பெரியார்தான் தமிழ்நாடு ! தமிழ்நாடு அரசுதான் பெரியார்! முதல்வரின் பிரகடனம் !

2023 அக்டோபர் 16-31, 2023 கட்டுரைகள்

சிறப்புச் செய்தியாளர்

தாய்க் கழகமாம் திராவிடர் கழகத்தின் சார்பில் முத்தமிழ் அறிஞர் கலைஞர் நூற்றாண்டு விழா மற்றும் சமூக நீதிக்கான சரித்திர நாயகர் தமிழ்நாட்டின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு பாராட்டு விழா தஞ்சையில் 6.10.2023 அன்று மாலை சிறப்பாக நடைபெற்றது.

நிகழ்ச்சியில் கழகத்தின் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்கள் வருகை புரிந்த அனைவரையும் வரவேற்று உரை ஆற்றினார். 12.06.2006 அன்று இதே தஞ்சையில் திலகர் திடலில் அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆகும் உரிமையை சட்டமாக நிறைவேற்றிக் கொடுத்த கலைஞருக்குப் பாராட்டு விழாவை தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் எடுத்தார் என்பதை நினைவுபடுத்தி, தாய்க் கழகத்தின் அழைப்பை ஏற்று வந்துள்ள முதலமைச்சர் அவர்களுக்கு நன்றி என்றார்.

‘‘தாய் வீட்டில் கலைஞர்’’ நூல் வெளியீடு

நூறாண்டு கடந்தும் பேசுபொருளாக நிலைத்து நிற்க கூடிய வகையில் அமைந்த இந்நிகழ்ச்சியின் முக்கிய நிகழ்வாக, தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களால் தொகுக்கப்பட்ட திராவிடர் கழக நிகழ்ச்சிகளிலும் மற்றும் பெரியார் கல்வி நிறுவனங்களிலும் கலைஞர் அவர்கள் ஆற்றிய உரைகளின் தொகுப்பான “தாய் வீட்டில் கலைஞர்” நூல் வெளியிடப்பட்டது.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் நூலினை வெளியிட, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள் நூலினைப் பெற்றுக் கொண்டார்.

பால பிரஜாபதி அடிகளார் உரை

நிகழ்வில் பாலபிரஜாபதி அடிகளார் அவர்கள் பாராட்டுரை வழங்கினார். அவரது உரையில்; எப்படிப்பட்ட சூழலை எல்லாம் கடந்து, போராட்டத்தின் வழியாக குமரி முனையில் தமிழால், தமிழ் உணர்வால் அவர்கள் வாழ்ந்து வருகிறார்கள் என்பதை எல்லாம் விவரித்து, திருவிதாங்கூர் அரசுக்கு எதிராகப் போராடியதன் விளைவாகத் தான் தமிழை நாங்கள் தக்க வைத்துள்ளோம் என்றார். நாங்கள் வைகுண்டர் வழியில் வந்தவர்கள்; வந்தேறிகள் இல்லை! கைபர் போலன் கணவாய் வழியாகவும் வந்தவர்கள் இல்லை என்றார்.

சுயமரியாதை சார்ந்த சமயம் தான் எங்களது சமயம் என்றும், அதன் வெளிப்பாடுதான் தோளில் துண்டு போடக் கூடாது என்று சொன்னபோது துண்டைத் தோளில் அணிந் தோம். இடுப்புக்குக் கீழே துண்டு போகக்கூடாது என்று சொன்னபோது அதை தலையிலேயே எடுத்து கட்டினோம் என்றார்.

தமிழ்நாட்டு முதலமைச்சர் அவர்களுடைய செயல்பாடுகளை எல்லாம் பாராட்டி, தலைவர் கலைஞர் அவர்கள் “தமிழ்நாடு தெய்வீகப் பேரவை” என்ற ஒரு அரசு சார்ந்த இயக்கத்தைத் தோற்றுவித்து அதன் தலைவராக தவத்திரு. குன்றக்குடி அடிகளார் அவர்களை நியமித்ததை நினைவுபடுத்தி, அதன் முதல் மாநாடு கன்னியாகுமரியில் நடந்தது என்றும், நெருக்கடி நிலையினால் அந்தப் பேரவை கலைக்கப்பட்டது என்றும் கூறினார்.

இன்று பாமர இந்து மக்களுக்கு என்று தனிப்பட்ட ஒரு அமைப்பு கிடையாது. அறியாமையில், மூடநம்பிக்கையில், ஆரிய மாயையில் அந்த மக்கள் சிக்கித் தவிக்கின்றனர். அவர்களை அந்த அறியாமை, மூடநம்பிக்கை, ஆரிய மாயையில் இருந்து அகற்றக் கூடிய ஆற்றல் கலைஞருக்கு இருந்தது. இன்று அதை முதலமைச்சர் கையில் எடுக்க வேண்டும் என்றார். இந்தச் செயலை முதலமைச்சர் கையில் எடுத்தால், கிராமத்தில் உள்ள ஒடுக்கப்பட்ட இந்து மக்கள் அனைவரும் உங்களைப் பின்தொடர்வார்கள் என்றார். ஜாதி, மத பேதமற்ற சிந்தனையோடு முதலமைச்சர்கள் இருக்க வேண்டும். அப்படிப்பட்ட ஜாதி, மத பேதமற்ற, அனைவருக்கும் பொதுவான ஆட்சி நடத்துகிறார் நம்முடைய முதலமைச்சர் என்றும், நூறாண்டு கண்ட கலைஞரின் புகழ் ஆயிரம் ஆண்டு கடந்தும் வாழ வேண்டும் என்று கூறி நிறைவு செய்தார்.

ஜி.பாலச்சந்திரன் அய்.ஏ.எஸ்.உரை

மேற்கு வங்க மேனாள் தலைமைச் செயலாளர் ஜி.பாலச்சந்திரன் அய்.ஏ.எஸ். அவர்கள் பாராட்டுரை வழங்கினார். அவரது உரையில்: எதை வேண்டுமானாலும் கேள்வி கேட்க வேண்டும் என்பதுதான் பெரியாரின் வழி. அந்த வகையில் எதற்கு கலைஞர் 100 ? எதற்காக முதலமைச்சருக்குப் பாராட்டு? என்று நீங்கள் கேள்வி கேட்க வேண்டும் என்று கூறி தனது உரையைத் தொடங்கினார்.

1969ஆம் ஆண்டு கலைஞர் அவர்களால் மாநில அரசின் உரிமைகள் குறித்து ஆய்வு செய்ய ‘ராஜமன்னார் கமிட்டி’ அமைக்கப்பட்டது. அந்தக் கமிட்டி கொடுத்த பரிந்துரைகள் அனைத்தும் மாநில சுயாட்சி பெற வேண்டும் என்று ஒரு மாநிலம் நினைக்கின்ற போது தேவைப்படக்கூடிய அதிமுக்கிய அறிக்கை என்பதை பல்வேறு எடுத்துக்காட்டுகளுடன் விவரித்தார்.
குறிப்பாக தேசிய கல்விக் கொள்கை என்ற பெயரால் ஒன்றிய அரசு கொண்டுவர நினைக்கும் கொடுமையை எடுத்துரைத்து அதற்கு மாற்றாக “மாநிலக் கல்விக் கொள்கை” ஒன்றினை நமது முதலமைச்சர் தயாரித்துக் கொண்டிருக்கிறார். அந்த மாநிலக் கல்விக் கொள்கை 50 ஆண்டுகளுக்குப் பிறகு மாநில சுயாட்சி பற்றி யாராவது பேச வந்தால் பேசுபொருளாகக் கூடிய கல்விக் கொள்கையாக நிச்சயம் அமையும் என்றார். அப்படிப்பட்ட ஒரு கல்விக் கொள்கையைத் தான் நாம் ஏற்படுத்த வேண்டும் என்றார். மேலும் வரலாற்றினை வென்றவர்கள் எழுதாமல், உண்மையைச் சொல்லுபவர்களால் எழுதப்பட வேண்டும். அப்படிப்பட்ட வரலாறாக முதலமைச் சரின் மாநிலக் கல்விக் கொள்கை இருக்க வேண்டும் என்றார். இந்திய நாட்டில் உள்ள முதலமைச் சர்களில் முதன்மை முதலமைச்சர் என்ற பெருமை நமது முதலமைச்சருக்கு இருக்கிறது என்றும், அவரைச் சுற்றி இருப்பவர்கள் அவரது நோக்கத்திற்கு அவரைப் போலவே உழைத்தால் தெற்கு ஆசியாவின் முதன்மையான மாநிலமாக தமிழ்நாடு இருக்கும் அதற்காக அவரோடு நாம் உழைக்க வேண்டும் என்று கூறி நிறைவு செய்தார்.

நீதிபதி ஜி.எம். அக்பர் அலி உரை

சென்னை உயர்நீதிமன்ற மேனாள் நீதிபதி ஜி.எம். அக்பர் அலி அவர்கள் பாராட்டுரை வழங்கினார். அவரது உரையில்: மிகச் சிறிய வயதில் தொடங்கி எப்படி படிப்படியாக நமது முதலமைச்சர் முன்னேறினார் என்பதை விவரித்தார்.

குறிப்பாக அகவை 30-இல் இளைஞரணிச் செயலாளராகவும், 36-இல் சட்டமன்ற உறுப்பினராகவும், இன்று காலமெல்லாம் தளபதியாக திராவிட இயக்கத்தை காத்து நிற்கக் கூடியவராக வளர்ந்த விதத்தை விவரித்தார். கலைஞர் மறைந்த போது ‘அப்பா என்று ஒருமுறை அழைத்துக் கொள்ளவா தலைவா?’ என்ற அவரின் வார்த்தைகள் நம்மையெல்லாம் எவ்வளவு உணர்ச்சி வயப்படுத்தியது என்பதை எடுத்து ரைத்து, கலைஞருக்குப் பிறகு திராவிட மாடல் அரசை முதலமைச்சர் நிறுவி இருக்கிறார் என்றார்.

தமிழர் தலைவர் ஆசிரியர் தலைமை உரை

அண்ணா அவர்கள் 18 ஆண்டுகளுக்குப் பின், தந்தை பெரியார் அவர்களை திருச்சியில் சந்தித்துப் பேசுகின்ற நேரத்தில், உணர்ச்சிப்பூர்வமாக ஒரு வார்த்தை சொன்னார்.
‘‘பெரியாருடைய பணி எப்படிப்பட்டது என்றால், ‘‘Putting Centuries in to a Capsule’’ என்று ஆங்கிலத்தில் சொன்னார்.

‘‘பல நூற்றாண்டுகளை ஒரு குளிகையில் அடைப்பதைப்போல” என்றார்.
அதை அப்படியே செய்தவர் –_ தொடர்ந்தவர் கலைஞர். அதை மிஞ்சியவர் நம்முடைய இன்றைய முதலமைச்சர் சமூகநீதிக்கான சரித்திர நாயகர்.
இவருடைய பணி சாதாரணமான பணியல்ல. நாம் இவரைப் பாராட்டுவது, அவரைப் பெருமைப்படுத்துவது என்பதைவிட, இந்தச் சமுதாயத்தை உயர்த்துவதற்காக -_ இந்தச் சமுதாயம் பயனடைய வேண்டும் என்பதற்காக.

தமிழ்நாட்டுத் தலைவர் மட்டுமல்ல;அகில இந்தியாவிற்கும் வழிகாட்டக் கூடியவர்!

ஏனென்றால், தமிழ்நாட்டைத் தாண்டி, திராவிடத்தைத் தாண்டி, இந்தியாவே இப்பொழுது இவரைத்தான் நம்பிக் கொண்டிருக்கின்றது; இவருடைய தலைமையைத்தான் எதிர்பார்த்துக்
கொண்டிருக்கின்றது. புதிய இந்தியாவை உருவாக்கக்கூடிய அளவிற்கு இன்றைக்கு அவர்தான் உருவாக்கிக் கொண்டிருக்கின்றார் என்று சொல்லுகின்றபொழுது, நம்முடைய தலைவர், தமிழ்நாட்டுத் தலைவர் மட்டுமல்ல; அகில இந்தியாவிற்கும் வழிகாட்டக் கூடியவராக இருக்கின்றார்.

கலைஞர் வழியை அப்படியே பின்பற்றுகிறார்!

கலைஞர் இருந்தபொழுது, யு.பி.ஏ. என்கிற அய்க்கிய முற்போக்குக் கூட்டணியை உருவாக்கினார். அந்த வழியிலே, ‘‘தம்மின் தம்மக்கள் அறிவுடைமை” என்று சொல்லுகின்ற வள்ளுவர் குறள்போல, நம்முடைய முதலமைச்சர் அவர்கள், சமூகநீதிக்கான சரித்திர நாயகர் அவர்கள்- கலைஞர் வழியை அப்படியே பின்பற்றுகிறார்.

கலைஞர், பெரியார் வழி, அண்ணா வழியைப் பின்பற்றினார். அப்படியே அகலமாகிக் கொண்டே இருக்கிறது ஈரோட்டுப் பாதை. அதனுடைய விழியாக, அகில இந்தியாவிற்கும் இப்பொழுது வழிகாட்டக் கூடிய அளவிற்கு இருக்கிறார். அதனால்தான், எதிரிகள் இவரைக் கண்டு மிரளுகிறார்கள். இன்னும் மிக முக்கியமாக, எங்கே போனாலும், தி.மு.க.தான் நம்முடைய பிரதமர் அவர்களுக்கு ஞாபகத்திற்கு வருகிறது.

இந்தியா’ கூட்டணிதான் நாளைக்கு ஆளப்போகின்ற கூட்டணியாக இருக்கின்றது என்பதற்கு அச்சாரமாக முதலில் அவர் பணியேற்று இருக்கிறார்.
இதுதான் பல பேருக்குக் குத்துகிறது, குடைகிறது, அச்சத்தை ஏற்படுத்துகிறது.

இந்த சூழ்நிலையில், எங்கள் திராவிட ஏவுகணையே, நீங்கள் வாழ்க! உங்களுடைய பணி வளர்க!

உங்களுடைய பணி என்பது தனி நபர்களைத் தாக்காது – தத்துவங்களைத் தாக்கும், தகர்க்கும்!

பாராட்டிப் போற்றி வந்த பழைமைலோகம்
ஈரோட்டுப் பூகம்பத்தால் இடியுது பார்!
என்று சொன்னார் முத்தமிழறிஞர் கலைஞர்.
தாய்க்கழகம் உங்களை உச்சிமோந்து பாசத்தோடு பாராட்டுகிறது, வரவேற்கிறது!
இடிக்கவேண்டிய பகுதிகள் பாக்கியிருக்கின்றன; அதை நீங்கள் செய்யுங்கள். அதற்குத்தான் தாய்க்கழகம் உங்களை உச்சிமோந்து பாசத்தோடு பாராட்டுகிறது – வரவேற்கிறது.

முதலமைச்சர் உரை

தலைவர் கலைஞருக்கு மட்டுமல்ல,எனக்கும் திராவிடர் கழகம்தான் தாய்வீடு!

‘‘தாய்வீட்டில் கலைஞர்” என்ற நூலை வெளியிடுவதற்காக அல்ல; -நானும் என் வீட்டிற்குச் செல்கிறேன் என்கிற உணர்வோடுதான் இந்த மேடைக்கு வந்திருக்கின்றேன்.
முழுத் தகுதியும், கடமையும் திராவிடர் கழகத்திற்கு உண்டு!

