Unmai Magazine Subscription - உண்மை இதழ் உங்கள் முகவரி தேடி வார சந்தா செலுத்துங்கள்..

மனமின்றி அமையாது உலகு (14)-நீடித்த பதற்றமும், ஸ்ட்ரெஸ்ஸும் எப்படி உடலை பாதிக்கிறது?

பதற்றம் என்பதும் ஸ்ட்ரெஸ் என்பதும் உடலில் ஒரே விதமான செயலைத் தூண்டுகிறது. அதாவது ஓர் ஆபத்தான சூழலை எதிர்கொள்ளும் போது உருவாகும் பதற்றம். அந்தச் சூழலை எதிர்கொள்ள செய்யும் யுக்தியாக உடலின் பாதுகாப்பு சிஸ்டமான அட்ரினலின் ஹார்மோன்களைத் தூண்டுகிறது. அதே போலவே ஒரு வேலையை முழுமையாக, நேர்த்தியாகச் செய்ய வேண்டியதன் காரணமாகவும் உடலின் அதே அட்ரினலின் சிஸ்டம் ஸ்ட்ரெஸ்ஸின் போது தூண்டப்படுகிறது.

நீங்கள் பதற்றமாக இருக்கும்போதும், ஸ்ட்ரெஸ்ஸாக இருக்கும்போது உடலில் நடக்கும் செயல்பாடுகள் கிட்டதட்ட ஒன்றே தான். ஒரே வேறுபாடு பதற்றத்தின் போது பயம் தான் பிரதான உணர்வாக இருக்கும் ஆனால், ஸ்ட்ரெஸ் போது அந்த வேலையைப் பொறுத்து, அதன் நிர்ப்பந்தங்களைப் பொறுத்து, நமது ஈடுபாட்டைப் பொறுத்து உணர்வு வேறுபடும். சில நேரங்களில் தொடர் பதற்றமே கூட ஸ்ட்ரெஸ்ஸை உண்டாக்கும், அதாவது பதற்றத்தில் இருந்து தப்பிப்பதற்கான எண்ணங்களும், சிந்தனைகளும், கவலை
களுமே கூட ஸ்ட்ரெஸ்ஸை ஏற்படுத்தும்.

மொத்தத்தில் பதற்றத்தின் போதும், ஸ்ட்ரெஸ்ஸின் போதும் தூண்டப்படும் அட்ரினலின் ஹார்மோன் சிஸ்டம் அந்தப் பதற்றத்தில் இருந்தும், ஸ்ட்ரெஸ்ஸில் இருந்து நம்மை மீட்பதையே நோக்கமாகக் கொண்டிருக்கிறது.

பதற்றம் மற்றும் ஸ்ட்ரெஸ், இந்த அட்ரினலின் சிஸ்டத்தைத் தூண்டப்படுவதோடு முடிந்து விடுவதில்லை. தூண்டலுக்கான நோக்கம் முடிந்த பிறகு அதாவது தேவை முடிந்த பிறகு, உடல் இயல்பு நிலைக்குத் திரும்புவதற்காக அட்ரினலின் சுரப்பைக் குறைத்து அதை ஈடு செய்யும் வழிமுறைகளையும் தூண்டி உடலைச் சமநிலைக்குக் கொண்டு வரும். ஈடு செய்யும் வழிமுறையில் இதயம் துடிப்பது குறையும், மூச்சு விடுவது நிதானமாகும், இரத்த அழுத்தம் சீராகும், இரத்த ஓட்டம் குறையும், குளுக்கோஸ் மெட்டபாலிசம் குறையும், அச்சம், பரபரப்பு, அவசரம் என அத்தனையும் குறைக்கும். ஆனால், நீடித்த பதற்றம் இருக்கும்போது அல்லது நீடித்த ஸ்ட்ரெஸ் இருக்கும்போது இந்த அட்ரினலின் சிஸ்டம் தொடர்ச்சியாக தூண்டப்பட்டுக்கொண்டே இருக்கும் போது அது உடல் ரீதியான பிரச்சினைகளை நாளடைவில் உருவாக்குகிறது.

அலுவலகத்தில் இன்று மாலைக்குள் ஒரு முக்கியமான வேலையை முடித்தாக வேண்டும் என்று வைத்துக்கொள்வோம், முதலில் முடிக்க முடியுமா என்று சந்தேகம் வருகிறது முடித்தே ஆகவேண்டும். வேறு வழியில்லை என்னும்போது முதலில் படபடப்பு தொடங்குகிறது அப்படியென்றால் அட்ரினலின் தனது வேலையை ஆரம்பித்துவிட்டது என்று பொருள், போகப் போக அந்தச் செயலை முடிப்பது மட்டும் தான் மனதில் இருக்கிறது வேறு எதிலும் கவனம் இல்லை, ஈடுபாடு இல்லை. சிந்தனை முழுக்க அந்தச் செயலைத் துரிதமாக முடிக்க வேண்டுமே என்பதிலேயே இருக்கிறது. ஒருவழியாக முடித்துவிட்டோம். ஆசுவாசமாக இருக்கிறது, நிதானமாக மூச்சு விடமுடிகிறது, அழுத்தம் குறைகிறது, மனம் சகஜ நிலைக்கு வருகிறது, சிரிக்க முடிகிறது, ரிலாக்சாக ஒரு காஃபி குடிக்க முடிகிறது. இப்படித்தான் பதற்றம் அல்லது ஸ்ட்ரெஸ் முடிவடைகிறது, இப்படித்தான் முடியவேண்டும். ஒரு வேளை, அந்த வேலையைச் செய்த பின்னரும் படபடப்பு அடங்கவில்லை, இயல்பு நிலைக்கு வரவில்லை, மனம் இன்னமும் அழுத்தமாகவே இருக்கிறது என்றால் அட்ரினலின் செயல்பாடு இன்னும் முடியவில்லை என்று அர்த்தம். இது போல அட்ரினலின் செயல்பாடு முடிவடையாமல் அல்லது சாதாரண நிகழ்வுகளுக்குக் கூட அடிக்கடி தூண்டப்பட்டுக் கொண்டே இருக்குமானால் அட்ரினலின் சார்ந்த பாதிப்புகள் சேதாரங்கள் உடலில் நடக்கும், அது பல நோய்களுக்கும் காரணமாக இருக்கும்.

சமீபத்தில் என்னைச் சந்திக்க வந்த இளவயது தம்பதினரில், அந்தக் கணவனுக்குச் சர்க்கரை நோய் இருந்ததைக் கண்டறிந்தேன். திருமணம் ஆகி இரண்டு வருடங்கள், ஏகப்பட்ட பிரச்சினைகள், இருவருக்கும் நிம்மதியே இல்லாத சூழ்நிலை, குழந்தையின்மை என அத்தனையும் சேர்த்துக் கொடுத்த ஸ்ட்ரெஸ்ஸில் தான் அவருக்குச் சர்க்கரை நோய் வந்திருக்கும். அய்ம்பது வயது பெண்மணிக்கு என்ன மாத்திரைகள் கொடுத்தும் இரத்த அழுத்தம் குறையவே இல்லை என்று என்னிடம் அனுப்பியிருந்தார்கள், விரிவாகப் பார்த்ததில் அவருக்கும் நீடித்த ஸ்ட்ரெஸ் இருந்தது. இன்றைய காலகட்டத்தில் கட்டுப்படுத்த முடியாத சர்க்கரை நோய்க்கு மனஅழுத்தம் முக்கியமான காரணம் என்று தரவுகள் சொல்கின்றன. சர்க்கரை நோய் வைத்தியம் செய்து வருபவர்களில் யாருக்கெல்லாம் மாத்திரைகள் போட்டும் சர்க்கரையின் அளவு குறையாமல் இருக்கிறதோ, அவர்களை மன ரீதியான சோதனைகள் செய்து பார்த்ததில் அதில் பெரும்பாலானவர்களுக்கு மனச்சோர்வும், பதற்றமும் இருப்பது கண்டறியப்பட்டிருக்கிறது. நிறைய நேரங்களில் ‘இவருக்குச் சுகர் வந்துடுச்சி அதனால் ரொம்ப டிப்ரஸ்டா ஆகிட்டார்’ எனச் சொல்லிக்கொண்டிருப்போம், ஆனால், உண்மையில் உடல் ரீதியான நோய்கள் இருப்பதால் உண்டாகும் மனநல பிரச்சினைகளை விட, சரி செய்யாமல் இருக்கும் மன நல பிரச்சினைகள் தான் பெரும்பாலான நேரங்களில் உடல் ரீதியான நோய்களை உண்டாக்குகின்றன.

