ஆரியர்கள் நம்மை முதலில்
எப்படி அடிமை
கொண்டார்கள்? பலத்தில் யுத்தம்
நடத்தி வெற்றி
பெற்றதன் மூலம் அல்லவே! தந்திரமாக தமது புராண இதிகாசங்களைக் கலைகளாக்கி, அவற்றை நம் மக்களிடையே புகுத்தினார்கள். அவற்றின் தத்துவத்தை – அத்தத்துவக் கடவுள், அவற்றின் தர்மங்களைக் கொஞ்சம் கொஞ்சமாக ஒப்புக் கொள்ளும்படி செய்தனர். அதில் அவர்கள் வெற்றிபெற்று, அதற்கேற்ப மனுநீதிச் சட்டம் வகுத்து, நம்மைக் கீழ்மக்கள் – ஈனப்பிறவி ஆக்கினர். அதாவது, மதத்தை முதலில் நம்மை ஒப்புக்கொள்ளச் செய்த பிறகு நம்மைக் கீழ்மக்கள் என்று கூறும் சட்டம் செய்துகொண்டனர். இதை உணர்ந்து மதத்தைக் கண்டிக்க நாம் ஆரம்பித்ததும், வேறு வழியில் – அதாவது, தேசியத்தின் பேரால் இந்தியைப் புகுத்தி அதன்மூலம் ஆரியக் கருத்துகளைப் புகுத்தி – அதன் வழி நம் அறிவைப் பாழாக்க நினைக்கின்றனர். நமது பிரச்சாரத்தின்மூலம் மக்கள் ஓர் அளவுக்கு ஆரியக் கலாச்சாரத்திலிருந்து விடுதலை பெறவும், அதை வெறுக்கவும் முற்பட்டிருக்கிறார்கள்.
ஆதலால், குழந்தைப் பருவத்திலேயே ஆரியக் கலாச்சாரத்தைப் புகுத்த வேண்டி இந்தியை ஆரம்பப் படிப்பிலேயே புகுத்த
முயற்சிக்கிறார்கள். மதத்தினால் புகுத்த
முடியாமல்போன பித்தலாட்டக் கருத்துகளை
மொழியின் மூலம் புகுத்தச் சூழ்ச்சி செய்யப்படுகிறது. இந்திக்கும் சமஸ்கிருதத்திற்கும் அதிக பேதமில்லை என்பதை இந்தி ஆதரவாளர்
களே ஒப்புக்கொள்கிறார்கள். மதம் செல்வாக்குடன் இருந்த சமயத்தில் நாம் சமஸ்கிருதம் படிக்கக்கூடாதென்றும் கூறி வந்தார்கள். திருப்பதி, இராமேசுவரம் முதலிய இடங்களிலுள்ள சமஸ்கிருதக் கல்லூரிகளில், அதுவும் சர்க்கார் மானியத்தைக் கொண்டு நடைபெற்று வரும் இக்கல்லூரிகளில்கூட சமீபகாலம் வரை நம் மக்களுக்கு சமஸ்கிருதம் படிக்க வசதியளிக்கவில்லை.
நம் மக்களைக் கல்லூரிகளில் சேர்த்துக்
கொள்வதேயில்லை. சர்க்கார் மானியம் அளிப்பதை நிறுத்திவிடுவதாகப் பயமுறுத்திய பிறகுதான் நம் பிள்ளைகளையும் அக்கல்லூரி
களில் சேர்க்க முற்பட்டார்கள். எல்லோருக்கும் சம உரிமை இருக்க வேண்டும் என்பதற்காக நாம் போராடினோமே ஒழிய, சமஸ்கிருதம் படிப்பதால் அறிவு விசாலம் அடையும் என்பதற்காகப் போராடவில்லை. நாம் இன்று சமஸ்கிருதம் ஆரிய மொழி என்றும், அது நம் திராவிடக் கலாச்சாரத்தை அடியோடு பாழ்படுத்தி நிற்கும்மொழி என்றும், அதைப் படிப்பதால் மூட நம்பிக்கைக் கருத்துகள்தாம் வளர்ச்சியடையுமே யொழிய – ஆபாச அறிவுதான் வளர்ச்சி யடையுமேயொழிய – பகுத்தறிவு வளராது என்றும் பிரச்சாரம் செய்வதன் பயனாக, சமஸ்கிருதத்தைக் கட்டாயப்படுத்தும் வாய்ப்பற்றவர்களாய்ப் போய்விட்டார்கள். மேலும், அது பேசும் பழக்கத்தில் – உரையாடும் பழக்கத்தில் இல்லாது போய் விட்டதால் அதைக் கற்கும்படி வற்புறுத்த இயலாமல் போய்விட்டது.
எனவே, சமஸ்கிருதத்தின் மூலம் புகுத்த முடியாமற்போன பித்தலாட்டக் கருத்துகளை அதன் வழிமொழியான இந்தியின் மூலம் புகுத்த முற்பட்டிருக்கிறார்கள். அரசியல் ஆதிக்கத்தின் உதவியால் இந்தியைப் புகுத்துவதில் வெற்றி காணலாம் என்று நினைத்திருக்கிறார்கள்.
(தந்தை பெரியார், சென்னையில் 10.1.1950இல் சொற்பொழிவு)
– ‘விடுதலை’, 16.1.1950
- ••
தமிழ்மொழி எப்படி உயர்வடையும் ?
நம்நாட்டில் இப்போது தமிழ்மொழிக்கு ஆக என்று வைக்கப்பட்டிருக்கும் பள்ளிகள்,
கல்லூரிகள் என்பவை எல்லாம் தமிழ்மொழியின் பேரால் ஆரியமதத்தை அல்லது புராணமதத்
தைப் படிப்பிக்கும் மதப் பாடசாலை (மதப்
பள்ளி)களேயாகும். சுருக்கமாகச் சொல்ல வேண்டுமானால் அவைகளை சைவ மதப் பள்ளி என்றே சொல்லிவிடலாம்.
உதாரணம் வேண்டுமானால் மறைமலை அடிகள், கா.சுப்பிரமணிய பிள்ளை, கதிரேச செட்டியார், கல்யாணசுந்தர முதலியார், மீனாட்சிசுந்தரம் பிள்ளை, காலம் சென்ற வேங்கடசாமி நாட்டார் முதலிய தமிழ்ப் பண்டிதர்கள் என்று பெயர் வாங்கியிருக்கும் இந்த அறிஞர் யாருக்காவது தமிழ், தமிழ்மொழி, தமிழ் எழுத்து, தமிழின் இயற்கை தோன்றல், வளர்ச்சி ஆகியவைகளைப் பற்றிய ஞானம் என்பதில் ஏற்கனவே உள்ள இலக்கிய, இலக்கணங்கள் என்பவைகளை நெட்டுருச் செய்திருப்பதல்லாமல்- அதற்குக் கருப்பொருள் கூறுவதல்லாமல் – தனி ஞானம் உண்டு என்று யாராவது சொல்லமுடியுமா?
இவர்கள் யாவரும் “தமிழ் சிவன் தந்தான்”, “அகத்தியன் இலக்கணஞ் செய்தான்” என்பதில் ஆரம்பித்து, “தமிழ் உயர்தனிச் செம்மொழி” என்பதோடு முடிவுரை கூறி தமிழ் பக்தர்களாகிய, தமிழில் வல்லவர்கள் எனப் பேர் பூண்டு மதம், புராணம், இதிகாசங்களுக்கு அடிமைகளாகவும், பிரச்சாரகர்களாகவும் விளங்குகின்றார்கள் என்பதல்லாமல் தமிழ் அதாவது தமிழ் இலக்கியம், தமிழ்மொழி, தமிழ் ஒலி, தமிழ் எழுத்து என்பவைகளில் வல்லவர்களாக யாராவது விளங்குகின்றார்களா? என்று கேட்கின்றோம்.
தமிழ் சிவன் தந்தான், அகத்தியன் இலக்கணம்
செய்தான் என்பதிலேயே என்றைய தினம் இவர்கள் நம்பிக்கை கொண்டார்களோ அன்றே
இவர்களது தமிழ் அறிவுக்கு முற்றுப்புள்ளி ஏற்பட்டுவிட்டது. அதனால்தான் – அதனாலேயே
தான் தமிழுக்கு கல்வெட்டுக் காலம் முதல் நாளதுவரை அந்நிய நாட்டாரால், அந்நிய சமயத்தாரால் ஏற்பட்ட சில மாறுதல்கள் தவிர சைவரால், சைவ (தமிழ்)ப் பண்டிதரால் ஒரு சீர்திருத்தமும் ஏற்படாமல் நாளுக்குநாள் தமிழ் ஒரு சமயப் பெருமையை மட்டும் பெற்று விளங்கக் கூடியதாகி விட்டதே ஒழிய ஒரு மொழிப் பெருமை, இலக்கியப் பெருமை உடையதாக இல்லை.
1000 வருஷம், 500 வருஷங்களுக்கும் முன் ‘கடவுள் அருள் பெற்று’ அதாவது மற்ற எந்த மனிதனுக்கும் இல்லாத தனி யோக்கியதை ‘கடவுள் அருள்’ பெற்று ஏதோ ஆரியர் – தமிழர்களின் பகைவர்களுக்கு அனுகூலமாய் கூறிவிட்டுப் போன ஆபாச அறிவுக்கொவ்வாத களஞ்சியங்களைவிட மனித சமுதாய உயர் வாழ்வுக்குத் தகுந்தது என்பதாக எவருமே, ஒன்றுமே காண்பதற்கில்லாமல் இருந்து வருகின்றது.
பர்னாட்ஷா, எச்.ஜி.வெல்ஸ், பெர்ட்ரண்ட்ரசல்
முதலியவர்கள் போல ஓர் அறிஞரும் இன்றும் இல்லை, தமிழரில் பல நூற்றாண்டுகளாகவும் இல்லை. ஆனால், இந்நாட்களில் நெட்டுருப் போட்டவர்களுக்கும், சமயவேஷம் பூண்டவர்
களுக்கும், செல்வவான்கள், பார்ப்பனர்கள் ஆதரவு பெற்றவர்களுக்கும், பட்டங்களுக்கும், பதவிகளுக்கும், விளம்பரங்களுக்கும் குறை
வில்லாமல் இருந்து வருகின்றது. இம்மாதிரி தகுதி அற்றவர்கள் புகழும், விளம்பரமும் சம்பாதித்திருப்பதே தமிழின ஈனநிலைக்குச் சரியான எடுத்துக்காட்டாகும். அந்த நிலையில் இருந்தால் தமிழ் வெகு சீக்கிரத்தில் கீழ்நிலையை இன்னும் கீழ்நிலையை அடையப்போகிறது என்பதில் சந்தேகப்பட வேண்டியதே இல்லை.
ஆதலால் தமிழில் பற்றுள்ளவர்கள் சமயப்பற்று, அதாவது சமய சம்பந்தமான இலக்கிய, இலக்கண சம்பந்தம் அற்ற முறையில் ஒரு தமிழ்ப் பள்ளியோ, கல்லூரியோ ஏற்படுத்த வேண்டும். மடாதிபதிகள் உதவி சிறிதும் பெறாமல் தனித்தமிழ்ப் பற்றுள்ளவர்கள் ஆதரவிலேயே நடத்தப்பட வேண்டும். அப்பொழுது சகல துறைகளிலும் வல்லமை பெறத்தக்க தமிழ் அறிஞர்கள் தோன்றுவார்கள். இன்று தமிழ்ப் பண்டிதர்களில் அநேகருக்கு தமிழ்ப் படித்ததாலேயே பகுத்தறிவு தேய்ந்து போய்விட்டது என்றால் இதைச் சுலபத்தில் ஆட்சேபிக்க முடியாது. வாலிபப் பண்டிதர்கள் இவற்றைக் கவனித்து உண்மையான தமிழ்ப் பண்டிதர்களாக, தமிழ் வல்லவர்களாக, தமிழைச் சீர்திருத்தி மேம்படுத்துபவர்களாக ஆகவேண்டும் என்று ஆசைப்படுகின்றோம்.
– ‘குடிஅரசு’, 05.05.1945