தமிழ்நாட்டின் ஆளுநராக ஆர்.என்.இரவி அவர்கள் பொறுப்பேற்றதிலிருந்து ஆர்.எஸ்.சிந்தாந்தங்களைத் திணிப்பதிலும், அதன் இலக்குகளைச் செயல்படுத்துவதிலும் தொடர்ந்து முனைப்புக் காட்டி வருகிறார். ஒரு ஆளுநர் எவற்றையெல்லாம் செய்யக்கூடாதோ அவற்றையெல்லாம் தேர்ந்தெடுத்துச் செய்து வருகிறார்.
அண்மையில் பி.ஜே.பி. தலைவர் நட்டா அவர்களும், ஆளுநர் ஆர்.என்.இரவி அவர்களும் கலந்துகொண்ட நிகழ்வில் ஆளுநர் பேசுகையில், இந்தியாவின் பண்பாடு வேதங்கள், ஆகமங்களின் அடிப்படையில் அமைந்தது என்று பேசியுள்ளார்!
முதலில் வேதங்களில் என்ன உள்ளன; ஆகமங்களில் கூறப்படுபவை எவை என்பது இவருக்குத் தெரியுமா? என்றால் உறுதியாகக் கூறலாம். இவருக்கு அவை பற்றி எதுவும் தெரியாது என்று.
வேதங்களைப் படித்தவர் எவரும் வேதத்தை உயர்த்திப் பேச மாட்டார்கள். இதற்கு எழுத்தாளர் சாரு நிவேதிதாவே சான்று.
‘‘வேதங்கள் உலகிலே உயர்ந்தவை என்று எல்லோரும் கூறுவதை நம்பி நானும் அவை உயர்ந்தவை, சிறந்தவை ஒப்பில்லாதவை என்றுதான் நினைத்துக் கொண்டிருந்தேன். பின்னர், அவற்றுள் என்னதான் இருக்கிறது என்று அறிந்துகொள்ளப் படிக்கத் தொடங்கினேன். அப்போதுதான் மலத்தை மிதித்ததைப் போன்ற உணர்வு பெற்றேன். அவ்வளவு கேவலங்களின் தொகுப்பு அவை’’ என்று எழுதியுள்ளார். அப்படியிருக்க வேதம் உயர்ந்தது என்பது எவ்வளவு பெரிய ஏமாற்று வேலை! இது கடவுளையே கேவலப்படுத்தும் கீழ்மைக் கருத்து அல்லவா?
வரலாற்று ரீதியாகப் பார்த்தால் ஆரியர்களுக்கு உருவ வழிபாடே கிடையாது; கோயிலும் சிலையும் இல்லையென்றால் ஆகமம் என்பதற்கே வேலையில்லை. ஆக, ஆகமங்கள் என்பவை ஆரியர்கள் கோயிலை வைத்துச் சுரண்ட, பிழைக்க உருவாக்கப்பட்டவை.
எனவே, கேவலமான வேதம், ஆகமம் இவைதான் இந்தியப் பண்பாட்டிற்கு அடிப்படை என்பது எவ்வளவு கேவலமான மோசடிக் கருத்து!
வேதமும், ஆகமமும் ஆரியர்கள் உருவாக்கியவை. ஆரியர்களே இந்த மண்ணிற்கு, இந்த நாட்டிற்கு அயல் நாட்டிலிருந்து பிழைக்க வந்தவர்கள். இந்த மண்ணின் மக்களை அடக்கவும், ஒடுக்கவும், ஆதிக்கம் செலுத்தவும், சுரண்டவும், அடிமைகளாக வேலை வாங்கவும், இழிவுபடுத்தவும் உருவாக்கப்பட இந்த இரண்டும் இந்த நாட்டின் பண்பாடு என்றால், இந்த மண்ணின் மக்களுக்கான பண்பாடுகள் இல்லையா? இது எவ்வளவு பெரிய பித்தலாட்டப் பிரச்சாரம்?
