ஆர்.எஸ்.எஸ். பின்னணியில் ஈஷா மய்யம்

ஜுன் 1-15,2021

அடுக்கடுக்காய் மோசடிகள் அம்பலம் ! ஒர் ஆதாரபூர்வ அலசல்!

பெரியார் செய்த பெரும்புரட்சியின் விளைவாக தமிழ்நாட்டில் மட்டும் இந்துத்வா பேர்வழிகள் காலூன்ற முடியவில்லை.

இந்த நிலையை மாற்றியே ஆகவேண்டும் என்று இந்துமத ஆதிக்க வெறிகொண்ட ஆர்.எஸ்.எஸ் பல்வேறு வகைகளில் முயன்று வருகிறது. இதன் காரணமாகவே கடந்த பத்துப் பதினைந்து ஆண்டுகளாக மிகுந்த பொருட்செலவுகளுடன், விளம்பரங்களுடன் தமிழகத்தில் உருவாக்கியிருக்கின்ற வடமாநில தோற்றம் மற்றும் கலச்சாரம் கொண்ட பல கோயில்கள்! குறிப்பாக வந்தவாசி அருகே தென்னாங்கூர் மற்றும் வேலூர் தங்கக்கோயில் போன்றவை.

 

இந்த வேலைத்திட்டத்தின் தொடர்ச்சிதான் ஈஷா யோக மய்யம் என்பதும். இதன் நிறுவனர் ஜக்கி வாசுதேவ். யார் இந்த ஜக்கி வாசுதேவ்?

தப்பும் தவறுமாகத் தமிழ் பேசி, பல அறிஞர்கள் கூறியதை தனது ஞானத்தில் உதித்ததுபோல் பேசிக்கொண்டு உலகை ஏமாற்றி வருபவர்.

40 ஆண்டுகளுக்கு முன்பு கோவை மாநகரத்தில் அமைந்துள்ள ப்ரூபாண்ட் ரோடு மேம்பாலம் கீழ்ப்புறத்தில் குதிரை வண்டி நிறுத்துமிடமாக பயன்பாட்டில் இருந்த இடத்தில், சில சமூக விரோதிகளுக்கு இவர் கஞ்சா வியாபாரம் செய்ததாகவும், இவருக்கு ரிச்சர்ட் என்ற பிரபல ரவுடி வியாபாரத்தில் உதவியதாகவும், இவர்கள் இருவருக்கும் ஒரு பெண்ணுடன் தொடர்பு இருந்ததாகவும் கூறப்படுகிறது.

இவர்களுக்கிடையே ஏற்பட்ட பகையால் பிரிந்து விட்டார்கள் என்றும், அந்தப் பெண்ணின் நிலை என்ன ஆனது என்று இதுவரை தெரியவில்லை என்றும், சில நாள்களில் ரவுடி ரிச்சர்ட்டும் கொலை செய்யப்பட்டதாகவும் கூறுகிறார்கள். அதேபோல ஜக்கியின் மனைவியை இவரே கொலை செய்து விட்டார் என்று வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளபோது, பல ஆண்டுகளுக்கு முன்பே மத்திய புலனாய்வுத் துறை மூலமாக தேடப்படும் குற்றவாளி என்று இவர் அறிவிக்கப்பட்டதாகவும் தெரிய வருகிறது.

இந்த ஜக்கி வாசுதேவ் கோவை மாநகரில், மாநகராட்சிக்குச் சொந்தமான வ.உ.சி. மைதானத்தில் கடந்த 13.12.2011 அன்று ஆனந்த அலை மகா சத்சங் நிகழ்ச்சியில் ஜக்கி வாசுதேவ் கலந்து கொள்ள வரவிருப்பதாகவும், இது குறித்து கோவை வெஸ்ட் பிரஸ் வளாகத்தில் அன்று மாலை 5.30 மணியளவில் அனைத்து பத்திரிகையாளர்களையும் நேரில் சந்தித்து விளக்கமளிக்க இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.

பதில் கூற முடியாமல் பத்திரிகையாளரைத் தாக்கினார்.

சுமார் 25 பத்திரிகையாளர்கள் கலந்து கொண்ட அந்தச் சந்திப்பில் மாதம் இரு முறை வெளிவரும் ஆயுதம் இதழின் செய்தியாளராகப் பணியாற்றி வந்த மூத்த பத்திரிகையாளர் எஸ். பூபதி கண்ணன் என்பவர், ஜக்கியைப் பார்த்துக் கீழ் வரும் கேள்விகளை சரமாரியாக கேட்டார்.

1. உங்கள் யோகா மய்யத்தில் வெளிநாட்டில் தேடப்பட்டு வரும் குற்றவாளிகளுக்கு அடைக்கலம் கொடுத்துள்ளதாகக் கூறப்படுகிறதே அது  உண்மையா?

2. மேலும் யோகா மய்யத்திற்குள்ளும் உங்கள் வளாகத்தைச் சுற்றி உள்ள ஒரு சில இடங்களிலும் வெளிப்புற மரங்களிலும் இரகசிய கேமிரா பொருத்தப்பட்டு கண்காணிக்கப் படுவதாகவும் கூறப்படுகிறதே உண்மையா?

3. உங்கள் பெயரை- ஜாவா வாசுதேவ் என்பதை எப்போது ஜக்கி வாசுதேவாக மாற்றிக் கொண்டீர்கள்? இதுவும் உண்மையா?

4. மேலும் 1970ஆம் ஆண்டு கோவை அவிநாசி ரோடு மேம்பாலத்தின் கீழ் கஞ்சா விற்றதாக கோவை காட்டூர் பி3 காவல் நிலையத்தில் வழக்கு உள்ளதாக கூறப்படுகிறது உண்மையா? என்று அடுக்கடுக்கான கேள்விகளால் துளைத்தார்.

ஜக்கியின் முகம் மாறியது; கேட்ட கேள்விக்கு பதில் அளிக்காமல் உடனே ஜக்கி செய்தியாளரைப் பார்த்து, “உனக்கு மனநிலை பாதிக்கப்ப்டடதுபோல உள்ளது. அதனால்தான் கேள்விகளை இப்படி கேட்கிறாய்’’ என்று கூற, சக பத்திரிகையாளர்கள் அதிர்ச்சியடைய  மீண்டும் ஜக்கியின் மனைவியின் சாவில் இருக்கும் கேள்விகளைக் கேட்டபோது, அருகில் இருந்த அவருடைய சீடர்களிடம் மௌனமாக ஜாடை காட்ட, 4 குண்டர்கள் செய்தியாளரை வெளியே தூக்கிக் கொண்டு வந்து ஒருவர் அவருடைய வலது கையை முறுக்கிக் கொண்டும், இன்னொருவர் அவருடைய பாக்கெட்டிற்குள் கையைவிட்டு பத்திரிகையில் இவர் பணிபுரியும் அடையாள அட்டையைப் பறித்துக் கொண்டும் மற்றும் 2 பேர் தோள் பட்டை யில் சரமாரியாக தாக்கினார்கள். வலி தாங்க முடியாமல் கத்தியபோது, சக பத்திரிகையாளர்கள் வந்து பார்த்தவுடன் தாக்குதலை நிறுத்திக் கொண்டார்கள்.

பத்திரிகையாளர் சங்கம் கண்டனம் காவல் நிலையத்தில் புகார்

இது சம்பந்தமாக அன்று இரவே தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கத்தின் மாநிலத் தலைவர் ஜே.பி.ஆர். மற்றும் சக நிர்வாகிகளுக்கும் தெரியப்படுத்தி மறுநாள் (14.2.2011) அன்று காலை சுமார் 100க்கும் மேற்பட்ட நிருபர்கள் ஈஷா மய்யம் ஜக்கி மீது புகார் கொடுத்தனர்.

புகாரைப் பெற்றுக் கொண்ட கோவை மாநகர காவல்துறை ஆணையர் சைலேந்திரபாபு சம்பந்தப்பட்டவர்கள் மீது விசாரணை செய்து உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார். இதன் அடிப்படையில் அருகிலுள்ள பந்தைய சாலை பி4 காவல் நிலையத்தில் கொடுக்கப்பட்ட புகாருக்கு காவல்நிலைய ஆய்வாளர் நகல் பிரதியை வழங்கினார். நகலின் பதிவு எண்.433/1808. ஆனால், இன்று வரை கிணற்றில் போட்ட கல்லுபோல் விசாரணை நன்றாக உறங்கிக் கொண்டிருக்கிறது.