தூண்டிவிடப்பட்ட அட்ரினலின், உடலின் செயல்பாட்டைத் துரிதப்படுத்தும் செயல்பாட்டின் விளைவாக இரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரிக்கிறது, இந்தச் சர்க்கரையைப் பயன்படுத்தி அதிலிருந்து ஆற்றலை வெளிக் கொணர இன்சுலின் நிறைய இருக்க வேண்டும், அதற்காக கணையத்தில் இன்சுலின் சுரப்புத் தூண்டப்படுகிறது. இப்படி தொடர்ச்சியாக இன்சுலின் தூண்டப்படுவதால் ஒரு கட்டத்தில் இன்சுலின் சுரக்கும் சுரப்பிகள் சேதமடைகின்றன, அதனால் இன்சுலின் சுரப்புக் குறைகிறது. அது மட்டுமில்லாமல் இன்சுலின் செயல்திறனும் குறைகிறது. இன்சுலின் சுரப்புக் குறைந்தாலோ அல்லது அதன் செயல் திறன் குறைந்தாலோ உடலில் சர்க்கரை சரியாக உபயோகப்படுத்தப்படாமல் அதன் அளவு அதிகமாகும் அது சர்க்கரை நோயை ஏற்படுத்தலாம் அல்லது ஏற்கனவே சர்க்கரை நோய் இருப்பவராக இருந்தால் அது இன்னும் மோசமாகலாம். அதே போல அட்ரினலின் இதயத்தின் செயலையும் அதன் அழுத்தத்தையும், இரத்த ஓட்டத்தையும் அதிகரிக்கிறது. இதன் விளைவாக இரத்த அழுத்தம், இதய நோய்கள் என்ற பிரச்சினைகளும் நாளடைவில் வருகின்றன. இதயம், நீரிழிவு மட்டுமல்ல உடலின் ஒவ்வொரு பகுதியும் நீடித்த அட்ரினலின் தூண்டுதலால் பாதிக்கப்படுகின்றன. உணவு செரித்தல், அடிக்கடி வரும் குடல்புண் என்ற அல்சர், மலச்சிக்கல், பசியின்மை போன்ற பிரச்சினைகள், உடல் எடை கூடுதல், மூச்சு வாங்குதல் போன்ற பிரச்சினைகள் எனப் பல்வேறு பிரச்சினைகளை நீடித்த பதற்றமும், மனச்சோர்வும் உருவாக்குகின்றன.

நீடித்த பதற்றத்தில், உடலின் இயல்பான மெட்டபாலிசம் பாதிக்கப்படுகிறது. அட்ரினலின் வழியாக ஏராளமான ஸ்டீராய்டுகள் உடலில் சுரக்கின்றன. உடலின் வளர்சிதை மாற்றம் முழுக்க ஸ்டீராய்டின் கட்டுப்பாட்டில் வந்துவிடுகிறது. இதனால் உடலில் கொழுப்பு படிகின்றது, சர்க்கரையின் அளவு அதிகமாகிறது, உடலின் மற்ற பாகங்களுக்கு இதனால் வேலைப்பளு அதிகமாகிறது. அதனால் ஒட்டு மொத்த உடலின் செயல்பாடுகளும் சோர்வடைகின்றன. உடல் எனர்ஜி இல்லாமல் சோர்வாகவே எப்போதும் இருக்கிறது.

அது மட்டுமில்லாமல், மூளையின் செயல்பாட்டையும் தொடர்ந்து துரிதமாகவே வைத்திருப்பதால் அது நரம்பு மண்டலத்தில் உள்ள நியூரான்கள் என்ற நரம்பு செல்களையும் சேதப்படுத்துகின்றன, அது மூளையின் சிந்தனைத் திறன், கவனம், உணர்வுகள், போன்றவற்றை யெல்லாம் கூட நாளடைவில் பாதிக்கின்றன.

நீடித்த பதற்றத்தினாலும், ஸ்ட்ரெஸ்ஸினாலும் உருவாகக்கூடிய நோய்கள்:

இரத்த அழுத்தம்
நீரிழிவு நோய்
இதய நோய்கள்
ஆஸ்துமா
குடல் புண் மற்றும் அல்சர்
இரிட்டபுள் பவல் சிண்ட்ரோம் என்ற
குடல் அழற்சி நோய்
சொரியாசிஸ்
முடி உதிர்தல் என்ற அலப்பீசியா
மறதி நோய்கள்
கவனமின்மை
பக்கவாதம்
மூட்டு நோய்கள்
உளவியல் பிரச்சினைகள்

ஒரு சூழல் சார்ந்து, அந்தச் சூழலை எதிர் கொள்ள தேவையான ஆற்றலை வழங்குவதற்காக ஸ்ட்ரெஸ் உருவாவது என்பது அவசியமான ஒன்று. ஆனால், அதுவே தொடர்ச்சியாக நீடிக்கும்போது பல்வேறு சுகாதார பிரச்சினைகளை ஏற்படுத்துகிறது. தலைவலி, தூக்கமின்மை முதல் இரத்த அழுத்தம், இதய நோய்கள் போன்ற நாட்பட்ட நோய்கள் வருவதற்கு இந்த நீடித்த ஸ்ட்ரெஸ்தான் பெரும்பாலும் காரணமாக இருக்கிறது.

அதனால், முடிந்த வரை நமது சூழலை அழுத்த மில்லாததாக, இலகுவானதாக வைத்துக்கொள்வது அவசியம். நமது தேவைகளைக் குறைத்துக் கொள்ளும் போதும், பிற மனிதர்களிடம் நமது எதிர்பார்ப்புகளைக் குறைத்துக்கொள்ளும் போதும் நமது சுற்றுச்சூழல் தன்னிச்சையாகவே இலகுவானதாக மாறிவிடும். அந்த வாழ்க்கை முறைகளை நாம் அமைத்துக் கொள்ளும் போதுதான் இத்தகைய பிரச்சினைகளை வரவிடாமல் நம்மால் தடுக்க முடியும்.

(தொடரும்)