முதலமைச்சர் கலைஞருக்கு தஞ்சையில் நடைபெற்ற பாராட்டு விழாவில் எமது உரையில், “நீங்கள் (கலைஞர்) பதவியிலே இருந்தாலும் இல்லாவிட்டாலும் எங்களைப் பொறுத்தவரையில் உங்களுக்கு பாதுகாப்பாக திராவிடர் கழகம் என்றைக்கும் இருக்கும். திராவிடர் கழகம் என்று சொல்லும் போது ஏதோ கருப்புச் சட்டை போட்டவர்கள் மட்டும் திராவிட கழகம் அல்ல. கண்ணுக்குத் தெரிந்தவர்கள் கருப்புச் சட்டைக்காரர் கண்ணுக்குத் தெரியாத கோடானுகோடி தமிழகத்தில் உணர்வாளர்கள் இருக்கிறார்களே அவர்களும் திராவிடர் கழகத்துக்காரர்கள்.
அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் என்ற சட்டத்தை ஆணையை ஆணை எண்.118, தேதி 23 எங்களால் வாழ்நாளில் மறக்க முடியாது. எங்களுக்கு ஒரு சந்தேகம். அய்யா நீங்கள் தான் அதைத் தீர்த்து வைக்க வேண்டும்.
அண்ணாவின் இதயத்தைத்தான் நீங்கள் இரவல் வாங்கி இருந்தீர்கள் என்று தாங்கள் இதுவரை கருதிக்கொண்டிருந்தோம். பெரியாரின் மூளையையும் நீங்கள் இரவல் வாங்கிக் கொண்டீர்களா? அதனால்தான் எவ்வளவு பெரிய செயலைத் துணிச்சலோடு செய்தீர்களா?
தஞ்சையில் ஞானாம்பாள் படத் திறப்பு
நடைமுறையில் சங்கராச்சாரியார் பீடத்தில் அமரவோ, கோவில் அர்ச்சகர்களாக ஆகவோ, ஆரியச் சடங்குகள் செய்யும் புரோகிதர்களாக வரவோ மற்றவர்களுக்கு உரிமைகள் அறவே வழங்கப்படவில்லை.
இன்றைக்கு அதை மாற்றிய பெருமை இந்த விழா நாயகருக்குத்தான் உண்டு என்பதால் இந்த விழாவை நாங்கள் உளப்பூர்வமாக மனப்பூர்வமாக மகிழ்ச்சியின் எல்லைக்கே சென்று கொண்டாடிக் கொண்டிருக்கிறோம்.
இங்கு ஒரு விழாப் பரிசு கொடுக்கப்பட்டது. அந்தப் பரிசுக்குள்ளே அனைத்து சாதியினரும் அர்ச்சகர் என்ற அந்த ஆணை பிறப்பிக்கப்பட்டது பற்றிய குறிப்பு உள்ளது.
கவிஞர் சுரதா
கோவில் கருவறைக்குள்ளே கருப்பு மனிதர்கள் உள்ளே போக முடிவதில்லை. 34 ஆண்டுகள் போராட்டம் ஓர் ஆண்டுக்கு ஒரு கிலோ என்று சொல்லக்கூடியதாய் 34 கிலோ எடை கொண்டு கனமான பரிசு வழங்கப்பட்டுள்ளது. 2 ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி என்று அறிமுகம் செய்த முதலமைச்சர் இவர்.
மக்களுடைய பசியை அதன் மூலம் தீர்த்தார். தற்போது அர்ச்சகராகும் ஆணை மூலம் எங்களுக்கு மானத்தை மீட்டுக் கொடுத்தார். பசியா – மானமா என்று கேட்கும்போது மானத்துக்கே முன்னுரிமை என்று சொல்லுவதுதானே சுயமரியாதை. இதோ 28.7.1971இல் வந்த விடுதலை ஏடு என்னுடைய கைகளில் உள்ளது அந்த ஏட்டில் முதல் பக்கத்தில் கலைஞர்கள் அவர்கள் சட்டமன்றத்தில் முதல்வராக அவர் பேசிய பேச்சு.
