அனந்தமூர்த்தி இறப்பைக் கொண்டாடிய ஆர்.எஸ். எஸ். கும்பல்

ஜுன் 1-15,2021

 

மோடி பிரதமரானால் இந்திய நாட்டை விட்டே வெளியேறுவேன் என்று சூளுரைத்த எழுத்தாளர் யூ.ஆர்.அனந்தமூர்த்தி மோடியின் அரசு பதவி ஏற்று 100 நாட்கள் ஆவதற்குள் ஆகஸ்ட் 22 அன்று மறைவுற்றார்.

சிக்மங்களூரிலும், மங்களூரிலும் கருநாடகத்தின் சில பகுதிகளில் அவரது மரணம் பி.ஜே.பி., ஆர்.எஸ்.எஸ். தொண்டர்களால் வெடி வெடித்துக் கொண்டாடப்படுகிற அளவிற்கு மதச்சார்பற்றவராய் விளங்கியவர்.

மதச்சார்பற்ற ஜனதா தளம் சார்பில் போட்டியிட வாய்ப்பு பரிந்துரைத்த தருணத்தில் பி.ஜே.பி.யுடன் அதிகாரப் பகிர்வு என்னும் திட்டத்தில் அவர்கள் கை கோர்த்தபோது பி.ஜே.பி.யுடன் கைகோர்க்கும் என் நண்பர்களை ஒரு போதும் மன்னிக்கமாட்டேன் என்று அறிவித்தவர்.

ஆங்கிலக் காலனி ஆதிக்கத்தால் பெயர் மாற்றம் செய்யப்பட்ட கருநாடகத்தின் 10 நகரங்களுக்கு அதன் பழைய பெயரை அரசிற்கு அனந்தமூர்த்தி அவர்கள் பரிந்துரைத்ததின் பயனாய்தான் பெங்களூரு என்றே பெயர் மாற்றம் செய்யப்பட்டது.

பார்ப்பனர்கள் மாமிசம் உண்டார்கள் என்கிற உண்மையை மறைத்து பைரப்பா எழுதிய பொழுது, அதை எதிர்த்து இவர் குரல் கொடுத்தார்.

அதற்குக் கடுமையான விமர்சனங்கள் வலதுசாரிகளிடம் இருந்து வந்ததும், இனிமேல் இலக்கிய விமர்சனமே செய்யப்போவதில்லை என்று அறிவித்தவர். தமிழ் மொழியைத் தன் மாநிலப் பள்ளிகளைவிட்டு கர்நாடக அரசு வெளியேற்றிய பொழுது அதற்கு எதிராக தீவிரமாகக் குரல் கொடுத்த ஞானபீட விருது பெற்ற எழுத்தாளர்.

இரண்டு கிட்னியும் செயலிழந்து டயாலிசிஸ் மூலமே வாழ்க்கையை நகர்த்திக்கொண்டு இருந்தாலும் ஓயாமல் உழைத்துக் கொண்டே இந்து மத வெறியர்களுக்கு எதிராக இந்துத்துவா மற்றும் சுயராஜ்யம் என்றொரு நூலை அவர் எழுதிக்கொண்டு இருந்தார்.

மோடி அரசு பதவி ஏற்றதும் நமோ பிரிகேட் என்கிற மோடி ஆதரவாளர்கள் அவர் நாட்டை விட்டு வெளியேற பாகிஸ்தானுக்கு இலவச பயணச் சீட்டை எடுத்துக் கொடுத்து மகிழ்ந்தார்கள். இப்போது அவரது மறைவையும் கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள். டி.எம்.நாயர், காந்தியார், பெரியார் என்று பலரின் இறப்புகளையும் இதே கும்பல் கொண்டாடியிருக்கிறது.

மத வெறி தலைக்கேறினால் மனிதம்தான் மலையேறிவிடுமே!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *