Unmai Magazine Subscription - உண்மை இதழ் உங்கள் முகவரி தேடி வர சந்தா செலுத்துங்கள்..

பதற்ற நோய்கள் காரணங்களும், சிகிச்சை முறைகளும் மனமின்றி அமையாது உலகு 17

மருத்துவர்
சிவபாலன்
இளங்கோவன்
மனநல மருத்துவர்

ஏன் பதற்ற நோய்கள் வருகின்றன? பெரும்பாலான மன ரீதியான பிரச்சினைகள் நமக்கு வந்தவுடன் நமக்குள் தோன்றும் கேள்விகள், “நமக்கு எப்படி வந்திருக்கும்? நமக்கு தான் எந்த பிரச்சினையும் இல்லையே?”.

ஏதாவது ஒரு பிரச்சினை எனது வீட்டிலோ அல்லது பணியிலோ இருந்தால் தான் மனரீதியான பிரச்சினைகள் வரும் என்று நாம் தீர்க்கமாக நம்புகிறோம்.

“உங்க மகள் டிப்ரஸ்டா இருக்கா, தற்கொலை எண்ணங்கள் கூட இருக்கு”

“டிப்ரஸ்டா இருக்கற அளவிற்கு அவளுக்கு ஒரு பிரச்சினையும் இல்ல டாக்டர், இதுல தற்கொலை எண்ணமா? நெவர், என் பொண்ணு ரொம்ப தைரியமான பொண்ணு டாக்டர்” என்று பதில் சொல்லும் நிலையில் தான் நமது பெற்றோர்கள் இருக்கிறார்கள்.

ஒருவர் மனரீதியாகச் சங்கடப்படுகிறார் என்றால் குடும்பம் சரியில்லை, பெற்றோர்கள் சரியில்லை, கணவன் சரியில்லை, மனைவி சரியில்லை என்று மற்றவர்கள் மீது பழி போடவும் நாம் தயங்குவதில்லை.

“எனக்கு அப்பவே தெரியும், குழந்தைய இவங்க வளர்க்குற முறையே சரியில்லேனு சொல்லிட்டே இருந்தேன், அதே மாதிரி நடந்துருச்சு” என பிரச்சினை நடக்கும் வீட்டில் உட்கார்ந்து கொண்டு பாதிக்கப்பட்ட பெற்றோர்களையே குற்றம் சொல்லிக்கொண்டிருக்கும் ஆட்களும் இங்கிருக்கிறார்கள்.

உடல் ரீதியாக ஒருவருக்குப் பாதிப்பு வரும்போது அதற்கு குடும்பத்தில் உள்ளவர்கள் மீது பழி சொல்லப்படுவதில்லை, அதே போல ஒருவருக்கு டைஃபாய்டு வந்துவிட்டால் “வீட்டுல அவளுக்கு ஒரு பிரச்சினையும் இல்லையே! எப்படி டைஃபாய்டு வந்திருக்கும்?” எனக் கேட்பதில்லை. உடல் ரீதியான பிரச்சினைகளுக்கு தனிப்பட்ட அந்த நபரோ அவர்களது குடும்பமோ காரணம் இல்லை என்பதை ஏற்றுக்கொள்ளும் நாம், மனரீதியான பிரச்சினைகளுக்கு அவை மட்டுமே காரணம் என்று பிடிவாதம் பிடிக்கிறோம்!

இதற்கெல்லாம் காரணம் மனம் என்பதும் உடலின் ஒரு பகுதி, உடலின் சமநிலை பாதிக்கப்படும் போதும் அதனால் மனமும் பாதிக்கப்படும் என்பதை உணராததால் தான்.
மூளையில் ஏற்படும் சில ரசாயன மாற்றங்களினால், நமது ஹார்மோன் சுரப்புகளில் ஏற்படும் சில கோளாறுகளால் அல்லது வேறு ஏதாவது உடலில் ஏற்படும் நோய்களால்
மனதின் சமநிலைத் தன்மை பாதிக்கப்படும். உதாரணத்திற்கு பதற்றம் என்பது உடலின் ஒவ்வொரு செயல்பாட்டையும் மாற்றியமைப்பது போல, மனதின்
செயல்பாட்டையும் மாற்றியமைக்கிறது. அதீத கவனம், எச்சரிக்கை உணர்வு, பயம், எதிர்மறையான எண்ணங்கள், நம்பிக்கையின்மை, தன்னைச் சுற்றி நடக்கும் ஒவ்வொன்றையும் சந்தேகக் கண்ணுடன் பார்ப்பது, செய்யும் செயல்களில் திருப்தி இல்லாமல் இருப்பது போன்ற மன ரீதியான மாற்றங்களும் பதற்றத்தின்போது நிகழ்கின்றன, பதற்றம் நீடிக்கும் போது மனதின் இந்த மாற்றங்களும் தொடர்கின்றன. மனதின் இந்த மாற்றங்களுக்குக் காரணமான பதற்றத்தைச் சமன்செய்யவிடாமல் ஏதோ ஓர் உடலியல் ரீதியான காரணம்தான் தடுக்கிறது. அதுதான் பதற்றத்திற்குக் காரணம்.

பதற்றத்தைச் சரி செய்ய வேண்டுமானால் நாம் அந்தக் காரணத்தை – குறிப்பாக அந்த அட்ரினலின் தூண்டுதலைத் தான் குறைக்க வேண்டும், பதற்றத்திற்கான சிகிச்சை முறைகளில் மாத்திரைகளின் வழியாக இந்த உடலின் செயல்பாடுகளைச் சீர்படுத்துவதும் முக்கியமான ஒன்று.

பெரும்பாலான பதற்ற நோய்களுக்கு இரண்டு விதமான சிகிச்சை முறைகள் உள்ளன.

1. மருந்து, மாத்திரைகளின் வழியாக பதற்றத்தில் நடக்கும் உடல் செயல்பாடுகளைக் கட்டுப்படுத்துதல்

2. உளவியல் சிகிச்சை வழியாக பதற்றத்தில் நடக்கும் நமது செயல் பாடுகளை முறைபடுத்துதல்

மருத்துவச் சிகிச்சைகள் :

நவீன மருத்துவ அறிவியலில் மனநலப் பிரச்சினைகளுக்குக் காரணமான உடலியல் கோளாறுகளைக் கண்டுபிடிப்பதற்கான பரிசோதனைகள் வந்துவிட்டன. அந்த குறைகளை சமன்செய்வதற்கான மருத்துவ முறைகளும் ஏராளமாக வந்துவிட்டன. மனப்பதற்றத்தை மிக எளிமையாக அந்த மருத்துவ முறைகளால் குணப்படுத்த முடியும். எந்த வித பதற்ற நோய்களுடன் ஒருவர் வந்தாலும், முதலில் இந்த மருத்துவ முறைகளால் அவரது பதற்றத்தை முழுமையாகக் குறைப்பது தான் சிகிச்சையின் முதல்படி. அந்தப் பதற்றத்தை
முழுமையாகக் குறைத்த பிறகு, அதனால் அதுவரை மாறியிருந்த அவர்களது வாழ்க்கை முறைகளை, பழக்கவழக்கங்களை முறைப்படுத்துவது இரண்டாவது படி. அதை பல்வேறு உளவியல் சிகிச்சைகளால் செய்ய முடியும்.

உளவியல் சிகிச்சைகள்:

ஃபோபியா நோயுடன் ஒருவர் வருகிறார்.அவருக்கு இருட்டில் செல்வதற்கு ஃபோபியா. சில முறை அப்படி சென்றபோது மூர்ச்சையாகி விழுந்திருக்கிறார். அதன் பிறகு அவர் இருட்டில் எங்குமே செல்வதில்லை, தூங்கும்போது கூட விளக்குகளை எரியவிட்டுத் தான் தூங்குவார். இருட்டைத் தவிர்த்தால் நமக்கு இந்தப் பிரச்சினை வராது என்பதை அவர் கற்றுகொண்டுவிட்டார், இருட்டில் மாட்டினால் எப்படியும் நமக்கு இந்தப் பதற்றம் வந்துவிடும் என்பதையும் கற்றுக்கொண்டிருக்கிறார். இந்த ஃபோபியாவில் இருந்து அவரை மீட்கவேண்டுமானால் அவருள் பதிந்திருக்கும் இந்த இரண்டு நம்பிக்கைகளையும் நாம் சரி செய்ய வேண்டும். எப்படி அந்த நம்பிக்கையை மாற்ற முடியும்? அனுபவத்தின் மூலமாக!.

திரும்பவும் இருட்டை அவர் எதிர்கொள்ள வைத்து அப்போது அவருக்கு எந்தப் பதற்றமும் ஏற்படவில்லை என்பதை உறுதி செய்தால் அவர் தனது பழைய நம்பிக்கைகளை மாற்றிக்கொள்வார். அதற்கு முதலில் அவருக்கு மாத்திரைகள் கொடுத்து பதற்றத்தைத் தணிக்க வேண்டும், பிறகு படிப்படியாக உளவியல் வழிமுறைகளின் படி இருட்டை எதிர்கொள்ளச் செய்ய வேண்டும். படிப்படியாகச் செய்யும்போது நாளடைவில் அவர் எந்தப் பதற்றமும் இல்லாமல் இருளை எதிர்கொள்வார். அதன் வழியாக தனது கெட்டிப்பட்ட இரண்டு நம்பிக்கைகளை மாற்றிக்கொள்வார், அப்படித்தான் அவரை மீட்க முடியும். படிப்படியாக அவரை அந்தச் சூழலை எதிர்கொள்ளச் செய்யும் பல வழிமுறைகள் உளவியல் சிகிச்சைகளில் உள்ளன. அனைத்து விதமான பதற்ற நோய்களுக்குமான தீர்வு என்பது இந்த இரண்டு சிகிச்சை வழிமுறைகளிலும் இருக்கிறது.

நாம் பயப்படுவது போல பதற்ற நோய் என்பது தீர்க்க முடியாத, தீவிர மனநோய் அல்ல. சாதாரண சிகிச்சை முறைகளிலேயே முற்றிலும் சரி செய்யக்கூடிய ஒன்றாகத் தான் இந்த பதற்றநோய்கள் இருக்கின்றன. அதனால் பதற்ற நோய் தனக்கோ மற்றவர்களுக்கோ இருந்தால் அதை அலட்சியப்படுத்தாமல் மருத்துவச் சிகிச்சைகளை மேற்கொள்ளும்போது முற்றிலும் நாம் அதிலிருந்து மீண்டு வரலாம்.

(தொடரும்)