வழக்கறிஞர் அளித்த புகார்

அதேபோல 2006 ஆம் ஆண்டு கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த வழக்குரைஞர் இவர் மீது புகார் கொடுத்தும், நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டும் பயனில்லை. வழக்குரைஞர் மனைவியையும், மகளையும் இழந்ததுதான் மிச்சம்.  இதுபோல பல மாவட்டங்களிலிருந்து வந்த 18 வயதிற்குட்பட்ட பெண்களை இவர்  யோகாசனம் என்கிற மூளைச் சலவை செய்து தன்வசப்படுத்திக் கொண்டார் என்றும் குற்றச்சாட்டு உள்ளது.

ஆர்.எஸ்.எஸ். பின்னணி

இப்படிப்பட்ட ஒரு சமூகவிரோதியைக் கொண்டு, தனது பணமூட்டையை விரித்துக்கொட்டி, தென்தமிழகத்தின் கோவையின் அடர்ந்த வனப்பிரதேசமான வெள்ளியங்கிரி மலையில், எழில் மிகு இடங்களில் ஒன்றாகிய அடர்ந்த வனக்காடுகளும் வற்றா நீர்வீழ்ச்சிகளும், மின்மினிப்பூச்சிகளுக்கும் வனவிலங்குகளுக்கும் உறைவிடமான வெள்ளியங்கிரி மலையடிவாரத்தில் ஈஷாயோக மய்யம் என்ற பெயரில் தமிழக மக்களை மூளைச்சலவை செய்யும் மய்யத்தை உருவாக்கியது ஆர்.எஸ்.எஸ்.

ஆக்கிரமிப்புகள்

தியான லிங்கக்கோயில், ஈஷா புத்துணர்வு மய்யம், ஈஷா இல்லப்பள்ளி மற்றும் குடியிருப்புகள் என்று இவர் வளைத்துப்போட்டது 150 ஏக்கருக்கும் மேல். இங்கு பணியாற்றுவோர் பெரும்பகுதி, யாரும் நேராகவே பார்க்கமாட்டார்கள். எதையோ பரிகொடுத்தது போன்றே பார்வை இருக்கும். விழிகள் வானத்தில் சஞ்சரிக்கும். அந்த அளவுக்கு மூளைச்சலவை செய்யப்ப ட்டிருக்கிறார்கள்.    அங்கு கொடுக்கப்படும் தியானம், சிகிச்சைகள், மூலிகைக்குளியல், எண்ணெய் மசாஜ் இன்னபிற சேவைகளுக்கான கட்டணங்கள் வழிப்பறி போன்ற கொள்ளைக் கட்டணங்கள்தான் !

இது தொடர்பாக நான்கு பொது நல வழக்குகள் தொடரப்பட்டும், அரசு ஈஷா மய்யங்களின் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் அமைதி காக்கிறது.

ஈஷா மய்யத்தின் உள்ளே நுழையும் முன்,  செல்போன் உள்ளிட்ட அனைத்து உபகரணங்களையும் வாங்கி வைத்துக் கொள்கிறார்கள். புகைப்படம் எடுக்க அனுமதி கிடையாது. ஒவ்வொரு நூறு மீட்டரிலும் சோதனை.

உள்ளே சென்றால், கண்ணை மூடிக்கொண்டு மொட்டை அடித்துக் கொண்டு, ஆழ்ந்த தியானத்தில் பல இடங்களில் அமர்ந்திருப்பார்கள். பாதாள அறை போல இருக்கும் ஒரு அறைக்குள் லிங்கம் ஒன்று அமைக்கப்பட்டிருக்கும். அந்த லிங்கத்தை தியானலிங்கம் என்று கூறுகிறார்கள். அந்த தியானலிங்கத்தை சுற்றி பலர் அமர்ந்து தியானம் செய்து கொண்டிருப்பார்கள்.