இந்தியா, பாகிஸ்தான் உள்ளிட்ட கிழக்காசிய நாடுகளுக்கு உரிமையான மண்ணின் மக்கள் தமிழர்கள் ஆரியர் வருகையால், இனக்கலப்பு, மொழிக் கலப்பு உருவாயிற்று. இங்கிருந்த மண்ணின் மக்கள் பேசிய தமிழ் சிதைந்தது. அடுத்து இஸ்லாமியர் வந்ததால் கலப்பு, தமிழ், சமஸ்கிருதம், உருது சேர்ந்து ஹிந்தி உருவாக்கப்பட்டது. தமிழர்க்கென்று இருந்த தனிப் பண்பாடுகளும் சிதைக்கப்பட்டன. இந்த வரலாறு ஏதும் அறியாமல் நினைத்தபடி பிதற்றுவது கண்டிக்கத்தக்கதல்லவா?
ஆரியர்கள், சூரியன், வாயு, வருணன் போன்ற இயற்கைச் சக்திகளைப் பார்த்து எங்களுக்கு நன்மை செய்யுங்கள். எதிரிகளை அழியுங்கள். மாறாக உங்களுக்கு நாங்கள் போதை தரும் கஞ்சா சாறு (சோம பானம்) தருகிறோம் என்று வேண்டுவதே வேதங்களில் உள்ள பாடல்கள். இதைத் தவிர வேறு எதுவும் வேதத்தில் இல்லை. இப்படிப்பட்ட கழிசடை குப்பையைக் கடவுள் தந்தது, உலகில் உயர்ந்தது என்று ஏற்றிப் போற்றுவது மோசடியின் உச்சம் அல்லவா?
கடவுள் தந்தவை வேதம் என்றால் இவ்வளவு காழ்ப்புணர்ச்சி அதில் இருக்குமா? சிந்தித்துப் பார்க்கவேண்டும்.
எடுத்துக்காட்டாக, ரிக் வேதத்தில் முதலாம் மண்டலத்தில் 12ஆவது, 13ஆவது பாடல்கள் அக்னியைப் பார்த்து வேண்டுவன.
”வேள்விக்கு முதன்மையானவனே! எங்கள் பகைவர்களை அழி! எங்கள் வேள்வியைக் காண வாருங்கள். நாங்கள் தரும் கஞ்சா சாற்றைப் (சோம பானத்தைப்) பருகுங்கள்! எங்களுக்கு நன்மை செய்யுங்கள்!’’
வேதங்கள் முழுக்க இப்படிப்பட்ட மிகக் கேவலமான பிரார்த்தனைப் பாடல்கள்தான்
உள்ளன. இவைதான் உலகத்தில் உயர்ந்தவை
யாம்; கடவுளால் படைக்கப்பட்டனவாம். எப்படிப்பட்ட மோசடி! சிந்தித்துப் பாருங்கள்.
அதேபோல் ஆகமம் என்பதும் பித்தலாட்டங்களின் தொகுப்பு. விளக்கமாகத் தெரிந்துகொள்ள நான் எழுதிய ‘‘காவிகளுக்கு கருப்பின் பதிலடி’’ என்ற நூலைப் படிக்கவும்.
ஒரு குறிப்பிட்ட ஜாதியினர் கோயிலில் பூஜை செய்யவேண்டும். மற்றவர்கள் அதைச் செய்ய உரிமையில்லை; உயர்ஜாதியில் பிறந்தாலும் பெண்களுக்கு அந்த உரிமையில்லை என்கிறது ஆகமம். இது சரியா? நீதியா? இதைக் கடவுள் படைத்தது.
வேதப்பண்பாடு என்பது ஆரியப் பண்பாடு ஆரியர்கள் இந்நாட்டில் வருவதற்கு முன் இங்கு இருந்தது. தமிழர்ப் பண்பாடு மட்டுமே. தமிழர் பண்பாட்டில் சமத்துவம், சமூகநீதி, பெண் உயர்வு, காதல் மணம், நன்றியின்பாற்பட்ட வழிபாடு, நகர நாகரிகம், கடல் வணிகம், பிறப்பால் சமம் பல நாட்டுத் தொடர்பு, உழவை மதித்தல் இப்படி பல.
ஆனால் ஆரியப்பண்பாடு என்பது எது?
பெண்ணடிமை, சடங்குகள், மூடநம்பிக்கை, ஆதிக்கம், உயர்வு தாழ்வு, பெண்ணைப் பொருளாகக் கருதி தானம் செய்தல், பிறப்பால் ஏற்றத்தாழ்வு, பொருள்களை, உயிர்களைத்தீயில் அழித்தல், உழவை ஒதுக்கல், உரிமை மறுத்தல் இப்படிப்பல.
இன்று இந்தியாவில் இருப்பது
எந்த பண்பாடு?
எந்த பண்பாடு?
வர்ணபேதம்
பிரம்மாவின் முகத்தில் பிறந்தவன் பிராமணன், தோளில் பிறந்தவன் ஷத்திரியன் இடுப்பில் பிறந்தவன் வைசியன், காலில் பிறந்தவன் சூத்திரன் என்று மனிதர்களைப் பிறப்பால் உயர்வு தாழ்வாக நடத்தியது, இழிவு, புனிதம் கற்பித்தது ஆரியப்பண்பாடு. ஆரியர்கள் வருகைக்கு முன்போ அல்லது தற்காலத்திலோ அது நடப்பில் உள்ளதா, இடைப்பட்ட காலத்தில் அரசர்கள் துணையோடு ஆரியர்கள் ஆதிக்கம் செலுத்திய போது நடைமுறைப்படுத்தப்பட்ட மனிதநேயமற்ற மனிதத்தன்மைக்கு எதிரான ஒரு வாழ்க்கை முறையல்லவா வருணமுறை.
ஆனால் தமிழர்கள், ‘‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’’ என்று எல்லா உயிர்களையும் சமமாக எண்ணியவர்கள். மனிதரில் உயர்வு தாழ்வு, இழிவு, புனிதம் இல்லை என்றவர்கள். ஆரியர்கள் ஆதிக்கம் செலுத்துவதற்கு முன் இவைதான் நடப்பில் இருந்தன. இந்த
இரண்டு பண்பாடுகளில் இன்று இந்தியாவின் பண்பாடாக வென்று நிற்பது எது? இன்று நடைமுறையிலும் சட்டப்படியும் இந்தியாவின் வாழ்வியல் எது?
நீ சூத்திரன் எனக்கு அடிமை வேலை செய் என்று பிராமணன் இன்றைக்கு சொல்ல முடியுமா? நடத்த முடியுமா? ஆதிக்கம் செலுத்த முடியுமா? ஆரியர் வாழ்வியலை இன்று அமல்படுத்தினால் அது சட்டப்படி குற்றச் செயல் அல்லவா?
பிராமணர் படிக்க வேண்டும், மற்றவர்களுக்குக் கல்வி கற்கும் உரிமை இல்லை என்ற ஆரியப் பண்பாடு இன்று இந்தியாவில் உள்ளதா? இன்றைக்கு எல்லா மக்களும் கல்வி கற்கிறார்கள், ஆரியர்களைவிட கல்வியில் சிறந்து, புலமையோடு விளங்குகிறார்கள் அப்படியென்றால் இன்றைக்கு இந்தியாவில் வென்று நின்ற வாழ்க்கைமுறையாக உள்ளது. வேதப்பண்பாடா? தமிழர் பண்பாடா, வேதப் பண்பாட்டின்படி பிராமணர்களைத் தவிர மற்றவர்கள் படிக்கமுடியுமா?
