தனியார் பள்ளி ஒன்றில் மிகக்குறைந்த ஊதியத்தில் உடற்கல்வி ஆசிரியராகப் பணியாற்றி வந்த இளைஞன் சேதுபதிக்கு நகர வணிகர்கள் சங்கம் சார்பில் நடைபெற்ற ஒரு விழாவில் “நெடிய ஓட்ட நாயகன்” என்ற பட்டம் வழங்கப்பட்டது. பட்டம் மட்டுமல்லாமல் பத்தாயிரம் ரூபாய்க்கான காசோலையும் வழங்கப்பட்டது. பலத்த கைத்தட்டலுக்கிடையே அவற்றை வழங்கியபின் நகர வணிகர் சங்கத் தலைவர் பழநி அவர்கள் நெடிய ஓட்ட நாயகன் பட்டம் பெற்ற சேதுபதியைப் பாராட்டிப் பேசினார்.
“இங்கே நெடிய ஓட்ட நாயகன் என்னும் பட்டத்தைப் பெற்ற துடிப்பான இளைஞர் சேதுபதியை அறியாதவர்கள் நம்முடைய நகரத்தில் யாருமே இருக்க முடியாது. தனியார் ஆங்கிலப்பள்ளி ஒன்றில் தற்காலிக உடற்கல்வி ஆசிரியராகப் பணியாற்றிவரும் அவர் நாள்தோறும் காலையில் நமது நகரத்தின் நான்கு வீதிகளையும் சுற்றி ஓட்டப் பயிற்சியினை மேற்கொள்வார். ஓட்டப் பயிற்சி என்றால், தான் மட்டுமல்ல; நம் நகரப் பள்ளிப் பிள்ளைகள் சிலரையும், இளைஞர்களையும் அழைத்துக்கொண்டு ஓடுவார். காலை வேளைகளில் நாள்தோறும் இந்த நிகழ்ச்சியைப் பார்க்கலாம். நெடிய ஓட்டம் என்பது அவர் பயன்படுத்தும் சொல். சமூகநீதி நாள், சுயமரியாதை நாள், கல்வி வளர்ச்சி நாள் போன்ற நாள்களில் நெடிய ஓட்டம் என்கிற பெயரில் பலரையும் அழைத்துக்கொண்டு சுமார் இருபது கிலோ மீட்டர் தொலைவு வரை நம் நகரத்திலிருந்து பக்கத்து நகருக்கு நெடிய ஓட்டம் மேற்கொள்வார். உண்மையில் அவர் சுடர் ஏந்தி சுடர் ஓட்டம்தான் மேற்கொள்வார். ஆனால், அவர் நீண்ட தூரம் ஓடுவதால் அவர் அதை நெடிய ஓட்டம் என்று அழைக்கிறார். அதில் முக்கியமான, சிறப்பான செய்தி என்னவென்றால் அவர் ஓடும் வழிநெடுகிலும் சமூகநீதி பற்றியும், சுயமரியாதை பற்றியும், கல்வியின் அவசியம் பற்றியும் மக்களுக்கு விளக்கமாகப் பேசுவது மட்டுமல்லாமல் துண்டறிக்கைகளையும் பொதுமக்களுக்கு அளிப்பார். அவரது இந்தச் செயல்பாடுகளால் பொதுமக்கள் மத்தியில் – குறிப்பாக இளைஞர்கள் மத்தியில் நல்ல விழிப்புணர்வு ஏற்படுகிறது. அவருடைய இந்தச் சேவையைப் பாராட்டியும் இளைஞர்கள் அவர்களுடைய உடல்நலத்தைப் பேணவும், சமூக சிந்தனைகளில் அவர்களை ஈடுபடுத்தி வருவதைப் பாராட்டியும் அவருக்கு ‘நெடிய ஓட்ட நாயகன்’ என்ற பட்டத்தையும், பத்தாயிரம் ரூபாய்க்கான காசோலையையும் அளிக்கிறேன்.”
இவ்வாறு தலைவர் பழநி பேசி முடித்ததும் பலர் மேடைக்கு வந்து சேதுபதிக்குப் பயனாடை அணிவித்துப் பாராட்டினர். இளைஞர்கள் பலர் அவனுடன் புகைப்படங்களும் எடுத்துக்கொண்டனர்.
