மக்களாட்சி உரிமைகளைக் காக்க ‘இந்தியா ’ கூட்டணிக்கு வாக்களிப்போம் ! பாசிச பா.ஜ.க.வை வீழ்த்துவோம்! – மஞ்சை வசந்தன்

2024 ஏப்ரல் 16-30, 2024 முகப்பு கட்டுரை

நடக்க இருக்கு நாடாளுமன்றத் தேர்தல் வழக்கமான தேர்தல் அல்ல அது ஒரு பெரும் போர். ஜனநாயகத்திற்கும் எதேச்சாதிகாரத்திற்கும் இடையேயான போர். பாசிசத்தை, சனாதனத்தை, மதவெறியை, கார்ப்பரேட் ஆதரவை, ஒற்றைக் கலாச்சாரத்தை, ஒற்றை ஆட்சி முறையை, ஒரே மதத்தைக் கொள்கையாகக் கொண்ட ஆர்.எஸ்.எஸ். முன்னிறுத்தும் பா.ஜ.க. அணிக்கும், மத இணக்கம், சமத்துவம், சமூகநீதி, சமஉரிமை, மக்களாட்சி, மனிதநேயம் இவற்றைக் கொள்கையாகக் கொண்ட இந்தியா அணிக்கும் இடையிலான இப்போர், ‘இந்திய’ வரலாற்றில் மிக முக்கியமானது.

எதேச்சாதிகாரம் வெற்றி பெற்றால், நாடே வன்முறைக் களமாய் மாறி, சிறைச் சாலைகள் நிரம்பி வழியும். மீண்டும் மனுதர்மம்தான் கோலோச்சும், சமதர்மம் ஒழிக்கப்படும். மனுதர்மம் தழைக்கும்; மனித தர்மம் மரிக்கும் என்பதைத் தெளிவாகப் புரிந்துகொண்டு, விழிப்போடும், எச்சரிக்கையோடும் விடாமுயற்சியுடனும் பிரச்சாரம் மேற்கொண்டு பா.ஜ.க. அணியை படுதோல்வியடையச் செய்ய வேண்டும்.

தமிழர் தலைவர் எச்சரிக்கை

பா.ஜ.க. என்பது ஹிட்லரைப் போல ஆட்சி செய்ய முனைகிறது. ஜெர்மனி நாட்டின் முக்கிய சட்டப் பேரவையான ரெய்ச்ஸ்டேகின் ஒப்புதலைப் பெறாமலே வெய்மர் அரசமைப்புச் சட்டத்தின் 48ஆம் பிரிவினைப் பயன்படுத்தி, நெருக்கடி நிலையைக் கொண்டு வந்த ஹிட்லரைப் போல ஆட்சி செய்திட நினைக்கிறது. நம்மிடையே மட்டுமல்ல; உலகின் பல பகுதிகளிலுள்ள அறிவார்ந்த ஜனநாயக சக்தியினர் மத்தியிலும் இது குறித்து ஓர் அச்சம் நிலவுகிறது – பா.ஜ.க. அரசு ஆட்சியிலிருந்து அகற்றப்படா விட்டால், இந்தியா ஒரு நாடு என்பதாக இல்லாமலே போய்விடும். மோடி அவர்கள் ஆட்சி அதிகாரத்திலேயே தொடர விரும்புகிறார். 2047ஆம் ஆண்டில் நடந்திட வேண்டியது பற்றிப் பேசுகிறார். இந்திய நாடு என்பது அவரது உரிமையாக, அவரது உருவாக்கமாக மட்டுமானது என்று நினைக்கிறார். இந்தச் சூழலில் பா.ஜ.க. தேர்தலில் வெற்றி பெறுமானால், இந்திய மக்களாட்சிக்கான சவப்பெட்டி மீது அடிக்கப் படும் கடைசி ஆணியாகவே அது அமையும்’’ என்ற தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் எச்சரிக்கையை இந்தியாவில் உள்ள எல்லோரும் ஆழமாகக் கருத்தில் கொண்டு செயல்பட வேண்டும்.

இளைஞர்களுக்கு வேலை கிடைத்ததா?

ஏமாற்றி, பொய் கூறி, 2014இல் ஆட்சிக்கு வந்தவர்கள், அதே ஏமாற்றுப் பிரச்சாரத்தை மீண்டும் செய்து 2019ஆம் ஆண்டிலும் ஆட்சிக்கு வந்து இந்தியாவையே பாழாக்கி, பாசிச வழியில் ஆட்சி புரிபவர்கள், மீண்டும் அதே ஏமாற்றுப் பிரச்சாரங்கள் மூலம் ஆட்சியைப் பிடிக்க ஊடகங்களின் உதவியோடு முயற்சிக்கின்றனர். இளைஞர்களைப் பார்த்து, ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலை கொடுப்போம் என்றார்கள். ஓராண்டிற்கு 2 கோடி பேருக்கு வேலை என்றால், கடந்த 10 ஆண்டுகால பா.ஜ.க. ஆட்சியில் 20 கோடி பேருக்கு வேலை கிடைத்திருக்கவேண்டுமே! கிடைத்ததா?

அதுமட்டுமல்ல, ஒன்றிய அரசு அலுவலகங்களில் 30 லட்சம் பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன.
இந்த அவல நிலை மாற்றப்பட்டு, இளைஞர்களின் எதிர்காலம் காப்பாற்றப்பட வேண்டும் என்பதை நன்கு உணர்ந்த நம்முடைய மாண்புமிகு முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களும், இளந்தலைவர் ராகுல் காந்தி அவர்களும் இந்தியா கூட்டணி ஒன்றியத்தில் ஆட்சிப் பொறுப்பேற்றவுடன் 30 லட்சம் பணியிடங்களும் உடனே நிரப்பப்படும் என்று உறுதியளித்திருக்கிறார்கள். எனவே, இளைஞர்கள் ஒவ்வொருவரும் விழிப்போடும் துடிப்போடும் இத்தேர்தலில் பி.ஜே.பியைத் தோற்கடிக்கப் பாடுபடவேண்டும்! இந்தியா கூட்டணியை வெற்றி பெறச் செய்யவேண்டும் !

கார்ப்பரேட்டுகளுக்கு மட்டும்
கடன் தள்ளுபடி

15 லட்சம் போட்டார்களா?

பண மதிப்பிழப்புச் செய்து கருப்புப் பணத்தை ஒழிப்பேன் என்று கூறி, மக்களைச் சொல்லமுடியாத இன்னலுக்கு ஆளாக்கினார். சிறு குறுந் தொழில்கள் செய்துவந்த ஏழைகள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். அதனால் கிடைத்த பயன் என்ன?
ஒவ்வொரு குடிமகன் வங்கிக் கணக்கிலும் 15 லட்சம் ரூபாய் போடுவோம் என்றார்கள். அதற்காக நம் மக்கள் சேமிப்புப் பணத்தை யெல்லாம் திரட்டி, வங்கியில் கணக்குத் தொடங்கினார்கள். 15 லட்சம் ரூபாய் ஒவ்வொருவர் வங்கிக் கணக்கில் போடப்பட்டதா? இல்லையே! ஆனால், அந்தக் கணக்கில் மினிமம் பேலன்ஸ் இல்லை என்பதற்காக அபராதமாக 21 ஆயிரம் கோடி ரூபாய்களை அந்த ஏழை மக்களிடம் கொள்ளையடித்தது ஒன்றிய பா.ஜ.க. அரசு. இது எப்படிப்பட்ட பகல் கொள்ளை! குறைந்த பட்ச தொகைகூட இல்லாத நிலை ஏழைகளுக்குத்தானே இருக்கும்? அப்படிப்பட்டவர்களிடம் இவ்வளவு தொகையை அபராதம் பெற்ற பா.ஜ.க. அரசை மக்கள் மீண்டும் ஆதரிக்கலாமா? அவர்களின் ஆட்சிக்கு முடிவு கட்டவேண்டியது கட்டாயக் கடமையல்லவா?

பெண்களுக்குப் பாதுகாப்பில்லை!

மணிப்பூரில், நம்முடைய பழங்குடியினச் சகோதரிகள் நிர்வாணப்படுத்தப்பட்டு, தெருத் தெருவாக இழுத்துவரப்பட்டு கொடுமைப்படுத்தப் பட்டனர்.
தமிழ்நாட்டிற்கு வரும்பொழுதெல்லாம் மோடி மிக வேகமாகப் பேசுவார். 140 கோடி மக்களும் என் குடும்பம் என்று சொல்வார். உண்மையிலேயே அப்படி அவர் நினைத்திருந்தால், மணிப்பூரில் பாதிக்கப்பட்ட சமூக மக்களை நேரில் சென்று சந்தித்து பிரதமர் மோடி தீர்வு கண்டிருக்க வேண்டாமா? ஆறுதல் கூறக்கூட நேரில் செல்லாத ஈவு இரக்கமற்றவரல்லவா அவர்!

புயல், வெள்ள நிவாரணம் அளித்தாரா?

திருவள்ளூர், தூத்துக்குடி, நெல்லை , குமரி மாவட்டங்கள் மழை, புயல் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டன. 146 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு ஏராளமான இழப்புகளை மக்கள் சந்தித்தனரே! மழை ஒரேயடியாகக் கொட்டித் தீர்த்ததே! மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண நிதி அளிப்பதாய்க் கூறியவர்கள், சொன்னபடி நடக்காமல் ஏமாற்றி வருவதை உலகம் கண்டிக்கிறதே ! – பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினாரா பிரதமர் மோடி?

தேர்தல் நேரத்தில் மட்டும் அடிக்கடி தமிழ்நாட்டிற்கு வருகிறாரே? ‘ரோடு ஷோ’ நடத்துகிறாரே! தமிழ்நாட்டு மக்களின் வாக்குகளைப் பெறவேண்டும் என்பதற்காக இதைச் செய்யும் மோடி, தமிழ்நாட்டு மக்களுக்கு எதையுமே செய்யவில்லையே ! தமிழ்நாட்டை வஞ்சிக்கிறாரே!

எய்ம்ஸ் ஏமாற்று!

தமிழ்நாட்டில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு, மதுரையில் அடிக்கல் நாட்டினார்கள். அப்போது அடிக்கல் நாட்டப்பட்ட மற்ற மாநிலங்களில் எல்லாம் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டி முடிக்கப்பட்டு செயல்படத் தொடங்கிய நிலையில், மதுரை எய்ம்ஸ் மட்டும் அடிக்கல்லோடு நிற்பது ஏன்? இப்படிப்பட்ட ஓரவஞ்சனை ஒன்றிய அரசை மீண்டும் ஆட்சி செய்ய அனுமதிக்கலாமா? பா.ஜ.க.வை துடைத்தெறிய வேண்டாமா?

ஊழல் இல்லாததா – பா.ஜ.க. மோடி ஆட்சி?
ஊழலிலே புதிய வகை ஊழலைக் கண்டுபிடித்தவர்கள் பா.ஜ.க.வினர் – ப்ரீ பெய்டு ஊழல், போஸ்ட் பெய்டு ஊழல் என்று அல்ட்ரா டெக் ஊழல் செய்து வருகிறார்களே !
தேர்தல் நன்கொடை பெறுவதற்காக ஆறு நிறுவனங்களுக்காக சட்டத்தையே மாற்றியிருக் கிறார்கள். தேர்தல் பத்திர திட்டத்தின்மூலமாக, பல நிறுவனங்களை மிரட்டி நன்கொடை வாங்கினார்கள் என்கிற விவரங்கள் வெட்ட வெளிச்சமாகியுள்ளனவே !
பா.ஜ.க. சார்பில் நிற்கின்ற வேட்பாளர், உண்மையைத் தவிர மற்ற எல்லாவற்றையும் பேசுவார். காரணம், அவர்கள் தலைவர் மோடியே வாய் திறந்தாலே பொய்யைக் கொட்டக்கூடியவர்!
33 நிறுவனங்களை மிரட்டி, கோடிக் கணக்கான ரூபாய் நன்கொடையை பா.ஜ.க. பெற்றிருக்கிறது.
காண்ட்ராக்ட் என்ற பெயரில் கணக்கில்லாமல் கொள்ளை அடித்து வருபவர்கள் அல்லவா பி.ஜே.பி.யினர்.
பா.ஜ.க. ஆட்சியில் ஊழலில் 93ஆம் இடத்தில் உள்ளனர். இதுதான் ஊழல் அற்றவர்களின் லட்சணமா?
இப்படி ஏராளமான ஊழலைச் செய்தவர்கள், அடுத்தவர்களைப் பார்த்து ஊழல் செய்கிறார்கள் என்று சொல்வது எவ்வளவு பெரிய பித்தலாட்டம்.