கலைஞருக்கு நூற்றாண்டு விழா நடத்தக்கூடிய முழுத் தகுதியும், கடமையும் தி.க.வுக்கு உண்டு.
திராவிட முன்னேற்றக் கழகம் உதயமாவதற்கு முன்பே, சுயமரியாதை இயக்கத்தினுடைய வீரனாக, திராவிடர் இயக்கத்தினுடைய தீரராக இருந்தவர்தான் தலைவர் கலைஞர் அவர்கள்.
இன்னும் சொன்னால், அண்ணாவைச் சந்திப்பதற்கு முன்னாலேயே, தந்தை பெரியாரைச் சந்தித்தவர்தான் நம்முடைய தலைவர் கலைஞர் அவர்கள்.

1937ஆம் ஆண்டு திருவாரூர் கமலாலயம் குளக்கரையில் நடந்த பொதுக்கூட்டத்தில் தந்தை பெரியாருடைய உரையை முதன்முதலாகக் கேட்டதாகவும், அன்றைய தினம் ஆரஞ்சு நிறச் சால்வையை அணிந்து கொண்டு, பளபளவென பெரியார் அவர்கள் காட்சியளித்தார், பளபளவென மின்னினார் என்று கலைஞர் அவர்கள் சொல்லியிருக்கிறார்கள்.
பேரறிஞர் அண்ணா அவர்களின் மறைவிற்குப் பிறகு, சிலர் குழப்பத்தை விளைவிக்க முயற்சித்தார்கள். அப்பொழுது முதலமைச்சர் பொறுப்பு வேண்டாம் என்று மறுத்தவர் தலைவர் கலைஞர் அவர்கள்.

‘‘ஆனால், நீங்கள்தான் முதலமைச்சராக வர வேண்டும்; அப்பொழுதுதான் இயக்கம் காப்பாற்றப்படும்; தமிழினம் காப்பாற்றப்படும்; தமிழர்கள் காப்பாற்றப்படுவார்கள்” என்று தந்தை பெரியார் அவர்கள் சொன்னார்கள்.
தந்தை பெரியாரின் தூதுவராக மானமிகு ஆசிரியர் அவர்கள்தான் கலைஞரை வந்து சந்தித்தார். அந்த வகையில், கலைஞர் அவர்களை முதலமைச்சர் ஆக்கியதே தந்தை பெரியார் அவர்கள்தான்.

தலைவர் கலைஞர் அவர்களுக்கு சென்னையில் முதன்முதலில் சிலை அமைத்தவர் அன்னை மணியம்மையார் அவர்கள். இன்றைய தினம் கலைஞர் அவர்களுக்கு மிகப் பிரம்மாண்டமாக நூற்றாண்டு விழாவைக் கொண்டாடிக் கொண்டிருப்பது, அதிலும் குறிப்பாக ‘‘தாய்வீட்டில் கலைஞர்” என்ற களஞ்சியத்தை உருவாக்கிக் கொடுத்திருக்
கிறார், நம்முடைய மானமிகு ஆசிரியர் அவர்கள்.

திராவிடர் கழகத்தில் தந்தை பெரியார், அன்னை மணியம்மையார், மானமிகு ஆசிரியர் என்று சொன்னால், திராவிட முன்னேற்றக் கழகத்தில் பேரறிஞர் அண்ணா,- தலைவர் கலைஞர்,- இந்த அடியேன் என மூன்று சகாப்தங்களாக இணைந்து பணியாற்றுகிறோம்.

கருப்பும் சிவப்பும் இணைந்ததே திராவிட இயக்கம் என்பதைப் போல, இணைந்தே இருக்கிறோம் – இணைந்தே இருப்போம்.
50 ஆண்டுகாலம் ஓர் இயக்கத்தினுடைய தலைவராக இருந்தவர் கலைஞர். 5 முறை இந்த மாநிலத்தினுடைய முதலமைச்சராக இருந்தவர் கலைஞர் அவர்கள்.

அவருடைய கண் அசைவிலே இந்தியப் பிரதமர்களையும், குடியரசுத் தலைவர்களையும் உருவாக்கியவர் நம்முடைய தலைவர் கலைஞர் அவர்கள்.
ஆனால், உங்களை இந்த நாடு எப்படி அடையாளம் காணவேண்டும் என்று கேட்ட நேரத்தில், ‘‘மானமிகு சுயமரியாதைக்காரன்” என்று அவர் கூறிய அந்த வரியில்தான் தலைவர் கலைஞர் அவர்களுடைய 95 ஆண்டுகால வாழ்க்கை அடங்கியிருக்கிறது.

