- நீதிமன்றத் தீர்ப்பை சட்டத்தின் வாயிலாக சந்திக்காமல் நாகரிகமற்றமுறையில்வசைபாடுவது, வன்முறைகளில் ஈடுபடுவது சரிதானா?
- தாடி வளர்த்தால் தண்டனைதான் ரத்தாகுமா?
கொக்குத் தலையில் வெண்ணெய் வைத்துப் பிடிக்க துடியாய்த் துடிக்கும் பரிதாபத்திற்குரிய அரசியல்வாதிகள்!
முன்னாள் முதல்வருக்குத் தண்டனை என்பது சட்ட ரீதியாக நீதிமன்றத்தால் அளிக்கப்பட்டது; அதிலிருந்து வெளிவர சட்ட ரீதியான முயற்சிகளில் ஈடுபடவேண்டுமே தவிர, குறுக்கு வழிகளில் வன்முறையைக் கையாளு வதோ, நீதிபதியை வசைபாடுவதோ தீர்வாகாது.
இதுதான் சந்தர்ப்பம் என்று கருதி, பதவி ஆசையால் எச்சில் ஊறிக் கிடக்கும் அரசியல்வாதிகளின் பரிதாப நிலை – இவைபற்றியெல்லாம் தர்க்க ரீதியாக தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:
தமிழ்நாட்டின் இன்றைய அரசியல் கட்சிகளைப் பார்த்தால் மிகவும் வெட்கமாகவும், வேதனையாகவும் உள்ளது!
தந்தை பெரியாரால் பக்குவப்படுத்தப்பட்ட பகுத்தறிவுப் பூமியா அது? என்று வெளிநாட்டவர் எல்லாம் விலாநோகச் சிரிக்கும் நிலைதான் காணப்படுகிறது.
நீதிமன்றத் தீர்ப்பும் – அதன் தொடர்ச்சியும்…
வருமானத்திற்கு அதிகமாகச் சொத்து சேர்த்த வழக்கில் 18 ஆண்டுகால இழுத்தடிப்பு, வாய்தாக்கள் தாண்டி வந்த தீர்ப்பின்படி, முதல்வராக இருந்த முதல் குற்றவாளியான ஜெயலலிதாவுக்கு நான்கு ஆண்டு சிறைத் தண்டனை, 100 கோடி ரூபாய் அபராதம் மற்றும் உடந்தையாக இருந்த வர்களுக்கு அதேபோல் நான்காண்டு சிறைத் தண்டனை, ரூ.10 கோடி அபராதம் என்ற தீர்ப்பு அதிர்ச்சியை அ.தி.மு.க.வினருக்குக் கொடுத்தது. அதுமட்டுமல்ல, உச்சநீதி மன்ற அண்மைக்கால சட்ட வலிமை பெற்ற தீர்ப்பின் விளைவாக, மூன்றாண்டுகளுக்குமேல் தண்டனை பெற்ற பதவியாளர்கள், சிறைத் தண்டனை மாத்திரமல்லாமல், பதவியை உடனடியாக இழக்கும் நிலையும் ஏற்படுகிறது.
அதன்படி, முதல்வராக இருந்த ஜெயலலிதா எம்.எல்.ஏ., முதல்வர் பதவியையும் இழந்தவராகிறார் என்ற சட்டபூர்வ நிலையினால், அவருக்குப் பதிலாக – அரசியல் சட்டப்படி அக்கட்சியினரால் வேறு ஒருவர் முதலமைச்சர் பொறுப் பையும் ஏற்று, ஆட்சியை நடத்துகிறார்.
நாளைய முடிவு – யாருக்கும் தெரியாது!
தண்டனை அடைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஜாமீனில் வெளிவர செய்த முயற்சிகள் – கருநாடக உயர் நீதிமன்றத்தில் வெற்றி பெறவில்லை – ஜாமீன் நிராகரிக்கப் பட்டது.
அதன்மீதுதான் முன்பு ஏற்பாடு செய்திருந்த, பிரபல வழக்குரைஞர்களுக்குப் பதில் வேறு இரண்டு பிரபல மூத்த வழக்குரைஞர்களை வைத்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு (அப்பீல்) செய்துள்ளார்கள்.
நாளை (17.10.2014) உச்சநீதிமன்றத்தில் ஜாமீன்பற்றிய மேல்முறையீடு மனு விசாரணைக்கு வர இருக்கிறது. முடிவு எப்படி இருக்கும் என்று யாரும் இப்பொழுது சொல்ல முடியாது. அது உச்சநீதிமன்றத்தின் முடிவைப் பொறுத்தது.
நீதிபதியைத் தாறுமாறாக வசைபாடலமா?
சட்டத்தினால் தண்டிக்கப்பட்டவர்கள் சட்ட முறை களான மேல்முறையீடுகள், ஜாமீன் போன்றவை மூலம்தான் வெளிவர முயற்சிக்கலாமே தவிர, தீர்ப்பு வழங்கிய நீதிபதியைப்பற்றி தாறுமாறாக வசை பாடி, விமர்சித்து சுவரொட்டிகள் அடித்து ஒட்டுவது, பதாகை களை வைப்பது, கடவுளை மனிதன் தண்டிக்கலாமா? என்று உளறல் வாசகங்களைக் கொண்ட சுவரொட்டிகள், கருநாடகாவே எங்கள் அம்மாவை எங்களுக்குக் கொடுத்துவிடு – காவிரியை நீயே எடுத்துக்கொள்! என்று பொறுப்பற்ற சிறுபிள்ளைத்தனமான சிந்தனையற்ற வாசகங்களைக் கொண்டு எழுதி, வெறுப்பினை மேலும் – பல தரப்பிலும் சம்பாதிப்பது, தேவைதானா?
மோடி அரசே தலையிட்டு எங்கள் அம்மாவை வெளியே கொண்டுவர முயற்சி செய்! என்று நீதி – நிர்வாகப் பிரிவான நீதித்துறை சுதந்திரம்பற்றிய கடுகளவு அறிவும் இல்லாத அறிவு சூன்ய அபத்தங்களை வாசகங்களாக்கி உலா விடுதல் சரியானதுதானா?
தாடி வளர்த்தால் தண்டனை ரத்தாகுமா?
இவைகளுக்கெல்லாம் மகுடம் வைத்ததுபோல, ஒப்பாரி வைத்து மாரடிப்பதும், பேருந்துகளைக் கொளுத்துவதும், பேருந்துகளில் பயணம் செய்வோர் மண்டைகளை உடைப்பதும், கடைகளை மூடச் சொல்லி காலித்தன முயற்சிகளைச் செய்வதும், கடைகளை மூடுமுன் பொருள் களைக் கொள்ளையடிப்பதும் எந்த வகையில் சரி? இவை யெல்லாம் சமூக விரோத செயல்கள் அல்லவா?
இவற்றில் ஈடுபடுபவர்கள் சமூகவிரோதிகள் அல்லவா? பள்ளிகளையெல்லாம் மூடும்படி பள்ளி நடத்துவோரைக் கூட்டி நிர்ப்பந்தப்படுத்துவதும், மொட்டை போட்டுக் கொள்வதும், தாடி வளர்ப்பதுமான மழித்தலும் நீட்டலும் ஆன கேலிக் கூத்துக்கள், சத்ரு சங்கார யாகங்கள், பூஜை, புனஸ்காரங்கள், கல் சோறு, மண் சோறு சாப்பிடுவது போன்றவைகளும், அதற்கான ஆள்களைச் சேகரிக்க பணம் கொடுத்து அழைத்து வந்து, இந்தக் கேலிக் கூத்துக்களை அரங்கேற்று வதும் செய்தித் தாள்களில், ஊடகங்களில் வெளிவருபவை. உலகம் முழுவதும் பரப்பப்படுகின்றன (இவை முன்பே பயன் அளிக்கவில்லை என்ற புத்தியும் வரவில்லையே!)
மற்ற நாடுகளில் வாழுகிறவர்கள் மிகமிகக் கேவலமாகக் கருதுகின்றனர்.
ஒரு ஆங்கில நாளேட்டில் உச்சநீதிமன்ற வழக்குரைஞர் ஒருவர் எழுதிய கட்டுரையில் பயன்படுத்திய சொற்றொடர் ‘‘Competitive Breast Beating’ போட்டி போட்டுக்கொண்டு மாரடித்து அழும் கேலிக் காட்சி என்பதான வாசகங்கள்!
இவை எல்லாம் பெருமை தரக்கூடியவைதானா?
செந் தமிழ்நாடெனும் போதினிலே என்ற பாரதி பாட்டினையே மாற்றி அல்லவா, இன்று பாடிட பகுத்தறிவுள்ள எவருக்கும் தோன்றும்!
பதவி எச்சில் ஊறித் திளைக்கும் பரிதாபத்திற்குரியவர்கள்!
இது ஒருபுறம்; மறுபுறம் எதைத் தின்றால் பித்தம் தீரும்? என்ற மொழிக்கேற்ப, பல அரசியல் கட்சிகள் அளவுக்கு அதிகமாக நாக்கில் எச்சில் ஊறி, குற்றால அருவியோடு போட்டிப் போடும் வேடிக்கை!
சுப்பிரமணிய சுவாமிகளின் கற்பனைக் கனவுகளும் ஒருபுறம். மறுபுறம் சினிமா நடிகர்களுக்கு பா.ஜ.க.வின் அழைப்புக்குமேல் அழைப்பு!
ஆசை வெட்கமறியாது என்பதற்கேற்ப, பா.ஜ.க. எப்படி தமிழ்நாட்டில் அரசியல் நடத்த முனைந்து, இப்போது சினிமா ரசிகர் மன்றத்தின் மற்றொரு அங்கமாகத் தன்னை மாற்றிக்கொண்டு, கொக்குத் தலையில் வெண்ணெய் வைத்துப் பிடிக்கும் திட்டமிட்ட அதிபுத்தி சாலியாக மாறிடத் துடியாய்த் துடிக்கிறது!
இதற்கெல்லாம் பலியாகாத இளைஞர்கள், திராவிடர் இயக்கத்தின் அடிநாதத்தை அமைதியாக வேடிக்கை பார்த்துக் கொண்டுள்ளனர்.
இறுதியில் சிரிப்பவர் யார்?
இறுதியில் சிரிப்பவர்தானே அறிவாளி? இடையில் இப்படிப்பட்ட காட்சிகளும், நகைச்சுவைக்குப் பயன்படுமே தவிர, நாடாள ஒருபோதும் கைகொடுக்காது.
காலம் புரிய வைக்கக் காத்திருக்கிறது!
கி.வீரமணி, ஆசிரியர்