கச்சத்தீவு பற்றிப் பேசி ஊழலைத் திசை திருப்பல்

50 ஆண்டுகளுக்கு முன் கொடுக்கப்பட்ட கச்சத்தீவுப் பிரச்சினையை இப்போது மோடி அவர்கள் கையில் எடுத்துக்கொண்டு பேசுவது அவர்களுடைய ஊழலைத் திசை திருப்புவதற்கான மோசடி வேலையாகும்.

கச்சத்தீவு பற்றி காங்கிரஸ்மீது குற்றம்சாட்டும் பிரதமர் மோடி கடந்த 10 ஆண்டுகால ஆட்சியில் அதை மீட்க என்ன செய்தார்?
காங்கிரஸ் கூட்டணி ஆட்சி முடிவுற்று, பிரதமர் மோடி கடந்த 10 ஆண்டுகளாக, ‘பெரும்பான்மையுடன் ஆளும் வாய்ப்பு பெற்ற போது, இவரது ஆட்சியில் கச்சத்தீவை மீட்க எடுத்த நடவடிக்கை ஏதாவது உண்டா? ஏன் மீட்டுத் தரவில்லை? மீட்க முடியவில்லை?

இலங்கைக்குக் கோடி கோடியாக நிதி உதவியை கடனாகவும், பொருளாதாரச் சரிவிலிருந்து மீட்கவும் தந்த ‘விஸ்வகுரு’ என்று கூறிக்கொள்ளும் பிரதமர் மோடி, ஏன் கச்சத்தீவை மீட்க நிபந்தனை விதிக்கவில்லை?
‘’நான் ஆட்சிக்கு வந்தால் 60 ஆண்டு காங்கிரஸ் ஆட்சி செய்த எல்லாத் தவறுகளையும் ஆறே மாதங்களில் சரி செய்வேன்’’ என்று வாய்ப்பறை கொட்டி, வந்த பிரதமர் ஏன் கச்சத்தீவை மீட்க முயற்சி செய்யவில்லை?

கச்சத்தீவு விவகாரத்தில் முன்னுக்குப் பின் முரண்

இந்த விவகாரத்தில் பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜ.க. அரசும், அதன் அதிகாரிகளும் சொன்னது என்ன?
“இந்தியாவுக்கும் – இலங்கைக்கும் இடையிலான கடல் எல்லைப் பிரச்சினையும், அதன் விளைவாக கச்சத் தீவு மீதான இறையாண்மையும் தீர்க்கப்பட்ட விவகாரம் என்று வெளிவிவகார அமைச்சகம் சென்னை உயர்நீதிமன்றத்தில் கூறியுள்ளனரே!
மீனவர் அமைப்பு ஒன்றின் மனுக்களுக்குப் பதில் அளித்து, அமைச்சகத்தின் துணைச் செயலாளர் விஷ்வேஷ் நேகி தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தில் இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளதே !

– (‘தி இந்து’ 2014 ஜூலை 02).

இப்படிப் பதில் கூறியது மோடியின் அரசு! பிரதமர் நரேந்திர மோடி அரசின் அதிகாரிகள் தானே?
அட்டார்னி ஜெனரல் முகுல் ரகோத்கி உச்சநீதி மன்றத்தில் தலைமை நீதிபதி ஆர்.எம்.லோதா அமர்வில் 2014 ஆகஸ்ட் 26 அன்று தெரிவித்தது என்ன?
“கச்சத்தீவு மீண்டும் இந்தியாவுக்கு வேண்டு மென்றால், நாம் ஒரு போரில் தான் இறங்க வேண்டியிருக்கும்” என்று கூறவில்லையா? இப்படியெல்லாம் கூறியவர்கள் இன்றைக்கு கச்சத்
தீவைப் பற்றிப் பேசுவது அவர்களின் ஊழலைத் திசை திருப்புவதற்காகத்தான் என்பது தெளிவாக விளங்கவில்லையா?

விவசாயிகளை வஞ்சிக்கும் பா.ஜ.க. அரசு கடந்த 10 ஆண்டுகால ஒன்றிய பா.ஜ.க. அரசினுடைய, நிதிநிலை அறிக்கையில் விவசாயிகளுக்காக ஒதுக்கிய தொகை ஒரு லட்சத்து 544 கோடி ரூபாய்.
ஆனால், விவசாயத்திற்கு ஒதுக்கப்பட்ட நிதியிலி ருந்து கடந்த 5 ஆண்டுகளில் மொத்தம் ஒரு லட்சம் கோடி ரூபாய்க்கும் அதிகமான தொகையைப் பயன் படுத்தாமல், விவசாயிகளுக்குப் போய்ச் சேராமல், அதையும் திரும்ப வைத்துக் கொண்டார்கள். இதனால் விவாயிகளும், விவசாயமும் பெரிதும் பாதிக்கப்பட, 1,70,000 (ஒரு லட்சத்து எழுபதாயிரம் விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டனர். கார்ப்பரேட்டுகளை வளர்த்துவிட்டு, விவசாயிகளை, ஏழைகளை வஞ்சிக்கின்ற கொடுநெஞ்சினராய் பி.ஜே.பி. ஆட்சியாளர்கள் ஆட்சி புரிகின்றனர்.
விவசாயிகள் கேட்கும் குறைந்தபட்ச ஆதரவு விலையைக்கூட தர மறுத்து வஞ்சிக்கின்றனர்.

கார்ப்பரேட்டுகளுக்கு மட்டும் கடன் தள்ளுபடி

ஏழைகள், கல்வி பயிலும் மாணவர்கள் பெற்ற கடனை வட்டியுடன் வசூலிப்பதில் கடுமை காட்டும் ஒன்றிய அரசு, பெரும் கார்ப்பரேட்டு முதலாளிகளுக்கு 25 லட்ச கோடி ரூபாய் கடன் தொகையைத் தள்ளுபடி செய்யும் அநியாயம் அரங்கேறியுள்ளது. ஒன்றிய பாசிச பா.ஜ.க. ஆட்சி முதலாளிகளுக்கான ஆட்சி. மாறாக ஏழைகளுக்கான ஆட்சி அல்ல என்பதை ஒவ்வொரு செயலிலும் உறுதி செய்து வருகின்றனர். எனவே, 150 கோடி ஏழை மக்களும் இந்த பா.ஜ.க. ஆட்சியை ஒழித்துக்கட்ட

உறுதி கொள்ள வேண்டும், இந்தியா கூட்டணிக்கு வாக்களித்து பாசிச பா.ஜ.க. ஆட்சியை ஒழித்துக் கட்டவேண்டும்!

இப்படி 10 ஆண்டுகளாக நாட்டைக் கெடுத்து, சமூகநீதியை, ஜனநாயகத்தைச் சீர்குலைத்து, ஏழைகளை வஞ்சித்த பா.ஜ.க. அரசின் அவலங்களை,
கேடுகளை, அழிவுகளை நீக்கி, மீண்டும் இந்தியாவை மக்கள் உரிமைகள் மிகுந்த சமூகநீதி நாடாக ஆக்க காங்கிரஸ் வெளியிட்ட தேர்தல் அறிக்கை பெரும் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது .

காங்கிரஸ் கட்சியின் மனிதம் மிளிரும் தேர்தல் அறிக்கை

5 தலைப்புகளில் 25 வாக்குறுதிகளை அளித்துள்ளது
காங்கிரஸ் கட்சி. இளைஞர்கள், தொழிலாளர்கள், விவசாயிகள், பெண்கள், மாணவர்கள் நலனைக் கருத்தில் கொண்டு தேர்தல் அறிக்கையில்,
1. நாடு முழுவதும் ஜாதி வாரிக் கணக்கெடுப்பு நடத்தப்படும்.
2. இடஒதுக்கீட்டிற்கான 50 சதவிகித உச்ச வரம்பை நீக்க அரசமைப்புச் சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளப்படும்.
3. ஒன்றிய அரசுப் பணிகளில் 30 லட்சம் காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும்.
4. அரசுப் பணிகளுக்கு ஒப்பந்த அடிப்படையில் ஆள் சேர்க்கும் நடைமுறை ரத்து செய்யப்படும்.
5. நாடு முழுவதும் ஒவ்வொரு ஒன்றியத்துக்கும் பட்டியலின மாணவர்களுக்காக உண்டு, உறைவிடப் பள்ளிகள் அமைக்கப்படும்.
6. மாநில அரசுகள் விருப்பப்பட்டால் மட்டுமே ‘நீட்’ நுழைவுத் தேர்வு நடத்தப்படும்.
7. ரயில்களில் மூத்த குடிமக்களுக்கான கட்டணச் சலுகை மீண்டும் வழங்கப்படும்.
8. உயர்கல்வி செல்லும் மாணவர்களுக்கு கல்விக் கடன் ரூ.7.5 லட்சம் வரை வழங்கப்படும்.
9. நீட், க்யூட் நுழைவுத் தேர்வுகள் மாநில அரசுகளின் விருப்பத்துக்கு உட்பட்டது.
10. ஏழைப் பெண்களுக்கு ஆண்டுக்கு ஒரு லட்சம் ரூபாய் வழங்கும் ‘மகாலட்சுமி’ திட்டம் செயல்படுத்தப்படும்.
11. மிகவும் ஏழைகளாக உள்ளவர்களைக் கண்டறிந்து அவர்களுக்கு ஆண்டிற்கு ரூ.ஒரு லட்சம் வழங்கப்படும்.
12. 2025ஆம் ஆண்டுமுதல் ஒன்றிய அரசின் பணிகளில் பெண்களுக்கு 50 சதவிகிதம் ஒதுக்கப்படும்.
13. மார்ச் 2024 ஆம் ஆண்டுவரை பெறப்பட்ட அனைத்துக் கல்விக் கடன்களும் ரத்து செய்யப்படும்.
14. வேளாண் விளைபொருள்களுக்கான குறைந்தபட்ச ஆதார விலை சட்ட ரீதியாக உறுதி செய்யப்படும்.
15. மாநில அரசுகள் விரும்பாவிட்டால், நீட், க்யூட் நுழைவுத் தேர்வு நடத்த அவசியமில்லை.
16. மீனவர்களுக்கு டீசல் மானியம் வழங்கும் திட்டம் மீண்டும் செயல்படுத்தப்படும்.
17. 100 நாள் வேலைத் திட்டத்திற்கான ஊதியம் ரூ.400-ஆக உயர்த்தப்படும்.
18. நகர்ப்புறங்களிலும் வேலை உறுதித் திட்டம் செயல்படுத்தப்படும்.
19. அங்கன்வாடி பணியாளர்களின் எண்ணிக்கை இரட்டிப்பாக்கப்படும்.
20. பா.ஜ.க. கொண்டு வந்த ஜி.எஸ்.டி. சட்டம் ரத்து செய்யப்பட்டு வணிகர்களுக்கு ஏற்ற புதிய ஜி.எஸ்.டி. (2.0) கொண்டு வரப்படும்.
21. 14 லட்சம் அங்கன்வாடிப் பணியாளர்கள் நியமிக்கப்படுவார்கள்.
22. புதுச்சேரி மற்றும் காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து வழங்கப்படும்.
