Unmai Magazine Subscription - உண்மை இதழ் உங்கள் முகவரி தேடி வர சந்தா செலுத்துங்கள்..

வைகறையைக் கடந்து விட்டது பொழுது. இருள் குலைந்து முகங்கள் துல்லியப்பட்டு  தெரிய துவங்கி விட்டன. ‘விநாயகனே வினைத் தீர்ப்பவனே’ பாடல் காதில் கேட்டது. இதமான காலையில் அந்தப் பாடல் நாராயணனுக்குத் தெம்பூட்டின.

அவன் கடந்த இரண்டு ஆண்டுகளாக பக்திப்பழமாகக் கனிந்து கொண்டிருந்தான். காலைக் குளித்தெழுந்து சந்தனக் கீற்றும் குங்குமப் பொட்டும் இல்லாமல் வெளியே தலைக் காட்டுவதில்லை. கள்ளு, சாராயம் இல்லாமல் வயிற்றையும் உணர்வுகளையும் பட்டினிப் போட்டாலும் திருச்சாத்து இல்லாமல் நெற்றியைப் பட்டினிப் போட்டதே இல்லை. பக்தி. அத்துணைப் பக்தி.

அந்தச் சுற்று வட்டாரத்தில் எந்தக் கோயில் கொடைவிழா, திருவிழா, போன்ற நிகழ்ச்சிகள் மட்டுமல்லாமல் திருமணம், காது குத்து, பூப்பு நீராட்டு விழா என எல்லா நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்வான்.

இப்பொழுது கொஞ்சம் மேடையில் பேசவும் கற்றுக்கொண்டான். “இந்துவாக வாழ வேண்டும், இந்துவாகவே சாகவேண்டும். இந்து என்பதில் பெருமைப் படுகிறேன்” என்பான். அதற்காக இராமாயணம், மகாபாரதம், தேவாரம், திருவாசகம், பெரிய புராணம் எல்லாம் படிப்பதாக நினைத்து விடாதீர்கள். நாளிதழ் படிப்பதே எப்போதாவதுதான். அதுவும் தேநீர்க்கடையில் நண்பர்கள் காசு கொடுக்கும் வரை செய்யும் நடிப்புதான்.

பால்காய்ப்பு  வீட்டை நெருங்கி விட்டார்கள். தூரத்திலிருந்து பார்க்கும் போதே வீடு அணி செய் குறுகுமிழ் தொடர் விளக்குகள் அழகுடன் மிளிர்ந்தன. பனியூடிய காற்று தளரத் தொடங்கியது. விடிந்து முடிந்தது காலை.

நாராயணனின் ஈருருளியில் பின்னால் அவன் மனைவி இருந்தாள். சீரான காற்றுக்கு ஆடாமல் அசையாமல் எரியும் விளக்குச் சுடர் போல நெற்றியில் ஒற்றை நாமத் தீற்றல். அவள் கையில் இருந்த பையில் தேங்காய், உப்பு, ஒரு சீப்பு வாழைப்பழம்.

இராமலட்சுமி நாராயணனுக்கு நேர் எதிர். அவன் வீர இந்து சூர இந்து என்று சொல்லிக் கொண்டாலும் அவள் வெளியே வரும்போது நெற்றியில் நெடுக்க நாமத்தோடுதான் வருவாள். யாரும் திருநீறு கொடுத்தாலும் பூசிக்கொள்ள மாட்டாள். கட்டாயப்படுத்திக் கொடுத்தால் அன்புக்காக வாங்கிக் கொள்வாள். அதை யாருக்காவது கொடுத்து விடுவாள். அல்லது வீதியில் கொட்டி விடுவாள்.

அவள் தன்னை இந்து என்று சொல்லிக் கொண்டாலும் அய்யாவைத் தவிர வேறு யாரையும் வணங்கியதில்லை. இப்பொழுது கொஞ்ச நாள்களாகத்தான் நாராயணன் வில்லைத் தூக்கிக்கொண்டு நிற்கும் இராமர் படத்தை வீட்டுக்குள் கொண்டு வந்து சுவற்றில் மாட்டி மாலை சாத்தி வணங்கத் துவங்கி இருக்கிறான். இதற்கு முன் இதழ் விரிந்த தாமரைப் பூவின் மீது எழுந்து நிற்கும் ஒற்றை வெண் நாமமே வழிபடும் பொருள். அய்யா வழியையே சனாதன இந்துத்துவத்திற்கு அடமானம் வைத்து விட்டார்கள் என்றும், இந்து மதத்தின் மச்சமாகவோ மருவாகவோ மாறி விட்டதென்றும் பாவம் இராமலட்சுமிக்குத் தெரியாது.

