நெருப்புவரிப் பாட்டெழுதி நிமிர்ந்து நின்றே
நிலைகுலைந்த தமிழினத்தின் மீட்சி நாடிப்
பெரும்புரட்சிக் கருத்தியலை விதைத்தார்! தந்தை
பெரியாரின் சிந்தனைகள் தம்மை எல்லாம்
எரிமலையாம் தீக்குழம்பில் இணைத்துத் தோய்த்தே
இடர்நீக்கும் பகுத்தறிவு யாழை மீட்டித்
திராவிடத்தின் மாண்பெல்லாம் வரலா றாக்கித்
திருப்புமுனை பாட்டுலகில் மிளிரச் செய்தார்!
ஆரியத்தின் சூழ்ச்சிகளைத் தமிழர் கூட்டம்
அறிந்திடவே பண்ணிசைத்தார்! அடிமைப் போக்கை
வீரியமாய்க் கனன்றெதிர்த்தார்; மதங்கள் சாதி
வேண்டாத மூடநெறி மடமை வீழச்
சீரியநற் சீர்திருத்தப் பாக்கள் மூலம்
செம்மாந்த புரட்சியினை நடவு செய்தார்!
பாரெங்கும் வாழ்கின்ற தமிழர் போற்றும்
பாசறையின் ஞாயிறென வலமும் வந்தார்!
எதிர்பாரா முத்தத்தை, இருண்ட வீட்டை
ஏற்றமிகு தமிழியக்கம், குறிஞ்சித் திட்டை
புதுமைமிகு நற்குடும்ப விளக்கைக் கற்றோர்
புகழ்கின்ற பாண்டியனின் பரிசை, உள்ளம்
அதிர்கின்ற தமிழச்சி கத்தி மற்றும்
அருங்காதல் நினைவழகின் சிரிப்பை நல்கி
எதிர்காலத் தமிழினத்தார் விடியல் எண்ணி
எண்ணற்ற படைப்புகளை வழங்க லானார்!
செந்தமிழே மூச்சென்றும் உயிரே என்றும்
சிந்திசைத்தார் நம்புரட்சிக் கவிஞர்! போற்றும்
முந்துபுகழ் அண்ணாவும் இவரின் மாண்பை
முழுதறிந்து பொற்கிழியும் பரிசாய்த் தந்தார்!
வெந்திறலோன் இராவணனின் வீரம் தன்னை
வெளிப்படுத்தித் தமிழ்வீறு விளங்கச் செய்தார்!
எந்தமிழர் மேன்மைக்கே பாடி வந்த
இசைக்குயிலின் திறம்பாடி எழுவோம் நாமே!