23. ரூ.25 லட்சம் மதிப்புள்ள காப்பீடு திட்டம் செயல்படுத்தப்படும்.
24. தேசிய கல்விக் கொள்கையை மாநில அரசுகளு
டன் ஆலோசித்து திருத்தி அமைக்கப்படும்.
25. அனைத்து கடலோரப் பகுதிகளிலும் கடல்நீரைக் குடிநீராக்கும் திட்டம் செயல்படுத்தப்படும்.
26. முப்படை வீரர்களைத் தேர்வு செய்யும் அக்னிபாத் திட்டம் ரத்து செய்யப்படும்.
27. எம்.பி., எம்.எல்.ஏ.,க்கள் கட்சி தாவினால், தானே பதவி இழக்கும் வகையில் சட்டத் திருத்தம் கொண்டுவரப்படும்.
28. தேர்தல் நடைமுறையில் மாற்றம் ஏற்படுத்தப்படும்.
29. வாக்களிக்கும்போது வாக்காளர் ஒப்புகைச் சீட்டைப் பார்த்த பிறகு பெட்டியில் போடும் நடைமுறை அமல்படுத்தப்படும்.
30. ‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ திட்டம் கொண்டுவரப்படாது.
31. அனைத்து விசாரணை அமைப்புகளும் நாடாளுமன்றம் அல்லது சட்டமன்றங்களின் நேரடி கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்படும்.
32. பா.ஜ.க. ஆட்சியில் கொண்டுவரப்பட்ட அனைத்து மக்கள் விரோதச் சட்டங்களிலும் திருத்தம் செய்யப்படும்.
33. நிட்டி ஆயோக் திட்டக்குழு மீண்டும் கொண்டுவரப்படும்.
34. பண மதிப்பிழப்பு, ரபேல் ஒப்பந்தம், பெகாசஸ் முறைகேடு தொடர்பாக விசாரணை நடத்தப்படும்.
35. பா.ஜ.க. ஆட்சியில் வெளிநாடுகளுக்கு குற்றவாளிகள் தப்பிச் சென்றது குறித்து விசாரணை நடத்தப்படும்.
36. பா.ஜ.க.வுக்கு மாறியதால், ஊழல் வழக்கு
களிலிருந்து விடுவிக்கப்பட்டவர்கள்மீதான வழக்கு மீண்டும் விசாரிக்கப்படும்.
37. பட்டியலின மாணவர்கள் துன்புறுத்தப்படுவதைத் தடுக்க ரோஹித் வெமுலா பெயரில் சட்டம் கொண்டு வரப்படும்.
38. விவசாய இடுபொருள்களுக்கு ஜி.எஸ்.டி. ரத்து செய்யப்படும்.
39. ஆண்களுக்கு இணையாக பெண்களுக்கு ஊதியம் வழங்கப்படும்.
40. வெறுப்புப் பேச்சுகள், வெறுப்புக் குற்றச்செயல்கள்,
வகுப்பு வாத மோதல்கள் இரும்புக் கரம் கொண்டு அடக்கப்படும்.
41. பெண்கள், பட்டியலினத்தவர்கள், சிறுபான்மையினருக்கு எதிராகக் குற்றங்களை இழைத்த
வர்களுக்கு கடும் தண்டனை வழங்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

எனவே, இந்தியாவைக் காப்பாற்ற, இந்தியாவில் மத இணக்கம், சமூக நீதி, மக்களாட்சி, வேலை
வாய்ப்பு, தொழில் வளர்ச்சி விரும்பும் 150 கோடி மக்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்ற இந்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட இந்தியா கூட்டணிக்கு வாக்களித்து வெற்றி பெறச்

செய்வோம்! ஒன்றிய பா.ஜ.க. ஆட்சியை அகற்றுவோம் ! l