திராவிட வீரனே! “விழி!எழு! நட!” எனும்
உரத்த சிந்தனை உரைத்தபே ரியக்கம்;
தென்னிந் தியநல உரிமைச் சங்கம்
அந்நாள் தொடங்கினார் தியாக ராயர்!
சுயமரி யாதை உணர்வால் பின்னர்
நயத்தகு நீதிக் கட்சியாய் ஆனது!
நீதிக் கட்சியின் முப்பெரும் தலைவருள்
மேதகு தியாக ராயரும் ஒருவர்!
ஏனைய இருவர் நாயர் நடேசனார்!
மானமும் மதிப்பும் மக்கள் பெற்றிட
நீதி என்னும் இதழை நடத்தினார்!
நீதிக் கட்சியும் விடுதலைப் போரில்
இணைந்திடும் நோக்கில் காங்கிரசுக் கட்சியில்
இணைந்தார்! அத்துடன் ஆரியம் எதிர்த்தார்!
ஏழை எளிய மாணவர்க் கெல்லாம்
நாளும் நண்பகல் உணவை வழங்கிப்
பெருமை சேர்த்தார்! அதுவே இந்நாள்
சிறப்புறு காலை உணவுத் திட்டமாய்
அமைந்த பாங்கை அனைவரும் வியப்பர்!
சமூக நீதிக் காவலர் இவரோ
ஒடுக்கப் பட்ட, பழங்குடி மக்களின்
விடுதலை வேண்டி வீறுடன் உழைத்தவர்!
எல்லா ருக்கும் எல்லாம் கிடைத்திடச்
செல்வராய்த் திகழ்ந்த தியாக ராயர்
ஈட்டிய பொருளை வாரி வழங்கினார்!
மாட்சி எய்தவே இளைஞர் பலர்க்கும்
வேலை வாய்ப்பை வழங்கிட நெசவின்
ஆலை ஒன்றை அமைத்தே உதவினார்!
சீரார் பிட்டி தியாக ராயரின்
நூறாம் ஆண்டின் நினைவு நாளில்
இன்பத் தமிழரின் ஏற்றம் விழைந்தவர்
பன்னருஞ் சிறப்பைப் பாடுவம் நாமே!
– முனைவர் கடவூர் மணிமாறன்