மதுரை ராக்கு அவர்களின் மகள் த.சாந்தி
– ம.ஊர்காலன் இணை ஏற்பு விழா
“எதிர்ப்புகள் சலசலப்புகள் இவைகளைப் பற்றி எல்லாம் கவலைப்படாத, 83 வயதில், 70 வருட பொது வாழ்க்கைக்குச் சொந்தக்காரரான நீங்கள் உங்களைப் பற்றி ஒரு வார்த்தையிலேயே ஒரு வரிலேயே சுயவிமர்சனம் செய்து கொள்ளுங்கள்.” என்று செய்தியாளர் கேட்கிறார். அதற்கு கலைஞர் சொல்லுகிறார். எப்போதும் அவரிடத்திலேயே துப்பாக்கி முனையிலிருந்து குண்டுகள் பொத்தானை அழுத்திய உடன் கிளம்புவதைவிட விரைவாகப் பட்டென்று பதில் சொல்லுவார்கள். அப்படி அக்கேள்விக்கும் பட்டென்று பதில் வரும் சொன்னார். “நான் மானமிகு சுயமரியாதைக்காரன்” என்று அப்படிப்பட்ட சுயமரியாதைக்காரர் இன்றும் தமிழ் இனத்தின், மானுடத்தின் சுயமரியாதையை மீட்டுத் தந்துள்ளார்.”
அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல்ராஜன் இல்லத்தில்
இவ்வளவு சிறப்பாக இந்த நிகழ்ச்சியை யாரால் செய்ய முடியும் என்றால் தஞ்சை கழக குடும்பத்தவர்களால்தான் செய்ய முடியும் என்று பகிரங்கமாக வெளிப்படுத்தினால் மற்றத் தோழர்கள் யாரும் சண்டைக்கு வர மாட்டார்கள். ஏனென்றால் தஞ்சை தி.மு.க., தி.க., இரு கழகத்தினுடைய தஞ்சை ஜூன் 12ஆம் தேதி முதலமைச்சர் அவர்களுக்கு தஞ்சையில் பாராட்டு விழா என்று கலைஞர் அவர்களிடத்திலே சொன்னேன். அருகில் பொன்முடி அமைச்சர் இருந்தார். ஜூன் 12ஆம் தேதி அன்றைக்கு காவிரி தண்ணீர் விட்டு விடலாம்ங்க என்று சொன்னார்.
ஜூன் 12 மேட்டூர் வெள்ளம் வரும் என்று சொன்னார். அந்த வெள்ளமும் வரும். இந்த ஆனந்த வெள்ளமும் சேர்ந்து இருக்கும் என்று மகிழ்ச்சியோடு சொன்னோம்.
சிறப்பான இந்த விழாவிற்கு உழைத்த அனைவருக்கும் பாராட்டுகள்.
உதயநத்தம் சி.வீரமணி படத் திறப்பு
ஓர் இராணுவத் தளபதிக்கு மட்டும் இராணுவத்தினுடைய வெற்றிக்கான பாராட்டு போய்ச் சேராது. அந்த இராணுவத்திற்கு உதவியாக இருந்தவர்கள்; அந்த இராணுவத் தைச் சார்ந்தவர்கள் அனைவரையும் அந்தப் பாராட்டு சேரும். ஆங்கிலத்தில் ஒரு பழமொழி உண்டு. உற்சாகமாக ஒரு பணியை நீங்கள் மேற்கொண்டால் அப்பொழுதே பாதி பணி முடிந்துவிட்டது என்று பொருள்! என்று சொல்லியிருக்கின்றார். எனவே எந்தப் பணியை ஏற்றுக்கொண்டாலும் உற்சாகத்தோடு துவக்கினீர்களேயானால் அதிலே பாதி முடிந்துவிட்டது. மேலும் பாதிதான் நீங்கள் செய்ய வேண்டும் என்பது அதற்கு பொருள்.
அந்த வகையிலே பாதியை நாங்கள் செய்தோம். மீதியை நீங்கள் செய்தீர்கள். அடித்தளம் நீங்கள் அது சரியாக இருந்தால் எல்லாம் சரியாக இருக்கும்.
இங்கே வரவேற்புக்குழு தலைவர் வடுகநாதன் அவர்கள் சொன்னார்கள். நிறைவுரையாற்றுவேன் என்று இது மனதுக்கு நிறைவான உரையாக, நிகழ்ச்சியாக இருந்தாலும்கூட இது உள்ளபடியே நன்றி பெருவிழா என்று கூறி நன்றி! என்று கூறி விடை பெறுகிறேன்.” என்று குறிப்பிட்டோம்.
