இராமநாதபுரம், காரைக்குடி கழக மாவட்டம் சனவேலி முத்தழகு அவர்களுக்கு வயது 72 ஆகிறது. அதாவது 22 வயதில் தம் கிராமத்தில் நாத்திக வாழ்க்கையைத் தொடங்கியவர் 50 ஆண்டுகளாகச் சற்றும் பிசகாமல், குண்டூசி முனை போல நேர்குத்தி நிற்பவர்! அவ்வளவு நேர்மை! அவ்வளவு நேர்த்தி!
அதே கிராமத்தைச் சேர்ந்த இரா.போஸ் அவர்கள் மூலம் இயக்கச் சிந்தனைக்கு வந்தவர்.
பகுத்தறிவாளர் கழகத்தைத் தந்தை பெரியார் 1970இல் சென்னையில் தொடங்கினார். 1971இல் இராமநாதபுரம் மாவட்டம், திருவெற்றியூர் கிராமத்தில் 25 தோழர்களுடன் இவர்கள் பகுத்தறிவாளர் கழகத்தைத் தோற்றுவித்தனர்! அப்போதே காரைக்குடி, தேவகோட்டை நிகழ்ச்சிகளுக்குச் செல்வது, தோழர்களுடன் தொடர்பில் இருப்பது, நன்கொடை வழங்குவது என இருந்துள்ளார். சற்றொப்ப 50 ஆண்டுகளாக இப்போதும் இது தொடர்கிறது! நம் இயக்கத்திற்கே உரிய, வரலாற்றுப் பெருமையல்லவா இது!
காரைக்குடி சாமி.திராவிடமணி குடும்பம், தேவகோட்டை மருத்துவர் ம.சுப்பிரமணியம், கமலம் (செல்லத்துரை), கோட்டூர் சக்தி ஆசிரியர் போன்றோரைப் பேச்சினூடே அடிக்கடி நினைவு கூர்கிறார்! அனைவருடனும் சேர்ந்து நிகழ்ச்சிகள், மாநாடுகளுக்குச் செல்வதைச் சலிக்காத வாழ்வியலாகக் கொண்டுள்ளார்!
“ஒருமுறை பகுத்தறிவாளர் கழக மாநாட்டிற்குத் திடலுக்குச் சென்ற போது, பெரியாரைச் சுற்றி 20, 30 பேர் உட்கார்ந்திருந்தோம். அப்போது என் தொழில் குறித்து விசாரித்தார். நான் விவசாயம் என்றேன். விவசாயத்தில் வருமானம் எவ்வளவு வரும்? அதுமட்டும் போதுமா? என்றெல்லாம் கேட்டு விட்டு, இயக்கத் தோழர்கள் பொருளாதாரத்தில் பலம் மிக்கவர்களாக இருக்க வேண்டும் என்று கூறினார். அது என் மனதில் பசுமரத்தாணி போலப் பதிந்துவிட்டது”, என்கிறார்.
“எங்கள் உறவுகளில் பெண்களைப் பூப்பெய்வதற்கு முன்பே திருமணம் செய்து கொடுத்து விடுவார்கள். பூப்பெய்திய பிறகு திருமணம் செய்வது குற்றமாகக் கருதப்பட்டது. இளைஞர்கள் நாங்கள் திண்ணைப் பிரச்சாரம் செய்து, விழிப்புணர்வூட்டி அந்தப் பழக்கத்தை மாற்றத் துணையாக இருந்தோம்!
இவ்வளவு ஏன்… என் திருமணம் 1962இல் நடைபெற்றது! அப்போது எனக்கு வயது 12. ஆறாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன். என் மனைவியின் வயது 14. இதுவும் கூட குழந்தைத் திருமணம் தான்! எங்கள் உறவினர்களில் குழந்தைத் திருமணம் என்பது சர்வசாதாரணமாக நடைபெற்றது! 1975ஆம் ஆண்டு தான் இந்த முறை முடிவுக்கு வந்தது. கிராம மக்கள், உறவினர்களிடம் பேசி விழிப்புணர்வை ஏற்படுத்தினோம், தொடர் பிரச்சாரம் செய்தோம், மீறி நடந்தால் காவல்துறையில் புகார் செய்வோம் எனவும் கூறினோம். அதன் பிறகே இது முடிவுக்கு வந்தது!
இப்போதெல்லாம் 18 வயதில் திருமணம் செய்ய வேண்டும் என்று பெற்றோர்கள் சொன்னாலும், பெண் பிள்ளைகள் மறுத்து விடுகிறார்கள். படிப்பை முடித்து வேலை, வருவாய் கிடைத்த பின்னரே திருமணம் என்பதில் உறுதி காட்டுகின்றனர்.
1989ஆம் ஆண்டு எனது மகள் திருமணத்திற்கு ஆசிரியர் வருவதாக இருந்தது. சூழ்நிலை காரணமாக வாய்ப்பு அமையவில்லை. அப்போதைய அமைச்சர் தமிழ்க்குடிமகன் அவர்கள் திருமணத்தை நடத்தி வைத்தார். திருமணம் நடைபெற்ற நாளில் “மரணயோகம்” என நாள்காட்டியில் குறிப்பிடப்பட்டிருந்தது!
“ஒரு கிராமத்தில் இருந்து கொண்டே ஊரார் எதிர்ப்பிற்குரிய இவற்றை எப்படிச் சமாளித்தீர்கள்?”, என்று கேட்டோம்.
கொள்கை பேசுகிறவர்களுக்குப் பொருளாதாரம் எவ்வளவு முக்கியம் என்பதைப் பெரியார் மூலம் அறிந்து கொண்டேன். அந்தப் பெரியார் இயக்கத்தில் ஒருவர் எப்படி நேர்மையாக, நாணயமாக, சொக்கத் தங்கமாக நடந்துக் கொள்ள வேண்டும் என்பதைத் தலைவர் கி.வீரமணி அவர்கள் மூலம் பெற்றுக் கொண்டேன்!
ஆமாம்! 50 ஆண்டு காலமாக இந்தக் கிராமத்தில் தான் வசிக்கிறேன். சுற்றிலும் எண்ணற்ற ஊர்கள் உள்ளன. கடவுள் மறுப்பாளன், நாத்திகன், தி.க. என்று எல்லோருக்கும் தெரியும்! ஆனால் நாணயத்திலும், நேர்மையிலும், பழக்கத்திலும், அணுகுமுறையிலும் நான் கெட்ட பெயர் வாங்கியதே கிடையாது! “மனிதனை நினை” என்றார் பெரியார்! அப்படி சக மனிதரை நேசித்தால், யார் நம்மை வெறுக்க முடியும்? கடவுள் முக்கியமா? உதவி செய்கிற, அன்பு காட்டுகிற மனிதர் முக்கியமா?’’ என அற்புதமாகப் பேசுகிறார் சனவேலி முத்தழகு அவர்கள்!
திருமணத்திற்கு வர இயலாமல் போனாலும், இரண்டு வாரங்கள் கழித்து இராமேஸ்வரம் நிகழ்ச்சிக்கு வந்தவர் எங்கள் இல்லத்திற்கு வந்தார்.
“திருமணத்திற்கு அழைத்தீர்கள், ஆனால் உங்கள் ஆசிரியர் வரவில்லையே?,” எனச் சிலர் நினைத்திருக்கக்கூடும். ஆனால் எங்கள் தலைவர் வீட்டிற்கு வந்ததால் ‘காலரை’ தூக்கி விடுவதுண்டு! திருமணத்திற்கு ரூபாய் ஆயிரம் முன் பணமாகக் கட்டியுள்ளார் இவர். அந்தப் பணமும் திரும்பி வந்துவிட்டது என நெகிழ்வுத் தன்மை மாறாமல் கூறுகிறார்!
சரி… இவர் அளவில்தான் கொள்கை பேசுகிறார் என்றால், 1997இல் மறைவுற்ற இவரின் மாமியாருக்கும் படத்திறப்பு (நினைவேந்தல்) நிகழ்ச்சி நடத்தியுள்ளார். கருமாதி போன்ற எதுவும் இல்லையாம்! தவிர இவரின் அப்பாவிற்கும் கிராமத்தில் படத்திறப்பு தான்!
“என்னைப் பொறுத்த வரை கொள்கையில் சமரசம் என்பதே கிடையாது”, என்கிறார்!
நம் நடவடிக்கைகள் சிறப்பாக இருக்கும் பட்சத்தில், நம் மீது பிறருக்கு மதிப்பு ஏற்படும்! மதிப்பு ஏற்படுகிற போது எதிர்ப்புகள் குறைந்து போகும்,” எனத் தம் வாழ்வின் அனுபவங்களை அழகாகக் குறிப்பிடுகிறார்!
உண்மை தான்! திருவாடானையில் இருந்து ஆர்.எஸ் மங்கலம் போகும் வழியில் இருக்கிறது சனவேலி. (திருச்சி – இராமேஸ்வரம் நெடுஞ்சாலை) அங்கு “பெரியார் நிதியம்” என்கிற பெயரில் அடகுக்கடை தொடங்கி, 25 ஆண்டுகளாகச் சிறப்பாக வணிகம் செய்கிறார். ஒருநாள் கடையைத் திறந்ததும் வாசலில் ஒருவர் நின்றிருக்கிறார். ‘உள்ளே வாங்க’ என முத்தழகு அவர்கள் அழைத்த போது, இல்லையில்லை நீங்கள் பூஜையெல்லாம் முடியுங்கள், நான் வருகிறேன் என்று சொல்லி இருக்கிறார் அவர்!
கடையைத் திறந்து சுத்தம் செய்வதோடு சரி! சாமி படங்களோ, சாம்பிராணி, சூடமோ, ஊதுபத்தி, மாலையோ எதுவும் நமக்குப் பழக்கம் இல்லை என்றாராம்! எனினும் வணிகம் சிறப்பாக இருக்கிறது! கடையின் பெயரே பெரியார் நிதியம் தானே!
என்ன… கடையை வேறொருவர் மூலம் பார்க்கச் சொல்ல முடியாது என்பதால் இயக்கத்தின் அனைத்து நிகழ்ச்சிகளிலும் கலந்துகொள்ள முடிவதில்லை. எனினும் ஒவ்வோர் ஆண்டு பெரியார் பிறந்த நாளுக்கும் காரைக்குடி கழக மாவட்டத்திற்கு ரூ 1000 நன்கொடை வழங்குவேன். இதர நிகழ்ச்சிகளுக்கும் தவறாமல் நன்கொடை கொடுத்து வருகிறேன்! மதுரையில் நடைபெற்ற ஒரு பொதுக்குழுவில் ஆசிரியர் அவர்கள் என்னைக் காரைக்குடி கழக மாவட்டச் செயலாளராக அறிவித்தார்கள். சிறப்பாகச் செயல்பட்டேன். அதை என்னால் மறக்க முடியாது!
52 ஆண்டு கால இயக்க வரலாற்றில், 50 ஆண்டு காலமாக எங்கள் கிராமத்திற்கு விடுதலை வருகிறது. உறவினர் குடும்பங்களில் சிலருக்குச் சுயமரியாதைத் திருமணம் செய்து வைத்துள்ளேன். காரைக்குடி என்.ஆர்.சாமி அவர்களின் குடும்பத்தில் 4 தலைமுறைகள் வந்துவிட்டன. ஆனால் ஒரு தனி மனிதர் கூட கொள்கையில் இருந்து நழுவவில்லை என்பது வியப்பிற்குரியது ஆகும். இது எல்லா குடும்பங்களுக்கும் சாத்தியமில்லை. திராவிடர் கழகத் தலைவர், ஆசிரியர் கி.வீரமணி அய்யா பொறுப்பிற்குப் பிறகு, தமிழ்நாடு கடந்து, உலகமெங்கும் சென்று விட்டார் பெரியார்! வெளிநாட்டுத் தொடர்புகளும் அதிகரித்துவிட்டன!
பொது ஒழுக்கம், நாணயம் போன்றவற்றில், எனக்குத் தெரிந்து ஆசிரியர் ஒருவர்தான் நான் வியந்து பார்க்கும் ஒரே தலைவர்! கொள்கையில் மட்டுமல்ல; தனி வாழ்விலும் ஆசிரியர் வழியொட்டியே நான் நடக்கிறேன்!
ஆசிரியரை எங்குச் சந்தித்தாலும், அருகில் சென்று நாம் பேசி வரலாம்! இயக்கத்தில் அனைவரும் விரும்பக்கூடிய ஒரே தலைவர் ஆசிரியர் அவர்கள் தான்! தொடர்ந்து அய்யா தலைமையில் பணி செய்வேன்”, என சனவேலி முத்தழகு கூறினார்!