‘‘மானமிகு சுயமரியாதைக்காரன்” என்ற கலைஞர் அவர்கள், ‘குடிஅரசு’ இதழிலே எழுதியதையும், பெரியார் மேடைகளில் பேசியதையும் எனத் தொகுத்து மிகப்பெரிய களஞ்சியமாக

‘‘தாய்வீட்டில் கலைஞர்” நூலை உருவாக்கிக் கொடுத்திருக்கிறார் நம்முடைய ஆசிரியர் அவர்கள்.
தமிழர்தம் இல்லமெல்லாம், உள்ளமெல்லாம் இருக்கவேண்டிய நூல். இதனை உருவாக்கி இருக்கக்கூடிய ஆசிரியர் அவர்களை நான் உள்ளபடியே நன்றியால், பாராட்டுகிறேன் என்று சொல்லக்கூடாது; வணங்குகிறேன், வணங்குகிறேன்.

‘‘ஆட்சியோ, தந்தை பெரியாருக்குக் காணிக்கை” என்றார் அண்ணா.
‘‘தமிழ்நாடு அரசுதான் பெரியார்; பெரியார்தான் தமிழ்நாடு அரசு” என்று சொன்னார் தலைவர் கலைஞர்.
நானும், அதையே உங்கள் அனைவரின் சார்பில் வழிமொழிகிறேன்.
உங்களுடைய பலத்த கரவொலிக்கிடையே மீண்டும் அதை நான் வழிமொழிகிறேன்.

‘‘தி.க.வும் -_ தி.மு.க.வும் இரட்டைக் குழல் துப்பாக்கிகள்’’ என்று அறிஞர் அண்ணா சொன்னார்.
‘‘தி.க.வும், தி.மு.க.வும் ஒரு நாணயத்தின் இரண்டு பக்கங்கள்’’ என்று கலைஞர் சொன்னார்.
என்னைப் பொறுத்தவரையில், ‘‘தி.க.வும், தி.மு.க.வும் உயிரும், உணர்வும்போல.’’
உயிரும், உணர்வும் இணைந்து உடல் இயங்குவதைப்போல, நாம் இந்த இனத்தின் உயர்வுக்காகத் தொடர்ந்து பாடுபட்டுக் கொண்டிருக்கிறோம்.
தமிழ்நாடு அனைத்து வகையிலும் முன்னேறக் கூடிய மாநிலமாக, தன்னிறைவு பெற்ற மாநிலமாக மலரவேண்டும்; உயரவேண்டும்.
இந்திய ஒன்றிய அரசின் ஆட்சிக் கருத்தியலாக, கூட்டாட்சிக் கருத்தியல் மலரவேண்டும்.

அனைத்துத் தேசிய இனங்களும் உரிமை பெற்றவையாக, அனைத்து மாநில மொழிகளும் ஒன்றிய ஆட்சி மொழிகளாக உயர்ந்து நிற்க வேண்டும்.

அனைவர் குரலுக்கும் ஒரே மரியாதை, மதிப்பும் இருக்கவேண்டும். இதுதான் இந்திய ஒன்றியமும், அதன் உள்ளடங்கிய தமிழ்நாடும் இயங்கவேண்டிய முறை.
அத்தகைய கூட்டாட்சிக் கருத்தியலை உள்ளடக்கிய இந்தியாவை அமைப்பதற்காகவே, ‘இந்தியா’ கூட்டணியை அமைத்திருக்கிறோம் என்று உரையாற்றினார் முதலமைச்சர்.

வருகை தந்த அனைவருக்கும் தஞ்சை மாவட்ட கழகத்தின் தலைவர் வழக்குரைஞர் சி.அமர்சிங் நன்றி கூறினார்.
நிகழ்வில் கழகத்தின் துணைப் பொதுச் செயலாளர் பிரின்சு என்னாரெசு பெரியார் இணைப்புரை ஆற்றினார். ♦