ஆரியப் பண்பாட்டின்படி 90% மக்கள் பிராமணனுக்கு அடிமை வேலை செய்து பிழைக்க வேண்டும் அவர்களுக்கு எந்த உரிமையும் இல்லை. இழிந்த பெயர், ஒதுக்கிய தானியம், பழைய ஆடை இவையே சூத்திரனுக்கு என்ற நிலை இன்று இந்தியாவில் உள்ளதா? தாழ்த்தப்பட்ட மக்கள் எவ்வளவு சிறந்த பெயர்களைச் சூட்டிக் கொள்கிறார்கள்? எப்படிப்பட்ட சிறப்பான ஆடைகளை அணிகிறார்கள், விரும்பும் உணவை உண்கிறார்கள், எல்லா பணிகளிலும் பணியாற்றுகிறார்கள்! ஆரிய பார்ப்பனர்க்கு உயர் அதிகாரியாய் பணியேற்று தாழ்த்தப்பட்டவர் ஆணையிடும் நிலை இன்றைக்கு இருக்கிறதா? ஆரிய அடிமைமுறை இருக்கிறதா? எது நடப்பில் உள்ளது? ஊரின் புறத்தே ஒதுக்கபட்ட மக்கள் இன்றைக்கு ஒரே அடுக்குமாடிக் கட்டடத்தில் அருகருகே வாழ்வது வேதப்பண்பாடா? வேதம் இதைச் சொல்கிறதா? ஏற்கிறதா?
கடல் கடக்கும் வாழ்வியல்
பிராமணன் கடல் தாண்டக் கூடாது என்கிறது வேதப்பண்பாடு. கடல் கடந்து பரவி வணிகம் செய்து வாழ்ந்தவர்கள் தமிழர்கள். இன்று யாருடைய பண்பாடு வாழ்வியலாக உள்ளது? கடல் தாண்டக் கூடாது என்ற வேதப்பண்பாடு இன்று நடப்பில் உள்ளதா? ஆரியப் பார்ப்பனர்களே அயல் நாடுகளுக்குக் கடல் தாண்டி சென்று வாழ்கிறார்களே! இங்கு நடைமுறையில் உள்ள தமிழர் பண்பாடா? ஆரியர்களின் வேதப்பண்பாடா?
உழவு
உழவே உலகில் உயர் தொழில் என்றது தமிழர் பண்பாடு. ஆனால் உழவைப் பாவத் தொழிலாகக் கூறியது வேதப் பண்பாடு. நிலத்தைப் பண்படுத்தி, உழுது பயிரிட்டு உலகுக்கு அளிக்கும் உயர் தொழிலை, பாவத் தொழில் என்ற பண்பாடு நிலைத்ததா? இன்றைக்கு பார்ப்பனர்களே நிலத்தின் உரிமையாளராய் இருந்து வேளாண்மை செய்கிறார்கள் இந்தியாவில் இன்று வென்று நின்றது தமிழர் பண்பாடா? ஆரியர்களின் வேதப்பண்பாடா?
அணைக்கட்டி நீர்த்தேக்கல்
மலைகளில் வீழும் அருவி நீரையும், நிலப்பரப்பில் வீழும் மழைநீரையும் அணைக்கட்டி தேக்கி அதைக் கால்வாய் மூலம் வேண்டும் இடத்திற்குக் கொண்டு சென்று வேளாண்மை செய்தது தமிழர்பண்பாடு, அணைக் கட்டி நீரைத் தடுக்கக் கூடாது என்று கட்டிய அணைகளையே உடைத்தவர்கள் ஆரியர்கள். நீரைத் தடுக்கக் கூடாது என்று கூறிய வேதப்பண்பாடு நடைமுறையில் நகைப்புக்கு உரியதாக ஆகவில்லையா? வாழ்வியலுக்கு உகந்ததாக வென்று நின்றது தமிழர் பண்பாடல்லவா?
திருமணம்
பெண் என்பவள் ஆணின் உடமை என்று கூறி அதன்படி வாழச் செய்தது வேதப்பண்பாடு பெண்ணைப் பெற்றவர்கள், அவளை ஓர் ஆணுக்கு தானமாகக் கொடுக்கும் முறையைச் சொன்னது வேதம். ஆனால், வயதுவந்த ஆணும் பெண்ணும் தனிமையில் சந்தித்துக் காதல் வளர்த்து விருப்பத்தின் பேரில் சேர்ந்து வாழும் வாழ்வியல் தமிழருடையது. இதில் இன்று நடப்பில் உள்ளது எது? சட்டம் ஏற்கப்படுவது எது? வேதப்பண்பாடா? தமிழர் பண்பாடா?
பெண்ணுரிமை
பெண்களை உயர்நிலையில் வைத்து உரிமை பெற்றவர்களாய் வாழச் செய்தது தமிழர் பண்பாடு; பெண்ணுக்கே சொத்துரிமை பெண் பிறந்த இடத்தில் நிலையாக இருக்க வேண்டும். அவளை மணம் செய்யும் ஆண் அவள் வீட்டில் வந்து வாழ வேண்டும் என்ற தாய்வழிச் சமுதாயம் தமிழருடையது. ஆனால், பெண் என்பவள் ஆணைச் சார்ந்தே வாழவேண்டும் அவளுக்கு கல்வி கூடாது, சொந்த அறிவு கூடாது, சொத்துரிமை கூடாது என்றது வேதப்பண்பாடு. ஆனால், பெண்களுக்குச் சொத்தில் சம உரிமை தர வேண்டும் என்பது இன்றைக்கு சட்டப்படியான நடைமுறை! இங்கு வேதப்பண்பாடு நின்று நிலைத்ததா? வேதப்பண்பாட்டை மக்கள் ஏற்பார்களா?
பெண்கள் கல்வி கற்கக்கூடாது என்ற வேதப்பண்பாடு இன்று நடப்பில் உள்ளதா? ஆணை நம்பியே பெண் வாழ வேண்டும் என்று வேதம் கூறுவது இன்றைக்கு வாழ்க்கை முறையா? பெண் ஆட்சியாளராக வரக்கூடாது என்ற வேதப்பண்பாடு நடப்பில் உள்ளதா? பார்ப்பனப் பெண்களேஅதை ஏற்கவில்லையே! பார்ப்பன ஆண்களே வருவாய் வருகிறதென்று மகிழ்ச்சியாக டாட்டா காட்டி வேலைக்கு அனுப்புகிறார்களே வேதப்பண்பாடு நின்றதா?அவாளே டாட்டா காட்டிவிட்டார்களே!
உருவ வழிபாடு
இன்றைக்கு சிலைகளை வைத்து, கோயில் கட்டி வழிபாடு செய்கிறார்களே அது வேதப்பண்பாடா? வேதத்தில் உருவ வழிபாடும், ஆலய வழிபாடும் உண்டா? ஆண் – பெண்
உறுப்பு வழிபாடு நடுகல் வழிபாடு, நிலத்தலைவர் வழிபாடு தமிழர்க்கு உரியவை. அவற்றை மோசடியாகத் திரித்து, புராணங்கள் எழுதி, பல கடவுள்களை உருவாக்கி, கடவுளுக்கு திருமணம், பிள்ளைகள் என்று கதை புனைந்து, கோயில்கட்டி, கும்பாபிஷேகம் செய்து, யாகசாலை, அபிஷேகம், அர்ச்சனை என்று பலவற்றை உண்டாக்கி மோசடியால் பிழைக்கின்றவர்களுக்கு கலாச்சாரம் ஏது? அவர்கள் கற்பித்த கலாச்சாரம் ஆகமம் எல்லாம் ஆதிக்கம் செலுத்தவும் சுரண்டவும் தானே! ஆரிய வேத கலாச்சாரம் இன்று நடப்பிலும் இல்லை சட்டத்திற்கு ஏற்பவும் இல்லை என்பதுதானே உண்மை.
இளம் வயது திருமணம்
பெண்ணை 5 வயதிலே ஓர் ஆணுக்குத் திருமணம் செய்து விட வேண்டும். அவளுக்கு எல்லாமும் அந்த ஆண் தான் என்கிறது வேதப்பண்பாடு. இன்றைக்கு இது நடப்பில் ஏற்கப்படுகிறதா? அப்படிச் செய்தால் அது சட்டப்படி குற்றம், தண்டனை! இதுதானே உண்மை. அப்படியிருக்க இன்றைய இந்தியாவின் வாழ்க்கை முறை வேதகாலச் சாரத்தின் படியானது என்பது எவ்வளவு பெரிய மோசடிக்கருத்து
உடன்கட்டை ஏற்றுதல்
கணவனின் வாழ்வே மனைவியின் வாழ்வு. கணவன் இறந்தால் அவனைக் கொளுத்தும் நெருப்பிலே, உயிருடன் உள்ள மனைவியைத் தள்ளி எரிக்க வேண்டும் என்பது ஆரிய பண்பாடு. இன்று இதை ஏற்கிறார்களா? அப்படிச் செய்தால் மரணதண்டனைக்குரிய குற்றமல்லவா?
வேள்வி
எதிரியை வெல்ல வேதம் கூறுவது வேள்வி செய்தல். வேள்வி செய்வதன் மூலம் எதிரியை அழிக்க முடியும் என்கிறது வேதம். வேதத்தில் கூறப்பட்டுள்ள பெரும்பகுதி கருத்துகள் இதுதான். இது இன்றைய நடைமுறைக்கு ஏற்றதா? அண்மையில் பாகிஸ்தானுடன் சண்டை போட்டார்களே! வேள்வி நடத்தினார்களா? ஏவுகணைகளைப் பயன்படுத்தினார்களா? வேதகலாச்சாரப்படி வேள்வி நடத்தியிருந்தால் விளைவு என்னாகியிருக்கும்!
மனைவியை வைத்து சூதாடுதல்
சூதாடுகின்றவர்கள் பொன்னைப் பொருளை பணயமாக வைத்துச் சூதாடுவது வழக்கம். ஆனால்? ஆளுநரின் பாரதப் பண்பாடு கட்டிய மனைவியை வைத்துச் சூதாடுகிறது. பெண்ணை உயிருள்ள, உணர்வுள்ள ஒரு மனிதப் பிறவியாக் கருதாமல் அவளை ஒரு பொருளாக கருதும் பண்பாடு கலாச்சாரம் பெருமைக்குரியதா? உலகிலுள்ளவர்கள் காரி உமிழமாட்டார்களா? இப்படிப்பட்ட சமுதாயக் குற்றச் செயல்களைக் கலாச்சாரம் என்பது கண்டிக்கத்தக்கது அல்லவா?
வேதக் கடவுள் இந்திரன் யோக்கியதை என்ன?
அடுத்தவன் மனைவியை, கணவன் வீட்டில் இல்லாத நேரத்தில், வீட்டிற்குள் நுழைந்து, கணவனைப் போல வேடமிட்டு உடலுறவு கொண்ட ஓர் அயோக்கியனைக் கடவுளாக வணங்கி வேள்வி செய்யும் பாடல்களைக் கெண்ட வேதம் உயர்ந்ததா? இப்படிப்பட்ட இந்திரனைப் போற்றிப் புகழும் வேத கலாச்சாரம் தான் இந்திய கலாச்சாரமா? இந்தக் கலாச்சாரத்தைப் பின்பற்றி ஒவ்வொருவனும் அடுத்தவன் வீட்டில் நுழைந்தால் என்னாகும்?
நளாயினி செய்தது பண்பாடா?
தொழுநோயால் பாதிக்கப்பட்ட தன் கணவன், ஒரு விலைமாதுவை விரும்புகிறான், அவளோடு உறவு கொள்ள ஆவன செய்யும்படி கேட்டுக்கொள்கிறான் என்பதற்காக, படாதபாடுபட்டு அந்த விலை மாதுவைச் சம்மதிக்க வைத்து, கால் அழுகி நடக்கமுடியாத தன் கணவனைக் கூடையில் உட்கார வைத்து, சுமந்து சென்று விபசாரியிடம் விட்டு, தன் கணவன் ஆசையைப் பூர்த்திச் செய்தாள் நளாயினி. அவளே கற்புக்கு அடையாளம் என்கிற ஆரியப் பண்பாடு இன்று நடப்பில் உள்ளதா? ஆளுநர் இதை ஆதரிக்கிறாரா? ஏற்கிறாரா?
வரலாறும் தெரியாமல், வேதமும் படிக்காமல், கலாச்சாரமும் அறியாமல் வாய்க்கு வந்தபடி ஒவ்வொரு நாளும் பிதற்றுவது பொறுப்புள்ள ஓர் ஆளுநருக்கு அழகா? ஆர்.எஸ்.எஸ். சிந்தாந்த வெறியில் பதவியை மறந்து கருத்துகள் கூறுவது கண்டிக்கத்தக்கதாகும்.