தமிழக புதிய முதல் அமைச்சரின் முக்கிய கவனத்துக்கு
சட்டம் – ஒழுங்கை பராமரிப்பது அவசர அவசியக் கடமை
தமிழர் தலைவர் ஆசிரியர் விடுத்துள்ள அறிக்கை
பெங்களூரு தனி நீதிமன்றத்தில் தமிழக முன்னாள் முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாமீதான சொத்து குவிப்பு வழக்கில் அளிக்கப்பட்ட – தண்டனைத் தீர்ப்பின் காரணமாக தமிழகத்தில் சில நாள்களாக சட்டம் ஒழுங்கு நிலைமை கேள்விகுறியாகி வருவதையும், இந் நிலையில் பொது அமைதி குலையாமல் பொது சொத்துக்களை நாசப்படுத்தாமல் பாதுகாக்க வேண்டிய பொறுப்பு புதிய முதல் அமைச்சரின் தலையாய கடமையாகும் என்பதையும் எடுத்துக்காட்டி திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் முதல் அமைச்சரின் முக்கிய கவனத்திற்கு விடுத்துள்ள அறிக்கை வருமாறு:
பெங்களூரு நீதிமன்ற வழக்கில் அத் தனி நீதிமன்றம் அளித்த தீர்ப்பின் தண்டனை காரணமாக, தமிழ்நாட்டில் ஜெயலலிதா அவர்களின் பதவிகள் பறிக்கப்பட்டன; அதன் அரசியல் விளைவாக, அதிமுகவின் சட்டமன்ற உறுப்பினர் கள்கூடி, திரு. ஓ. பன்னீர்செல்வம் அவர்களை, அவர்களது தலைமையின் விருப்பத்திற்கு ஏற்ப, ஒரு மனதாகத் தேர்வு செய்தனர். கடந்த திங்கள் அன்று சென்னை ஆளுநர் மாளிகையில் புதிய அமைச்சரவை பதவியேற்று, அரசு என்பது ஜனநாயகத்தில் ஒரு தொடர் நிகழ்வு என்பதை நிலை நாட்டியுள்ளனர்!
பெங்களூரு தீர்ப்பு அக்கட்சியினரிடையே பெருத்த வருத்தத்தையும், துயரத்தையும் வேதனையையும் ஏற்படுத்தியிருப்பது இயற்கையே!
என்றாலும் தமிழகத்தில் ஆட்சியை நடத்திடும் மகத்தான பொறுப்பும், கடமையும், புதிய அமைச்சரவைக்கு உண்டு. முன்னாள் முதல் அமைச்சர் ஜெயலலிதா அவர்களது ஜாமீன் முதலிய நடவடிக்கைகள் சட்டப்படி நீதிமன்றங்கள் மூலமாக (Due Process of Law)
நடைபெற வேண்டும் என்பதே சட்டப்படி உள்ள யதார்த்தம்.
ஆத்திரம், ஆவேசம் ஒரு போதும் துணை புரியாது
ஆத்திரம், ஆவேசம், இதற்கு ஒரு போதும் துணை புரியாது; மாறாக தேவையற்ற நீதிமன்ற சிக்கல்களை உருவாக்கும். நீதிமன்ற நடவடிக்கைகளை எடுக்க ஒரு பெரிய சட்ட நிபுணர், வழக்குரைஞர்கள் குழுவே செயல் பட்டு வருகின்றனர்; இந்நிலையில் தமிழ்நாட்டில் சட்டம், ஒழுங்கு நிலைமை என்பது கடந்த சில நாள்களாகவே கேள்விக் குறியாகி வருவதை பொது நலம், பொது அமைதிக் கண்ணோட்டத்தில் மிகவும் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வர வேண்டும்.
மத்திய அரசும் அதன் உள்துறையும் இதனைக் கூர்ந்து கவனித்து வருவதும், மத்திய அமைச்சர்கள் இங்கே வந்து இதுபற்றி எச்சரிக்கைகளை விடுத்துள்ளதும் இங்கு அலட்சியப்படுத்தக் கூடாதவை ஆகும்!
எனவே, எக்காரணத்தைக் கொண்டும் பொது அமைதி குலையாமல், பொதுச் சொத்துக்களை நாசப்படுத்தாமல் பாதுகாக்க வேண்டிய பொறுப்பு அரசின், குறிப்பாக புதிய முதல் அமைச்சரின் தலையாய கடமையாகும்!
அதிமுக என்ற கட்சியை அவர்கள் எப்படி வேண்டு மானாலும் நடத்தலாம். அது அவர்கள் உரிமை ஆனால் தமிழக ஆட்சி என்பது, பொது மக்கள் அவதியுற்று கண்ணீர் சிந்தும் வண்ணம், மக்களின் இயல்பு வாழ்க்கையை இடையூறு செய்யும் வகையில் அக்கட்சியினர் நடந்து, சட்டத்தைக் கையில் எடுக்கும் நிலை நீடித்தால் இவர்களே கொள்ளிக் கட்டையை எடுத்துத் தம் தலையைச் சொறிந்து கொண்ட கேலிக் கூத்தாகி விடும் என்பதை உணர்ந்து, நடந்து கொள்ள வேண்டியது அவசர அவசியமாகும்.
அரசின் முக்கிய பிரச்சினைகளில் அக்கறை காட்ட வேண்டும்
ஜெயலலிதா அம்மையாரை ஜாமீனில் வெளியே கொண்டு வருவது அவர்களின் முன்னுரிமையாக இருப்பது எதிர்பார்க்கப்படும் நிகழ்வுதான். அதைவிட முக்கியம் ஆட்சி முன்னுரிமை. சட்டப்படி பிரமாணம் எடுத்தவர்கள் ஆட்சியை – சட்டம் ஒழுங்கு – அன்றாட நிர்வாகம் இவைகளுக்கு முன்னுரிமை கொடுத்து, அரசின் முக்கிய பிரச்சினைகளில் அதிக அக்கறை காட்டி தம் கடமைகளைச் செய்தல் ஆகும்!
மின்வெட்டு மீண்டும் தலைதூக்கியுள்ளது; ஏற்கெனவே தொழில் வளத்தில் கடைசி இடத்தைப் பெற்றுள்ளது தமிழகம் – அகில இந்திய அளவில், இந்தப் புதிய நிலை – மேலும் சிக்கலாக்கும்.
மின் கட்டண உயர்வு என்பதும் மற்றொரு குடைச்சல் பிரச்சினை. கூலிப்படைகளால் அன்றாட கொலைகள், கொள்ளைகள் சர்வ சாதாரண நிகழ்வுகளாக உள்ளன!
அண்டை மாநிலப் பிரச்சினைகள் முல்லைப் பெரியாறு, காவிரி நீர்ப் பங்கீடு, ஈழத் தமிழர் வாழ்வுரிமை, மனித உரிமை மீறல்கள் பற்றி இராஜபக்சே ஆட்சியின் கொடு மையான கோணல் போக்கு, தமிழக மீனவர் பிரச்சினை, பறிக்கப்பட்ட படகுகளைத் திருப்பித் தர
மறுக்கும் பிடி வாதப் போக்கு இத்தியாதி! இத்தியாதி!
எனவே, கடந்த இரண்டு நாட்களாக செயல்படத் துவங்கியுள்ள தமிழகத்தின் புதிய முதல் அமைச்சர் சம்பந்தப்பட்ட அதிகாரிகள், சில ஊடகங்களில், ஏடுகளில் காவல்துறை தத்தம் விருப்பம்போல நடப்பதாக, பல எதிர்க்கட்சித் தலைவர்கள்மீது, அரசின் நடவடிக்கைகளை விமர்சிக்கும் தலைவர்கள், ஏடுகள்மீது வழக்குப் போடுவர் என்றும் செய்திகள் வருவதைத் தவிர்க்க வேண்டும்.
வீண் வம்புகளை தாங்களே சென்று விலைக்கு வாங்குவது தேவையற்றது. நல்ல அணுகுமுறையும் ஆகாது.
இப்போது தேவை ஆளுமை! ஆளுமை! குரோத, விரோத மனப்பான்மைக்கு இடமின்றி அனைவருக்குமான ஆட்சியாக கிடைத்த புதிய வாய்ப்பை அவர்பற்றிக் கொண்டு, நடத்திச் செல்வதுதான் சிறந்த விவேகமாகும்.
கி.வீரமணி
ஆசிரியர்
சென்னை
2.10.2014