சட்ட விதிமுறைகளைச் சரியாக கற்காது எழுதப்பட்ட தீர்ப்பு !
1. கே : தி.மு.க. கூட்டணி சிதறிப்போகும் என்றனர். அது இன்னும் பலப்பட்டு நிற்க, தி.மு.க. கூட்டணியில் உடன்பாடு ஏற்பட்டாலும் அக்கட்சிகளுக்கு மனக்கசப்பு உள்ளது என்று புதிதாய் ஒன்றைக் கூறும் ஊடகங்கள் பற்றித் தங்கள் கருத்து என்ன?
– எல். சாமிநாதன், அறந்தாங்கி
ப : அப்பட்டமான, விஷமப் பிரச்சாரங்கள் – பொய்கள் பரப்புரை – அதற்கு நீங்கள் பலியாவதோடு, மற்றவர்களையும் பலியாகச் செய்வது நியாயமா?
2. கே: சி.ஏ.ஏ. சட்டத்தை அமல்படுத்தி ஆதாயம் அடைய முற்படும் ஆர்.எஸ்.எஸ்., பி.ஜே.பி. கூட்டம், எதிர் விளைவுகளால் ஏராளமாய் இழப்புகளையே பெறும் என்ற கணிப்பு சரியா?
– வனிதா, வேலூர்.
ப : பொறுத்திருந்து பாருங்கள். நிச்சயம் உங்கள் கணிப்பு நிறைவேறும்!
3. கே: ஒன்பது வயது சிறுமியை மனிதத் தன்மையே இன்றி சிதைத்து அழித்த கொடியவர்களை, குறுகிய காலத்திலேயே தீர்ப்பு அளித்து, துடிக்கத் துடிக்க தூக்கிலிடவேண்டும் என்பதும் மனித உரிமை பற்றிப் பேசுவது இதற்கெல்லாம் ஏற்புடைய தல்ல என்ற கோரிக்கையும் சரிதானே?
– ஜெகன், ஆவடி.
ப : தனி நபர்கள்மீது ஏவப்படும், காட்டுமிராண்டித்தனங்களால் ஏற்படும் கோபத்தின் விளைவு இது!
தூக்குத்தண்டனை அகற்றம் என்பது குற்றவாளிகளை உணரவைத்தல், திருத்துதல் என்ற புதிய தண்டனை அணுகுமுறையின் விரிந்த பார்வை விளைச்சல்.
சமூகத்தின் கோபத்தின் வெளிப்பாடு இது.
4. கே: தமிழ்நாட்டில் தி.மு.க. ஆட்சியில்தான் போதைப் பொருட்கள் புழக்கம், பயன்பாடு அதிகமாகிவிட்டதாய் ஒரு புதிய புரளி மூலம் அரசியல் ஆதாயம் அடைய முற்படும் அரசியல் கட்சிகளின், ஊடகங்களின் சதியை முறியடிக்க என்ன செய்ய வேண்டும்?
– ரகு, வண்ணாரப்பேட்டை.
ப : 1. சட்டம் தன் கடமையை தயவு தாட்சண்யமின்றிச் செய்தல்.
2. பிரச்சாரம் – பள்ளி, கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள் மத்தியில் இடையறாத விழிப்புணர்வுப் பிரச்சாரம்.
5. கே: மனித இனத்திற்கே எதிரான ஸனாதனம் பற்றி எதிர்கருத்து கூறுவோருக்கு எதிராய்த் தொடரப்பட்ட வழக்கில்- அரசியல் சட்டத்திற்கு எதிரான ஸனாதனத்தைக் கண்டிக்காமல், அதை ஆதரிக்கும் வகையில் தீர்ப்பில் கூறப்பட்டுள்ள கருத்துகள், புரிதல் இன்மையின் அடையாளமா? வர்ணாசிரமத்தை நியாயப்படுத்தும் முயற்சியா?
– கோபி, பாண்டிச்சேரி.
ப : சட்டவிரோத இரண்டு தீர்ப்புகள் எழுதியவர் – நீதிமன்றத்தில் பதில் அளிக்க கட்டாயமும் ஏற்படக்கூடும். சட்டவிதிமுறைகளைக்கூட கற்காது தீர்ப்பு எழுதும் நீதிபதி பற்றி மக்கள் அறிந்து கொள்வார்கள்.
6. கே: சி.ஏ.ஏ. சட்டத்தை ஆதரித்து வாக்களித்து, அது நிறைவேறக் காரணமாய் இருந்தவர்கள் இப்போது அதை எதிர்ப்பது பச்சையான ஏமாற்று அல்லவா?
– சந்திரன், குடியாத்தம்.
ப : கேள்வியும் நீங்களே, பதிலும் நீங்களே! போதுமா?
7. கே : கோயில் விழாக்களில் இன்னமும் காட்டுத்தனமான செயல்கள் நேர்த்திக்கடன் என்ற பெயரில் நடப்பதைத் தடை செய்ய சட்டப்படி வழக்குத் தொடர முடியாதா?
– பொய்யாமொழி, இராணிப்பேட்டை.
ப : ஏற்கனவே சட்டம் உள்ளது; அது காது கேளாமல், கண் பார்வையற்று உள்ளதோ என்ற அய்யம்தான் எழுகிறது !
8. கே: பள்ளி மாணவர்களை வைத்து நாள் முழுவதும் மோடிக்கு விளம்பரம் செய்வது சட்டப்படி ஏற்புடையதா? தேர்தல் ஆணையமும், நீதிமன்றமும் எப்படி அனுமதிக்கின்றன?
– காஞ்சனா, புளியங்குடி.
ப : தேர்தல் ஆணையம் அவர் கையிலும் பையிலும் இருப்பதால் அனுமதிக்கிறது. ♦