மக்களாட்சி நடக்கும் இந்தியாவில், மக்களின் தனிப்பட்ட உரிமைகள், உணர்வுகள், பண்பாடுகள் மதிக்கப்படாமல், ஒன்றிய ஆட்சியாளர்கள் ஆதிக்க முனைப்புடன் பல செயல்களைத் தொடர்ந்து செய்து வருகின்றனர்.
மதத் திணிப்பு, மொழித்திணிப்பு, பண்பாட்டுத் திணிப்பு போன்றவை தொடர்ந்து செய்யப்படும் எதிர்ப்புகளுக்கு இடையே செய்யப்பட்டு வருகின்றன.
இந்திய நாட்டில் அரசியல் சட்டம் ஆட்சி செய்யும் நிலையில், உச்சநீதிமன்றம் என்ற உச்ச அதிகாரம் கொண்ட நீதிமன்றம் இருக்கும் நிலையில், இவற்றையெல்லாம் பொருட்படுத்தாமல் மேற்கண்ட ஆதிக்கங்கள் செய்யப்படுகின்றன.
இந்தியா என்பது பல மாநிலங்களை ஒன்று சேர்த்து உருவாக்கப்பட்ட ஒன்றியமாகும். இதில் பல மொழி, பல மதம், பல பண்பாடு, கலாச்சார பழக்க வழக்கங்கள் கொண்ட மக்கள் வாழ்கின்றனர். அப்படிப்பட்ட மக்களைக் கொண்ட நாட்டில் ஒரே மொழி, ஒரே உணர்வு, ஒரே கலாச்சாரம், ஒரே மதம் என்று நிலை நாட்ட முற்படுவதும், பிறப்பால் உயர்வு தாழ்வு, உரிமை மறுப்பு செய்யப்படுவதும் மோசடிச் செயலாகும்.
‘தடியெடுத்தவன் தண்டால்காரன்’ என்ற நினைப்பில் முனைப்பில் ஒன்றிய ஆட்சி இப்படிச் செயல்படுவது இந்திய ஒற்றுமையையும் ஒருங்கிணைப்பையும் சிதைக்கும் என்பதை உரியவர்கள் கருத்தில் கொள்ளவேண்டும்.
இந்த மண்ணின் மக்களின் மொழி, பண்பாடு ஒழிக்கப்பட்டு, வழக்கொழிந்த ஆரிய மொழி, பண்பாட்டைத் திணிக்க முயலுவது கோடிக்கணக்கான மக்களைக் கொதித்தெழச் செய்யும் செயலாகும். ஆர்.எஸ்.எஸ். அமைப்பும், பி.ஜே.பி.யும் ஹிந்தி, சமஸ்கிருதம் இரண்டு மொழிகளையும் இந்தியா முழுமையும் திணிக்க முயற்சிக்கிறார்கள். அதிலும் சமஸ்கிருதம் இந்திய மக்கள் அனைவரும் பேசும் மொழியாக ஆக்கப்படும் வரை, ஹிந்தி இடைக்கால ஏற்பாடாக எல்லோரும் பேசும் மொழியாக ஆக வேண்டும் என்பதே. ஆர்.எஸ்.எஸ். சித்தாந்த கர்த்தர் கோல்வால்கர் அதை அப்பட்டமாக வெளிப்படுத்தியும் உள்ளார்.
உலக வழக்கு ஒழிந்து செத்துப்போன சமஸ்கிருதத்தை- இந்தியா முழுக்க 25 ஆயிரம் பேர் மட்டுமே பேசக்கூடிய சமஸ்கிருத மொழியை 140 கோடி மக்கள் மீது திணித்து மற்ற மொழிகளை அழித்துவிட வேண்டும் என்ற திட்டம் எவ்வளவு கொடிய ஆதிக்க வெறி!
இப்படியும் நடக்குமா? என்றுதான் எல்லோரும் எண்ணுவர். ஆனால், அந்த முயற்சியில் வடமாநிலங்களில் முதல் கட்ட வெற்றியும் பெற்றுவிட்டனர். அதை கீழ்க்கண்ட விவரங்கள் உங்களுக்குத் தெளிவாக விளக்கும். அவற்றைக் கூர்ந்து பாருங்கள்.
மேற்கண்ட விவரங்களை ஆய்வு செய்தால், ஹிந்தி, சமஸ்கிருதம் என்ற இரண்டு மொழிகளும் எந்த மக்களுக்கும் தாய்மொழியாய் இல்லை என்பது உறுதியாகத் தெரிகிறது. இந்தியாவில் எந்த மக்களுக்கும் தாய்மொழியாய் இல்லாத இந்த இரண்டு மொழிகளை 140 கோடி இந்திய மக்கள் மீது திணிப்பது மோசடியல்லவா? ஆதிக்கம் அல்லவா? அநியாயம் அல்லவா? அது மட்டுமல்ல; இந்த இரண்டு மொழிகளின் திணிப்பால் கோடிக்கணக்கான மக்கள் தங்கள் தாய்மொழியை இழந்துவிட்டனர். அவர்கள் தாய்மொழியும் அழிக்கப்பட்டு வருகிறது. எடுத்துக்காட்டாக, “போஜ்புரி” 4 கோடி மக்களின் தாய்மொழி. ஆனால், அம்மொழி பேசிய மக்கள்மீது ஹிந்தி திணிக்கப்பட்டதால், அம்மொழி அழிக்கப்பட்டு, அதற்குப் பதிலாய் ஹிந்தி அவர்கள் மொழியாகிவிட்டது. அதனால் “போஜ்புரி” மொழிப் பட்டியலில் இடம் பெறாமல் போய்விட்டது. இதைக் கீழ்க்கண்ட பட்டியல் தெளிவாக விளக்குகிறது.
தற்போது இந்திய அரசால் பட்டியலிடப்பட்டுள்ள 21 மொழிகளில், சுமார் 25 ஆயிரம் பேர் மட்டுமே பேசக்கூடிய சமஸ்கிருதம் இடம் பெற்றுள்ளது. ஆனால், 4 கோடி பேர் பேசிய ‘போஜ்புரி’ இடம் பெறாமலே போய்விட்டது. இப்படிப்பட்ட ஒரு மோசடி, அநீதி, ஆதிக்கம் உலகிலே வேறு இருக்க முடியுமா?
ஹிந்தியை ஏற்றதால் போஜ்புரி மறைந்து போய் அந்த இடத்தை ஹிந்தி பிடித்தது போல், ஹிந்தி திணிக்கப்பட்டால் எல்லா மொழிகளும் இப்படித் தான் காணாமல் போகும். எல்லா மொழிகளின் இடத்தையும் ஹிந்தி பிடித்துக் கொள்ளும். இந்தியா முழுக்க ஹிந்தி பேசப்பட்டால், வெகு எளிதாக அந்த இடத்தை சமஸ்கிருதம் பிடித்துக்கொள்ளும். ஹிந்தியும் சமஸ்கிருதமும் நெருங்கிய தொடர்புடைய மொழிகளாய் இருப்பதால், சமஸ்கிருத மயமாக்குவது எளிதாகிவிடும். ஆக, ஹிந்தித் திணிப்பு சமஸ்கிருதத் திணிப்புக்கான ஒரு ஏற்பாடே! அவர்கள் நோக்கு ஹிந்தித் திணிப்பல்ல; சமஸ்கிருதத் திணிப்பே. செத்துப்போன ஒரு மொழியை- 25,000 பேர் மட்டும் பேசும் மொழியை 140 கோடி மக்கள் மீது திணிக்கும் மோசடியை இந்தியாவில் பல்வேறு மொழிகளைத் தாய்மொழியாகக் கொண்ட மக்கள் கருத்தில்கொண்டு தத்தம் மொழியைக் காக்க ஒன்றாய் இணைந்து போராடி ஆர்.எஸ்.எஸ். சூழ்ச்சியை முறியடிக்க வேண்டியது கட்டாயக் கடமையாகும். விழிப்போடு இருங்கள்; எச்சரிக்கையோடு போராடுங்கள்.