உடல்நலம் கெடுக்கும் மெர்க்குரி பயன்பாடு

மெர்குரி என்பது ஒரு விஷப்பொருள்.   சுற்றுச்சூழலுக்கு பெரும் ஆபத்தானது. மெர்குரியை சுவாசித்தாலோ, வாய் மூலம் உட்கொண்டாலோ, மூளை பாதிக்கப்படும் என்கிறது, அய்க்கிய நாடுகளின் சுற்றுச் சூழல் அமைப்பு. அறையின் தட்பவெட்பத்தில் அறைக்குள் இருக்கும் மெர்குரி சிறிய அளவே வெப்பம் உயர்ந்தாலும் ஆவியாகிவிடும். மிக எளிதாக மனித உடலில் நுழைந்து விடும்.   மெர்குரி எவ்விதமான மணமும் இல்லாத காரணத்தால், மெர்குரியை சுவாசிக்கிறோம் என்பதே ஒருவருக்கு தெரியாது. கனடாவைச் சேர்ந்த கால்கரி பல்கலைக்கழகம் மெர்குரி எந்த வகையில் மூளையை பாதிக்கும் என்பதை ஆராய்ந்து அறிக்கை வெளியிட்டுள்ளது.

இத்தகைய கடுமையான சுற்றுச்சூழல் பாதிப்பை ஏற்படுத்தும் மெர்குரியால் ஒரு சிலையை உருவாக்கியிருக்கிறார் ஜக்கி.

இத்தகைய கடும் பாதிப்பை ஏற்படுத்தும் மெர்குரியால் செய்யப்பட்ட லிங்கம் அடங்கிய குளத்தில் குளித்தால், தீராத வினையெல்லாம் தீரும் என்று அறிவிக்கிறார் ஜக்கி. ஆனால், இல்லாத வினையெல்லாம் வரும் என்பதே உண்மை!

மெர்குரியோடு நெருங்குவது ஆண்மைக் குறைவை ஏற்படுத்தும் என்று மத்திய அரசின் மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் அறிக்கையே தெரிவிக்கிறது.

எல்லாம் வணிகம் கொள்ளை இலாபம்

கோவையில் உள்ள ஈஷா மய்யத்தில் நுழைந்தால், அங்கே ஜக்கியின் படங்கள், அவர் படம் பொறித்த பனியன்கள், வேட்டிகள், மாலைகள், நகைகள், லிங்கங்கள் உள்ளிட்ட ஏராளமானவை விற்பனை செய்யப்படும். இது ஒரு புறம் என்றால், மறுபுறம், பிஸ்கட், மூலிகை தேயிலை, ஊறுகாய் என்று உணவுப் பொருட்கள் ஒரு புறம் விற்பனை செய்யப்படும்.    விலையைக் கேட்டால் ஆயிரக்கணக்கில் சொல்வார்கள். இது போக உத்திராட்ச மாலை, ஸ்படிக லிங்கம் என்று பல்வேறு பொருட்கள் ஒரே நேரத்தில் விற்பனை செய்யப்படுகின்றன.

சிறுநீரகத் திருட்டு:

ஜக்கி வாசுதேவின் ஈஷா யோகா மய்யத்தில் போதைப் பொருள், வசிய மருந்து பயன்படுத்தி 5,000 குழந்தைகளை கோமா நிலைக்குத் தள்ளி கிட்னி திருடப் போகிறார்கள் என்று அந்த மய்யத்தில் சிக்கிய 2 இளம்பெண்களின் தாய் சத்யஜோதி திடுக்கிடும் தகவலை வெளியிட்டுள்ளார்.

உயர் பணியிலிருந்த இளைஞர்களை உருக்குலைத்த கொடுமை!

கோவையைச் சேர்ந்த பேராசிரியர் காமராஜின் 2 மகள்கள் பி.டெக்., எம்.டெக்., படிப்பு முடித்தவர்கள். இருவரும் ஈஷா யோகா மய்யத்தில் அடிமைகளாக இருப்பதாக நேற்று ஆட்சியரிடம் பேராசிரியர் காமராஜும் அவரது மனைவி சத்யஜோதியும் கூறியிருந்தனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் சத்யஜோதி கூறியதாவது:

என் மகள்களைப் பார்க்க வாரம் ஒருமுறை ஈஷா யோகா மய்யத்துக்குப் போய்க் கொண்டிருந்தேன். என் சின்ன மகள் என்னைப் பார்க்க வருவது இல்லை. அவளைப் பொறுத்தவரையில் அம்மா, அப்பாவிடம் கை சோறு இனி சாப்பிடப் போவதில்லை. ஈஷா யோகா மய்யத்திலேயே செத்துவிட்டால் மோட்சம் கிடைக்கும் என சொல்லியிருப்பதை நம்புகிறாள். எங்களிடம் வந்தால் நரகமாம்.

நீங்கள் மொட்டையடித்துவிட்டால் அம்மா, அப்பா கல்யாணம் செய்ய வற்புறுத்த மாட்டார்கள் எனக் கட்டாயப்படுத்தி மொட்டையடித்துவிட்டார்கள். என் மகள் 40 பவுன் கொண்டு போயிருந்தாள். அதை அப்படியே ஈஷா யோகா மய்யத்தில் கொடுத்துவிட்டு சாமியார்களாகிவிட்டார்கள் என் 2 மகள்களும்.
ஈஷா யோகா மய்யத்தில் காலை 7 மணிக்குள்ளும் இரவு 7 மணிக்குள்ளும் சாப்பிட்டாக வேண்டும். மொட்டை அடித்தவர்களுக்கு தனியே ஒரு சாப்பாடு. மற்றவர்களுக்கு வசிய சாப்பாடு தனியாக கொடுக்கிறார்கள்.

ஈஷா என்கிற யோகா மய்யமே இருக்கக் கூடாது. ஈஷா யோகா மய்யத்தில் 5,000 குழந்தைகளுக்கான காப்பகம் உள்ளது. அந்த 5,000 குழந்தைகளைக் காப்பாற்றியாக வேண்டும். என் பிள்ளைகளைவிட 5,000 குழந்தைகள்தான் முக்கியம்.

இல்லையெனில், 5,000 குழந்தைகளுமே நடைபிணமாய் கோமாவுக்குப் போய்விடும். அப்படி கோமாவுக்குப் போகும் பிள்ளைகளின் கிட்னிகளைத் திருடி விற்கிறார்கள். அங்கு கிட்னி திருடி விற்பனை செய்வது சர்வ சாதாரணமாக நடைபெறுகிறது.

ஈஷா யோகா மய்யத்தில் பயன்படுத்தப்படும் ஊதுபத்தியில் போதைப் பொருள் கலந்திருக்கிறது. தலையில் தேய்க்கும் எண்ணெய் உட்பட அவர்கள் தரும் பொருட்களைத்தான் பயன்படுத்த வேண்டும் என்ற கட்டாயம் உள்ளது.

சிவராத்திரி நாளில் 30 கி.மீ. தொலைவு அலைந்து திரிவதற்காக “ஊக்க மருந்து’’ தருகிறார்கள். என் மகள்கள் வெளியே வந்துவிட்டால் ஈஷா யோகா மய்யம் தொடர்பான அனைத்து உண்மைகளும் வந்துவிடும் என்பதால் அவர்களைவிட மறுக்கிறது ஈஷா மய்யம்.  இவ்வாறு சத்யஜோதி கூறினார்.

ஜக்கி வாசுதேவ் வெள்ளியங்கிரி மலை மற்றும் சுற்று வட்டாரம் அனைத்தையும் நாசப்-படுத்துகிறார். மழை மிகுதியாக உள்ள இடத்தில் ஆஸ்ரமம் (மாளிகை) கட்டுவானேன். மழை குறைவான இடத்தில் தனது ஆஸ்ரமத்தை நிறுவி பக்கத்தில் இருக்கும் கிராமத்திற்கு மழை நீர் சேகரித்து, காடுகள் வளர்த்து நன்மை செய்யலாமே. அதை விட்டு வளம் கொழிக்கும் வெள்ளியங்கிரி மலை அருகில் சொகுசான வாழ்க்கை அமைத்து, சுற்றி இருக்கும் விவசாய நிலங்களை எல்லாம் விலை நிலங்களாக்கி, யானை வரும் பாதை எல்லாம் தடை செய்து, ஏதோ வெள்ளியங்கிரி மலையை இவர்தான் உருவாக்கியவர்போல் நம்பவைத்துக் கொண்டிருக்கிறார். படித்த முட்டாள்கள் ஈஷாவிற்கு அடிமைகளாக உள்ளார்கள். ஈஷாவிற்கு செலவு செய்வதை விட்டு ஒவ்வொருவரும் விவசாயம் செய்தால் கிடைக்கும் பெரும் முக்தி.

