்டு மக்களின் உணர்வை வெளிப்படுத்தும் தீர்மானங்கள்!
எந்த வகையில் பார்த்தாலும், நேற்றைய கலந்து ரையாடல் கூட்டம் குறிப்பிடத்தக்கதும், தமிழ்நாட்டு மக்களின், விவசாயிகளின் உணர்வுகளைக் கூர் மழுங்காமல் அப்படியே வெளிப்படுத்தக் கூடியதுமாகும்.
கூட்டத்திற்குத் தலைமை வகித்து நடத்திய தமிழக எதிர்க்கட்சித் தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்கள் செய்தியாளர்களிடம் கூறியதுபோல, அரசி யல் உள்நோக்கத்தோடோ, தேர்தல் கூட்டணிக் கண் ணோட்டத்தோடோ கூட்டப்பட்ட கூட்டமும் அல்ல. அந்த வரிசையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களும் அல்ல.
முழு அடைப்பை வெற்றிபெறச் செய்வோம்!
கருநாடகத்தைப்போல, தமிழ்நாடும் ஒன்றுபட்டு, சுருதி பேதமில்லாமல் நின்றிட, கைகளை இணைத்திட வேண்டிய காலகட்டம் இது!
அனைத்துத் தரப்பினரும் 25 ஆம் தேதி தமிழ்நாடு தழுவிய அளவில் நடத்தப்பட உள்ள முழு அடைப்புப் போராட்டத்தை முழு வெற்றியாக்கித் தருமாறு கேட்டுக்கொள்கிறோம், வலியுறுத்துகிறோம்.
ஒன்றுபடுவோம் – வெற்றி பெறுவோம்!
அதன்மூலம், மாநில – மத்திய அரசுகளின் செயல் பாட்டில் தமிழ்நாட்டின் உரிமைகளுக்கு உத்திரவாதம் கொடுக்கும் வகையில் ஒரு திருப்பத்தை ஏற்படுத்துவோம் – அந்நிலை எட்டப்படும் வரையில் நமது போராட்டங்களும் தொடர்வதைத் தவிர வேறு வழியில்லை.
ஒன்றுபடுவோம் -போராடுவோம் – வெற்றி பெறுவோம்!
கி.வீரமணி
தலைவர், திராவிடர் கழகம்.
சென்னை
17.4.2017
Leave a Reply