கூட்டம் முடிந்து வீட்டிற்கு வந்த சேதுபதியை வீட்டுக்கு வெளியே நிற்க வைத்து திருஷ்டி சுற்றிப் போட்டார் அவனது தாயார் சிவகாமி.
“இதையெல்லாம் செய்யத் தேவையில்லை அம்மா. நான் என்ன பெரிசா சாதிச்சுட்டேன்? ஒண்ணும் இல்லை. யார் கண்ணு பட்டுடப் போவுது? எதற்காக இதெல்லாம்?” என்று அம்மாவைப் பார்த்துக் கேட்டான் சேதுபதி.
ஆனால் அதையெல்லாம் பொருட்படுத்தாமல் தன் பணியைச் செய்து முடித்தார் சிவகாமி.
சேதுபதிக்கு அதெல்லாம் பிடிக்காவிட்டாலும் அம்மா எது செய்தாலும் அதற்கு மறுப்புச் சொல்லாமல் விட்டுவிடுவது சேதுபதியின் வழக்கம்.
சேதுபதி சிறுவனாக இருந்தபோதே அவன் தந்தை உடல்நலக்குறைவால் இறந்துவிட்டார். பல இன்னல்களுக்கிடையே அவனை வளர்த்து படிக்க வைத்தது எல்லாம் சிவகாமி அவர்கள்தான். அதனால் அம்மாவின் செயல்களுக்கு அவன் மறுப்பேதும் சொல்வதில்லை.
மறுநாள் பள்ளிக்குச் சென்றவுடன் மாணவர்கள் நடுவில் அவனுக்குப் பெரும் வரவேற்பு கிடைத்தது. நெடிய ஓட்ட நாயகன் பட்டம் பெற்ற சேதுபதியிடம் மாணவ- மாணவிகள் சரமாரியாகப் பல கேள்விகளைக் கேட்டனர்.
“சார், நெடிய ஓட்டம் என்பது என்ன வகை ஓட்டம் சார்; என்று பலரும் கேட்டனர்.
“நீண்ட தூரம் ஓடும் ஓட்டத்தை நெடிய ஓட்டம் என்று நான் குறிப்பிடுகிறேன். நீண்ட தூர சுடர் ஓட்டம்தான் அது”, என்றான் சேதுபதி. தொடர்ந்து பல கேள்விகள் சேதுபதியிடம் கேட்கப்பட்டன.
“சார், நான் இதுவரை ஓட்டப்பயிற்சி செய்ததே கிடையாது; நாளைக் காலையிலேயே நான் ஓடலாமா சார்?” என்று ஒரு மாணவன் கேட்டான்.
“திடீர்னு யாரும் ஓட்டப்பயிற்சி மேற்கொள்ளக் கூடாது. குறைந்தபட்சம் ஒரு மாதம் முதலில் நடைப்பயிற்சி மேற்கொள்ள வேண்டும். அதாவது, ஒரே சீராக நடந்து பழகவேண்டும். அதன் பின்னர்தான் ஓட்டப்பயிற்சி மேற்கொள்ள வேண்டும். பிறகு வேகமாக ஓடிப் பழகவேண்டும்,” என்று விளக்கினான் சேதுபதி.
“நடைப்பயிற்சி செய்ய வேணும்னு சொன்னீங்க. எடுத்தவுடனே நடக்கவோ ஓடவோ செய்யலாமா?”
“கூடாது. சீராக நடப்பதற்கு முன்பாகவோ அல்லது ஓடுவதற்கு முன்பாகவோ உடம்பைச் சூடாக்கும் பயிற்சிகளை அதாவது உடம்பை ஆயத்தப்படுத்தும் பயிற்சிகளைச் செய்ய வேண்டும். பயிற்சிகளை முடித்த பிறகு உடம்பைத் தளர்த்தும் பயிற்சிகளையும் செய்ய வேண்டும்.“
“ஓடி முடித்தபின் ரொம்ப சோர்வாக இருக்குமே சார்”
“உண்மைதான். சோர்வு நீங்க என்ன செய்ய வேண்டும் தெரியுமா?”
மாணவர்கள், சேதுபதி சொல்வதை உன்னிப்பாகக் கவனித்தனர்.
“மூச்சை வேகமாக இழுத்து பிறகு மெதுவாக வாய்வழியாக காற்றை விட்டால் சோர்வு நீங்கிவிடும். அப்போது கைகளை நான் செய்வதுபோல் செய்ய வேண்டும்.
இவ்வாறு சொன்ன சேதுபதி அதைச் செய்து காட்டினான். அதைப் பார்த்த மாணவர்கள் மிகவும் உற்சாகமடைந்தனர். மேலும் பல கேள்விகளைக் கேட்கலாயினர்.
“ஓட்டப் பயிற்சியினால் ஏற்படும் முக்கிய நன்மைகள் என்ன சார்?“
“நிறைய நன்மைகள் இருக்கு. மாணவர்களே! மாணவிகளே! நான் சொல்வதைக் கவனமாகக் கேளுங்க. ஓடுவதால் நமக்கு நிறைய ஆக்ஸிஜன் கிடைக்கும். மூளைக்கு நிறைய ஆக்ஸிஜன் கிடைப்பதால் நமக்கு புத்துணர்ச்சியும் உண்டாகும்.”
அனைவரும் நிமிர்ந்து உட்கார்ந்து சேதுபதி சொல்வதைக் கேட்டனர்.
“ஓடும்போது இரத்த ஓட்டமும் அதிகரிக்கும். அதனால் இதயத்தின் தசையும் பலப்படும். ஓடும்போது உடல் நன்றாக வியர்க்கும். அப்போது உடலில் உள்ள நச்சுப் பொருள்கள் எல்லாம் வெளியேறிவிடும்.”
“ஓடிமுடிச்சவுடன் தண்ணீர் குடிக்கலாமா சார்?”
“வியர்வை இருக்கும்போது தண்ணீர் குடிக்கக் கூடாது. வியர்வை அடங்கிய பின் உடம்பை ஆசுவாசப்படுத்திக் கொண்டு பிறகு தண்ணீர் குடிக்க வேண்டும். அப்போது நிறைய தண்ணீர் குடிக்க முடியும். இதனால் மலச்சிக்கலும் தீரும்.”
“சில பேருக்கு வயிற்றில் தொப்பை இருக்கே சார். ஓடினால் தொப்பை குறையுமா சார்?” என்று ஒரு மாணவன் கேட்டான். அப்படிக் கேட்டுக்கொண்டே வகுப்பில் குண்டான மாணவன் ஒருவனைக் கிண்டலான பார்வையுடன் பார்த்தான். அதைக் கவனித்த வகுப்பில் பலரும் பலமாகச் சிரித்தனர். குண்டாக இருந்த மாணவனுக்கு மிகவும் வெட்கமாகப் போய்விட்டது. அதுவும் மாணவிகள் நடுவில் இருந்து அதிக சிரிப்பொலி கேட்டதால் மிகவும் வெட்கமடைந்து கேள்வி கேட்ட மாணவனை முறைத்துப் பார்த்தான்.
அதைக் கவனித்த சேதுபதி குண்டான மாணவனைக் கருணையோடு பார்த்து, பிறகு மற்றவர்களிடம் அப்படி எல்லாம் கிண்டல் செய்யக்கூடாது எனச் சைகையால் தெரிவித்தான்.
“உடல் எடையை நிச்சயமாகக் குறைக்க முடியும். முதலில் அதற்கு நடைப்பயிற்சி மேற்கொள்ள வேண்டும். பிறகு ஜாக்கிங் செய்யலாம். பிறகு படிப்படியாக வேகத்தை அதிகரிக்கலாம். இப்படிச் செய்தால் சில மாதங்களில் அய்ந்து கிலோ வரை எடை குறையும். தொடையில் உள்ள தசைகள் வலுப்பெறும். அதோடு, கெண்டைக்கால் வலுப்பெற்று முட்டியின் இணைப்புப் பகுதியும் வலுவடையும். இதனால் தேகம் முழுவதும் வலுப்பெற்று நடை உடை பாவனைகளிலும் ஒரு மிடுக்கு ஏற்படும். ஆகவே, குண்டாக யார் இருந்தாலும் அவர்கள் கவலைப்பட வேண்டாம். உடம்பைக் குறைக்கப் பயிற்சிகள் இருக்கப் பயமேன்“, இவ்வாறு கூறிவிட்டு அந்தக் குண்டான மாணவனைப் பார்த்தான் சேதுபதி.
அப்போது அந்த மாணவன் முகத்தில் புன்னகை தவழ்ந்தது. நம்பிக்கை ஒளி அவன் முகத்தில் படர்ந்தது.
மேலும் பேசினான் சேதுபதி.
“ஓட்டப்பயிற்சி தன்னம்பிக்கையை வளர்க்கும். தற்காப்புக்கும் உதவும். மேலும் அலர்ஜி, இருமல் போன்ற நோய்களில் இருந்தும் மீண்டு வரலாம்.”
“சார், பி.எம்.அய் என்றால் என்ன சார்?”, என்று ஒரு மாணவி கேட்டாள்.
“நல்ல கேள்வி கேட்டாய். விளக்கம் சொல்கிறேன் கேளுங்கள். பி.எம்அய் அதாவது பாடிமாஸ் இன்டெக்ஸ் என்பது உடல் எடை குறியீட்டைக் குறிக்கும். தனி நபர் ஒருவர் சரியான எடையில் உள்ளாரா என்பதை இது தீர்மானிக்கும். இதற்கான சூத்திரம் என்னவென்றால் ஒருவரின் எடையை கிலோ கிராமில் கணக்கிட்டு, பிறகு அவரின் உயரத்தை மீட்டரில் கணக்கிட்டு அதன் இருமடங்கால் வகுக்க வேண்டும். உதாரணமாக, ஒருவரின் எடை 65 கிலோ என்போம். அவரது உயரம் 1.65மீட்டர் எனில் 65அய் 1.65 x 1.65 ஆல் வகுக்க வேண்டும். கிடைக்கும் எண்தான் அவரின் பி.எம்.அய். நேரம் ஆகிவிட்டதால் இதுபற்றி விரிவாக பிறகு சொல்கிறேன்”, என்றான் சேதுபதி.
“மாணவச் செல்வங்களே! இந்த வகுப்பில் நீங்கள் பல செய்திகளைத் தெரிந்துகொண்டீர்கள். அடுத்த வகுப்பில் விளையாட்டுத் திடலுக்குச் சென்று விளையாட வேண்டும்” என்று சேதுபதி சொல்லி முடிக்கவும் பாடவேளை முடிந்து’ விட்ட நிலையில் மணியோசையும் கேட்டது.
நாள்கள் சில கடந்தன. மாணவர்களுக்கு தேர்வுகள் நெருங்கின.
இந்நிலையில் ஒருநாள் வகுப்பறைக்குச் சென்றான்
சேதுபதி. அவனது பாடவேளையாதலால் மாணவர்களை அழைத்துக்கொண்டு விளையாட்டுத் திடலுக்குச்
செல்ல வேண்டும் என்பது சேதுபதியின் எண்ணம்.
ஆனால், வகுப்பறைக்குச் சென்றபோது அங்கு வேறு ஒரு ஆசிரியர் பாடம் நடத்திக் கொண்டிருந்தார். அவர் கணக்கு ஆசிரியர் என்பதை அறிந்தான் சேதுபதி.
அவரை வெளியே வருமாறு அழைத்தான் சேதுபதி.
“சார், இது என்னோட வகுப்பு. உடற்கல்வி வகுப்பு. மாணவர்களை நான் விளையாட்டுத் திடலுக்கு அழைத்துச் செல்லவேண்டும்” என்றான்.
“இதோ பாருங்க சேதுபதி சார். தேர்வுகள் நெருங்கிடுச்சு. பசங்க படிக்க வேணும். உங்க விளையாட்டையெல்லாம் தேர்வுகள் முடிஞ்சபின் வச்சுக்க
லாம். நான் பள்ளி முதல்வரிடம் சொல்லி அனுமதி வாங்கிட்டுத்தான். இங்கு வந்து பாடம் எடுத்துகிட்டு இருக்கேன்”, என்று அலட்சியமாகப் பதில் சொன்னார் கணக்கு ஆசிரியர்.
மாணவர்கள் முன்னிலையில் இதுபற்றி விவாதிக்க சேதுபதி விரும்பவில்லை. பள்ளி முதல்வரிடம் பேசிக்கொள்ளலாம் என எண்ணி முதல்வர் அறைக்குச் சென்றான்.
“சார், என்னோட வகுப்பை கணக்கு ஆசிரியர் எடுத்துக் கொண்டிருக்கிறார். நீங்க அனுமதி கொடுத்தீங்களா சார்?”, என்று முதல்வரிடம் கேட்டான்.
“ஆமாம் சேதுபதி. தேர்வுகள் நெருங்கிட்டுது அல்லவா. பசங்க பாஸ் பண்றதுதானே முக்கியம்! அதனால்தான் கணக்குப் பாடம் நடத்த அனுமதி கொடுத்தேன். தேர்வுகள் முடியும் வரை உங்கள் உடற்கல்வி வகுப்புகள் வேண்டாம்.”
“என்கிட்ட கேட்கவே இல்லையே சார். நான் வகுப்புக்குச் சென்று திரும்பி வரும்படி ஆயிடுச்சே. முன்னமே சொல்லி இருக்கலாமே”, என்று சொன்ன சேதுபதி மேலும் தொடர்ந்து பேசலானான்.
“அப்படின்னா உடற்கல்வி முக்கியம் இல்லைன்னு நெனைக்கிறீங்களா? உடல் ஆரோக்கியமாக இருந்தால்தானே சார் நன்றாகப் படிக்க முடியும்! உடலை வளர்த்தேன், உயிர் வளர்த்தேனே என்று திருமூலர் சொல்லியிருக்காரே சார்!”
“தம்பி சேதுபதி! நீ சின்னப் பிள்ளை. இந்த ஆண்டுதான் வேலைக்கு வந்திருக்கிறாய். இப்போ நீ இப்படித்தான் பேசுவே. ஆனால் ஒரு பள்ளிக்கூடத்திற்கு ரிசல்ட்தான் முக்கியம். நாம் எவ்வளவு செஞ்சாலும் மக்கள் கடைசியா உங்க பள்ளியில் ரிசல்ட் எவ்வளவு அப்படின்னுதான் கேட்பாங்க. நூறு சதவிகிதம் ரிசல்ட் கொடுத்தா மக்கள் எதுவும் பேச மாட்டாங்க. குறைஞ்சு போச்சுன்னா நம்ம பள்ளிக்கூடத்தை தாறுமாறாகக் குற்றம் சொல்வாங்க. அப்புறம் நமக்கு அட்மிஷன் குறைஞ்சு போயிடும். இப்ப புரிஞ்சுதா?” என்று சொல்லி முடித்தார் பள்ளி முதல்வர்.
”சார், நம்ம பள்ளிக்கூடத்தில் நிறைய பிள்ளைகளுக்கு உடம்பு சரியில்லாமல் இருக்கு. நான் கொடுக்கிற பயிற்சியால் நிறைய பிள்ளைகளுக்கு நோய்கள் நீங்கிப் போயிருக்கு. பலருக்கு உடல் பருமனும் குறைஞ்சி போயிருக்கு. உடல் பருமனும் ஒரு வித நோய்தானே சார். இந்த நோயை முடிவுக்கு கொண்டுவர அய்.நா.சபை ஒவ்வோர் ஆண்டும் மார்ச் 4ஆம் தேதியை ‘உலக உடல் பருமன் நாள்’ என அறிவித்துள்ளது. இதெல்லாம் உங்களுக்குத் தெரியாத செய்தி இல்லையே சார்! பிறகு ஏன் சார் உடற்கல்வி வகுப்பை இப்படி அலட்சியப்படுத்துறீங்க”, என்று கேட்டான் சேதுபதி.
ஆனால். பள்ளி முதல்வர் மிகவும் எரிச்சல் அடைந்தார்.
“சரி, சரி. எனக்கு நிறைய வேலைகள் இருக்கு. நான் சொல்வதை எல்லோரும் கேட்டுத்தான் ஆகணும். எனக்கு ரிசல்ட் தான் முக்கியம். போய் வாங்க” என்று சொல்லிவிட்டு பேச்சை முடித்துக்கொண்டார் பள்ளி முதல்வர்.
ஆனால், அடுத்த சில நாட்களில் சேதுபதியை தன் அறைக்கு வருமாறு அழைத்தார் பள்ளி முதல்வர். உடனே அவர் அறைக்குச் சென்றான் சேதுபதி.
“சேதுபதி, அடுத்த வாரம் தீபாவளி வருகிறதல்லவா! அதற்காக அந்தத் திருநாளை சிறப்பிக்க ஒரு சுடர் ஓட்டம் நம் நகரத் தெருக்களில் பள்ளி சார்பாக நடத்த வேண்டும். அதற்காக மாணவர்களைத் தயார் செய்யுங்க. நீங்கதான் சுடர் ஏந்தி முன்னால் ஓடவேண்டும்” என்று சேதுபதியிடம் சொன்னார் முதல்வர்.
“தீபாவளிக்காக ஏன் சார் சுடர் ஓட்டம் நடத்தணும்?” என்று கேட்டான் சேதுபதி.
“என்ன சேதுபதி இப்படிக் கேட்டுட்டீங்க! தீபாவளி நம்ம பண்டிகை இல்லையா? மக்கள் அந்தப் பண்டிகையை சிறப்பாகக் கொண்டாட வேண்டும். அதை வலியுறுத்திதான் சுடர் ஓட்டம். இதுவரைக்கும் யாரும் இப்படிப்பட்ட நிகழ்ச்சியை நடத்தி இருக்கமாட்டாங்க. நம்ம பள்ளிதான் பர்ஸ்ட்”, என்று பெருமிதத்துடன் சொன்னார் முதல்வர்.
“சார், இது பள்ளிக்கூடம்; மத நிறுவனம் இல்லை. பள்ளி மாணவர்களை மதத்திற்காகப் பயன்படுத்தக்கூடாது. மேலும் தீபாவளி ஒரு மூடத்தனமான பண்டிகை. ஒருவன் சாவைக் கொண்டாடும் பண்டிகை. அதைக் கொண்டாட மக்களைத் தூண்டுவது தவறல்லவா! பள்ளி சார்பில் மத ஊர்வலமா? கூடாது சார். பள்ளிக்கு ரிசல்ட்தான் முக்கியம்னு சொன்னீங்க. விளையாட்டு வகுப்பையே நிறுத்தி வச்சீங்க. ஆனால், இப்படி ஒரு மடத்தனமான மூடப் பண்டிகைக்காக மாணவர்களைப் பயன்படுத்தச் சொல்றீங்க. இது என்ன சார் நியாயம்?” என்று கடுமையாகக் கேட்டான் சேதுபதி.
“சேதுபதி, நான் சொல்றதை நீங்க கேட்டே ஆக வேண்டும். இல்லாவிட்டால் இங்கே வேலை செய்ய முடியாது. நிகழ்ச்சியை நீங்க நடத்தியே தீரவேணும்”, என்று கண்டிப்புடன் சொன்னார் முதல்வர்.
“சாரி சார். இந்தக் கை அறிவுச் சுடரைத்தான் ஏந்துமே தவிர மூடச் சுடரை ஒருபோதும் ஏந்தாது. மாணவர்களை மதச் செயல்பாடுகளில் ஈடுபடச் செய்வது பெரும் குற்றம். நாம் இருப்பது தமிழ்நாடு. அனைத்து மத மக்களும் ஒற்றுமையாக வாழும் நாடு. பேரறிஞர் அண்ணா அவர்கள் முதல்வராக இருந்தபோதே அரசு அலுவலகங்களில் மதம் சம்பந்தப்பட்ட எந்த ஒரு சின்னமும் இருக்கக்கூடாது என ஆணையிட்டார்கள். அது இன்றும் செயல்பாட்டில் உள்ளது. அது அண்ணாவின் ஆணை. அதை மதித்துச் செயல்பட வேண்டும். நீங்கள் என்னை பள்ளியில் இருந்து நீக்கினால் அதுபற்றி நான் கவலைப்பட மாட்டேன். வெளியே சென்று மக்களைத் திரட்டிப் போராடுவேன். மீண்டும் சொல்கிறேன் சார். என் கை அறிவுச்சுடரை மட்டுமே ஏந்தும் கை”, என்று கைகளை உயர்த்திக் காட்டியபடியே பள்ளி முதல்வர் அறையை விட்டு வெளியே வந்தான் சேதுபதி. ♦