குறிச்சிக்குளம் வை.அரிகோவிந்தனார் படத் திறப்பு
19.06.2006 அன்று மாலை அண்ணா அறிவாலயத்தில் முரசொலிமாறன் அரங்கில், இலங்கையில் அமைதி நிலவ உரிய நடவடிக்கை மேற்கொள்ள ஒன்றிய அரசை வலியுறுத்தி, தமிழ்நாடு முதல்வர் கலைஞர் தலைமையில், நாம் உட்பட பல்வேறு கட்சிகளின் தலைவர்கள் கலந்துகொண்டு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தமிழக மீனவர்களுக்கு இலங்கை இராணுவத்தால் தொடர்ந்து இழைக்கப்படும் கொடுமைகள் நிறுத்தப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.
திராவிடர் கழகப் பொருளாளர் கா.மா.குப்புசாமி அவர்களின் வாழ்விணையர் திருமதி ஞானாம்பாள் அவர்கள் தமது 78ஆம் வயதில் தஞ்சையில் 19.06.2006 மறைவுற்ற செய்தியறிந்து வேதனையடைந்தோம். அவரது குடும்பத்தாருக்கு இரங்கல் செய்தி அனுப்பி வைத்தோம். சில நாட்களுக்குப்பின் வீட்டிற்கு சென்று படத்தை திறந்து வைத்து தஞ்சை மாவட்டத்தலைவர் கு.வடுகநாதனுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் ஆறுதல் தெரிவித்தோம்.
பல்துறை சான்றோர் பெருமக்களின் பாராட்டு விழா (கிண்டி)
20.06.2006 அன்று காலை கவிஞர் சுரதா அவர்கள் மறைவுற்ற செய்தியறிந்து துயருற்றோம். “உவமைக்கவிஞர்” என்று போற்றப்படும் அவர், தன்னை நாத்திகன் என்றே எல்லா இடங்களிலும் கம்பீரமாக வெளிப்படுத்திக்கொண்டவர். இளம் கவிஞர்களையும், எழுத்தாளர்களையும் ஊக்குவிப்பதில் நிகரற்றவர். பெரியாரின் தொண்டரான அவருக்குத் திராவிடர் கழகம் “பெரியார் விருது” அளித்துப் பாராட்டியது. அவரது பிரிவால் துயருறும் அவரது குடும்பத்தார், உறவினர்கள், உலகம் முழுதும் வாழும் தமிழர்கள் அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கல்” என்று விடுதலையில் இரங்கல் செய்தி வெளியிட்டோம். நேரிலும் சென்று அவரது உடலுக்கு மரியாதைச் செலுத்தினோம்.
திரு.சந்திரஜித் யாதவ்
24.06.2006 அன்று விடுதலை ஏட்டில், “இலாபம் தரும் நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தின் பங்குகளை விற்பதா?” என்று எதிர்ப்புத் தெரிவித்து அறிக்கை வெளியிட்டோம். 28ஆம் தேதி, நெய்வேலியில், தி.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்றும் அறிவித்தோம். அதன்படி ஆர்ப்பாட்டம் நடைபெற்று பங்குகளை விற்பதானால் அங்கு பணியாற்றும் தொழிலாளர்களுக்கு கொடுக்கலாம் என்று கலைஞர் கூறினார்.
25.06.2006 அன்று மதுரை ராக்கு அவர்களின் மகள் த.சாந்தி – ம.ஊர்காலன் இணை ஏற்பு விழா எமது தலைமையில் சிறப்பாக நடைபெற்றது. அவனியாபுரம் சந்தானமூக்கன் கல்யாண மஹாலில் நடைபெற்ற இத்திருமணத்தில் மணமக்களை உறுதிமொழி ஏற்கச் செய்து, சுயமரியாதைக் கொள்கைகளை விளக்கிப் பேசி திருமணத்தை நடத்தி வைத்தோம்.
முத்துக்கதிரவன் – அ.வெண்ணிலா இணையேற்பு விழா
பின்னர் மறைந்த அறநிலையத்துறை அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல்ராஜன் இல்லத்திற்கு சென்று அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தோம். அடுத்தடுத்த நாட்களில் குற்றாலம் பயிற்சி முகாமில் வகுப்புகளை நடத்திகொண்டு இடையிடையே பல்வேறு நிகழ்வுகள் பங்கேற்றோம்.
27.6.2006 அன்று நெல்லை மாவட்டம். மெய்ஞானபுரத்தில் கட்டப்பட்டுள்ள புதிய
கட்டிடதிற்கு பார்வையிட்டு கழகக் குடும்பத்திரை சந்தித்தோம். பின்னர் கீழப்பாவூர் பெரியார் திடல் உடற்பயிற்சி கூடம், தந்தை பெரியார் சிலை ஆகியவற்றை பார்வையிட்டோம்.
தி.மேடம் என்னாரெசு- செலாந்திக் ஆகியோரின் இணையேற்பு விழா
28.06.2006, அன்று விடுதலை நாளேட்டில், “இலங்கை இராணுவத்திற்கு “ராடார்” கருவிகளை வழங்கக் கூடாது. இராணுவ உதவிகளை நிறுத்த வேண்டும் என்று பிரதமருக்குத் தந்திகள் குவிய வேண்டும்” என்று வலியுறுத்தி அறிக்கை வெளியிட்டோம். இலங்கைத் தமிழர்கள் அதிக அளவில் அகதிகளாய் வரக்காரணம், இலங்கை இராணுவத்தின் கண்மூடித்தாக்குதல்கள்தான் என்பதையும் அப்போது சுட்டிக் காட்டினோம்.
செல்வி கவினி நாட்டிய அரங்கேற்றம்
29.06.2006 அன்று காலை 10 மணியளவில் அரியலூர் மாவட்ட பகுத்தறிவாளர் கழகப் பொறுப்பாளர் உதயநத்தம் சி.வீரமணி படத்தினை திறந்து வைத்தோம். தோழர் சி.வீரமணி மாற்றுத் திறனாளியாக இருந்து இயக்கப்பணிகளை ஆற்றி வந்தவர். தீவிர கொள்கையாளர். இராணுவக் கட்டுப்பாட்டுடன் இயங்கி வந்த தோழர். அவரது திடீர் மறைவு நம்மை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. அவரது படத்திறப்பில் பங்கேற்று பின் ஆர்.எஸ்.மாத்தூர் அருள் திருமண அரங்கத்தில், தோழர் அ.பெருநற்கிள்ளி அவர்களின் தந்தையாகும். பெரியார் பெருந்தொண்டர் குறிச்சிக்குளம் வை.அரிகோவிந்தனார் அவர்களின் படத்தைத் திறந்து வைத்து இரங்கலுரை ஆற்றினோம். அன்றைய சட்டமன்ற உறுப்பினரும் தி.மு.க. மாவட்டச் செயலாளருமான தோழர் எஸ்.எஸ்.சிவசங்கர், ஞானமூர்த்தி உள்ளிட்ட பல தோழர்கள் பங்கேற்றனர். நிகழ்ச்சியில் கழகத்தோழர்கள் பெருமளவில் கலந்துகொண்டனர்.
பெரியார் நூலக வாசகர் வட்டத்தில் நம்மால் வைக்கப்பட்ட வேண்டுகோளை ஏற்று புலவர் குழந்தை அவர்களின் நூல்கள் நாட்டுடைமை ஆக்கப்பட்டதை பாராட்டி 30.06.2006 விடுதலையில் தலையங்கம் தீட்டினோம். அவர் எழுதிய வரலாற்றுச் சிறப்புமிக்க “இராவண காவியம்” தடைகளை வென்று நின்ற ஒப்பற்ற காவியம் என்று அதில் குறிப்பிட்டோம். நமது கோரிக்கையை நிறைவேற்றிய தமிழ்நாடு அரசுக்கும் நன்றி தெரிவித்துக்கொண்டோம். புலவர் குழந்தை குடும்பத்தினர் 7.7.2006 அன்று நேரில் சந்தித்து நாட்டுடமையாக மேற்கொண்ட முயற்சிகளுக்கு நன்றி தெரிவித்தனர்.
சிதம்பரம் திராவிடர் மாணவர் கழகக் கூட்டம்
01.07.2006 அன்று காலை இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர்கள் வந்து நம்மை சந்தித்து அங்குள்ள நிலைகளை விளக்கினர்.
தந்தை பெரியாரின் புகழும் பெருமையுமே நம் பெருமையென்று எண்ணி, பிறந்த நாள் விழா, பாராட்டு விழா என்று எதையும் தவிர்த்து வந்த நம்மை, நமது நெருங்கிய சான்றோர் பெருமக்கள் மிகவும் வலியுறுத்தி ஒரு விழாவிற்கு நம்மை இசையவைத்தனர். அதன்படி அனைத்துச் சாதியினரும் அர்ச்சகராக வேண்டும் என்பதற்காக தொடர்ந்து போராடிய பெரியாரின் தொண்டரான கலைஞர் அவர்கள் அதற்கான ஆணைப்பிறப்பித்ததை உலகமே கொண்டாடியது. அதற்காக தஞ்சையில் நடைபெற்ற பாராட்டு விழாவில் அவருக்குப் பட்டயம் வழங்கப்பட்டது. அவ்விழாவிலே எமக்கும் பட்டயம் வழங்க முன் வந்த நிலையில், இந்தப் பாராட்டு விழா முழுவதும் கலைஞரைக் குறித்தேயிருக்க வேண்டும் என்று கூறி எமக்குப் பட்டயம் வழங்குவதைத் தவிர்க்க வேண்டினேன்.
அன்று தவிர்க்கப்பட்டாலும், வேறு ஒரு நிகழ்வில் எமக்குப் பட்டயம் வழங்க வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தினர். அந்த அன்புக் கட்டளைக்கு நான் அடிபணிய வேண்டிய கட்டாயத்தில் அதற்கான விழா, 1.7.2006 அன்று கிண்டி ரயில் நிலையம் அருகில், பல்துறைச் சான்றோர் சார்பாக, சென்னை ரேஸ் கிளப் மைதானத்தில் நடைபெற்றது.
அமைச்சர்கள், முன்னாள் நீதிபதிகள், மருத்துவர்கள், அறிஞர் பெருமக்கள், பேராசிரியர்கள், வழக்கறிஞர்கள், பத்திரிகையாளர்கள், பதிப்பகத்தார், கழகத்தோழர்கள் என்று பலரும் கலந்துகொண்டு நம்மீது அன்பைப் பொழிந்து திக்குமுக்காடச் செய்தனர். பொருளாளர் வழக்கறிஞர் கோ.சாமிதுரை அவர்கள் வரவேற்புரையாற்றி, பொதுச்செயலாளர் கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்கள் அறிமுகம் செய்துவைக்க கவிஞர் ஈரோடு தமிழன்பன் அவர்கள் பாராட்டுரையற்ற, மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலு, டாக்டர் இலக்குவன் தமிழ், அன்றைய தமிழ்நாடு மகளிர் ஆணையத் தலைவர் அன்றைய தமிழ்நாடு மகளிர் ஆணையத்தலைவர் கு.ம.இராமத்தாள், டாக்டர் இராஜசேகரன், நீதியரசர் கே.பி. சிவசுப்பிரமணியம், நீதியரசர் ஜனார்த்தனம், மத்திய அமைச்சர் ஆ.இராசா ஆகியோர் பாராட்டுரை வழங்க பட்டயம் வழங்கப்பட்ட நிகழ்வு நெகிழ்வுடன் நடைபெற்றது. நிறைவாக நாம் அன்பும், பாசமும் பெருக்கெடுத்த சூழலில் ஏற்புரையாற்றினோம்.
நம் ஏற்புரையாற்றுகையில், “தற்போது கலைஞரின் முயற்சியால் அனைத்து ஜாதி ஆண்கள் அர்ச்சகராகும் உரிமையைப் பெற்றுள்ளனர். அடுத்து பெண்களும் அர்ச்சகராகும் உரிமையைப் பெற நாம் முயற்சி செய்து அதை நிறைவேற்ற வேண்டும்.
தந்தை பெரியாருடைய பணியைத் தொடர்ந்து செய்யக்கூடிய நிலையிலே இருக்கக் கூடிய எங்களுக்கு அதனால் ஏற்படுகிற பாராட்டு என்பது நீங்கள் எங்களை உற்சாகப்படுத்துகிறீர்கள் என்று எடுத்துக்கொள்கின்றோம். ஊக்கப்படுத்துவதற்கு என்று எடுத்து க்கொள்கின்றோம்.
ஓடுகிற குதிரையை ஏனென்றால், இது ரேஸ் கிளப் அந்த உதாரணம் சொன்னாலே ரொம்ப பொருத்தமானதாக இருக்கும். ஓடுகிற குதிரையைத் தட்டி முன்னாலே வரவேண்டும். முன்னாலே வரவேண்டும் என்று சொல்லுவதைப்போல இங்கே இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருக்கின்றீர்கள்.
நாம் பெற்றிருக்கும் இந்த உரிமைகளுக் கெல்லாம் தந்தை பெரியாரே முழு முதற்காரணம். எம்போன்றோர் கருவிகள்” என்று குறிப்பிட்டோம்.
டெல்லியில் பா.ம.க. சார்பில் சமூகநீதிக்கான தேசிய மாநாடு நடைபெற்று இம்மாநாட்டில் பங்கேற்க புறப்பட்டு 2.7.2006 அன்று டெல்லியை அடைந்தோம். சமூகநீதிக் காவலர் வி.பி.சிங் அவர்கள் தொடங்கி வைத்து “நீதித்துறையிலும் இடஒதுக்கீடு தேவை” என்று முழங்கினார். சரத்யாதவ், து.ராஜா, பூஜ்பால் உள்ளிட்டோர் பங்கேற்றனர். அன்று மாலை அமர்வில் நான் பங்கேற்றேன். நான் அரங்கில் நுழைந்தபோது பாரதீய ஜனசக்தி நிறுவனரான செல்வி உமாபாரதி ஆவேசமாக உரையாற்றிக் கொண்டிருந்தார்.
“பாரதீய ஜனதா கட்சி சமூகநீதியை செயல்படுத்தும், அனைத்துத் தரப்பு மக்களுக்கும்
பாடுபடும் கட்சி என்று நம்பிதான் சேர்ந்து கடுமையாக உழைத்தேன். பல வெற்றிகளைப் பெற்றுத் தந்தேன். போகப் போகதான் தெரிந்தது, அது பார்ப்பனர்கள் – மேல் ஜாதிக் காரர்களின் நலனைப் பாதுகாக்க ஏற்பட்ட கட்சி எனப்து. நான் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தை சேர்ந்தவள் என்பதால் எவ்வளவு ஒரங்கட்ட முடியுமோ, அவ்வளவு ஒரங்கட்டி பிறகு வெளியேற்றப்பட்ட நிலையை உருவாக்கினர். அதன் பிறகுதான் அதன் சுயரூபத்தை தெரிந்துகொண்டேன். இனி சமூக நீதிப் போராளியாகதான் திகழப்போகிறேன்” என்றார்.
பேசி முடித்து நம்மிடம் வந்து வணக்கம் தெரிவித்தார். அவசரமாக ஒரு நிகழ்ச்சிக்குச் செல்ல வேண்டும் என்றார். பின்னர் “மூத்த அண்ணன் தங்களின் ஆசி எனக்கு என்றும் தேவை” என்று கூறி சற்றும் எதிர்பாராத விதமாக எனது கையை இழுத்து அவரது தலையில் ஆசீர்வதிப்பது போல வைத்துக்கொண்டார். நான் சுதாரித்துக் கொண்டு இதில் நம்பிக்கை இல்லை என்றும், ஆனால் நீங்கள் என்றும் பாசமுள்ள தங்கைதான் என்றும் தெரிவித்தேன்.
பின்னர் மறுநாள் (3.7.2006) அன்று காலை சமூகநீதிக் காவலர் வி.பி.சிங் மற்றும் அவரது வாழ்வினையரை சந்தித்து வாழ்த்து தெரிவித்தேன்.
அவர் அண்மையில்தான் 75ஆம் ஆண்டு விழாவைக் கொண்டாடினார். பின்னர் காலை 10.45 மணியளவில், புதுடில்லியில், மேனாள் ஒன்றிய அமைச்சர், திரு.சந்திரஜித் யாதவ் அவர்களை, அவரது இல்லத்தில் சந்தித்து உடல்நலம் விசாரித்தோம். உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்த அவரை, ஓய்வில் இருக்கும் படியும், வெளியூர் நிகழ்வுகளுக்குச் செல்ல வேண்டாம் என்றும், மருத்துவர்களின் அறிவுரையைத் தவறாது பின்பற்றும் படியும் கேட்டுக்கொண்டோம். தோழர் சனல் இடமருகு அவர்கள் இல்லத்திற்கும் சென்று அவரையும் அவரது குடும்பத்தினரையும் சந்தித்தோம்.