நாராயணன் சுற்றுக்கட்டு வாசலை நெருங்கவும் “வாங்கஜீ” என்று வணங்கி வீட்டுக்குள் அழைத்துப் போனான் கணேசனின் தம்பி. முப்பது ஆண்டுகளுக்கு முன்னால் கானமும் பயறும் விளைந்த மண் இன்று காரை முளைத்து வீடாய் எழுந்து நிற்கிறது. காலம் பிசைந்து விளையாடும் கழிமண் உருண்டைதானே பூமி.

வாசல் படி தாண்டி உள்ளே நுழையவும் கணேசனும் அவன் மனைவியும் வந்து கை குவித்து முகமும் அகமும் மலர “வாங்கஜீ,  வாங்கஜீ…” என்று அழைத்தார்கள். உள்ளே நுழைந்ததும் அவர்கள் கண்ணில் பட்டது பசுமாடுகள்தான். தப்புத் தப்பு. கோமாதாதான். நாராயணனும் இராமலட்சுமியும் பசுமாடுகளைப் பார்த்துக்கொண்டு நிற்பதை உணர்ந்த கணேசன் “என்னஜீ அப்படி பாக்றீங்க. எல்லாம் ஒரு புதுமதான். கோமாதாவின் பெருமைய ஒலகத்துக்கு சொல்லத்தான்.” என்று நிறுத்தினான். இருவரும் கணேசனை உற்றுப் பார்த்தார்கள். அவன் முகத்தில் மகிழ்ச்சி கொந்தளித்துத் தளும்பியது.

“என்னங்கஜீ இவ்வளவு லேட்டா வந்திருக்கீங்க.
உங்கள ரொம்ப எதிர் பார்த்தேன். சாமி பிரம்ம
முகூர்த்தம்ன்னு காலையிலே ஆரம்பிச்சிட்டாங்க. ஓமகுண்டம் வளர்த்து அவ்வளவு கோமாதாவை
யும் புது வீட்டுக்குள்ள கொண்டு போயி அலைய விட்டு அது மோண்டு சாணிப் போட்டு நம்மள ஆசீர்வதிக்கும் கண்கொள்ளாக் காட்சிய நீங்க பாக்காம போய்டீங்களே.” தன் வருத்தத்தை வெளிப்படுத்தினான்.

பனிரெண்டு பசுமாடுகளும் வரிசையாக முளையறைந்து கட்டப்பட்டிருந்தன. அவை முன்னால் போடப்பட்டிருந்த பசும்புல்லைத் தின்றுக் கொண்டிருந்தன. அதில் ஒன்றிரண்டு படுத்து அசைப்போட்டுக் கொண்டிருந்தன. இந்தப் பசுமாடுகள் அனைத்தும் நேற்று நேரங்காலமே கொண்டு வந்து கட்டப்பட்டிருக்க வேண்டும்.  அந்தப் பகுதி முழுக்க சாணியும் மோளுமாய் கலந்த நாற்றம்.

கணேசன் இன்னும் இன்முகம் மாறாமல் நாராயணனையும் இராமலட்சுமியையும் வீட்டுக்குள் அழைத்துப் போனான். ஓமகுண்டம் இன்னும் எரிந்து புகைந்து கொண்டிருந்தது. புது வீட்டின் அறைகள் புகை மண்டி நின்றன.  மேற்கு சுவரோரம் சாய்த்து வைத்திருந்த கணேசனின் அப்பா புகைப்படத்திற்கு மாலை அணிவித்துப் படையல் போடப்பட்டிருந்தது. அய்யர்கள் இரண்டு பேரும் பூசை முடிந்து அரிசி, பருப்பு போன்ற ஒன்பது வகை தவசங்களையும் தங்கள் பைகளில் நிறைத்துக் கொண்டிருந்தார். ஓமகுண்டம் வளர்த்த நடு வீட்டுக்குள் மாட்டுச் சாணி, மோள், சாம்பிராணி புகை கலந்த வாடை நிறைந்து குமட்டியது. சாம்பிராணி கரித் துகள்களும் ஓமகுண்ட கரித் துகள்களும் வீட்டுச் சுவரெங்கும் அங்கங்கே திட்டுத் திட்டாக அப்பியிருந்தது நன்றாகத் தெரிந்தது.

அய்யர் இருவரும் தங்கள் வேலை முடிந்ததும் எழுந்து நின்று “கணேசன் நாங்க வரட்டுமா” என்று விடைப் பெற்றார்கள். பக்கத்து அறையில் பேசிக்கொண்டு நின்றவன் விரைவாக நடந்து வரும்போதே தன் மனைவியை அழைத்தான். அவள் கழுத்திலும் மாலை தொங்கிக் கொண்டிருந்தது. இருவரும் சாணியும் மோளுமாய் சத சதவென்று  கிடந்த தரையில் முழங்காலிட்டு குனிந்து அய்யர் இருவரின் கால்களையும் தொட்டு வணங்கினார்கள். அய்யர் இருவரும் ஆடாமல் அசையாமல் தங்கள் கைகளை தூக்கி ஆசீர்வாதம் வழங்கினார்கள். தொந்தி சரிந்த அவர்கள் வயிற்றிலும் மார்பிலும் சனாதன தேரிழுக்கும் வடம் போல பூணூல், தார்பாய்த்து கட்டிய புது வேட்டி. கைகளை உயர்த்தி வாழ்த்துக் கூறும்போது, அங்கு உள்ள அனைவருக்கும் பால் கடலில் பள்ளிக்கொள்ளும் பச்சைமாலே நேரில் வந்து வாழ்த்து வழங்குவதாக நினைத்து தாங்களும் அவர்கள் காலில் விழுந்து வணங்கினார்கள்.

இராமலட்சுமிக்கு அங்கு நிற்கப் பிடிக்க வில்லை. தான் கொண்டு வந்திருந்த பையை கணேசன் மனைவியிடம் கொடுத்தாள். அவள் அதை வாங்கி படையல் போட்ட இடத்திற்குப் பக்கத்தில் வைத்தாள். அந்த இடத்தில் ஏற்கனவே நான்கைந்து பைகள் வைக்கப்பட்டிருந்தன.

“அக்கா இங்க புகை மண்டலா இருக்கு. வெளிய முத்தத்தில போய் இருங்க. நா பால் ஊத்திட்டு வாறேங்கா” பக்கத்து அறைக்கு விரைந்தாள்.

வீட்டுக்குள் நிற்கப்பிடிக்காமல் இருந்தவளுக்கு
இது ஆறுதலாகவும் விடுதலையாகவும் இருந்தது. சட்டென்று வெளியேறினாள். வெளியே வரிசையாகப் போடப்பட்டிருந்த இருக்கையில் வந்து அமர்ந்தாள். இங்கு புகை மண்டல்  இல்லையே தவிர, மாட்டு மோள் வாடை குமட்டல் எடுக்கத்தான் செய்தது.

அதற்குள் பால் தம்ளரோடு வந்தாள் கணேசனின் மனைவி. சூடு பொறுக்க முடியாமல் ஒரு கையிலிருந்து மறு கைக்கு மாற்றினாள். “இந்தாங்கக்கா பால்” இராமலட்சுமியிடம் கொடுத்தாள். வாங்கிக் கொண்டவள் சேலை முந்தானையால் தம்ளரின் அடிப்பாகத்தைப் பிடித்துக்கொண்டு ஆவி பறக்கும் பாலை ஒருமுறை ஊதி சூடாற்றி பருக நினைக்கும் போது “பொறுங்கம்மா.. பொறுங்க” ன்னு கணேசன் ஓடி வந்தான். அவள் பாலைப் பருகாமல் அவனைப் பார்த்தாள். வரும் வேகத்திலேயே “தங்கம் அவங்களுக்கு மொதல்ல கோமியம் கொடுத்தியா?” என்று கேட்டான். அவள் ‘இல்லை’ என்று தலையை ஆட்டி பதில் சொன்னாள். “அய்யோ.. அய்யோ…” தலையில் அடித்துக் கொண்டு  “ஒனக்கு எத்தன மொற சொல்லியிருக்கென். பெறவும் இப்டி பண்றீய.  மொதல்ல கோமியம் கொடு. அப்புறமா பாலைக் கொடு” என்று சினம் கொண்டு தான் கொண்டு வந்த மாட்டு மோளைக் கொடுத்து விட்டு இராமலட்சுமி கையிலிருக்கும் பாலை வாங்க முயற்சித்தான். அவள் பாலைக் கொடுக்காமல் மாட்டு மோளை வாங்க மறுத்தாள். கணேசன் மீண்டும் முனைந்து “இல்லங்கஜீ இதுக்கு ஈடான மருந்தே ஒலகத்தில கெடையாது. இத காலையில வெறும் வயித்தில குடிச்சீங்கன்னா ஒங்கள எந்த நோயும் அண்டாது. இனி காலங்காலமா வரப்போற நோய்க்கும் இதுதான் மாமருந்து. ஒலகத்துல இந்தக் கோமியம் மட்டுந்தான் முப்பத்து முக்கோடி தேவர்களால ஆசீர்வதிக்கப்பட்ட மருந்து. தைரியமா குடிங்க” கையிலிருந்த பாலைப் பிடிங்கி விட்டு மாட்டு மோளைக் கொடுத்தான்.

இராமலட்சுமிக்கு கையில் அதைப் பிடித்திருப்பதே அருவெருப்பாய் இருந்தது. ‘என்னடா இது, இப்படியொரு இக்கட்டில் வந்து மாட்டிக்கிட்டோமே’ உள்ளே இடிந்து தகர்ந்து இருந்தாள்.

அய்யர் இருவரும் பைகளில் பொருட்களைத் தூக்க முடியாமல் தூக்கிக் கொண்டு போனார்கள். அவர்கள் இராமலட்சுமியின் நிலையைக் கண்டு சுசியத்திற்குள் பருப்பைப் போல நகைத்துக் கொண்டு கடந்துப் போனார்கள். அவர்களை வழியனுப்ப ஓடிய கணேசன் சுற்றுக்கட்டு வாசல்வரைச் சென்று வழியனுப்பி வைத்து விட்டு வந்தான்.

“என்னங்கம்மா கையில வச்சிகிட்டு இருக்கீங்க, குடிங்க. மொதல்ல ஒரு மாதிரித்தான் இருக்கும். அப்புறம் போகப் போக சரியாயிரும். இங்க இருக்கும் எல்லாரும் அரை கிளாஸ் கோமியம் குடிச்சிட்டுத்தான் அப்புறமா பால் குடிச்சாங்க” என்றான் கணேசன்.

இராமலட்சுமிக்குச் சினம் பொங்கிக் கொண்டு வந்தது. ‘இப்படியொரு பைத்தியக்கார கூட்டத்தில வந்து மாட்டிக்கிட்டோமே’ என்று நினைத்தாள். தன் கணவன் மீது எரிச்சல் வந்தது.

“லட்சுமி இன்னைக்கு நாம போறமே பால் காய்ப்பு வீடு, அவரு தமிழ்நாடு மட்டுமல்ல டில்லியில இருக்கிற பெரிய பெரிய ஆள்களோட எல்லாம் நல்லா தொடர்பு வச்சிருக்காரு. தமிழ்நாட்டுல நம்ம கட்சியில பெரிய பதவியில இருக்காரு. இன்னைக்கு இங்க பெரிய பெரிய ஆள்லாம் வாராங்க. என்ன எல்லார் கிட்டயும் அறிமுகப் படுத்துறேன்னு சொல்லியிருக்காரு. நீயும் எங்கூட வாயேன். எனக்கும் வெளியில எவ்வளவு பேர் இருக்கு, செல்வாக்கிருக்குன்னு  நீ வந்து பாரு” என அழைக்கவே வந்தாள்.

வந்த இடத்தில் இப்படியொரு சோதனையா? அட கடவுளே! அந்தக் கருமத்த இன்னும் கையிலேயே வைத்துக்கொண்டிருந்தாள். நாராயணன் இரண்டு மடக்கு குடித்து விட்டு தம்ளரைக் கவிழ்த்திப் போட்டான். இராமலட்சுமி அவனை எரித்து விடுவது போல் பார்த்தாள்.

“என்னங்கம்மா இதுக்கே இப்படின்னா…. இன்னும் என்னென்ன வகை ஒணவெல்லாம் இருக்கு தெரியுமா?” பக்கத்தில் நின்ற ஒருவன் சொன்னான்.

கணேசன் மீண்டும் “இன்னா பாருங்க தாயி, எதையும் நெனைக்காம குடிங்க. அய்.அய்.டி டைரட்டரே சொல்லிட்டாரு. அய்.அய்.டி. என்பது இந்தியாவின் கல்வி நிறுவனங்கள்ல முக்கியமானது. விஞ்ஞானத்தைக் கத்துக் கொடுக்கிற பெரிய பள்ளிக்கூடம். பெரிய பெரிய பணக்காரங்க வீட்டு பிள்ளைங்க படிக்கிற கல்வி நிறுவனம். அதன் டைரட்டரே கோமியத்தைக் குடித்தால் அனைத்து நோய்களும் போய் விடும்னும், கோமியம் ஒலகமகா மருந்துன்னும் இப்ப நாலு நாளைக்கு முன்னாலதான் சொன்னாரு.  அவரு ஒண்ணும் சாதாரண மனுசரில்ல. அவர் சொல்லும் எதுவும் பொய்யா இருக்காது. அவங்க எல்லாம் விஞ்ஞானிகளுக்கு விஞ்ஞானி. அவங்க சொன்னத கேட்டு கோமியம் சாணி எல்லாம் சேத்து அதோட பால கலந்து சர்பத்து, சூஸ் எல்லாம் செய்து வடநாட்ல குடிக்கிறாங்க. நம்ம தமிழங்கதான் ஏதும் அறியாத முட்டாளா இருக்காங்க.” பஞ்ச கவ்வியம் பாடம் எடுத்துக் கொண்டிருந்தான்.

‘பசுமாட்டு மோளை கணேசன் மூஞ்சியில ஊத்திரலாமா’ என்று நினைத்தாள். அதையும் ஒரு புனிதம் அதிர்ஷ்டம் என்று கருதுவார்களே. மனதைக் கட்டுப்படுத்தி அமைதியாக இருந்தாள். ஆனாலும் மனம் உள்ளே எரிமலையாக குமறிக்கொண்டிருந்தது.

கணேசன் மீண்டும் தொடங்கினான். “இந்த வட்டாரத்திலேயே நான்தென் மொத மொதலா பன்னெண்டு கோமாதாக்களையும் வச்சி கெரகப்பிரவேச பூசை செஞ்சவன். வந்தவங்க எல்லாத்துக்கும் மொதல்ல கோமியம் கொடுத்த பெறவுதான் பால கொடுக்கிறன். இது இந்தியால்யே நம்ம கட்சி செய்யாத புரட்சி, புதும.” இப்படியெல்லாம் சொன்னால் அவள் குடித்து விடுவாள் என்று நினைத்தான். “ஒங்களுக்கு மட்டும்ன்னு இல்லங்கம்மா, இன்னைக்கு வர்ற பெரிய பெரிய தலைவர்ங்க எல்லோருக்கும் கோமியம் கொடுத்த பெறவுதான் வேற எதுவும் சாப்பட கொடுப்போம். இதக் குடிப்பது ஒடம்பு நோய மட்டுமில்லாம பெறவி நோயையும் கொணப்படுத்தும் அருமருந்து பாத்துக்கங்க  இந்தக் கோமியம். இன்னைக்கு சமையலில் கோமிய இரசம், கோமியப் பாயாசம், கோமியம்மும் சாணியும் கலந்து செஞ்ச அடை தோசை, கோமியத்திலும் சாணியிலும் செஞ்ச கொலாப்சாமுன், கோமியம் கலந்த பிரியாணின்னு எல்லாத்தயும்  கோமியத்தைக் கொண்டு செஞ்சிருக்கோம்” என்று கணேசன் சொல்லி முடிக்குமுன் இருக்கையில் இருந்து எழுந்த வேகத்தில் எதிரே நின்றிருந்த தன் கணவன் நாராயணன் முகத்தில் பசுமாட்டு மோளை வீசினாள்.

அங்கு நின்றவர்கள் அனைவரும் திடுக்
கிட்டார்கள். பசுமாட்டு மோள் பட்டு வழிந்த சந்தனமும் குங்குமமும் நாராயணன் வெள்ளைச் சட்டையில் வழிந்தது.

நாராயணன் கண்களைத் துடைத்து விட்டு தன் மனைவியைப் பார்த்தான். அவள் தலைவாசலைத் தாண்டி தெருவில் நடந்து போய்க் கொண்டிருந்தாள். m