கேள்வி – பதில்கள்
1. கே: கட்சித் தலைவர்கள் சிலர் மனநோயாளிகளாகவும், வெறியேறிய கிறுக்கர்களாகவும் மாறியுள்ள நிலையில் கண்ணிய அரசியல் களத்தைக் காப்பாற்ற வழியென்ன?
– ப.துவிஷ்ணன், காஞ்சிபுரம்.
ப: சிக்கலான கேள்விதான் இது! விபீடணர்களும், கூலிப்படையாகவே வாழ்ந்து வயிறு கழுவும் வெட்கமும் மானமும் இழந்த நிர்வாண நடனக்காரர்களைக் களையெடுக்க சட்டமும் அரசும்தான் அதன் கடமையைச் செய்யவேண்டும். அவர்களுக்குப் பல நேரங்களில் நீதியும் சாய்வது அதனைவிடக் கொடுமை! இன்பம் வேண்டி பிறன் வசமாவோருக்கு சிரஞ்சீவி, ஆழ்வார் பட்டம் (விபீடணன் உட்பட) தரும் நிலை- இன்றும் தொடர்கிறதே! சிலருக்கு மனநல சிகிச்சை தேவைப்படுகிறது. மலிவு அரசியலைத் தடுப்பது எளிதல்ல! ஊடகத்துறையின் துணை அதைவிட மிகவும் கேவலம்!

2. கே: இடைத்தேர்தல்களைத் தோல்வி பயத்தில் புறக்கணிக்கின்ற கட்சிகள் கூறும் காரணங்களை எப்படிப் பார்க்கிறீர்கள்?
– ச.ஏகாம்பரம், வல்லக்கோட்டை.
ப: ‘ஆடத்தெரியாதவர் கூடம் கோணல்’ என்று சொன்ன பழைய பழமொழியை நினைவுபடுத்துகிறது!
3. கே: பெரியார் பிறந்தநாள் போட்டியில் ஓவியப் போட்டியில் நான் பரிசு பெற்றேன். பரிசு பெற்றோர், பங்கு பெற்றோருக்குத் தாங்கள் கூற விரும்புவது என்ன?
– அ.யாழினிபர்வதம். சென்னை-78.
ப: உங்கள் திறமைக்குப் பாராட்டு- மேலும் வளர்த்துக் கொள்ளுங்கள். பரிசு பெற்றவர்கள். வாழ்த்துக் குரியவர்கள்; பங்கு பெற்றோர் பாராட்டுக்குரியவர்கள்!
4. கே: எடப்பாடி பழனிச்சாமி, இந்த ஆட்சியில் நல்லது எதுவுமே நடக்கவில்லை; எல்லாமே சீர்கெட்டுக் கிடக்கிறது என்கிற விமர்சனம் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
– வே.பெரியசாமி, திருநெல்வேலி.
ப: ஒரு நல்ல எதிர்க்கட்சித் தலைவர் என்றுகூட அவர் பெயரெடுக்கத் தயாராக இல்லை என்பதற்கு அவரது நாக்கும் போக்குமே சான்று.

5. கே: திசை மாறிச் செல்லும் உணர்வுமிக்க இளைஞர்களைச் சரியான வழியில் திருப்ப அய்ம்பது பக்க அளவில் ஒரு சிறுநூல் மலிவு விலையில் அச்சிட்டு ஆயிரக்கணக்கில் பள்ளி கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள் மத்தியில் கொண்டு சேர்ப்பீர்களா?
– கே.கார்த்திகா, வேப்பம்பட்டு.
ப: நல்ல யோசனை; நிச்சயம் செயலாக்குவோம்.
6. கே: பசு மூத்திரத்தைக் குடிக்கச் சொல்லுகிறார் அறிவியல் தொழில்நுட்ப வல்லுநர். எவ்வளவு படித்தாலும் சனாதனிகள், மக்களைக் கற்காலத்திற்குக் கொண்டு செல்லவே விரும்புவர் என்பதன் வெளிப்பாடுதானே இது?
– அ.மதி, அயனாவரம்.
ப: எவ்வளவு பெரிய பதவியை அவர்கள் பெற்றிருப்பினும் பார்ப்பன ஆரிய புத்தி மாறாது என்பதற்கு இது ஓர் அருமையான சாட்சியமாகும்.
7. கே: பரந்தூர் விமான நிலையம் அமைக்க ஊர் மக்களின் எதிர்ப்புச் சார்ந்து தாங்கள் கூற விரும்புவது என்ன?
– ம.கோபி, பெரியபாளையம்.
ப: தற்போதுள்ள வளர்ச்சிக் கண்ணோட்டத்தில் இம்மாதிரி முட்டுக் கட்டைகள் நியாயமானதல்ல. அந்த மக்களுக்கு போதிய இழப்பீடு, நல்ல மாற்று நல்லவழி முதலியவற்றை தர தயாராக உள்ள நிலையில், அவர்கள் அரசியல் கட்சிகளின் பகடைக்காய்களாக்கப்படுவது பரிதாபமாகும்.
8. கே: குற்றவாளிகளுடன் காவல் துறையினர் சிலர் கூட்டுச் சேரும் நிலை முற்றாக அகற்றப்பட வேண்டியது குறித்து தாங்கள் அரசுக்குக் கூற விரும்புவது என்ன?
– க.சந்திரன், இராமநாதபுரம்.
ப: துளி விஷம் என்றாலும் உயிர்க்கொல்லும், காவல்துறையைத் தூய்மைப்படுத்திச் செம்மையுடன் இயக்கச் செய்வது அரசின், துறைத்தலைமையின் முழு முதற்கடமையாகும்.