05.7.2006 அன்று திருமுதுகுன்றத்தில் முத்துக்கதிரவன் – அ.வெண்ணிலா இணையேற்பு மகாலட்சுமி திருமண அரங்கில் நடைபெற்றது. நிகழ்வுக்குத் தலைமையேற்று, மணமக்களை உறுதிமொழி ஏற்கச் செய்து, சுயமரியாதைக் கருத்துகளைத் தெளிவாக எடுத்துக்கூறி திருமணத்தை நடத்திவைத்தோம்.
06.7.2006 காரைக்குடி சானாமீனா திருமண மண்டபத்தில் சுயமரியாதைச் சுடரொளி என்.ஆர்.சாமி பேத்தியும் சாமி திராவிடச் செல்வம்- தமிழ்ச்செல்வி மகளுமான தி.மேடம் என்னாரெசு- செலாந்திக் ஆகியோரின் இணையேற்பு விழாவை நடத்திவைத்தோம்.
சாமி. திராவிடமணி வரவேற்புரையாற்றினார். அனைத்துக் கட்சியினரும் கலந்துகொண்ட இந்நிகழ்வில் குன்றக்குடி தவத்திரு பொன்னம்பலஅடிகளார் கலந்துகொண்டு வாழ்த்துரை வழங்கினார்கள். மணமக்களை உறுதிமொழி ஏற்கச் செய்து, சுயமரியாதைக் கருத்துகளை விளக்கிக் கூறி திருமணத்தை நடத்திவைத்தோம். தி.இராமசாமி அவர்கள் நன்றி கூறினார்.
09.7.2006 அன்று டாக்டர் இலக்குவன் தமிழ்- டாக்டர் பிரசன்னா தமிழ் ஆகியோரின் மகள் செல்வி கவினி தமிழ்நாட்டிய அரங்கேற்றம் நடைபெற்றது. நிகழ்வில் நாமும், ஜெத்கஸ்பர் அவர்களும் எஸ்.எம்.ஜார்ஜ் அடிகளார் அவர்களும் கலந்துகொண்டு பாராட்டினோம்.
சிதம்பரம் நடராசர் கோயிலில் ஆறுமுகச்சாமி என்ற ஓதுவார் திருவாசகம் பாடக்கூடாது என்று விரட்டப்படுவதைக் கண்டித்து, 11.7.2006 அன்று அண்ணாமலை நகரில் திராவிடர் மாணவர் கழகம் சார்பில் நடைபெற்றக் கூட்டத்தில் உரையாற்றினோம். தமிழ் மன்னர்கள் கட்டிய கோயிலில் திட்சிதர்களுக்கு என்ன உரிமை. இப்பிரச்சினையை விட்டுவிட முடியாது. பெரிய அளவில் போராடி உரிமைகளைப் பெற்றாக வேண்டும். நமது உரிமைகளை ஒரு போதும் விட்டுவிடக்கூடாது. தமிழில் பாடினால் நடராஜர் ஏற்கமாட்டாரா? தமிழில் அடியெடுத்துக்கொடுத்தார் நடராசர் என்று கூறிவிட்டு தமிழை எதிர்ப்பது மோசடியல்லவா? என்று பலக்கருத்துகளை அப்போது விளக்கிக் கூறினோம்.
பின்னர் நாம் சிதம்பரத்தில் படித்த காலத்தில் ‘இராவண விலாஸ்’ உணவு விடுதி நடத்திய ஜம்புலிங்கம் அண்மையில் மறைந்திருந்த நிலையில் அவரது இல்லத்திற்குச் சென்று ஆறுதல் தெரிவித்து, சிதம்பரம் பேராசிரியர் மதுசூதனன் இல்லம் சென்று அவரது இனையர் சற்குணம் மறைவுக்கு ஆறுதல் தெரிவித்தோம். முன்னத்தாக கடலூர் மாவட்டம் அரசடிக்குப்பத்தில் சிறுவன் சதீஷ்குமார் நரபலி கொடுக்கப்பட்ட நிலையில் அதனைக் கண்டித்தும் விழிப்பூட்டியும் அப்பகுதியில் திராவிடர் கழகத்தின் சார்பில் நடைபெற்ற மூடநம்பிக்கை ஒழிப்புப் பிரச்சாரக் குழுவினர் சந்தித்தனர்.
(நினைவுகள் நீளும்…)