உயர் எண்ணங்கள் மலரும் சோலையாம் நம் அறிவு ஆசான் தந்தை பெரியார் அவர்களால் 1922ஆம் ஆண்டு சிந்திக்கப்பட்டு, 1925ஆம் ஆண்டில் ஈரோட்டில் வழக்குரைஞரும், கடவுள் நம்பிக்கையாளரும், காங்கிரஸ் வாதியுமான திரு. வா.மு. தங்கபெருமாள்பிள்ளை அவர்களை இணை ஆசிரியராகக் கொண்டு துவக்கப்பட்டது “குடிஅரசு” வார இதழ்.
இந்த ஆண்டு அதன் நூற்றாண்டு ஆகும்.
‘‘குடிஅரசு’’ ஏட்டின் மூலம்தான் சுயமரியாதைச் சூரியன் உதித்தது; இயக்கமே பிறந்தது!
‘‘குருட்டினை நீக்கும் குருவினைக் கொள்ளார்
குருட்டினை நீக்காக் குருவினைக் கொள்வார்
குருடுங் குருடும் குருட்டாட்டம் ஆடிக்
குருடுங் குருடும் குழிவிழு மாறே.’’ என்று குருட்டாட்டம் ஆடிய காலம் அது.
எனவே திராவிடரின், தமிழரின் குருட்டுத்தனம் தொடர்ந்து கோலோச்ச விடாது விரட்டுவதற்குப் பயன்பட்ட விவேக முரசாகக் கிளம்பியதே “குடிஅரசு” வார ஏடு.
அது செய்த அறிவுப்புரட்சியால் அகிலமே அரண்டது! புதுமையாளர்கள் பூரித்தனர்!!
பழைமைப் பூமியைப் புரட்டிப் போட்ட புதிய பூகம்பமாய், தூங்கிக் கிடந்த மக்களைத் துறைதோறும் துறைதோறும் தட்டியெழுப்பி, அங்கே ‘சுயமரியாதை வாழ்வே சுகவாழ்வு’ என்று சொல்லிக் கொடுக்கும் ஆசானாகி, அது வரலாறு படைத்தது!
ஜாதி மதவெறியர்கள் மிரண்டனர்; அதன் அறிவுக் கணைகளைச் சந்திக்க இயலாது ஓடி ஒளிந்தனர்; தேடித் திரிந்தனர் – இனத் துரோகிகளை,
பல்வேறு மேடு பள்ளங்களை உடைத்து, சமதளமாக்கி, சமதர்மம் சமைத்து புதியதோர் உலகை அந்த அறிவுப் “புல்டோசர்” செய்தது!
உருண்ட பாறைகள், உடைபட்ட மூடநம்பிக்கை முகடுகள் முற்றாகக் காணாமற் போகச் செய்யப்பட்டன! அக்காலத்தில் ‘‘குடிஅரசின்’’ சுயமரியாதைப் பிரச்சார சூறாவளி காரசாரமாக, கடும் வேகத்தில் நடைபெற்றதைக் கண்டு மருண்டோடிய மதத் தலைவர்கள் ஒரு பக்கம்; திரண்ட தீரர்கள் மறுபக்கம் என்ற நிலை மெல்ல மெல்ல ஆனால் உறுதியாக வளர்ந்தது; என்றாலும் ஏடு, பெரும் பொருள் நட்டத்தில் நடைபெற்றபோது, இதைத் தொடர முடியுமா என்று சக தோழர்களே வற்புறுத்தியபோதுகூட, திண்ணிய எண்ணமுடைய ஏற்றமிகு தலைவர் மலை குலைந்தாலும் மனங் கலங்கா மாவீரர் தந்தை பெரியார் அவர்கள் சொன்னார்கள்:
“எந்த நிலையிலும் “குடிஅரசு” தமது பயணத்தை நிறுத்தாது; தொடர்ந்த வண்ணமே இருக்கும்;” நானே எழுதி, நானே அச்சடித்து, நான் ஒருவனே திண்ணையில் அமர்ந்தாவது உரக்கப் படித்து மகிழ்வேனே தவிர, நிறுத்தி விட மாட்டேன்’’ என்று சூளுரைத்தது அந்தச் சுயமரியாதைச் சிங்கம்! சில ஆண்டுகளிலேயே ‘குடிஅரசு’ ஏடு, உள்நாட்டில் பரவியதோடு, மற்ற வெளிநாடுகளிலும்கூட பயணித்தது! கடல் கடந்த நாடுகளான மலேசியா, சிங்கப்பூர், இலங்கைவாழ் தமிழரிடையே இதய வீணையின் இசையாய்ப் பாய்ந்தது; பலன் தந்தது; ஆலமரமாகி விழுதுகள் தோன்றின.
“தோழர்களே! மனிதனுக்கு வெட்கமும் ரோஷமும் ஏற்படுவதற்காகவே சுயமரியாதை இயக்கம் ஏற்பட்டது. சுயமரியாதை இயக்கம் மனித சமுகத்தையே மாற்றி அமைக்க ஏற்பட்டதாகும். இந்தக் காரியம் சமுகப் புரட்சியில் ஏற்பட வேண்டியதேயொழிய, சிரிப்பு, விளையாட்டில் ஏற்படக் கூடியதல்ல, இதற்காக அநேக தொல்லைகளை அனுபவிக்க வேண்டி வரும்”
“இந்த உலகத்திலுள்ள எல்லா அகராதி
களையும் கொண்டு வந்து போட்டு, ஏடு ஏடாய் புரட்டிப் பார்த்தாலும் அழகும், பொருளும்,
சக்தியும் நிறைந்த வார்த்தையாகிய “சுயமரியாதை”
என்ற வார்த்தைக்கு மேலானதாகவோ, ஈடானதாகவோ உள்ள வேறு ஒரு வார்த்தையை யாராலும் கண்டுபிடிக்க முடியாது”
தந்தை பெரியார் அவர்களுடன் “குடிஅரசு” ஏட்டில் துவக்கக் காலத்தில் சுவாமி கைவல்யம், ம.சிங்காரவேலர், ப.ஜீவானந்தம், கோவை
அய்யாமுத்து, சாத்தான்
குளம் அ.இராகவன், சித்தர்க்காடு இராமையா, கி.ஆ.பெ. விசுவநாதம், சா. குருசாமி, குஞ்சிதம், நீலாவதி இராம சுப்ரமணியம், ‘போளூரான்’ (போளூர் சிதம்பரம்), திருமங்கலம் மணிமாறன் இப்படிப் பல அறிஞர்கள் கட்டுரைகளைத் தொடர்ந்து எழுதி ‘குடிஅரசு’க்குப் பலமூட்டி
னார்கள் – முதற்கட்டத்தில்.
பிறகு இது இடையில் 1940இல் நிறுத்தப்பட்டு மீண்டும் 1943இல் துவக்கப்பட்டபோது, அடுத்த இளைய தலைமுறையினரான கலைஞர் மு.கருணாநிதி, எஸ்.தவமணிராசன், கவிஞர் எஸ்.கருணானந்தம்,
டார்பிடோ ஏ.பி. ஜனார்த்தனம் எம்.ஏ., கே.ஏ.மணியம்மையார் முதலியோர் ஆசிரியர் குழுவில் இருந்து பல கட்டுரைகள் எழுதி அணி
சேர்த்தனர். இவர்கள் யாரும் ஊதியத்திற்காகப் பணியாற்ற வரவில்லை. செலவுகளுக்கான மதிப்பூதியம் பெற்றே தொண்டாற்றினர்.
அய்யாவின் ஆணித்தரமான எழுத்துக்கள், இளைய தலைமுறையினரின் எழுச்சிமிகு கவிதைகள், கட்டுரைகள் மீண்டும் ஒரு புத்தொளி
பாய்ச்சி, மாணவர்களை, இளைஞர்களை ஈர்த்தது!
இதன் பதிப்பாசிரியர்களாக தந்தை பெரியாரின் அண்ணன் ஈ.வெ.கிருஷ்ணசாமி, ஈ.வெ.ரா.நாகம்மாள், எஸ்.ஆர்.கண்ணம்மாள், சா.இராமசாமி நாயக்கர், ஜே.எஸ்.கண்ணப்பர், என்.கரிவரதசாமி, அ.பொன்னம்பலனார் ஆகிய பெருமக்கள் பலர் இருந்துள்ளனர்.
அதன் காரணமாக, அன்னை நாகம்மையார், கண்ணம்மாள் (பெரியாரின் தங்கை) அண்ணன் ஈ.வெ. கிருஷ்ணசாமி ஆகியோர் அரசு வழக்கு
களில் தண்டனையும் பெற்ற நிலை ஏற்பட்டது. 1933ஆம் ஆண்டு ‘குடிஅரசு’க்குத் தடை போடப்
பட்டவுடன் அதே அமைப்புடன் அவ்வேடு “புரட்சி” என்ற பெயரில் வெளிவரத் துவங்கியது.
தந்தை பெரியாருக்குச் சிறைவாசம் தந்த இந்த ஏடு – புரட்சியாளர்களான வால்டேர், ரூசோ, உலகப் பகுத்தறிவுச் சிந்தனையாளர்
கள் அமெரிக்க இங்கர்சால்,
பிரிட்டனின் பெர்ட்ரண்ட்ரசல், பெர்னாட்ஷா, ஜோசப்
மெக்காபி லெனின் ஆகியோரை அறிமுகப்படுத்
தியதுடன் கார்ல்மார்க்ஸ், ஏஞ்சல்ஸ் ஆகியோர் கூட்டுப்
பிரகடனமான கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை என்று அவர்களைத் தமிழக
வாசகர்களுக்கு அறிமுகப்
படுத்தியது. “கர்ப்ப ஆட்சி” என்ற பெயரில் Birth control – family planning பற்றி மேலை நாட்டு மேரி ஸ்டோப்ஸ் கருத்துகளை வெளியிட்டு இந்தியாவின் முன்னோடி ஏடாகியது!
ஜாதி ஒழிப்பு மற்றும் பெண்ணுரிமை என்று பிறவிப் பேதங்களை எதிர்த்து ‘குடிஅரசு’ நிகழ்த்திய போர் பெரும் விளைச்சலைத் தந்தது – சமுகத்தின் மனப்பான்மை மாறியது.
‘குடிஅரசு’ ஏட்டின் உழைப்பு வீண் போகவில்லை. அதன் அயராத பணிகளால் தமிழ்நாட்டில் ஓர் அமைதிப் புரட்சி ஏற்பட்டது. அதுவே இன்றைய தமிழ்நாட்டின் கல்வி வளர்ச்சிக்கும் சமூக மேம்பாட்டுக்கும் பொருளாதார வளர்ச்சிக்கும் வித்திட்டது. ‘குடிஅரசு’ பணி தொடர அதன் நூற்றாண்டில் உறுதியேற்போம்! w