வந்தவர் மொழியா..? செந்தமிழ்ச் செல்வமா..?

ஜுன் 1-15,2021

 

 

 

உத்தரவு, உத்திரவு, உத்தாரம்

இவைகள் வடசொற்கள் அல்ல. தூய தமிழ்க் காரணப் பெயர்களே.

உம் என்பது ஆடுமாடு மேய்ப்பவர்களிடம் கேட்கின்றோம். உம் என்பதன் பொருள் என்ன? செல். அதாவது ஓரிடத்தினின்று செல், ஏறு, உயர்வு, கொள் என்பன. ஆடு மாடு பேய்ப்பவர்களிடம் கேட்கப்படுதால் உம் என்பதைப் பற்றி இங்கு நாம் எடுத்துச் சொல்கிறோம் என்பதில்லை. பழங்காலத்தில் மேற்சொன்ன பொருளில் உம் என்பதைத்தான் மேற்கொண்டார்கள் சொற்கள் பொருளாகக் காலமாதலால்.

உம் என்ற பிறகு உந்து எனத் திரிந்தது, திரிந்தாலும் பொருள் மாறாது, மேற்சொல்லிய பொருள்கள் தான்.

உந்து என்பதிலிருந்து உந்தி என்பது தோன்றிற்று. இது வந்து என்பதன் அடியாகப் பிறந்த பெயர்ச்சொல். இதில் இ. பெயர் இறுதியில்லை. பொருள் உந்தப்படுவதாகிய ஆள் கூட்டம்.

மற்றும் உந்து என்பது உயிர்ப்பினை உந்தும் இடமாகிய கொப்பூழ் மற்றும் உந்தி உந்துதலால் பெற்ற இடமாகிய உயர்ச்சியையும் குறித்தது. பிறவும் உண்டு.

உந்து என்பதனடியாகப் பிறந்தது உந்தல். உந்துதல் தொழிற்பெயர்.

இனி,

உந்து – உத்து என வலித்தல் பெற்றது என்ன பொருள் முன் சொன்னதே.

உத்து-உத்தரவு. உந்து-அரவு. அரவு தொழிற்பெயர் இறுதிநிலை பெற்று உத்தரவு ஆயிற்று.

அரவு தொழிற் பெயர் இறுதி நிலையால் வருவதைத் தேற்றிரவு முதலியவற்றை காண்க.

உத்தரவு என்ன பொருள்? ஒருவன் தன் ஆணையை மேற் செல்ல வைப்பது.

உத்தரம்-(உத்து+ஆர்+அம்) இதில் அரவு என்ற இறுதிநிலை அர் எனத் திரிந்து அம் முச்சாரியைப் பெற்றது.

உத்தரவு, உத்தரம், உத்தாரம் இது சார்ந்த பிற பொருளிலும் வரும். ஆயினும் அப் பிற பொருள்களும் மேலே சொல்லிய பொருளுக்கு அப்பாற் சொல்ல மாட்டா.

எனவே, இவை தூய தமிழ்க் காரணப் பெயர்கள் ஆதல் அறிக. இன்னும் உத்து என்பதன் அடியாக உத்தித்தல், உத்துதல் என்றும் என்பனவும் வருவதுண்டு.

(குயில்: குரல்:2, இசை:27, 12-1-1960)

கண்ணியம்

இது கண்யம் என்ற வடசொல்லின் சிதைவென்பர் வடசொற் பற்றாளர். வடசொல் என்ற எண்ணத்தால் எடுத்தாள்வாரும் உளர்.

இஃது தூய தமழ்க் காரணப் பெயர் ஆதலை அவர் அறியார். கண்ணல், கண்ணம், கருதுதல், குறித்தல், மகிழ்தல் என்றும் பொருளுடையவை.

கண்ணம் என்பது கண்ணியம் ஆனது. ஓவம் ஓம் ஆனதபோல என்க.

“கொடிநிலை வள்ளி கந்தழி என்ற வடுநீங்கு சிறப்பின் முதலான மூன்றும் கடவுள் வாழ்த்தொடு கண்ணிய வருமே” என்ற தொல்காப்பிய நூற்பாவிலும் காண்க.

கண்ணியம்-கருதத்தக்கது, மேன்மை ஆதலின் கண்ணியம் தூய தமிழ்க் காரணப்பெயர் என்று கடைப்பிடிக்க.

கவனம்

இது வடசொல் அன்று, கவற்சி_விருப்பம், கவல், விருப்பம் கெடுதலினால் ஆகும் வருத்தம்.

அதனடியாகப் பிறந்ததே கவனம், கவல் கவன் எனத் திரிந்து அம்முச் சாரியை பெற்றதென்க.

கவனம்- _ கருத்து, விருப்பம், கண்காணிப்பு.

எனவே கவனம் தூய தமிழ்க் காரணப் பெயர் ஆதல் அறிக.

(குயில்: குரல்:2, இசை:28, 26-1-1960)

தீந்தா

இது இறகு தொட்டு எழுதுவதற்கான வண்ணநீர். இதை இக்காலத்தார் ஆங்கிலத்தில் இங்க் என்பர். தீந்தா என்னும் இப்பெயர் வடசொல் என்று எண்ணுவாரும் உளர். அன்று, இது தீண்டு என்பதன் திரிபாகத் தீந்தா ஆனது.

தீண்டு-_இறகால் தீண்டப்படுவது, எனவே தீந்தா தமிழ்க் காரணப் பெயர்.

(குயில்: குரல்:2, இசை:38, 31-5-1960)

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *