த |
ொழிலாளர் “சங்கப் போராட்டம்” என்றால் முதலாளிகளை ஒழித்து, முதலாளி – தொழிலாளி என்ற பேதமில்லாமல் செய்வது என்றால் சரி, நியாயம். அதைவிட்டுவிட்டு கூலி உயர்வைக் கருதியே ஒரு சங்கம் இருக்கிறது என்றால் அதற்குப் போராட்டம் எதற்கு? ஸ்ட்ரைக்கு நாச வேலை எதற்கு?
தோழர் கோவிந்தசாமி அவர்கள் பேசும்போது சொன்னார்கள், தொழிலாளர்களுக்கு லாபத்தில் பங்கு கொடுக்கப்பட வேண்டும் என்று. அது மிக நியாயம். நான் 5 வருடத்திற்கு முன்பிருந்தே மில் தொழிலாளர்களுக்கு லாபத்தில் பங்கு கொடுக்கப்பட வேண்டும் என்று சொல்லியிருக்கிறேன். போனஸ். போனஸ் உயர்வு என்பதெல்லாம் அநேகமாய் அதற்கப்புறமே பலம் பெற்று வளர்ந்து வருகிறது.
தொழிலாளிக்கும் முதலாளிக்கும் பங்கு
அதோடு மட்டுமல்ல; ஒரு வருஷத்திற்கு முன்பு சொன்னேன், தொழிலாளிக்கு லாபத்தில் பங்கு மாத்திரம் போதாது. முதலிலும் பங்கு இருக்கவேண்டும் என்று. அது எப்படி என்றால், ஒரு லட்சம் ரூபாய் முதல் போட்டு
ஒரு ஸ்தாபனத்தை ரிஜிஸ்டர் செய்தால் அதில் தொழிலாளர்களுடைய பங்கு (Share) என்பது ஆக ரூ.25,000 ரூபாய் அவரது பொறுப்பு பங்கு என்று போடப்பட வேண்டும். ஆக 1,25,000 ரூபாய்க்கு பங்கு ரிஜிஸ்டர் செய்ய வேண்டும். அந்தப்படி பங்கில் தொழிலாளியின் அவரது பொறுப்பு பங்குக்கு ஒரு வருஷத்தில் ரூ.5000 லாபம் கிடைக்கிறது என்று வைத்துக்கொள்ளுங்கள். அந்த ரூ.5,000மும் சேர்ந்து அந்த ஆனரரி பொறுப்பு பங்கு ரூ.30,000க்குப் பதியவேண்டும். இல்லாவிட்டால் தொழிலாளி பாதுகாப்புப் பண்டாக அதைச் சேர்த்து வரவேண்டும்; இதன் அர்த்தம் என்னவென்றால் தொழிலாளி முதலாளிக்கு அடிமையல்ல; வெறும் கூலிகள் அல்ல தொழிலாளிகளும் முதலாளிகளும் ஒருவருக்கொருவர் பங்காளிகள், கூட்டாளிகள் என்கிறதான முறையாகும். அப்போதுதான் இரு சாராருக்கும் சமபொறுப்பும் நாணயமும் ஏற்படும்.
அடிமை நிலை என்ன?
முதலாளியும் தொழிலாளியும் அடிமை என்கிற தன்மையில் இருப்பதால் தொழிலாளிக்கு தொழிலினிடத்திலும் தொழிற்சாலை இடத்திலும் பொறுப்பு இல்லை; கவலை இல்லை. கூலிக்கு மாரடித்து விட்டுப் போவோம் என்பது மாதிரி பொறுப்பற்ற தன்மையில் கடிகாரத்தைப் பார்த்தவண்ணம் இருக்கிறான். அதே மாதிரி முதலாளிக்கும், தொழிலாளி ஓர் அடிமை – அந்த அடிமை தன்னுடைய ஜீவன் அவசியத்திற்கு வேலை செய்பவன். ஆதலால் அவன் சாகாமல் இருக்கும் அளவுக்குக் கூலிகொடுத்தால் போதும் என்று கருதி இவனைப் பற்றிய கவலையே இல்லாமல் இருக்கிறான். இவர்கள் இருவரின் பொறுப்பற்ற தன்மையால் நாட்டில் செழிப்பும், உற்பத்தி வளர்ச்சியும் கெடுகிறது. ஆதலால், இந்தப் பொறுப்பற்ற தன்மையும் ஒழிந்து முதலாளிக்கும் – தொழிலாளிக்கும் எஜமான் – அடிமை என்கிற தன்மை இல்லாமல் முதலாளியும் தொழிலாளியும் பங்காளிகள் கூட்டாளிகள் என்கிற தன்மை ஏற்படும். நான் மேலே சொன்னபடி ஏற்பாடு செய்தால், முதலாளி – தொழிலாளி என்றால் ஒருவருக்கொருவர் நல்லுறவோடு இருக்கவேண்டுமே தவிர, ஒருவரை ஏமாற்றுவது என்பதாகவும் பழிவாங்கும் உணர்ச்சியுடனும் இருக்கக்கூடாது.
முன்னுதாரணம்
நான் வியாபாரம் செய்து கொண்டிருந்தபோது, என் விலாசத்திற்கே பங்கு இருந்தது. ஈ.வெ.ரா.
மண்டி விலாசத்திற்கு 10,000 ரூபாய் முதலீடு என்று வைத்துக்கொள்ளுங்கள். வேலைக்கு 3 குமாஸ்தாக்கள் என்று வைத்துக்கொள்ளுங்கள். வருகிற லாபத்தை 3 பங்காகப் பிரித்துக்கொள்வது. அப்படிப் பிரித்ததில், ஒரு பங்கு மண்டிச் சொந்தக்காரரும், நிருவாகப் பொறுப்புடையவருமான
ஈ.வெ.ராவுக்கு; மற்றொரு பங்கு முதலீடு போடப்பட்ட ரூபாய் 10,000க்கு மூன்றாவது பங்கு. குமாஸ்தாக்களுக்கு நட்டம் வந்தது என்று வைத்துக்கொள்ளுங்கள். குமாஸ்தாக்கள் குடும்பச் செலவுக்குப் பத்திக்கொண்ட மாதம் ஒன்றுக்கு ரூ.15 வீதம் உள்ள தொகையைச் சிப்பந்திச் செலவு என்று பொதுச் செலவு எழுதிவிட்டு மீதியை அடுத்த வருஷ லாபத்தில் கழித்து விடுவேன். லாபம் கிடைத்தால் பங்கிட்டுக் கொடுத்துவிடுவேன். நாங்களெல்லாம் மண்டி நடத்துகிறபோது 40-50 வருஷங்களுக்கு முன் இப்படித்தான் நடந்தது. இதற்குக் கஷ்டக்கூட்டு என்று பெயர். என்னிடம் கஷ்டக் கூட்டுக்கு இருந்த நபர்கள் இப்போது தனி முதலாளிகள் ஆகி எனக்கு மேல் 3 பங்கு 4 பங்கு பணக்காரர்களாக இருக்கிறார்கள். அந்த மாதிரி தொழிலாளிக்குப் பங்கு கிடைக்க வேண்டும். அப்போது தான் தொழிலாளி உயர முடியும். அப்படிக்கு இல்லாமல் எவ்வளவு கூலி உயர்ந்தாலும் முதலாளி முதலாளிதான் தொழிலாளி தொழிலாளிதான்.
எந்நேரமும் சண்டை ஏன் ?
அப்படிக்கில்லாமல் முதலாளியும் தொழிலாளியும் எந்நேரமும் சண்டை போட்டுக் கொள்வது; இவன் அவனைக் கண்டால், ‘உர்’ என்கிறது; அவன் இவனைக் கண்டால் மிளகாய் கடித்த மாதிரி கரிந்து விழுவது; இரண்டு பேரும் தகராறு செய்து கொண்டு கோர்ட்டுக்குப் போவது; அது இழுப்பறித்துக் கொண்டு இருந்து கடைசியில், உதவாக்கரை சமாதானம் ஆவது. மறுபடியும் தகராறு, சண்டை, கோர்ட், சமாதானம் என்று இப்படியே இருந்தால் என்ன ஆவது? முதலாளி – தொழிலாளி இவர்கள் இருவரின் சண்டையும் எப்படியோ போகட்டும். இவர்களின் இந்தத் தகராறின் காரணமாய் நாட்டில் பொருள் உற்பத்தி குறைந்துவிட்டது. நாட்டுப் பொது நிலையில் கஷ்டம் ஏற்படுகிறது. இன்றைய பஞ்சநிலைக்கு, பண்டங்களின் தரங்குறைவுக்கு, கடுமையான விலை ஏற்றத்திற்கு இருவரிடமும் நாணயம் இல்லாததற்கு 100க்கு 90 பங்கு முதலாளி – தொழிலாளித் தகராறும் அவர்களது மனப்பான்மையும்தான்!
(10.9.1952 அன்று பொன்மலையில் தென்பகுதி ரயில்வேமென் யூனியன் துவக்க விழாவில் தந்தை பெரியார் நிகழ்த்திய பேருரையில் ஒரு பகுதி)