1. கே: இந்தித் திணிப்பை மறைக்க தமிழ்நாட்டு அமைச்சர்கள் தமிழில் கையொப்பம் இடுவதில்லை என்ற ஒரு பொய்யான செய்தியைக் கூறி திசை திருப்பும் பிரதமர் மோடியின் தரம் எப்படிப்பட்டது?
– வ.வாசு, குடியாத்தம்.
ப: அதுபற்றி நம்முடைய முதல் அமைச்சர் மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்கள் சரியான பதிலடி கொடுத்துள்ளாரே! அது ஒன்றே தரம் பற்றிய கருத்துக்கு உரிய விடை!
2.கே: குழந்தைகளைத் தூக்கிக்கொண்டு தீக்குழியில் இறங்கும் செயலை அரசு தடை செய்ய வேண்டுகோள் விடுப்பீர்களா?
– த.தரணி, வேலூர்.
ப: நிச்சயமாக;- இது மதப்பிரச்சினை அல்ல; மக்கள் உயிர் பாதுகாப்புக்கானது.
3.கே: பீகாரில் மாணவர்கள் இராகுல் காந்தியுடன் அணிவகுக்கும் நிலையை எப்படிப் பார்க்கிறீர்கள்?
– க.செந்தில், பரங்கிமலை.
ப: அரசியல் விழிப்புணர்வுக்கான ஒரு திருப்பமாகப் பார்க்கிறோம்.
4.கே: ‘நீட்’ விலக்கு பற்றி வாய் திறக்காமல், தமிழ் வழி மருத்துவக் கல்வியைப் பற்றி மிக அக்கறையுடன் பேசி, தமிழக மக்களை ஏமாற்றலாம் என்று பிரதமர் மோடி எண்ணுகிறாரா?
– த.வெள்ளையன், குரோம்பேட்டை.
ப: உங்கள் நல்ல கேள்வியில் உள்ள பதிலே பொருத்தமானது! “ஏமாறுகிறவர்கள் இருக்கும்வரை ஏமாற்றுபவர்களும் இருந்தே தீருவர்”. தந்தை பெரியார் சொல்லியுள்ளாரே!
5கே: “கச்சத்தீவு இலங்கைக்குக் கொடுக்கப்பட்ட நிலையில், பழைய தவறை இப்போதைய ஒன்றிய அரசு சரி செய்ய அதை திரும்பவும் மீட்க வேண்டும்” என்ற ‘இந்து தமிழ் திசை’யின் தலையங்கம் பற்றித் தங்கள் கருத்து என்ன?
– த.ராணி, பட்டினப்பாக்கம்.
ப: ஒன்றிய அரசு செய்து காட்ட வேண்டும். முந்தைய (காங்கிரஸ்) ஆட்சியை மக்கள் மாற்றி இவர்களிடம் தந்துள்ளது. எதற்காக? இவர்கள் மாற்றத்தைக் கொண்டு வருவார்கள் என்பதால்தானே? இவர்கள் (பி.ஜே.பி.– ஆர்.எஸ்.எஸ்.) செய்யாமல் வெறும் பழைய புராணத்தையே படிப்பது அறிவுடைமையாகுமா?
6.கே: ‘நீட்’ விலக்கு மசோதாவுக்கு ஒன்றிய அரசு ஒப்புதல் தர மறுத்த நிலையில் தமிழக அரசு சட்டரீதியாக என்ன நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்?
– செ.பாலாஜி, மதுரை.
ப: 9ஆம் தேதி ஒத்தக் கருத்துள்ள அரசியல் கட்சிக் கூட்ட முடிவின்படி, மீண்டும் சட்டப் போராட்டம் தொடரும் என்று அறிவித்துள்ளதே- தி.மு.க. அரசு எடுத்த நல்ல முடிவுதான்!
7.கே: மீனவர்கள் படகுகள் பறிமுதல், மீனவர்கள் மீது தாக்குதல், கைது என்று இலங்கை செய்யும் அத்துமீறலுக்கு மோடியிடமிருந்து எந்த உத்தரவாதமும் வராதது மீனவர்களுக்குப் பெருத்த ஏமாற்றம் அல்லவா?
– ம.சுகந்தி, ஆரணி.
ப: வெறும் ஏமாற்றமல்ல; அசாதாரண ஏமாற்றத்தின் உச்சம்!
8.கே: கருத்துக் கணிப்பு என்கிற பெயரில் கார்ப்பரேட் ஊடகங்கள் இப்போதே தப்பான கணிப்புகளை வெளியிட்டு, மக்களைத் திசை திருப்ப எடுக்கும் முயற்சியை தி.மு.க. தலைமையிலான கூட்டணிக் கட்சிகள் கவனத்துடன் தீவிரமாய் முறியடிக்க வேண்டியது கட்டாயமல்லவா?
– த.ஜானகி, கோயம்புத்தூர்.
ப: கருத்துக் கணிப்புகளை துவக்க முதலே நாம் ஏற்பதில்லை. அது ஒரு ‘யூக கப்சா’ ஏற்பாடு. சாதகமோ, பாதகமோ எதையும் எந்தக் கட்சியும் ஏற்காது-_ நம்பாது. தங்கள் பணிகளைத் தொடருவதே சரியானது! அது வெறும் கருத்துத் திணிப்பே தவிர வேறில்லை என்பதே துவக்க முதல் இன்று வரை நமது தெளிவான விளக்கம்.