மருத்துவர்
சிவபாலன் இளங்கோவன்,
மனநல மருத்துவர்
பதற்றத்தைப் பற்றிப் பார்த்தோம், இயல்பான பதற்றத்தின் தேவை, நோக்கம், அதன் உடல்ரீதியான செயல்பாடுகள் பற்றியும் பார்த்தோம். நீடித்த பதற்றம் உண்டாக்கக்கூடிய பிரச்சினைகள், நோய்கள் மற்றும் அதனைத் தடுக்கும் வழிமுறைகளைப் பற்றி விரிவாகப் பேசியிருந்தோம். இயல்பான பதற்றம் நோய்மையாக மாறும்போது குறிப்பாக மன ரீதியான நோய்மைகளாக மாறும் போது அது எப்படி வெளிப்படும், அதில் என்னென்ன வகைகள் இருக்கின்றன என்பதைப் பார்ப்போம்.
பொதுவான பதற்ற நோய்
(Generalised Anxiety Disorders):
எல்லா பதற்ற நோயிலும் இருக்கக்கூடிய பொதுவான தன்மையான பயம், எதிர்காலம் தொடர்பான அச்சம், கவலை மற்றும் அட்ரினலின் தூண்டப்படுவதால் நடக்கக்கூடிய உடல் ரீதியான மாற்றங்களான படபடப்பு, உடல் வியர்த்தல், மூச்சு திணறல், வயிற்றுக்குள் பட்டாம்பூச்சி பறப்பது போன்ற உணர்வு, வயிறு எரிச்சல், அடிக்கடி சிறுநீர் போவது, தொண்டையும், நாக்கும் வறண்டு போவது போன்ற அறிகுறிகள் எப்போதும் இருந்து கொண்டேயிருக்கும் நிலைதான் இந்தப் பொதுவான பதற்ற நோய்.
இந்த நோய்க்குறிகள், கடந்த பல மாதங்களாக பெரும்பாலான நாட்கள் இருந்து வந்தால் அதைப் பொதுவான பதற்ற நோய் எனச் சொல்லலாம்.
இதில் இருக்கக்கூடிய நோய் அறிகுறிகள்:
எதிர்காலம் குறித்த அச்சம், கவலை. எது நடந்தாலும் அதை எதிர்மறையாகவும், ஏதோ தவறாக நடப்பது போலவும் எடுத்துக்கொள்வார்கள். சிறிய சத்தம் கேட்டால் கூட திடுக்கென பயப்படுவார்கள், வீட்டில் இருப்பவர்கள் யாராவது வெளியே போனால் ‘அவர்களுக்கு ஏதோ ஆகிவிடுமோ?’ என்ற அச்சம் வந்துவிடும் அவர்கள் திரும்ப வரும்வரை நிம்மதியாக இருக்க முடியாது.
பரபரப்பாக, ஓர் இடத்தில் நிம்மதியாக அமரமுடியாத அளவிற்கு ரெஸ்ட்லெஸ்ஸாக இருப்பார்கள். கைகளைப் பிசைந்துகொள்வார்கள், தலைமுடியைக் கோதிக்கொள்வார்கள், கைகள் நடுங்கும், உடலில் உள்ள தசைகள் எல்லாம் இறுக்க
மாக இருக்கும், ரிலாக்ஸாக இருக்க முடியாமல், இங்குமங்கும் நடந்து கொண்டே இருப்பார்கள்.
அட்ரினலின் தூண்டல். தலைவலி, மயக்கம் வருவது போன்ற நிலை, படபடப்பு, உடல் வியர்த்து போதல், மூச்சு அதிகமாவது, தொண்டை மற்றும் வாய் உலர்ந்து போவது, வயிறு எரிச்சல், பசியின்மை, கவனமின்மை, உடல் சோர்வு, முடிவெடுப்பதில் அவசரம், நிதானமின்மை இந்த நோய் அறிகுறிகள் எல்லாம், எந்த நேரமும், எல்லா நாட்களும் கடந்த பல மாதங்களாக, எந்த ஒரு குறிப்பிட்ட காரணமும் இல்லாமல் இருந்து வந்தால் நாம் இந்த நிலையைப் பொதுவான பதற்ற நோய் எனச் சொல்லலாம்.
இந்த ஊரடங்கு காலத்தில் நான் பார்த்த பெரும்பாலான நபர்களுக்கு இந்தப் பொதுவான பதற்ற நோய் இருந்தது. ஊரடங்கும், நோய் குறித்த அச்சமும், மாறிய நமது வாழ்க்கை முறைகளும் அதற்கு காரணங்களாக இருந்திருக்கலாம்.
பொதுவாக மற்ற பதற்ற நோய்களை ஒப்பிடும்போது, இந்தப் பொதுவான பதற்ற நோய் மிக அதிகமான மக்களுக்கு இருக்கிறது. மேலே சொன்ன நோய் அறிகுறிகள் எல்லாம் இயல்பாகவே சில நேரங்களில், சில சூழல்களில் வரக்கூடியவையே. அவையெல்லாம் பொதுவான பதற்ற நோய் அல்ல. அந்த நோய் அறிகுறிகள் தொடர்ச்சியாக சில மாதங்கள் குறைந்தபட்சம் மூன்று மாதங்களுக்கு மேல் இருந்து வந்தால் தான் அது நோய் இல்லையென்றால் அது இயல்பான பதற்றமே. அதையெல்லாம் இந்தப் பதற்ற நோயோடு போட்டு குழப்பிக்கொள்ள தேவையில்லை.
ஃபோபியா:
எதிர்பாராத ஓர் ஆபத்தைத் திடீரென நீங்கள் எதிர்கொள்ளும் சூழல் வரும்போது உங்களது அட்ரினலின் சிஸ்டம் தூண்டப்பட்டு அந்த ஆபத்தை எதிர்கொள்ளவோ, அல்லது தப்பிக்கவோ செய்வதற்கான ஆற்றலைக் கொடுக்கும் என நாம் முன்பே பார்த்தோம். திடீரென, அட்ரினலின் தூண்டப்படுவதால் உடலில் நடக்கும் மாற்றங்களான படபடப்பு,மூச்சு அதிகமாவது, பயம், உடல் வியர்த்து போவது, நடுக்கம், பேச்சு குளறுவது, தொண்டை உலர்ந்து போவது, தலைச் சுற்றுவது, நெஞ்சடைப்பது போன்றவைகளை ‘ஆட்டோனாமிக் சிம்டம்ஸ்’ எனப் பொதுவாகச் சொல்வோம். எந்த ஆபத்தை நாம் எதிர்கொள்ள நேர்ந்தாலும் இந்த ‘ஆட்டோனாமிக் சிம்டம்ஸ்’ உடனடியாக வெளிப்படும்.
சில பேருக்கு, சில குறிப்பிட்ட சூழல்கள் அல்லது குறிப்பிட்ட ஏதோ ஒன்று இந்த ஆட்டோனாமிக் சிஸ்டத்தைத் தூண்டிவிடும். இயல்பாக அந்தச் சூழல்கள் மற்றவர்களுக்கு எந்த வித பாதிப்பையும் ஏற்படுத்தாது. ஆனால், சில பேருக்கு, மட்டும் அந்தச் சூழலை எதிர்கொள்ள நேர்ந்தாலே அவர்களையும் அறியாமல் இந்த ‘ஆட்டோனாமிக் சிம்டம்ஸ்’ வந்துவிடும். உதாரணத்திற்கு ஒருவருக்கு கூட்டமான இடங்களுக்குச் சென்றாலோ இந்த ஆட்டோனாமிக் சிஸ்டம் திடீரென தூண்டப்பட்டு அதன் விளைவாக நெஞ்சு அடைப்பது, மூச்சு வேகமாவது, படபடப்பு வருவது, மயக்கம் போட்டு விழுவது என்ற தீவிரமான ‘ஆட்டோனாமிக் சிம்டம்ஸ்’கள் உண்டாகும். இந்த நிலையை நாம் அகரோஃபோபியா எனச் சொல்கிறோம். இதனால் அவர் பின் எப்போதும் கூட்டமான பகுதிகளுக்குச் செல்வதையே தவிர்ப்பார்.
பொதுவாகப் பல வகையான ஃபோபியாக்கள் மனிதர்களிடம் உண்டு. சிறு பூச்சிகளைக் கண்டாலே சில பேருக்கு ஃபோபியா வந்துவிடும், இருட்டைப் பார்த்தால், சில சத்தங்களைக் கேட்டால், அடைக்கப்பட்ட அறைகளில் மாட்டிக்கொண்டால், உயரத்தைப் பார்த்தால் என ஏராளமான ஃபோபியாக்கள் உண்டு. நமக்கே கூட இதில் உள்ள சில விஷயங்களைக் கண்டால் பயம் வரும், ஆனால்,
பயமும் ஃபோபியாவும் ஒன்றல்ல. ஃபோபியா என்பது பயத்தை விட பல மடங்கு தீவிரமானது, அந்தக் குறிப்பிட்ட சூழலில் அவர்கள் மாட்டிக்கொள்ள நேர்ந்தால் மூச்சு குறைந்து, இதயத்துடிப்பு அதிகமாகி, மயக்கம் ஏற்பட்டு சுய நினைவு கூட இழந்து போகலாம், இதய நோய் ஏதாவது கூட இருக்குமானால் அது சில நேரங்களில் மரணத்தில் கூட முடியலாம். இந்த அதீத ‘ஆட்டோனாமிக் சிம்டம்ஸ்’ மற்றும் அந்த குறிப்பிட்ட சூழலைத் தொடர்ச்சியாக தவிர்த்து வருவது என இரண்டும் இருந்தால் தான் அது தான் ஃபோபியா. சில நேரங்களில் சோசியல் ஃபோபியா கூட இந்தளவிற்கு தீவிரமானதாக இருக்கும், அதாவது, பொது இடங்களில் பேசுவதற்கு அல்லது மற்றவர்களின் முன்னால் பேசுவதற்கு பயம் இருக்கும், இந்தப் பயம் ‘ஆட்டோனாமிக் சிம்டம்களை’ உண்டாக்கினால் அதனால் அவர் எப்போதும் பொது இடங்களில் பேசுவதைத் தவிர்த்தால், அப்படி தவிர்ப்பதால் அவரது அன்றாட வாழ்க்கையில் பல இழப்புகளை அவர் சந்தித்தால் அவருக்குச் சோசியல் ஃபோபியா இருக்கிறது என்று அர்த்தம்.
ஃபோபியாவில் இரண்டு அம்சம் இருக்கின்றது. ஒன்று, ஒரு குறிப்பிட்ட சூழலில் திடீரென உருவாகும் ‘ஆட்டோனாமிக் சிம்டம்ஸ்’, மற்றொன்று இதன் விளைவாக அந்தக் குறிப்பிட்ட நபர் எப்போதும் அந்தக் குறிப்பிட்ட சூழலைத் தவிர்த்து வருவது. இதற்கான சிகிச்சையின் நோக்கம் என்பதும் இந்த இரண்டு அம்சங்களைக் களைய வேண்டும் என்பதே. மாத்திரைகள் இந்த ஆட்டோனாமிக் சிம்டம்களைக் குறைக்கும், அப்படி அதைக் குறைத்துக்கொண்டே படிப்படியாக
அந்தக் குறிப்பிட்ட சூழலை அந்த நபரை எதிர்கொள்ள செய்யும் உளவியல் சிகிச்சைகளின் வழியாக ஃபோபியாக்களைச் சரி செய்யலாம்.
இன்னும் பல பதற்ற நோய்களைப் பற்றித் தொடர்ந்து பார்ப்போம்…
தொடரும்….