Unmai Magazine Subscription - உண்மை இதழ் உங்கள் முகவரி தேடி வர சந்தா செலுத்துங்கள்..

‘ பெரியார் புரா’ திட்டச் செயல்பாடுகள் கண்டு புகழ்ந்து மகிழ்ந்த பெருமான் அப்துல் கலாம்! – கி.வீரமணி இயக்க வரலாறான தன் வரலாறு (357)

‘பெரியார்‘புரா’ மூலம் வழங்கப்படும் தூய குடிநீரைப் பருகும்
குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் அவர்களும் ஆளுநர் சுர்ஜித்சிங்

‘பெரியார் ‘புரா’ திட்டச் செயல்பாடுகளையும் அதன் விளைவுகளையும் நேரில் காண, பெரியார் மணியம்மை பல்கலைக்கழகத்திற்கு 24.9.2006 பிற்பகல் மணி 2:40க்கு குடியரசுத் தலைவர் வந்தார். பெரியார் மணியம்மை அறிவியல் தொழில் நுட்ப நிறுவனத் தலைவர் என்கிற நிலையில், பெரியார் புரா அமைப்பின் புரவலராக இருந்து நாம் குடியரசுத் தலைவரை அன்போடு வரவேற்றோம். அவருடன் மேதகு தமிழ்நாடு ஆளுநர் சுர்ஜித்சிங் பர்னாலா அவர்களும் வந்திருந்தார். பெரியார் புராவின் பல்வேறு செயல் திட்டங்களைப் பார்த்தும், மகிழ்ந்தும் போனார் குடியரசுத் தலைவர். முக்கியமாக முத்துவீரக்கண்டியன்பட்டியில் அமைக்கப்பட்டுள்ள தூய குடிநீர் திட்டத்தைப் பார்வையிட்டார். மேலும் பவர் அமைப்பின் சார்பில் மகளிரால் தயாரிக்கப்பட்ட பொருட்களைப் பார்வையிட்டார்.

ஒரு உட்கிராமத்திற்கு இந்திய குடியரசுத் தலைவர் வருவது இதுவே முதல் முறையாகும்.

முத்துவீரக்கண்டியன்பட்டி, வீரமரசன்பேட்டை, ஆவாரம்பட்டி ஆகிய மூன்று கிராமங்களிலும் குடிநீர் என்பது மிக மிக மோசமான ஒன்று. அந்நிலையை மாற்றி, மக்களுக்கு ஆரோக்கியமான குடிநீர் வழங்கும் பொறுப்பை பெரியார் புரா தன்மேல் போட்டுக் கொண்டு களம் இறங்கியது. அமெரிக்காவின் “ப்யூரோ-டெக் நிறுவன உதவியுடன் நீர் சுத்திகரிப்பு இயந்திரம் பொருத்தப்பட்டு இன்றைக்குத் தூய குடிநீர் மூன்று கிராமங்களுக்கும் கிடைக்கிறது. அதனால் அம்மக்கள் அடைந்த மகிழ்வையும்
குடியரசுத் தலைவர் அவர்கள் கவனிக்கத் தவறவில்லை. ஒன்றன்பின் ஒன்றாக பெரியார் புராவின் உயரிய பணிகளைப் பார்வையிட்டு,
மகிழ்ந்து வேக நடை போடுகிறார் குடியரசுத் தலைவர். அவரை அன்போடு மேடைக்கு அழைத்து வந்தபோது மாணவச் செல்வங்களும், மக்கள் கூட்டமும் அய்ந்து நிமிட நேரம் அரங்கத்தை அதிர வைத்தனர்.

நாம் நம் வரவேற்பு உரையில், “பெரியார் சிந்தனைகளை பெரியார் புரா மூலம் செய்ய இருக்கிறோம் வாருங்கள், வந்து பயனடையுங்கள் என வரவேற்றுவிட்டு,
‘இந்த நாள் இனிய நாள்; அதுவும் பொன்னாள்! எந்தக் குடியரகத் தலைவர் கிராமம் நோக்கி வந்திருக்கிறார்? இதோ இங்கே அமர்ந்திருக்கிற, நம் இதயங்களோடு இணைந்திருக்கிற அப்துல் கலாம் அவர்கள் தான் வந்திருக்கிறார். அறுபது ஆண்டுகளுக்கு முன் பெரியார் நினைத்தது. இப்போது நடைபெற்று வருகிறது என குடியரசுத் தலைவர் சொன்னதை நினைவு கூர்ந்தோம்.

முத்துவீரக்கண்டியன்பட்டி வீரமரசன் பேட்டை, ஆவராம்பட்டி மக்களுக்கு தண்ணீர் என்று நினைத்தாலே கண்ணீர் வரும் நிலை இருந்தது. அமெரிக்க நிறுவன உதவியுடன் நம் பெரியார் புரா அந்நிலையைப் புரட்டிப் போட்டது. இன்றைக்குப் பன்னீரைவிட நன்னீர் இம் மக்களுக்குக் கிடைக்கிறது.” என்று வரவேற்புரையில் குறிப்பிட்டோம்.
அடுத்து, குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் அவர்கள் பாராட்டுரையில், “பெரியார் புராவைச் சேர்ந்த கிராமத்துப் பெருமக்கள் உங்கள் எல்லோரையும் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன் உங்கள் எல்லோருக்கும் என் வணக்கம். நான் சென்ற முறை தஞ்சாவூர் வந்தபோது பெரியார் புராவைத் தொடங்கி வைத்தேன். இந்த ‘புரா’ திட்டம் உங்கள் எல்லோருடைய ஒத்துழைப்பால் நன்றாக வளர்ந்து நாட்டில் மற்ற எல்லா கிராமங்களுக்கும் உதாரணமாக இருப்பது எனக்கு மிகுந்த சந்தோசத்தைத் தருகிறது” என்று தனது உரையில் குறிப்பிட்டர் கலாம்.

மகளிர் மேம்பாடு மற்றும் மறுமலர்ச்சிக்கான பெரியார் அமைப்பின் சார்பில் மகளிர் சுய உதவிக் குழுவால் உருவாக்கப்பட்ட 

நமது நாட்டின் வளர்ச்சிக்கு அடிப்படை பெரியார் புராவைச் சேர்ந்த கிராமங்கள் போன்ற சிறந்த கிராமங்களே” என்று கூறிய குடியரசுத்தலைவர், ‘புரா’ திட்டம் பற்றி இந்நிகழ்வில் விளக்கிப் பாராட்டிப் பேசியதோடு, அச்செய்திகளை, அவர் எழுதிய “டார்கெட் 3 பில்லியன்” என்னும் புத்தகத்தில் இத்திட்டத்தை பற்றிக் கீழ்கண்டவாறு எழுதியுள்ளார்.
‘பெரியார் புரா’ திட்டம் தமிழ்நாட்டில் தஞ்சாவூர் பெரியார் மணியம்மை பல்கலைக்கழகத்தால் செயல்படுத்தப்படுகிறது. பல்கலைக்கழகத்தின வளாகத்திற்குள்ளேயே பெரும்பரப்பில் ‘ஜெட்ரோபா’ மரங்கள் நடப்பட்டுள்ளன. இயற்கையாக தாவரங்களில் இருந்து தயாரிக்கப்படும் டீசல் மற்றும் இதர பசுமைத் திட்டங்கள் பற்றிய செய்தியையும், விழிப்புணர்வையும் ‘புரா’ திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் பகுதிகளில் பரப்பும் பணியை பல்கலைக்கழகம் ஏற்றுக் கொண்டுள்ளது. இது தொடர்பாக பல்கலைக்
கழகம் பல மய்யங்களை நடத்தி வருகிறது. அவற்றுள், சுற்றுச்சூழல் நட்புடன் கூடிய செயல்பாடுகளும், ஆய்வும் மேற்கொள்ளப் பட்டுள்ள மூன்று நிறுவனங்களை சிறப்பாகக் குறிப்பிடலாம்.

1. உயிரியல் தொழில்நுட்பம் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு பற்றிய பெரியார் ஆய்வு மய்யம்

காடுகளின் அழிப்பைத் தடுத்து மேலும் புதிய மரங்களை பெரும் அளவில் நட்டு, பாதுகாத்து வளர்ப்பது மற்றும் தரிசு நில மேம்பாட்டுக்கான உயிரியல் தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்ட செயல் திட்டங்களை மேற்கொள்வதன் மூலம் கிராமப்புறப் பகுதிகளை முன்னேற்றம் பெறச் செய்ய கிராமப்புற மக்களுடன் தொடர்பு கொண்டு அவர்களுக்கு உதவுவதை நோக்கமாகக் கொண்ட இம்மய்யம் 1996ஆம் ஆண்டில் துவக்கப்பட்டது. உள்ளூர் மக்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கும் நோக்கத்துடன் கூடிய பல்வேறு விவசாயத் தொழில் நுட்பங்களில் நேரடிப் பயிற்சி அளிக்கும் முறையை இப்பகுதியில் உருவாக்கி வளர்ச்சி பெறச் செய்துள்ளது இம்மய்யம்.

2. சுற்றுச்சூழல் பாதுகாப்பில் இயற்கை ஆற்றல்களை நிருவகிக்கும் பெரியார் மேலாண்மை மய்யம்:

கனடா நாட்டின் கேப் பிரிட்டன் பல்கலைக் கழகம் மற்றும் நியூபவுண்ட் லேண்டில் உள்ள வட அட்லாண்டிக் கல்லூரி ஆகியவற்றுடன் இணைந்து உருவாக்கி அமைக்கப்பட்டுள்ளது. இம்மய்யம், கழிவுநீரை சோதனை செய்து தூய்மைப்படுத்துவது, அதனைச் சீர் செய்வதற்கான தொழில்நுட்பங்கள், தொடர்ந்து தானாகவே மின் ஆற்றலை உருவாக்கிக் கொள்ளும் மரபுசாரா மின் உற்பத்தி தொழில் நுட்பங்கள் பற்றிய பயிற்சித் திட்டங்களை இம்மய்யம் நடத்துகிறது. தஞ்சாவூர் நகராட்சியின் திடக் கழிவுகளில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் ஒரு திட்டத்தில், ஜெர்மன் நாட்டு ஆச்சென் பல்கலைக்கழகத்துடன் இணைந்து இம்மய்யம் தற்போது ஈடுபட்டுள்ளது.

3. மரபுசாரா முறைகளில் மின் ஆற்றலை உருவாக்கும் திட்டங்களுக்கான பெரியார் பயிற்சி மய்யம்:

மரபுசாரா எரிசக்தித்துறை அமைச்சகத்துடன் கூட்டு முயற்சியாக தொடங்கப்பட்டு செயல்பட்டு வருவது இந்த மய்யம் பல்வேறுபட்ட குழுக்களின் தேவைக்கு ஏற்ப, எரிபொருள் சேமிப்பு சிக்கனம், மரபுசார் முறையில் மின் ஆற்றல் உருவாக்கம் ஆகிய பாடத் திட்டங்களுக்கான பயிற்சியை, ஒருநாள் பயிற்சியிலிருந்து ஒருமாதப் பயிற்சி வரை இம்மய்யம் அளிக்கிறது. மகளிர் சுய உதவிக் குழுக்கள் வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள், ஊராட்சி மன்ற உறுப்பினர்கள், அரசு அலுவலர்கள், மாணவர்கள், ஆசிரியர்கள், கல்வியாளர்கள் மற்றும் மரபுசாரா எரிசக்தி உற்பத்தியில் ஆர்வம் கொண்டிருப்பவர்கள் என்று பல்வேறு தரப்பு மக்களும் பயன்பெறும் வகையில் இப்பயிற்சி வடிவமைக்கப்பட்டுள்ளது.
(Target 3 Billion by A.P.J.Abdul Kalam and Srijan Pal Sing- page 179)

‘பெரியார் புரா’ அறிவு மய்யத்தைத் திறந்து வைக்கும்
ஆளுநர் சுர்ஜித் சிங் பர்னாலா. ‘பெரியார் புரா’ அறிவு மய்யத்தைப்

பெரியார் வழியில் கிராம நகர பேதம் ஒழிப்பு, இளைஞர்களின் ஆற்றலை ஈடுபடுத்துதல் சமூகத்தின் ஆதரவை உருவாக்கித் திரட்டி, ஆக்கபூர்வமான செயல் திட்டங்களுக்கான முயற்சிகளை மேற்கொண்டுள்ள ‘பெரியார் புரா’ மக்களைப் பங்கெடுத்துக் கொள்ளச் செய்வது போன்ற ஒரு முன்மாதிரியாக திட்டத்தைப் பின்பற்றுகிறது. சமூகப் பணியில் முதுகலைப் பட்டம் எம்.பில்., மற்றும் முனைவர் பட்டப் படிப்புகளுடன், இயற்கை மற்றும் உயிரியல் இயற்கை எருவைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் விவசாயம், நிலப்பரப்பைப் பயன்படுத்தி மேம்படுத்துதல், மூலிகைகளின் மூலம் சிகிச்சை அளித்தல் மற்றும் விவசாய உற்பத்திப் பொருள்களைச் சந்தைப்படுத்துதல் போன்ற பாடங்களில் பட்டயப் படிப்புகள் போன்ற கிராமப்புற வளர்ச்சிக் களத்திற்கான பல பாடத் திட்டங்களையும் ‘பெரியார் மணியம்மை பல்கலைக்கழகம்’ நடத்தி வருகிறது. இந்தப் புரா திட்டத்தின் ஒரு பகுதியாக ஆவதற்குத் தகுந்த தொழில்நுட்ப அறிவு கொண்ட தலைவர்களை இந்தப் பட்டயப் படிப்புகள் தயாரித்து அளிக்கின்றன.

தஞ்சை புதிய பேருந்து நிலையத்தில் திராவிட மாணவர் கழக மாணவர்களால் அமைக்கப்பட்ட தந்தை பெரியார் சிலை திறப்பு விழாவில் தமிழர் தலைவர் ஆசிரியர் மற்றும் ஒன்றிய இணை அமைச்சர் எஸ்.எஸ்.பழனி மாணிக்கம், கழக செயலவைத் தலைவர் ராசகிரி கோ. 

‘பெரியார் புரா’ தனது செயல்பாட்டுக்காகத் தேர்ந்தெடுத்துக் கொண்டுள்ள கிராமப் பகுதிகளில் உள்ள குடும்பங்களை இச்செயல் திட்டங்களில் பங்கெடுத்துக் கொள்ள தயார் செய்யும் பொறுப்பை சமூகப்பணி முதுகலை பட்டப்படிப்பில் பயிலும் மாணவர்களுக்கும் தேசிய சேவைத் திட்டத்தில் தாங்களாக விரும்பி செயலாற்ற வருபவர்களுக்கும் அளிக்கிறது.

ஒவ்வொரு மாணவருக்கும் அய்ந்து குடும்பங்கள் ஒதுக்கப்படுகின்றன. அவர்களின் பட்டப்படிப்பு காலம் முழுவதிலும் இந்தக்
குடும்பங்களை முன்னேற்றத்தில் பங்கெடுத்துக் கொள்வதில் வழிநடத்திச் செல்வதும் அதில் அவர்கள் அடையும் முன்னேற்றத்தைக் கண்காணிப்பதும், மாணவர்களது பாடத்
திட்டத்தின் படியும், புறப்பாடத் திட்டத்தின்படியு மான கடமையாக இருக்கும். தற்போதுள்ள தொழில்நுட்ப அறிவை கிராமப்புற குடும்பத்தினருக்குக் கற்பிப்பது, அவர்கள் விரும்பும் பயிற்சியை அளிப்பது, கல்வி மற்றும் உடல்நலம் பேணுதல்பற்றிய அடிப்படை அறிவை அளிப்பது, அவர்களின் மனங்களிலிருந்து மூடநம்பிக்கைகளை அகற்றுவது ஆகியவையும் இவற்றில் அடங்கும். மாணவர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட குடும்பங்களைக் கண்காணித்து அவர்கள் அடைந்துவரும் முன்னேற்றங்களை
ஆவணப்படுத்துவார்கள். இதன்மூலம் ‘பெரியார் புரா’ திட்ட நடைமுறையினை எந்தவித பாகுபாடும், விருப்பு வெறுப்பும் அற்றமுறையில் மதிப்பீடு செய்து கண்காணிக்க இது உதவுகிறது.

பெரியார் அய்.ஏ.எஸ். பயிற்சி மய்ய வகுப்புகள் தொடக்க விழாவில்

இவ்வாறு மாணவர்கள் கிராமப்புற மக்களுடன் இணைந்து செயலாற்றுவதனால், ஒருவரைப்பற்றி மற்றவருக்கு மரியாதையும், மதிப்பும் தோன்றி வளர்கிறது. இது கிராமப்புற வாழ்க்கை பற்றிய அடிப்படை நிலையிலான புரிதலை மாணவர்களுக்கு கைமேல் கிடைக்கச் செய்வதால், வாழ்க்கை பற்றிய அவர்களின் கண்ணோட்டம் விரிவடைய பயன் நிறைந்ததாக அமைகிறது. மாணவர்கள் எதிர்காலத்தில் தாங்கள் விரும்பி தேர்ந்தெடுத்துக் கொள்ளும் தொழில் வாழ்க்கைக்கும் அது பெரிதும் உதவுகிறது.

(Source: Target 3 Billion by
A.P.J. Abdul Kalam and
Srijan Pal Sing – Page – 179)

இப்படி தன் நூலில் குறிப்பிட்டதோடு அவர் பல்வேறு நிகழ்வுகளிலும் இத்திட்டத்தின் சிறப்புகளை மனம் திறந்து பாராட்டி வந்தார்.
அவருடன் ஆளுநர் பர்னாலாவும் கலந்துகொண்டு ‘பெரியார் புரா கிராமப்புற அறிவு மய்யத்தை’ திறந்து வைத்தார்.

கன்சிராம்

பெரியார் அய்.ஏ.எஸ். மற்றும் அய்.பி.எஸ். பயிற்சி மய்யத்தின் 19ஆம் ஆண்டு தொடக்க விழா 29.9.2006 அன்று சிறப்பாக நடைபெற்றது. அந்நிகழ்வில், தமிழ்நாடு ஆளுநர் சுர்ஜித் சிங் பர்னாலா அவர்கள் கலந்து கொண்டு உரையாற்றினார். இந்த நிறுவனத்தின் செயலாளர் என்ற நிலையில் நாம் தலைமை வகித்து உரையாற்றினோம். வரியியல் வல்லுநர் ச. இராசரத்தினம் அவர்கள் வரவேற்புரையாற்றினார்.

தஞ்சையில் 30.9.2006 அன்று இரவு 7 மணியளவில், புதிய பேருந்து நிலைய வளாகத்தில் திராவிடர் கழக மாணவர்கள் முயற்சியால் அமைக்கப்பட்ட தந்தை பெரியாரின் முழுஉருவச் சிலையை, அன்றைய ஒன்றிய நிதித்துறை இணையமைச்சர் எஸ்.எஸ்.பழனிமாணிக்கம் அவர்கள் தலைமையில் நாம் திறந்துவைத்தோம்.
மறுநாள் காலை 10 மணிக்கு பெரியார் புத்தக நிலைய ஓட்டுநர் செந்தில்குமார்- ஆசிரியை சரஸ்வதி திருமணத்தை திருச்சி பெரியார் கல்வி வளாகத்தில் நடத்தி வைத்தோம்.
பகுஜன் சமாஜ் கட்சியின் நிறுவனர் கன்சிராம் அவர்கள் 9.10.2006 அன்று மறைவுற்றதை அறிந்து அதிர்ச்சியுற்றோம். புதுடில்லி பெரியார் மய்யத்தின் பொறுப்
பாளர் பேரா.நல்.இராமச்சந்திரன், மற்றும் கழகத் தோழர்கள், அவரது உடலுக்கு மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர். நாம் அனுப்பிய இரங்கல் செய்தியை செல்வி மாயாவதி அவர்களிடமும், அம்பேத்கர் ராஜனிடமும் தெரிவித்தனர்.

புதுடில்லியில் உள்ள அமெரிக்கத் தூதரகத்தின் இரண்டாம் நிலைச் செயலர் கிறிஸ்டோபர் அவர்களும், சென்னையிலுள்ள அமெரிக்கத் தூதரகத்தின் பொருளாதார வல்லுநர் ஜார்ஜ் மாத்யூ அவர்களும் 11.10.2006 அன்று பெரியார் திடலில் எம்மைச் சந்தித்துப் பேசினர்.

மறுநாள் (12.10.2006) உச்சநீதிமன்றத்தில் பார்ப்பன ஆதிக்கத்தைக் கண்டித்தும், வீரப்ப மொய்லி அறிக்கை, கிரீமிலேயரையும், பொருளாதார அளவுகோலையும் புகுத்துவதன் மூலம் ஒன்றிய அரசின் சமூகநீதிக் கொள்கை களுக்குக் குந்தகம் விளைவிப்பதாக இருப்பதைக்கண்டித்தும் தமிழ்நாடு முழுவதும் மாவட்டத் தலைநகரங்களில் திராவிடர் கழகத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சென்னையில் மெமோரியல் ஹால் முன்பாக நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்குத் தலைமை வகித்து நாம் உரையாற்றினோம்.
மும்பை லெமூரியா நூல் வெளியீட்டகம் சார்பில் 14.10.2006 அன்று நடைபெற்ற விழாவில், ‘பார்வையின் நிழல்கள்’, ‘நிகழ்வுகள் சிந்தனைகள்’, ‘பேணுவோம் பெண்ணுரிமை’ ஆகிய நூல்களை நாம் வெளியிட்டோம். நியூ மங்களூர் துறைமுகப் பொறுப்புக் கழகத் தலைவர் பொன். தமிழ்வாணன் அவர்கள் பெற்றுக்கொண்டார். மறுநாள் மும்பை சயான் கிழக்குப் பகுதியில் உள்ள குருநானக் பள்ளி வளாகத்தில் நடைபெற்ற பெரியார் 128ஆம் பிறந்தநாள் விழாவிலும் நாம் கலந்துகொண்டோம்.

கே.கே.பொன்னப்பா

மறுநாள் நவிமும்பை தமிழ்ச்சங்க பொதுப்பாளர்களின் அழைப்பையேற்று தமிழ்ச்சங்க அலுவலகம் சென்றோம். பின்னர் பெரியார் பெருந்தொண்டர் மந்திரமூர்த்தி அவர்கள் இல்லம் சென்று நலம் விசாரித்தோம். அங்கிருந்து திராவிட பெரியார் சதுக்க தொடக்க விழாவுக்குச் சென்றோம். இரவு மும்பை சயான் கிழக்குப் பகுதியில் உள்ள குருநானக் கல்வி வளாகத்தில் மும்பை மாநிலத் தலைவர் தயாளன் தலைமையில் நடைபெற்ற தந்தை பெரியார் பிறந்தநாள் விழாவில் பங்கேற்றோம்.

கரூர் மாவட்ட திராவிடர் கழகத்தின் மேனாள் தலைவரும், இளமைக்காலம் தொட்டு இயக்கப் பணிகளில் ஈடுபட்ட வருமான கரூர் கே.கே.பொன்னப்பா 17.10.2006 அன்று
மறைந்தார். நொய்யலில் தந்தை பெரியாரைக் கொண்டு உயர்நிலைப் பள்ளியைக் கொண்டு வந்தவர். அவருக்கு இரங்கல் செய்தியை வெளியிட்டு பொத்தனூர் க.சண்முகம் அவர்கள் நேரில் செல்ல வேண்டினேன்.

பெங்களூரில் 19.10.2006 அன்று வழக்கறிஞர் சட்டமேதை, சமூக நீதிப் போராளி எல்.ஜி.ஹாவனூர் நினைவு நாள் நிகழ்ச்சியில் கலந்துகொண்டோம். கர்நாடகாவின்
தலைமை நீதிபதி சிரியாக் ஜோசப் அவர்கள் தலைமை யேற்றார். ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி இராசேந்திர பாபு முதலானோர் கலந்துகொண்டனர்.
முல்லைப் பெரியாறு அணைப் பிரச்சினை தொடர்பாக அனைத் துக் கட்சித் தலைவர் களின் கூட்டம் தமிழ்நாடு அமைச்சரவைக் கூட்ட அரங்கில் 23.10.2006 அன்று
தமிழக முதல்வர் கலைஞர் தலைமையில் நடைபெற்றது. கழகத்தின் சார்பில் கழகத் நாமும், பொதுச் செயலாளர் சு.அறிவுக்கரசும் கலந்துகொண்டோம். ஒன்றிய அரசின் முன்னிலையில் கேரள அரசுடன் பேச்சு வார்த்தை நடத்த முடிவெடுக்கப்பட்டது.

எல்.ஜி.ஹாவனூர்

பேராசிரியர் அ.இறையனார் அவர்கள் பெரியார் பேருரையாளர் விருதுக்கு ஆற்றிய ஆய்வுரையைத் தொகுத்து ‘தமிழின மானமீட்பர் பெரியார்” என்னும் நூலாக வெளியிடும் விழாவும் இறையனார் அறக்கட்டளை தொடக்க விழாவும் 28.10.2006 அன்று பெரியார் திடலில் நடைபெற்றது. நாம் புத்தகத்தை வெளியிட்டு நிறைவுரையாற்றினோம்.
31.10.2006 அன்று பெரியார் பெருந் தொண்டர் காரை சி.மு.சிவம் அவர்களின் மருமகளும் இன்றைய புதுவை மாநில திராவிடர் கழக தலைவர் சிவ.வீரமணி அவர்களின் வாழ்விணையருமான வீ.அருணாராணி அவர்களின் முதலாம் ஆண்டு நினைவு நாளில் பங்கேற்று அவரது படத்தினைத் திறந்து வைத்து உரையாற்றினேன்.
3.11.2006 அன்று காலை வல்லம் படுகையில் செல்வன் தி.லெனின்- கீதா திருமணத்தையும், மாலையில் சிதம்பரத்தில் நகர திராவிடர் கழகச் செயலாளர் கண்ணன்- விஜயகுமாரி ஆகியோரின் திருமணத்தையும் நடத்திவைத்தேன்.

பெரியார் பெருந்தொண்டர் செய்யாறு அருணாச்சலம் அவர்களின் 80ஆம் ஆண்டு விழாவில் பங்கேற்று அவரது தொண்டறத்தைப் போற்றி உரையாற்றினேன்.
(நினைவுகள் நீளும்…)