என்னை மாற்றிய புத்தகம்

மே 16-31

இந்நூலை வாசித்தால்…!

நான் என் இதுநாள் வரையிலான பொதுவெளி வாழ்க்கையில் அப்படி தன் பலத்தில் நிற்கவிரும்புகிற, தன் பொறுப்புகளை எந்நிலையிலும் தானே சுமக்கிற, ஒரு தருணத்திலும் அதிலிருந்து பெண் என்று சொல்லி சலுகை கோராத ஓர் இந்தியப் பெண்ணைப் பார்த்ததே இல்லை என்று சொல்லிக்கொள்கிறேன் – ஜெயமோகன்.

சில நாட்களாகவே நம் எழுத்தாளர் களுக்கு உள்ளொளி தரிசனம் போதவில்லை என்பது மாதிரி ஓர் எண்ணம் ஏற்பட்டுக் கொண்டிருந்தது. ஜெயமோகன் அதை உறுதிப்படுத்தியிருக்கிறார். பட்டுப்புழு தன்னைச் சுற்றி ஒரு கூட்டை தானே உருவாக்கிக் கொண்டு, அதுதான் உலகம் என்று நம்புவதைப் போல நம் எழுத்தாளர்கள் ஒரு கற்பனாவாத உலகத்தை உருவாக்கிக் கொண்டு, அவ்வுலகில் அவர்கள் சிந்தனைகளாலேயே நிகழும் சம்பவங்களை உலக யதார்த்தமாக பொதுமைப்படுத்திக் கொள்கிறார்கள். ஜெயமோகனின் உலக அனுபவம் எவ்வளவு சிறிய வட்டத்துக்குள் நிகழ்கிறது என்பதற்கு இப்பதிவு நல்ல உதாரணம்.

பெண்களைக் குறித்து இம்மாதிரி அல்லது இதைவிட மோசமான கருத்துகளை ஒரு சாமா னியன் கொண்டிருந்தால் அதில் ஆச்சரியப்பட ஏதுமில்லை. சில ஆண்டுகளுக்கு முன்பாக அவர்களைக் குறித்த படுமோசமான, ஆபாசமான கருத்துகளையே கொண்டி ருந்தேன். என் தலையில் நாலு குட்டு குட்டி, இதைப் படிச்சிப்பார் என்றொரு சிறுநூலை வாங்கிப் பரிசளித்தார் அண்ணன் எஸ்.பாலபாரதி.

அந்நூலை வாசித்த பிறகு என் செயல்பாடுகள் பெருமள வில் மாறிவிடவில்லை. ஆனால், பெண்கள் குறித்த என்னுடைய எண்ணங்கள் தவறு என்கிற புரிதல் மட்டும் தோன்றியது. பாலபாரதியிடம் இந்த மனோபாவ மாற்றத் தைச் சொன்னேன். அது போதும், நீ மாறணும்னு அவசியமில்லை.

பெண்ணியப் போராளியா கொடி பிடிக்கணும்னும் தேவை யில்லை. நீ நம்பிக்கிட்டிருக்கிற, செஞ்சிக்கிட்டி ருக்கிற விஷயங்கள் தவறுன்னு உணர்ந்தா போதும். ஒவ்வொரு முறையும் இதே தவறை நீ செய்யும்போதும், குறைந்தபட்சம் ஒரு குற்றவுணர்வு இருக்கும். அது போதும் என்றார்.

அதுவரை கட்டமைத்து வைத்திருந்த பல பிம்பங்களை உடைத்த அந்நூலில் நம் பாட்டி, அம்மா, சகோதரி, பக்கத்து வீட்டுப் பெண், எதிர்த்த வீட்டுப்பெண் என்று உலகின் எல்லாப் பெண்களும் ஏன் இப்படி இருக்கிறார்கள் என்பதற்கான விடை இருக்கிறது. மிகச்சிறிய நூல். எழுதியவர் ஜெயமோகன் மாதிரி பெரிய எழுத்தாளரும் அல்ல. அவருக்கு இலக்கியம் தெரியாது.

எழுத்துநடையும்கூட படுசுமார்தான். ஆனால் சவாலாகவே சொல்கிறேன். அந்நூலை வாசிப்பவர்களுக்கு மிகச்சிறிய அளவிலாவது மனமாற்றம் தோன்றியே தீரும். மனிதனாகப் பிறந்தவர்கள் ஒவ்வொருவரும் வாசித்தே ஆகவேண்டிய புத்தகம். தந்தை பெரியாரின் பெண் ஏன் அடிமை ஆனாள்?

ஜெயமோகனுக்கு யாராவது இப்புத்தகத்தை வாங்கிப் பரிசளிக்கலாம்.

– யுவகிருஷ்ணா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *