– கி.தளபதிராஜ்
பெங்களுர்- நாகூர் பாஸஞ்சர் வண்டியைப் பிடிக்க, சின்னசேலம் ரயில்வே ஸ்டேஷனை அடைந்த போது பகல் 2 மணி!. உச்சி வெய்யில் மண்டையைப் பிளந்தது. டிக்கட் எடுக்கும் கவுண்டரில் கூட்டம் நீண்ட வரிசையில் காத்திருந்தது. மயிலாடுதுறைக்குப் போக ஒரு சீட்டு வாங்கிக்கொண்டு, வண்டி வரும் நேரத்தையும், பிளாட்பாரத்தையும் விசாரித்து இரண்டாம் பிளாட்பாரம் செல்வதற்குள் போதும் போதும் என்றாகிவிட்டது.
ரயிலில் பயணம் செய்வது ஒரு சுகம்னா, ரயிலுக்காக காத்திருக்கும் நேரம் கூட ஒரு சுகம் தான். அதிலும், ஆள் அரவமற்றுக் கிடக்கும் சின்ன சின்ன ஸ்டேஷன்களில் அமர்ந்திருப்பது ஒரு தனி சுகம்!. பரந்து விரிந்து சலசலக்கும் ஆலமரங்களும், அந்த சலசலப்பினூடே சின்னஞ்சிறு குருவிகள் எழுப்பும் ஆசை ஓசையும், இலுப்பைப்பூவும், வேப்பம்பழமும் கலந்து தரும் கிராமத்து வாசனையும் …மனசுக்கு எத்தனை சுகம்!
கடிகாரத்தில் இப்போது மணி மூணு ஆகியிருந்தது. வெகுதூரத்தில் ஒலித்த ரயிலின் ஹாரன் சத்தம் கேட்டு வண்டிக்கு வந்தவர்கள் தங்கள் பைகளையும், மூட்டை முடிச்சுகளையும் எடுத்துக்கொண்டு, ரயில் ஏறத் தயாரானார்கள். நான் ஏறி அமர்ந்த பெட்டியிலேயே தன் தோளில் குழந்தையை சுமந்தபடி, கீழே விழாத குறையாக, தட்டுத்தடுமாறி அந்த முதியவரும் ஏறினார். அப்படி ஏறும்போது அவர் கால் பட்டு சிலர் முகம் சுளித்தனர். அவருக்கு முன்பே அவரது கைப்பேசி பாடல் சத்தம் அந்தப் பெட்டியில் நுழைந்தது. ஆனால் அவை இப்போது குத்தாட்டப் பாடல்களாக மாறியிருந்தன.
சிலருக்கு அந்தச் சத்தம் எரிச்சலை உண்டாக்கியிருக்கக் கூடும். அவர் தள்ளாடியதைப் பார்த்த ஒரு பூணூல் ஆசாமி “சரியான போதை கேஸ்” என்று முணுமுணுத்தார். “இங்கெல்லாம் டிக்கெட் பரிசோதகர்கள் வரமாட்டார்களா?” என குரலை உயர்த்தினார் ஒரு நடுத்தர வயதுக்காரர். சில மணித்துளிகள் அவரைப்பற்றி மறைமுகமான கிண்டலும் கேலியும் தொடர்ந்தது. இதற்கிடையே கைப்பேசி அடிக்கடி கைநழுவி விழுவதும், பின் அதைத் துழாவி அவர் எடுப்பதுமான காட்சி தொடர்ந்து கொண்டிருந்தது. அதைக் கவனித்துக்கொண்டிருந்த ஒரு இளைஞர், “பெரியவரே! டிக்கெட் எடுத்தாச்சா?” என்று நக்கலடித்தார்.
அந்த இளைஞரிடம் தன் சட்டைப் பையில் இருந்த ரயில்வே ஊழியர் அடையாள அட்டையைக் காட்டி “ஐ ஆம் ரயில்வே ஸ்டாஃப்” என்று பெரியவர் சீரியஸ்ஸாக சொல்ல, பெட்டியில் மீண்டும் கிண்டல் கலந்த சிரிப்பு !. அதையெல்லாம் அவர் கண்டு கொண்டதாகத் தெரியவில்லை. தன் அருகில் ஒரு துண்டை விரித்து அதில் அந்தக் குழந்தையைப் படுக்க வைக்க முயற்சித்தார். தோளிலிருந்து இறக்கியதும் குழந்தை வீல் என்று கத்த ஆரம்பித்தது. கைப்பேசியில் நின்றுபோயிருந்த பாடலை மீண்டும் ஒலிபரப்பி குழந்தையின் நெஞ்சில் இதமாக தட்டிக் கொடுக்க, குழந்தை தூங்கிப்போனது.
பெரியவர் இப்போது தன் கைப்பையில் இருந்த ஒரு கதைப் புத்தகத்தை எடுத்துப் படிக்கத் தொடங்கினார். அந்த புத்தகத்தின் அட்டையில் மீசையை முறுக்கியபடி ஜெயகாந்தன், எதிரில் அமர்ந்திருப்பவர்களைப் பார்த்து சிரித்துக் கொண்டிருந்தார்.
அவ்வப்போது மாறிக்கொண்டிருந்த அந்தப் பெரியவரது முக பாவனை அவர் கதையில் ஒன்றிப்போயிருந்ததை உணர்த்தியது. சில நேரங்களில் சில வரிகளை பிறர் காதில் விழும்படி அவர் உரக்கப் படித்தார்.
வண்டி விருத்தாசலத்தை அடைந்த போது குழந்தை அயர்ந்து தூங்கிக்கொண்டிருந்தது. புத்தகத்தை சற்று இறக்கி குழந்தையைப் பார்த்த பெரியவர், மேலேயிருந்த “கை”ப்பையை எடுத்து அரவணைப்பாக குழந்தையின் அருகே வைத்துவிட்டு என்னை திரும்பிப்பார்த்தார். பின் வண்டியை விட்டு மெல்ல கீழே இறங்கினார். அந்தப்பார்வை நான் வரும்வரை என் குழந்தையை பார்த்துக்கொள் என்று என்னிடம் சொல்வது போல் இருந்தது.
வண்டி விருத்தாசலத்தில் இருபது நிமிடமாவது நிற்கும். இஞ்சினைக் கழற்றி பின் பகுதிக்கு மாற்ற வேண்டும். வெளியே சத்தமாக இருந்தது. சிலர் ‘கார்டி’ டம் ஆவேசமாக சண்டைபோட்டதை ஜன்னல் வழியாகப் பார்க்க முடிந்தது. “கக்கூஸில் தண்ணி வரலை. எவ்வளவு நேரம் அடக்கிக் கிட்டு இருக்கிறது?” என்று கத்தினார் ஒருவர். “தண்ணி பிடிக்காம வண்டிய எடுக்கக்கூடாது”. எங்கிருந்தோ ஒரு குரல் ஓங்கி ஒலித்தது.
வழக்கமா இந்த வண்டியில் பயணம் செய்பவர்களுக்கு இந்தக் காட்சி புதிதில்லை. பல முறை நானும் தண்ணி இல்லாமல் அவஸ்தைப்பட்டு, விருத்தாசலத்தில் தண்ணி ஏத்தச் சொல்லியிருக்கிறேன். இப்போது கூட அவர்களோடு சேர்ந்து அந்த முறையீட்டில் கலந்து கொள்ள ஆசைதான். பெரியவர் தனியாக விட்டுச்சென்ற சிசு இருக்கையில் இருந்து புரண்டு கீழே விழுந்து விடுமோ என்கிற பயம் என்னை தடுத்தது. வெளியே அதிகரித்த கூச்சலில் குழந்தை விழிக்கவும், குழந்தைக்கு வாங்கிய பாலை தளும்பாமல் ஒரு கையில் ஏந்தியபடி பெரியவர் தட்டுத்தடுமாறி பெட்டியில் நுழையவும் சரியாக இருந்தது.
அழுத குழந்தையைத் தூக்கி மடியில் போட்டுக்கொண்டார். பால் சூடாக இருந்தது. ஒரு கையால் ஸ்பூனில் பாலை எடுத்து ஊதி ஊதி அவசர அவசரமாக ஊட்ட ஆரம்பித்தார். முதியவரின் கை நடுக்கத்தில் பால் பெரும்பாலும் கடை வாயில் வழிந்தோடியது. பாதி குடிக்கும்போதே குழந்தை மீண்டும் தூங்க ஆரம்பித்தது. தோளில் கிடந்த துண்டை எடுத்து, அருகில் இருந்த வாஷ்பேசினில் நனைத்து, குழந்தையின் முகத்திலும் கழுத்திலும் வழிந்தோடிய பாலை மெல்ல துடைத்து பின் பழையபடியே இருக்கையில் படுக்க வைத்தார். குழந்தை தூங்கிவிட்டதை மீண்டும் உறுதிப்படுத்திகொண்டு, மறுபடியும் புத்தகத்தை கையில் எடுத்து, கதையை விட்ட இடத்தில் தொடர்ந்தார்.
அவர் இப்போது படிக்கும் கதை அவருக்கு மிகவும் பிடித்துவிட்டது போலும்; அல்லது அவரது வாழ்க்கையில் ஏதோ ஒரு வகையில் அந்தக் கதை சம்பந்தப்பட்டிருக்க வேண்டும்!. முன்பை விட அடிக்கடி வார்த்தைகளை ரசித்து ஏற்ற இறக்கத்தோடு உரக்கப் படித்தார். அவர் உச்சரித்த வரிகளிலிருந்து அது என்ன கதை என்பதைப் புரிந்து கொள்ள முடிந்தது.
“என்ன பெரியவரே! ஜெயகாந்தன் கதையா? பகல் நேர பாசஞ்சர் வண்டியா?” என்றேன். என்னை ஒரு கனம் ஏறிட்டுப் பார்த்து ஒரு மெல்லிய புன்னகையை உதிர்த்தார்.
சின்ன வயசுல அந்த கதையை நானும்படிச்சுருக்கேன். எவ்வளவு அழகா எழுதியிருப்பார். நம்ம மாதிரி ரயில்ல போயிட்டிருந்த ஒரு மிலிட்டரி காரன்கிட்ட …அதான்… அவன் பேருகூட… அம்மாசின்னு நினைக்கிறேன்!. பசிக்கொடுமை தாங்காமல் தன் கைக்குழந்தையை அந்த மிலிட்டரிக் காரன் கிட்ட கொடுத்துட்டு ஒரு பொண்ணு செத்துப்போவாளே! அந்தக் கதை தானே? படிச்சுருக்கேன். ஜெயகாந்தன் கதைன்னா நானும் ஒரு நேரத்துல தேடித்தேடி படிப்பேன்.
“ஆமாம்!.. ஒங்க பேரு என்னா? குழந்தை ஒங்க பேத்தியா?”
“என் பேரையா கேக்குறீங்க? என் பேரு இராவணன். இந்த கதையில் வர்ற மாதிரி இதுவும் ஒரு அனாதைதான். யாரு பெத்தப் பிள்ளையோ? போன வாரம் இதே வண்டியில ஏறுனப்ப தனியா கிடந்துச்சு. நமக்குத்தான் புள்ள குட்டி எதுவும் இல்லையேன்னு அணைச்சுக்கிட்டேன்”.
பெரியவரின் கண்கள் மீண்டும் புத்தகத்தில் புதைந்தது. அமைதியாகக் கடந்த சில மணித்துளிகளுக்குப் பிறகு அந்தக் கதையின் சில வரிகளை அவர் உரக்கப் படிக்கத் தொடங்கினார்.
இன்று சரியான நேரத்திலேயே அந்த பாசஞ்சர் வண்டி வந்து நின்றது. தலையும் உடம்பும் ஆட்டம் கண்டு விட்ட அம்மாசி, குழந்தையோடு தனது பைச் சுமையையும் ஒன்றாய் எடுத்துச் செல்ல முடியாமல் முதலில் குழந்தையை ஜன்னல் வழியாக ஒரு அம்மாளிடம் கொடுத்துவிட்டு பையைத் தூக்கிக் கொண்டு உள்ளே சென்றான்.
வண்டியில் இருந்தவர்கள் எல்லாரும் குழந்தையையும் கிழவனையும் மாறி மாறிப் பார்த்தனர். ‘இந்தக் கிழவனுக்கு இவ்வளவு அழகான குழந்தை என்ன உறவு’ என்று நினைத்தார்களோ?
பொண்ணு மகளா, பேத்தியா? என்று விசாரித்தாள் சன்னல் வழியாகக் குழந்தையை வாங்கிய அந்த அம்மாள்.
பிள்ளையே பெறாத அம்மாசி ஒன்றும் யோசிக்காமல் உடனே பேத்தி! என்று பதில் சொன்னான்.
குழந்தையின் கன்னத்தில் செல்லமாய்த் தட்டியவாறே மீண்டும் அந்த அம்மாள் என்ன பேரு? என்று வினவினாள்.
பாப்பாத்தி!
பொருத்தமான பேருதான்! என்று சிலாகித்தாள் அந்த அம்மாள்.
பெரியவர் இப்போது கதையை மேற்கொண்டு படிப்பதை நிறுத்தினார்.
நான் அவரையே உற்றுப் பார்த்துக்-கொண்டிருக்கிறேன். ஒரு நிமிடம் புத்தகத்தை மூடிவிட்டு என்னை ஏறிட்டு பார்க்கிறார்.
“தம்பி என் பேத்திக்கு நான் ‘பாப்பாத்தி’ ன்னு பேரு வைக்க மாட்டேன்!
நாளைக்கு எவனாவது “‘இராவணன்’ குடும்பத்துல ‘பாப்பாத்தி’ ன்னு பேரு இருக்கு. அதனால ‘பாப்பாத்தி’ங்கிற பேரு ‘திராவிடர்’களைக் குறிக்கும் சொல்!”லுன்னு சொன்னாலும் சொல்லுவான்!” என்ன தம்பி நான் சொல்றது சரிதானே? எனக் கேட்டு கலகலவெனச் சிரித்தார்.
குறிப்பு: பார்ப்பனர் (பாங்கர்) தொழிலை ஆரியர் அபகரித்ததால், பார்ப்பனர் என்பது இனப் பெயராய் மாறிற்று என்பார் பாவாணர். திராவிடப் பகுதியில் வாழ்ந்ததால் திராவிட் என்ற பெயர் ஆரியப்பார்ப்பனர்க்கு வந்தது என்பதை அறியாத அரை வேக்காடுகளுக்கு உணர்த்தவே இக்கதை.