உணர்வுகளைக் கவனிப்போம் :
மனிதர்களை இரண்டு விதமாகப் பிரிக்கலாம்.
- உணர்வுப்பூர்வமானவர்கள்,
- அறிவுப்பூர்வமானவர்கள்.
உணர்வும், அறிவும் எதிர் எதிர்த் திசையில் நிற்கின்றன. உணர்வு என்பது எல்லா உயிரினங்களுக்கும் பொதுவானது. பரிணாமத்தைப் பொறுத்த வரையில் மிகமிகப் பழமையானது. உங்களுக்குப் போட்டியாக யாராவது வந்துவிட்டால் அவர் மீது கோபத்தை வெளிப்படுத்த எந்த அறிவும் தேவையில்லை, அது எல்லா உயிரினங்களுக்கும் பொதுவானது. ஆனால், அந்தக் கோபத்தை எப்படி வெளிப்படுத்த வேண்டும், எப்போது வெளிப்படுத்த வேண்டும், வெளிப்படுத்தினால் உண்டாகும் விளைவுகள் என்ன? இழப்புகள் என்ன? என்பதையெல்லாம் கணித்து கோபத்தை வெளிப்படுத்துவது எளிதான ஒன்றல்ல; அதற்கு அறிவு வேண்டும். அத்தகைய அறிவு எல்லா விலங்குகளுக்கும் கிடையாது. ஆனால், மனிதனுக்கு அறிவு உண்டு. அந்த அறிவை உணர்வுகளை வெளிப்படுத்தும்போது பயன்படுத்திக்கொள்ளும் மனிதர்கள் மிகக் குறைவு!
நாம் நமது உணர்வுகளைச் சரியான வகையில் வெளிப்படுத்துவதில்லை. சட்டென்று கோபப்படும் மனிதரை, கோபத்தில் நிதானம் இழக்கும் மனிதரை – “நீ என்ன மனுஷனா இல்லை மிருகமா?” எனக் கேட்பது வழக்கம். ஏனென்றால், உணர்வுகளைப் பக்குவமாக, முதிர்ச்சியுடன் வெளிப்படுத்துவது மனிதனின் தனித்துவமான பண்பு. பல நேரங்களில் நாம் மிக உணர்ச்சிவசப்பட்டுப் பேசும் சொற்கள், செய்யும் செயல்கள் பின்னாளில் நம்மை மிகுந்த சங்கடத்தில் ஆழ்த்துகின்றன; குற்றவுணர்ச்சியைக் கொடுக்கின்றன. “ஒரே ஒரு நிமிஷம் கொஞ்சம் நிதானமா யோசிச்சிருந்தா நான் அந்தத் தப்பப் பண்ணியிருக்க மாட்டேன் சார்; கோபம் என் கண்ண மறைச்சிடிச்சி” என்று தவறு செய்துவிட்டுப் பின்னாளில் புலம்புபவர்கள் அதிகம். இவை எல்லாவற்றுக்கும் காரணம் நாம் நமது உணர்வுகளின் மீது கவனமற்று இருப்பதே, உணர்வுகளின் வழி நடப்பதே.
அறிவு என்பதில் பல பரிமாணங்கள் உண்டு. உணர்வை எப்படி கட்டுக்குள் வைப்பது அதை எப்படி நாகரிகமாக வெளிப்படுத்துவது என்பதும் அறிவின் ஒரு பகுதியே. அதற்கு முதலில் நமது உணர்வுகளைச் சரியாக உணர்ந்து கொள்ள வேண்டும், அதன் மீது கவனம் வேண்டும்.
நம்மை நிதானமிழக்கச் செய்யும் ஒரு சூழலை எதிர்கொள்ள நேரிடும் போது, நாம் நமது பலவீனங்களை எடை போட வேண்டும், ‘இந்தச் சூழலில் நான் இப்படித்தான் நடந்து கொள்வேன், சட்டென யோசிக்காமல் ஏதாவது பேசி விடுவேன், எனவே கவனமாக, நிதானமாக அதைத் தவிர்க்க வேண்டும்’ என முன்கூட்டியே நாம் அந்தச் சூழலுக்கு ஏற்ப நம்மைத் தயார் செய்து கொள்ள வேண்டும்.
‘நான் கோபப்படுவதற்கும், நிதானமிழப்பதற்கும் அந்தச் சூழலும், வேறு ஒரு மனிதரும் தான் காரணம்; நான் எந்த வகையிலும் அதற்குக் காரணமல்ல’ என்று நமது முதிர்ச்சியின்மைக்கு மற்றவர்களையோ அல்லது சூழலையே பலி சொல்லிக்கொண்டிருந்தால் அதற்குத் தீர்வில்லை.
ஒரு சிறப்பான சூழலில், அமைதியான சூழலில், அனைவரும் நம்மிடம் மிகவும் தன்மையாக நடந்து கொள்ளும் சூழலில் நமது உணர்வுகளைக் கட்டுக்குள் வைத்திருப்பதில் என்ன சாகசம் இருக்கிறது. மிக மோசமான சூழலிலும் கூட நாம் நிதானமிழக்காமல் இருப்பதில் தான் சாதனை இருக்கிறது.
உணர்வுகளின் மீது கவனமும், அதை வெளிப்படுத்துவதில் அறிவையும், அனுபவங்களையும் பயன்படுத்தி அதை எப்போதும் நமது கட்டுப்பாட்டின் கீழ் வைத்திருப்பது பதற்றம், ஸ்ட்ரெஸ் போன்ற நெருக்கடி நிலையைத் தடுக்கவும், மிகச் சுலபமாகக் கையாளவும் தேவையான ஒன்று.
முடிவெடுக்கும் திறன்:
ஒரு நெருக்கடியான நிலையில், உடனடியாக முடிவெடுப்பதில் நமக்குக் குழப்பம் வந்துவிடுகிறது. இரண்டு எதிரெதிர் முடிவுகளில் எந்த முடிவை எடுப்பது எனத் தெரியாமல் அங்கேயே தேங்கிவிடுகிறோம். “இவனை ஏற்றுக்கொள்வதா, வேண்டாமா?” என்னும் குழப்பத்தில் ஒரு பெண் எந்த முடிவும் எடுக்காமல் அவனுடன் பழகிக்கொண்டே வந்தாள். ஒரு நாள் அவளது தோழி ஒருத்தி அவனுக்கு தனது காதலைச் சொல்லிவிட்டு அவனோடு சேர்ந்துவிட்டாள், நீண்ட காலம் கடந்த பிறகு அவர்களுக்குள் முறிவு ஏற்பட்டு திரும்பவும் இந்தப் பெண்ணிடம் வந்தபோது, அவளுக்கு மறுபடியும் குழப்பம், “இவனை ஏற்றுக்கொள்வதா அல்லது வேண்டாமா?” சரி, இயல்பாகப் பேசுவோம்; பின்னால் முடிவு செய்து கொள்வோம் என முடிவைத் தள்ளிப் போட்டாள். ஆனால், அவளால் நிம்மதியாக இருக்க முடியவில்லை, அவளது எந்த வேலையிலும் கவனம் செலுத்த முடியவில்லை, முன்பு போல ஈடுபாடு இல்லை. இந்தக் குழப்பத்தோடு அவளது ஒவ்வொரு நாளும் முடிகிறது. ஏன் இந்த மனவுளைச்சல்?
முடிவைத் தள்ளிப் போடுவதால், அதன் விளைவுகளை யூகிக்க முடியாததால் அல்லது அந்த விளைவுகளுக்குத் தயாராக இல்லாததால், பெரும்பாலான நேரங்களில், வாழ்க்கையில் உடனடியாக முக்கியமான முடிவு ஒன்றை நாம் எடுத்தே ஆக வேண்டிய கட்டாயம் வரும்போது, நாம் அதை எப்படியாவது தள்ளிப் போட்டு விடலாமா என்று தான் முதலில் யோசிக்கிறோம். தள்ளிப்போடுவது தற்காலிகமாக நமக்கு ஒரு ஆசுவாசத்தைக் கொடுத்தாலும், அது தரும் நிச்சயமின்மையும், ஊகங்களும் எப்போதும் நம்மைப் பதற்றத்திலேயே வைத்திருக்கிறது.
ரஜினி முடிவெடுக்கும் வரை ரசிகர்கள் நிதானமில்லாமல்தானே இருந்தார்கள், என்ன முடிவெடுப்பாரோ என்ற பதற்றத்தில் தானே அவர்களது ஒவ்வொரு நாளும் கழிந்தது. ஆனால், முடிவெடுத்த பின் என்னவாயிற்று? அந்த முடிவு அவர்கள் விரும்பியவாறு இல்லையென்றாலும் கூட, சில நாட்கள் சலசலப்புக்குப் பிறகு ரசிகர்கள் ஏற்றுக்கொண்டுவிட்டார்கள், இல்லையா? இப்போது அவர்கள் பதற்றமில்லாமல், நிதானமான மன நிலைக்கு வந்துவிட்டார்களே! என்ன காரணம்? சரியோ, தவறோ, முடிவு எடுக்கப்பட்டுவிட்டது காரணம்.
முடிவு எடுப்பதை எப்போதும் தாமதப்படுத்தக்
கூடாது. அதற்குப் பிறகு நடக்கும் விளைவுகளை
நாம் சந்தித்துக்கொள்ளலாம், அதற்கான தீர்வை அப்போதுள்ள சூழ்நிலைகள் நமக்குக் கொடுக்கும் அல்லது அதற்கு ஏற்றவாறு நமது மனநிலை மாறிக்கொள்ளும். அன்றாட வாழ்க்கையில் உணர்ச்சிவயப்படாமல், முதிர்ச்சியுடனும், அனுபவங்களைக் கொண்டும் தாமதப்படுத்தாமல் எந்த முடிவையும் எடுக்க வேண்டியது ஆரோக்கியமான மனநிலைக்கு அவசியமானதாகும்.
தேவை, விருப்பங்கள்:
மனிதர்களின் வாழ்க்கையில், அவனது தேவைகளுக்கும், விருப்பங்களுக்குமிடையே உள்ள சமநிலை முக்கியமானது. வாழ்வதற்
கென்று அத்தியாவசியத் தேவைகள் இருக்கின்றன, அதே போல அதை மீறிய நமது விருப்பங்களும் இருக்கின்றன. உதாரணத்திற்கு பணியின் நிமித்தம் எனக்கு ஒரு மடிக்கணினி அவசியம் என்பது தேவை; அதுவே எனக்கு மேக்புக் ப்ரோ 2021 மாடல் தான் வேண்டும் என்பது விருப்பம். எல்லோரிடமும் பேசுவதற்கு ஒரு மொபைல் ஃபோன் வேண்டும் என்பது தேவை; அதுவே ஆப்பிள் அய்ஃபோன் 12 ப்ரோ தான் வேண்டுமென்பது விருப்பம்.
மாஸ்லோ என்ற தத்துவவியலாளர் அடிப்
படைத் தேவைகள் என்பவை ஒவ்வொரு காலகட்டத்திலும், வளர்ச்சி படிநிலையிலும் மனிதனுக்கு மாறிக்கொண்டே வருகிறது. அடிப்படைத் தேவையென்பது உணவு, இருப்பிடம் மட்டுமல்ல, இன்றைய காலத்தில் கண்ணியமான வாழ்க்கையும் கூட மனிதனுக்கு அடிப்படைத் தேவையே. இந்தத் தேவைகளைப் பூர்த்தி செய்த பிறகுதான் நாம் நமது விருப்பங்களைப் பற்றி யோசிக்க வேண்டும், குறிப்பாக இந்தத் தேவைகளை நிராகரித்துவிட்டு விருப்பங்களுக்கு முன்னுரிமை கொடுப்பது நமது வாழ்க்கையின் நோக்கத்தைக் கெடுத்துவிடும் என்கிறார்.
அண்மைக் காலங்களில் நாம், தேவைகளை விட, விருப்பங்களின் மீதுதான் பிடிவாதமாக இருக்கிறோம். சந்தைகள் விரிவடைய, விரிவடைய தனிமனிதனின் நுகர்வுக் கலாச்சாரமும் மாறிக்கொண்டே வருகிறது. அவனது தேவைகளை நிராகரித்து, விருப்பங்களைப் பூர்த்தி செய்து கொள்ளும் மனநிலைக்குச் சந்தைகள் அவனை அழைத்துச் செல்கின்றன. நாம் என்ன வாங்க வேண்டுமென நாம் தீர்மானிப்பது மாறிப்போய் மற்றவர்கள் தீர்மானிக்கும் நிலைக்கு வந்திருக்கிறோம். இதனால் தேவைகளைகூட நிராகரித்துவிட்டு விருப்பங்களை நிறைவேற்றிக் கொள்கிறோம். தேவைகள் பூர்த்தியாகாததால் அது அன்றாட வாழ்க்கையைச் சுமையாக்குகிறது, அதே நேரத்தில் விருப்பங்களுக்கு நாம் செலவிடும் நேரம், பணம், உணர்வு போன்றவை இன்னும் அந்தச் சுமையை அதிகமாக்குகின்றன.
தினமும் நாம் செய்யக்கூடிய எல்லா விஷயங்களிலும் இதைப் பொருத்திப் பார்க்கலாம். பெரும்பாலான நேரங்களில் நமது மனவுளைச்சலுக்கு நமது இந்த முன்னுரிமைகள் காரணமாக இருக்கின்றன. கடன் பெறுவது எளிதாய்ப் போய்விட்ட சூழலில், கடன் வாங்குவது மேலிருந்த எதிர்மறைப் பார்வையும் மாறிவிட்ட நிலையில், ஆன்லைன் மார்க்கெட்டிங் பொருட்கள் வாங்குவதை எளிதாக்கிவிட்ட சூழலில் நாம் இந்தத் தேவை மற்றும் விருப்பங்களில் மிகக் கறாராக முடிவெடுக்க முடியவில்லையென்றால் அது நம் வாழ்க்கையை நிம்மதி இல்லாததாகவும், நெருக்கடி மிகுந்ததாகவும் மாற்றிவிடும். அதனால் நாம் எப்போதும் இதன் மீது கவனமுடன் இருக்க வேண்டியது நிம்மதியான வாழ்க்கைக்குத் தேவையான ஒன்று. m