எந்தக் கல்வித்தகுதியோ, முன்அனுபவமோ, முதலீடோ இல்லாமல் ஒருவர் மக்களிடம் செல்வாக்கும் புகழும் பெற்று பணமும் சம்பாதிக்க எளிய வழி சாமியார் தொழில்தான். மக்களை வசீகரிக்கும் பேச்சாற்றல் மட்டுமே சாமியார் ஆவதற்கான தகுதியும் மூலதனமும்.
மனதிற்குப் பிடித்தவரைத் திருமணம் செய்ய, பிரிந்த தம்பதியர் சேர, சேர்ந்திருப்பவர் பிரிய, வியாபாரத்தில் லாபம் பெருக, எதிரிகளை அழிக்க, கல்வித் தடை நீங்க, பில்லி சூனியம் வைக்க–_எடுக்க என்று வாழ்க்கையில் நாம் எதிர்கொள்ளும் அனைத்துப் பிரச்சினை களுக்கும் மருந்தாக – சகலகலா வல்லவர் களாக(?)அறியாமைக் குடி கொண்ட மக்களால் பார்க்கப்படுபவர்கள் இன்றைய சாமியார்களே.
ஆடு, மாடு, சேவல் என்ற உயிரினங்களைப் பலி கொடுத்தது போதாது என்று குழந்தைகளை நரபலி கொடுத்தால்தான் இந்தக் காரியம் வெற்றியடையும் என்று சாமியார் சொல்லிவிட்டால்… அதனைத் தலைமேற் கொண்டு நிறைவேற்றத் துடிக்கும் மக்கள் இன்று நிறையவே உள்ளனர் என்பதை ஊடகங்களில் வெளிவரும் செய்திகள் மூலம் அறியமுடிகிறது.
பிற உயிர்களைப் பதம் பார்த்து தங்கள் பிழைப்பை ஜாம் ஜாம் என்று நடத்தி வந்த சாமியார்களின் மனதில் ஓர் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது சென்ற மாதம் சென்னை சூளைமேட்டில் குறிசொல்லி வந்த ஜானகிராமன் என்ற சாமியார் 5 பேர் கொண்ட கும்பலால் வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவம்.
சிறீபாச்சி சுவாமிகள் என்ற பெயரினைக் கொண்ட ஜானகிராமன் சூளைமேட்டில் உள்ள அங்காளம்மன் கோவில் மற்றும் அவரது வீட்டின் முன்புறம் உள்ள பவானியம்மன் கோவில்களில் 15 வருடங்களாக சாமியாடி குறி சொல்லி வந்துள்ளார். இவருக்கு மனைவியும், இரு மகன்களும் உள்ளனர்.
இரவு நேரங்களில் உடுக்கை அடித்துப் பூஜை செய்ததாலும், பில்லி சூனியம் வைப்பது எடுப்பது போன்ற வேலைகளில் ஈடுபட்டதாலும் அவரது வீட்டின் பின்புறம் குடியிருந்த சாரதி என்பவருக்கும் ஜானகிராமனுக்கும் அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டுள்ளது.
சாரதியின் உறவினர்கள் சிலர் தற்கொலை செய்து கொண்டதற்கு, ஜானகிராமனின் மாந்திரீக வேலைதான் காரணம் என நினைத்த சாரதி, இனி பூஜை எதுவும் செய்யக்கூடாது என்று எச்சரித்துள்ளார்.
இதனைக் கேட்ட சாமியார், சித்ரா பவுர்ணமி அன்று ஒரு காவு வாங்குவேன் என்று கூறியுள்ளார். சாமியாரின் பதிலைக் கேட்டுக் கோபம் அடைந்த சாரதி உள்ளிட்ட அய்வர் சாமியாரை வெட்டிக் கொலை செய்துள்ளனர்.
சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு சூளைமேட்டில் உள்ள பால் முனீஸ்வரன் கோவிலில் இருந்து வீட்டருகே உள்ள பவானியம்மன் கோவிலுக்குப் பால்குட ஊர்வலம் நடத்துவதற்கு, பெரிய அளவிலான விளம்பரத் தட்டிகள் அமைத்து அதில் தனது புகைப்படங்களை இடம்பெறச் செய்து ஒட்டியிருந்தார் சாமியார்.
தன்னை நாடி வந்த பக்தர்களின் எதிர்காலத்தை _ எதிர்காலப் பிரச்சினைகளை முறியடிப்பது பற்றிய அருள்வாக்குக் கூறிய சாமியாரால் நடக்காத பால்குட ஊர்வலத்திற்கு விளம்பரம் செய்யத் தோன்றியது ஏனோ?
சித்ரா பவுர்ணமியன்று காவு வாங்குவேன் என்று கூறிய சிறீபாச்சி சுவாமிகளுக்கு, அந்தக் காவில் தானே பலியாவோம் என்று தெரியாமல் போய்விட்டது.
இது சென்னையில் நடந்த ஒரு சம்பவம். இதுதவிர, தமிழகத்தின் பிற பகுதிகளில் ஆங்காங்கே சாமியார்களின் சுயரூபமறிந்த மக்கள் அடித்து உதைத்து ஊரைவிட்டே சாமியார்களைத் துரத்திவிட்ட சம்பவங்களும் நிகழ்ந்து வருகின்றன. சாமியார்களை மக்கள் தலைமேல் தூக்கி வைத் துக் கொண்டாட அடிப்படைக் காரணம் என்ன?
நாகரிக சமூகத்தில் அறிவியல் மனப்பான் மையை வளர்க்க வேண்டிய ஊடகங்களும் பத்திரிகைகளும் ஏமாற்றுப் பேர்வழிகளான சாமியார்களுக்கு விளம்பரம் அளிக்கின்றன. சட்டத்தையும் நீதியையும் காப்பாற்றவேண்டிய அரசு அதிகாரிகள், அரசியல்வாதிகள், நீதிபதிகள், காவல் துறையினர் என முக்கியப் பொறுப்பில் இருப்பவர்களே சாமியார்களின் காலில் விழுகிறார்கள்.
இந்தக் காட்சிகளைப் பார்க்கும் அப்பாவி மக்கள் தமது மூடநம்பிக் கையால் இத்தகைய சாமியார்களை நம்பும் மனநிலைக்கு வந்துவிடுகின்றனர்
பொதுமக்களுக்கு எந்தவிதச் சந்தேகமும் ஏற்படாத வகையில் சாமியார்கள் வளர்ந்து பெயரும் புகழும் பணமும் பெற்றுவிடுகிறார்கள். புகழ்பெற்ற சாமியார்களைக் கொலை செய்யும் அளவிற்கு எண்ணம் ஏற்பட மக்களின் மனதில் சாமியார்களால் ஏற்பட்ட ஏமாற்றமும் விரக்தியும் முக்கியக் காரணங்களாகின்றன.
கடந்த மாதம் சென்னையில் ஒரு குழந்தை நரபலி சம்பவமும் நடந்தது. சின்னஞ்சிறு உயிரைக் கொல்லும் அளவுக்கு மனித மனத்தை மூடநம்பிக்கை ஆட்கொள்வது எவ்வளவு பெரிய கொடுமை! இந்தக் கொடுமைகளைத் தடுக்க சாமியாரைக் கொல்வதால் இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு கிடைத்துவிடுமா?
சட்டமும் நீதியும் எந்தப் பக்கமும் சாயாமல் மக்களின் முழு நம்பிக்கையைப் பெறும் வகையில் செயல்பட்டால் இந்தக் கொடுமைகள் நடக்குமா?
கணினி வழிக் குற்றங்கள், பொருளாதாரக் குற்றங்கள் ஆகியவற்றுக்கு காவல்துறையில் தனிப்பிரிவுகள் இருப்பது போல ஜோதிட, ஜாதக, மாந்திரீக, சாமியார் குற்றங்களைத் தடுக்கவும் மாவட்டத்திற்கு ஒரு தனிப்பிரிவாவது அமைக்கப்பட வேண்டும்.
அப்பிரிவில் இருப்போர் அறிவியல் மனப்பான்மை உள்ளவர்களாக இருக்க வேண்டும். குற்றத்தின் தன்மைக்கேற்ப அதற்கான காரணத்தைக் கண்டறிய துறைசார்ந்த வல்லுநர்களின் ஆலோசனைகளைப் பெற்று நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கடவுள், மதம், ஜாதி போன்றவையின் பின்னணியில் நடக்கும் அநீதிகளைத் தயவுதாட்சண்யமின்றித் தண்டிக்கும் நிலை வந்தால் ஒழிய மனித இழப்புகளைத் தடுக்க முடியாது.