ஊருக்கெல்லாம் பிரம்மச்சர்யத்தை உபதேசம் செய்யும், ஜக்கி வாசுதேவால், தன்னுடைய சொந்த மகளுக்கு பிரம்மச்சர்யத்தின் தாத்பர்யங்களை கடைபிடிக்கும்படி அவரை நம்பவைக்க முடியவில்லை என்பது குறிப்பிடத்தகுந்த செய்தியாகும்!

பேராசிரியர் காமராஜ் அவர்கள், உண்மை ஆசிரியரும், திராவிடர் கழகத் தலைவருமான தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்களுக்கு  கைப்பட எழுதிய 02.08.2016 தேதியிட்டக் கடிதத்தில்,

“அய்யா, நான் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 36 ஆண்டுகள் பணிபுரிந்து ஓய்வு பெற்று, எனது மனைவி திருமதி. சத்தியஜோதி தலைமையில் இயங்கும் இந்த தொண்டு நிறுவனத்தில் சேர்ந்து சமூகப் பணி ஆற்றி வருகிறேன். எனது இரண்டு மகள்களும் (கீதா மற்றும் லதா) தற்பொழுது கோவையிலுள்ள ஈஷா யோகா மய்யத்தில் சிக்கி அவர்களை வெளிக்கொணர முயற்சிகள் மேற்கொண்டு வருகிறேன். இது சம்பந்தமாக மாவட்ட ஆட்சித்தலைவர் மற்றும் காவல்-துறைக்கு கொடுக்கப்பட்டுள்ள மனுக்களின் நகல்களை இணைத்து அனுப்பியுள்ளேன். ஈஷா யோகா நிறுவனத்தை எதிர்த்து மாபெரும் போராட்டம் நடத்த ஏற்பாடு செய்து-கொண்டிருக்கிறோம். இதில் தாங்களும் தங்களால் இயன்ற ஒத்துழைப்பை வழங்கி போராட்டம் வெற்றிபெற ஆதரவு தருமாறு கேட்டுக்கொள்கிறோம்.

இப்படிக்கு,
தேதி: 02.08.2016         சௌ.காமராஜ்

அவர், மாவட்ட ஆட்சியர், காவல்துறையினருக்குக் கொடுத்த புகார் கடிதங்கள் நகல்கள் இதோ:

வனத்துறைக்கு உரிய இடங்களை ஆக்கிரமித்து அனுமதியில்லாது கட்டடம் கட்டியுள்ளது பற்றி வன அலுவலர் புகார் கடித நகல்:

“நான் ஈஷாவில் கடந்த 2005இல் யோகா வகுப்புக்குப் போனேன். பின்னர், ஈஷாவோட மக்கள் தொடர்புக் குழுவில் பொள்ளாச்சி ஒருங்கிணைப்பாளராகப் பணியாற்றினேன். பொள்ளாச்சியில் மரம் நடுவிழா என்ற பெயரில், அந்தச் சின்னஞ்சிறு ஊரில் மட்டும் 15 லட்ச ரூபாய் வசூலித்துக் கொடுத்தேன். ஆனால், மரம் நடவே இல்லை. அதேபோல் ‘மகா சத்சங்கம்’ எனச் சொல்லி தமிழகத்தில் 18 ஊர்களில் நிகழ்ச்சிகள் நடந்தன. மகா சத்சங்கம் பெயரில் ஒரு சில மாதங்களில் 4 கோடி ரூபாய் வரை வசூலித்தனர். எதற்காக வசூலித்தோமோ, அதற்கு அதனைப் பயன்படுத்தவில்லை. இதுபோன்ற விரும்பத்தகாத பல நிகழ்வுகளால், மன வருத்தமாகி 2012இல் ஈஷாவைவிட்டு வெளியேறினேன். அங்கு வருபவர்களைத் திட்டமிட்டே பிரம்மச்சர்யப் பாதைக்குத் திருப்புகிறார்கள். யாரிடம் வேலை வாங்கலாம். யாரை பிரம்மச்சர்யப் பாதைக்கு இழுக்கலாம் என்பது திட்டமிடப்படும். ஒருமுறை வகுப்பு முடிந்த உடன் என்னிடம், ஒரு சிறுவன் பெயரைச்சொல்லி, ‘அவனைப் இழுத்திடலாமா?’ என சுவாமி ஒருவர் கேட்டார். ‘குடும்பத்துக்கு ஒரே பையன் சாமி. அவன், வேண்டாம்’ என்றேன். ‘நானும் ஒத்தப்பையன்தான்’ என அவர் சொன்னார். இதெல்லாம் எனக்கு மிக உறுத்தலாக இருந்தது. ஈஷாவில் இருக்கும் சுவாமிகள், ஆசிரியர்கள், முழு நேரத் தன்னார்வலர்கள் எனப் பெரும்பாலோனோர் மன அழுத்தத்துக்கு ஆளாகி, சிகிச்சை எடுத்துக் கொள்கிறார்கள்’’ என்று சொன்னார்.

ஈஷாவில் உள்ள பள்ளி, சித்ரவதைக்-கூடமாக செயல்படுவதாக மதுரையைச் சேர்ந்த ஓய்வுபெற்ற காவலர் மகேந்திரன் கூறுகிறார். அவரிடம் நாம் பேசினோம். “எனது மூத்த மகனை ரூ.5.20 லட்சம் செலுத்தி 2012ஆம் ஆண்டு ஈஷா பள்ளியில் சேர்த்தேன். 2014இல் எனது இளைய மகனை ஏழு லட்ச ரூபாய் செலுத்தி அதே பள்ளியில் சேர்த்தேன். ஒரு நாள் ஈஷாவில் இருந்து எனக்கு போன் வந்தது. ‘உங்கள் இளைய மகனின் நடவடிக்கை சரியில்லை. அவனுக்கு அதிக கோபம் வருகிறது. படிப்பு ஏறவில்லை. உடனடியாக மருத்துவரிடம் அழைத்துச் செல்லுங்கள்’ என்று சொன்னார்கள். எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. குழந்தைகள் மனநல மருத்துவர்கிட்ட கவுன்சலிங் கொடுத்தோம். கவுன்சலிங் முடிந்த உடனே, ‘உங்க  குழந்தைகளை ஈஷா ஸ்கூல்ல இருந்து கூட்டிட்டு போயிடுங்க’ என்று மட்டும் மருத்துவர் சொன்னார். காரணத்தைச் சொல்ல மறுத்துவிட்டார். அதற்குப் பிறகு, மதுரையில் வேறொரு ஸ்கூலில் சேர்த்துவிட்டேன்’’.

மகேந்திரன் மகன், “சின்னத் தப்புச் செஞ்சாக்கூட ‘சேவா’ என்கிற பெயரில் தண்டனை கொடுப்பாங்க. தண்டனைக்-குள்ளான பசங்க, மத்த பசங்கனு பிரிச்சி வெச்சிருப்பாங்க. தண்டனைக்கு உள்ளான பசங்களுக்கு உப்பில்லாத சாப்பாடும், மத்தவங்களுக்கு நல்ல சாப்பாடும் போடுவாங்க. சேவா தண்டனைங்கறது கழிவறையைச் சுத்தம் செய்வது, மாட்டுச்சாணம் அள்ளவைப்பது, மய்யத்தில் உள்ளவர்களின் துணிகளைத் துவைத்துத் தருவது, வெளிநாட்டவர் தங்கியுள்ள அறைகளைச் சுத்தம் செய்ய வைப்பது எனப் போகும். இதுபோக தினமும் 100 தோப்புக் கரணங்களில் இருந்து 500 தோப்புக்கரணங்கள் வரை போடணும். இந்த மாதிரி நிறைய சித்ரவதைகள் ஸ்கூல்ல கொடுத்திருக்காங்க. வீட்டுக்கு லெட்டர்ல இதையெல்லாம் எழுத முடியாது. லெட்டரைக்கூட இவங்க பாத்துட்டுதான் அனுப்புவாங்க’’ என்றார் அச்சத்தோடு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *