அழைப்பு வந்தவுடன் செல்போனை எடுத்தார் பூங்குன்றன். மறுமுனையில் அவரது நண்பர் இராகவன் பேசினார்.
“நாளைக்கு பூசம். எல்லோரும் வந்திடணும். மத்தியான சாப்பாடு சபையில் சாப்பிடணும்.”
பூங்குன்றன் சற்று யோசித்துவிட்டு பதில் சொன்னார்.
“நாளைக்கு நான் மட்டும்தான் வீட்டில் இருப்பேன். எல்லோரும் ஊருக்குப் போறாங்க. நான் மட்டும் வர்ரேன்” என்றார்.
“சரி, சரி. மறக்காம வந்திடு”, என்று சொல்லி பேச்சை முடித்தார் இராகவன்.
இராகவன் தீவிரமான கடவுள் நம்பிக்கை
யாளர். ஏதாவது ஒரு கல்லின்மீது கிழிந்த பழைய துணி காற்றில் அடித்து வந்து சுற்றிக்கொண்டாலும் அதையும் பார்த்து கும்பிடுவார். இத்தனைக்கும் அவர் படித்தவர். ஆசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர்.
அவரும் அவரது நண்பர் பூங்குன்றனும் நெடுநாளைய நண்பர்கள். பூங்குன்றனும் ஆசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். சில ஆண்டுகள் இருவரும் ஒரே பள்ளியில் இணைந்து பணியாற்றியவர்கள்.
இராகவனின் பல செய்கைகள் பூங்குன்றனுக்
குப் பிடிக்கவில்லையென்றாலும், இருவரும் மிகுந்த நட்புடனேயே பழகி வந்தார்கள். மற்றவர்களுக்கு உதவ வேண்டும் என்ற எண்ணம் இராகவனுக்கு இருந்தாலும் சில அநியாயங்களுக்கும் பக்தி என்ற போர்வையில் துணை நிற்பார். அநியாயக்காரர்களுக்கு ஆதரவாகவும் பேசுவார். அதனால் இருவருக்கும்
வாக்குவாதங்களும் பிணக்குகளும் அவ்வப்போது
வரும். காரணம் பூங்குன்றன் சிறந்த பகுத்தறிவுவாதி. இருப்பினும் அவர்களது நட்பு அதனால் பாதிக்கப்படுவதில்லை.
இராகவன் ஒரு கோயில் விடாமல் சுற்றுவார். எல்லா சாமிகளையும் கும்பிடுவார். ஒரு நாள் பச்சை வேட்டி கட்டிக்கொண்டு பாத யாத்திரை போவார். மற்றொரு நாள் சிவப்பு வேட்டி கட்டிக்கொண்டு அம்பாளைத் தரிசிக்கச் செல்வார். இன்னொரு நாள் கருப்பு வேட்டி கட்டிக்கொண்டு மலைக்குப் போவார். இப்படி ஒரு சாமியையும் விடாமல் ஓய்வூதியத்தின் பெரும் பகுதியைச் சாமிக்கே செலவிடுவார்.
இப்போது புதிதாக ஒரு சில ஆண்டுகளாக திடீரென வள்ளலாரையும் வணங்க ஆரம்பித்துவிட்டார்.
பூங்குன்றனுக்கும் ஒரு யோசனை தோன்றியது. இவர் ஊர் ஊராக, கோயில் கோயிலாக, சுற்றுவதைத் தடுக்க வேண்டுமானால் ஒரு சாமியை மட்டும் கும்பிட அவரை ஊக்கப்படுத்த வேண்டும். இதனால் அவருக்கு அலைச்சல் குறையும். மேலும் அந்தச் செலவை வேறு நல்ல காரியங்களுக்குப் பயன்படுத்தச் செய்யலாம் என எண்ணினார். இராகவனின் துணைவியாரும் இது பற்றி ஏற்கெனவே பூங்குன்றனிடம் சொல்லியிருக்கிறார். அவரது துணைவியார் மரகதமணிக்கும் அவரது போக்கு பிடிக்கவில்லைதான்.
“சாமி கும்பிட வேண்டியதுதான். அதுக்காக இப்படியா? வெட்டி செலவு செய்கிறார். யார் சொல்லியும் கேட்கல. சாமி பைத்தியம் பிடித்து அலைகிறார். நீங்களாவது சொல்லிப் பாருங்க”, என்று ஒரு நாள் பூங்குன்றனைக் கேட்டுக்கொண்டார்.
எல்லாவற்றையும் நினைத்துப் பார்த்த பூங்குன்றன் மறுநாள் இராகவன் அழைப்பை ஏற்று செல்ல முடிவு செய்தார்.
இராகவன் வீடு அமைந்துள்ள தெருவிலேயே ஒரு வள்ளலார் சபை அமைக்கப்பட்டிருந்தது. அந்தத் தெருவில் இருந்த சிலர் ஒன்று கூடி வசூல் செய்து அந்தச் சபையைக் கட்டினார்கள். இராகவனும் ஒரு பெரும் தொகையை அதற்காக கொடுத்துள்ளார்.
மாதா மாதம் பூசம் நடைபெறும் நாட்களில் அன்னதானம் என்ற பெயரில் அங்கேயே உணவு தயாரித்து மக்களுக்குச் சோறு போடுவார்கள். யார் வேண்டுமானாலும் போய்ச் சாப்பிடலாம். பூங்குன்றனையும் பல நேரங்களில் அழைப்பார் இராகவன். வாய்ப்பு கிடைக்கும்போது பூங்குன்றன் சென்று வருவார்.
ஆனால், இம்முறை நேராக சபைக்குச் செல்லாமல் இராகவன் வீட்டிற்கு வந்தார் பூங்குன்றன். பெரும்பாலும் அவரிடம் சில காலமாக சாமி பற்றியோ, அரசியல் பற்றியோ பூங்குன்றன் பேசுவதில்லை.
“அவர் பக்தராக இருக்கிறார். இருந்துவிட்டுப் போகட்டும். நமக்கேன் வம்பு”, என்கிற தன்மையில் அவர் இருந்தார்.
“வா, பூங்குன்றன். இப்போதுதான் சபையிலிருந்து வீட்டிற்கு வருகிறேன். சமையல் ஆயிகிட்டு இருக்கு. எப்படியும் முந்நூறு பேராவது சாப்பிட வருவாங்க. வடை பாயாசத்தோடு சாப்பாடு. நீயும் உட்கார்ந்து சாப்பிடணும்,” என்று சொல்லியபடியே அவரை வரவேற்றார் இராகவன். தனது துணைவியார் மரகதமணியிடம் தேநீர் கொண்டு வரச்சொல்லி விட்டு பூங்குன்றன் எதிரில் உட்கார்ந்தார் இராகவன்.
“வள்ளலாரைப் பத்தி நீ என்ன நினைக்கிறே?” என்று திடீரெனக் கேட்டார் இராகவன்.
“வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன். என்றார் வள்ளலார். பசிப்பிணி கொடியது. அதற்கு ஒரே மருந்து உணவுதான். அதனால் பசிப்பிணியால் வாடுவோருக்குச் சோறு போட வேண்டும். நல்ல சிந்தனை அவருக்கு,” என்றார் பூங்குன்றன்.
“தில்லைக்கூத்தனின் மேல் அவருக்கு அளவு கடந்த பக்தி, என்றார் இராகவன்.
“அதெல்லாம் ஆரம்பக் காலத்தில். பிற்பாடு அவர் எதையும் நம்பவில்லை. கடவுளுக்கு உருவம் கிடையாது. உருவ வழிபாடு கூடாது. கடவுள் ஒளி வடிவமானவன், அன்பே கடவுள் என்றெல்லாம் சொல்லி, “அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை” என்ற கொள்கையை வகுத்தார். மற்றப்படி அவர் மதத்தைப் பேய்க்கு ஒப்பிட்டார். மதம் வேண்டாம், அது கூடாதென்றார்”, என்று சொன்னார் பூங்குன்றன்.
“நீ நாத்திகன். இப்படித்தான் பேசுவ. ஆகம விதிப்படியான கோயிலில் இருக்கும் கடவுள்கள் சக்தி மிக்கவை”, என்றார் இராகவன்.
அவருக்கு மறுப்பு தெரிவித்து பேசினார் பூங்குன்றன்.
“வேதம் ஆகமங்கள் என்று வீண்வாதம் ஆடுகின்றீர்
வேதாக மத்தின் விளைவறியீர் சூதாகச்
சொன்னவலால் உண்மைவெளி தோன்ற
உரைக்கவில்லை
என்ன பயனோ இவை”
இப்படித்தான் வள்ளலார் பாடியிருக்கார். அவரது கூற்றுப்படி வேதம், ஆகமம், புராணம், இதிகாசம் எதுவும் உண்மையல்ல பொய்யானது ஆகும். நீ வள்ளலாரைப் போற்றுகிறாய். ஆனால், இவர் கூற்றைப் பின்பற்றவில்லையே.
இப்படி பூங்குன்றன் சொன்னதும் அதற்குப் பதில் சொல்லத் தெரியாமல் பொருள் ஏதுமின்றி தொடர்பற்ற வாதங்களை முன்வைத்தார்.
“நீ மட்டும் பெரியார் கொள்கைகளையெல்லாம் பின்பற்றுகிறாயா?” என்றார்.
”நான் நூறு சதவீதம் பின்பற்றுகிறேன் என்று சொல்ல மாட்டேன். பெரியார் ரயிலில் பயணம் செய்தால் மூன்றாம் வகுப்பு பெட்டியில்தான் பயணம் செய்வாராம். அதேபோல் நானும் செய்ய வேண்டும் என எதிர்பார்ப்பது தவறு. தற்போதைய சூழல், உடல்நலம் போன்றவற்றையெல்லாம் நான் பார்க்க வேண்டியுள்ளது. ஆனால், முடிந்தவரை சிக்கனத்தைக் கடைப்பிடிக்கிறேன். காந்தியவாதிகள் யாரும் காந்திபோல் உடையணிவதில்லை. ஆனால், அடிப்படைக் கொள்கைகள் என்று சில உள்ளன. அப்படிப் பார்த்தால் பெரியாரது அடிப்படைக் கொள்கைகள் சுயமரியாதை, பகுத்தறிவு, பெண்ணடிமை ஒழிப்பு, ஜாதி ஒழிப்பு, இடஒதுக்கீடு போன்றவைகள்தான் இவைகளை நான் இன்றுவரை கடைப்பிடித்து வருகிறேன். இன்றும் நான் கடவுள் மறுப்பாளன். இன்னொன்றையும் உனக்கு நான் விளக்கமாகச் சொல்கிறேன் கேள். உலகத்திலேயே இன்று தனது தலைவரின் அடிப்படைக் கொள்கைகளைக் கடைப்பிடிப்பவர்கள் பெரியார் தொண்டர்கள் மட்டுமே. வேறு எந்தத் தலைவரின் அடிப்படைக் கொள்கைகளைக் கடைப்பிடிக்கும் தொண்டர்கள் உலகில் எந்த இயக்கத்திலும் பெருமளவில் காண முடியாது.”
இவ்வாறு பேசிய பூங்குன்றன் இடையில் சற்று பேச்சை நிறுத்தி விட்டு இராகவனைப் பார்த்து ஒரு கேள்வி கேட்டார்.
“நீ வள்ளலாரைப் போற்றுகிறாயே, வள்ளலாரின் அடிப்படை கொள்கைகள் என்ன?”
“பசித்தவனுக்குச் சோறு போடணும்”, என்றார் இராகவன்.
“அது ஒரு கொள்கைதான். ஆனால் அவர் இன்னும் சொன்னது ஜீவகாருண்யம், புலால் உண்ணாமை, ஜாதி, மத ஒழிப்பு, ஜோதி வழிபாடு. இதில் ஒன்றைக் கூட நீ பின்பற்றவில்லை என்று பூங்குன்றன் சொன்னவுடன் சற்றே அதிர்ந்தார் இராகவன்.
“என்ன இப்படி சொல்லிட்ட. நான் வள்ளலார் கோயில் கட்ட நிறைய பணம் கொடுத்திருக்கேன் தெரியுமா?” என்றார்.
“உண்மைதான். கொடுத்திருக்கலாம். ஆனாலும் போன வாரம் கூட உன்னை நான் கறிக்கடையில் பார்த்தேன். ஆனால் அது தவறல்ல. உணவு உன் உரிமை. அதோடு மட்டுமல்லாமல் நீ மது குடிப்பதும் எனக்குத் தெரியும். கலர் கலரா வேட்டி கட்டிக்கிட்டு வள்ளலாருக்கு விரோதமா கோயில் கோயிலா சுத்திக்கிட்டு இருக்கிறாயே! விவசாயிகள் விளைவித்த உணவுப் பொருட்கள் பலவற்றை மக்களுக்கு, பசியாற்றக் கொடுக்காமல் கல்லுக்குப் கொட்டிக்கிட்டு வர்ரீயே! இதுதான் நீ வள்ளலாரைப் போற்றும் லட்சணமா? ஒரு மக்கள் விரோதக் கூட்டம் வள்ளலாருக்கும் மதச்சாயம் பூசி அவரையும் தமதாக்கிக் கொண்டு குறுகிய வட்டத்தில் அவரை அடைக்க நினைக்கிறது. வள்ளலாரைப் போற்றுவது போல் போற்றி அவரை இழிவுபடுத்தும் கூட்டம் அது. அதன் வலையில் படித்த நீயும் விழுந்துவிட்டது வேதனையானது, வெட்கக்கேடானது,” என்று காட்டமாகவே பேசினார் பூங்குன்றன்.
“நீங்க தமிழைக் காட்டுமிராண்டி மொழின்னு சொன்னவங்க”, என்று பேச்சை மாற்றினார் இராகவன்.
“இப்படியெல்லாம் பேச உனக்கு வெட்கமாக இல்லையா? இதுக்கெல்லாம் எப்பவோ பதில் சொல்லியாச்சு. தமிழை நீச பாஷைன்னு சொன்ன கூட்டத்தையெல்லாம் விட்டுவிட்டு அக்கறையின்பால் சொன்னதைப் பிடிச்சிகிட்டு அலையுற கூட்டத்தில் நீயும் இருப்பது வெட்கக்கேடு. இன்று இந்தி நுழையாமல் தமிழைக் காப்பது நாங்கள்தான்”, என்று பெருமையுடன் சொன்னார் பூங்குன்றன்.
“பணக்காரன் மட்டும்தான் இந்தி படிக்கணுமா? ஏழை பசங்க இந்தி படிக்கக் கூடாதா? டெல்லி போனா எந்த மொழியில் பேசுவதாம்? இந்த நாடு கெட்டது ஈ.வெ.ரா., அண்ணாதுரையால்தான்”, என்று விஷத்தைக் கக்கினார் இராகவன்.
இப்படி அவர் பேசியதைக் கேட்ட பூங்குன்றன் மி
கவும் வருந்தினார். அவர் உடல் முழுவதும் அடிமை விஷம் பரவிவிட்டதை உணர்ந்தார்.
இவரைப் போன்ற மாசுபட்ட மனிதர்கள் பெருகினால் நாட்டு மக்களுக்குக் கேடாகவே முடியும். இயற்கைதான் இவர்களுக்கு நல்ல புத்தியைக் கொடுக்கவேண்டும். கொஞ்ச நாளாகவே இவரது போக்கு சரியில்லை என்பதை உணர்ந்தார் பூங்குன்றன். ஆனால், இவர்களை இப்படியே விட்டுவிடவும் முடியாது.
இப்படி பூங்குன்றன் சிந்தித்துக் கொண்டிருந்த
போது மரகதமணி தேநீர் எடுத்து வந்தார். எடுத்து வந்த கையோடு படபடவென பேச ஆரம்பித்துவிட்டார்.
“இவர் பேசினதை நான் கேட்டுக்கிட்டுத்தான் இருந்தேன். இவரது போக்கு கொஞ்ச காலமாகவே
சரியில்லை. இவருக்கு உண்மையிலேயே வள்ளலார் மீது பற்று இருப்பதாக எனக்குப் படவில்லை. கொஞ்ச காலமா, தான் படிச்சவர் என்பதையும் மறந்துட்டு செய்ஞ்சிகிட்டு இருக்கிற பாவத்தைப் போக்க நாலு பேருக்கு அன்னதானம் போடறதா சொல்லிக்கிட்டு இருக்காரு. நானும் இதுவரைக்கும் பொறுமை
யாத்தான் இருந்தேன். ஆனால், எப்ப இவர் தந்தை பெரியாரை இழிவுபடுத்தி பேசினாரோ இதுக்கப்புறமும் நான் சும்மா இருக்க மாட்டேன். பெண்கள் இன்று சுயமரியாதையோடு வாழக் காரணமே பெரியார்தான். பெண்கள் எல்லாம் தீர்மானம் போட்டுத்தான் அவருக்குப் பெரியார் என்ற பட்டமும் கொடுத்தாங்க. அந்தத் தலைவரை இழிவுபடுத்தி சில கேடு கெட்டவர்கள் பேசிக்கிட்டு இருக்காங்க. அதில் இவரும் ஒருவரா சேர்ந்திருக்கார். அதுக்குக் காரணமும் இருக்கு. கொஞ்ச காலமா இவரைச் சாமியார்கள் என்ற போர்வையில் சிலர் அடிக்கடி வந்து சந்திக்கிறாங்க. பணமும் கொடுக்கிறாங்க. பெரியாரை இழிவுபடுத்தி பேசணும், சமூக வலைத் தளங்களில் பதிவிட
ணும்னு சொல்லித்தான் பணம் கொடுப்பது இப்பத்தான் எனக்கு விளங்கிடுச்சி. இப்படியே இவர் பொய்ச் செய்திகளைப் பரப்பிகிட்டு இருந்தா நானே இவர்மீது போலீசில் புகார் கொடுப்பேன். இதை எனது புரட்சிக்குரலாக எடுத்துக்கொள்ளுங்க”, என்று பூங்குன்றனைப் பார்த்து பேசினார் மரகதமணி.
மரகதமணி பேசியதைக் கேட்ட பூங்குன்றன் நிம்மதியடைந்தார். பெண்கள் உண்மையை உணர்ந்து கொண்டனர். அவர்கள் கோபத்தில் இராகவன் போன்றோரின் பொய்யுரைகள் பொசுங்கிப்போகும். அவர்களும் நிச்சயம் தெளிவு பெறுவார்கள். மரகதமணியின் புரட்சிக்குரல் இனி எங்கும் ஒலிக்கும் என்று நினைத்தவாறே இராகவனைப் பார்த்து ‘திருந்து’ என்று பார்வையால் பேசிவிட்டு கிளம்பினார் பூங்குன்றன். w