– முனைவர் வா.நேரு
ஆர்வம்தான் எல்லா முயற்சிகளுக்கும் அடிப்படை. ஆர்வம் தான் புதிய புதிய கண்டுபிடிப்புகளுக்கு வழி வகுக்கின்றது. ஆர்வம் தான் புதிய புதிய பாதைகளைக் காட்டுகிறது. ஆர்வத்தின் அடிப்படையில்தான் புதிய புதிய சிந்தனைகள் தோன்றுகிறது. அந்த வகையில் தமிழ்நாட்டின் ஆர்வம், திராவிட மாடல் அரசின் ஆர்வம் ‘எல்லார்க்கும் எல்லாம்’ என்னும் நோக்கத்தைக் கொண்டது. இருக்கும் வாய்ப்புகளை அனைவருக்கும் பகிர்ந்து அளித்து அனைவரையும் உயர்த்துவது என்னும் உயர்ந்த நோக்கம் கொண்டது.
புத்தொழில் முனையும் (ஸ்டார்ட் அப்) செயல்பாட்டுத் திறனில் சிறந்த மாநிலங்கள் அய்ந்தில் ஒரு மாநிலமாகத் தமிழ்நாட்டை இந்திய ஒன்றிய அரசு அண்மையில் அறிவித்திருக்கிறது. டில்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தரவரிசையை வெளியிட்டு, தமிழ்நாடு அரசின் வளர்ச்சி நிலையைப் பாராட்டி இருக்கிறது ஒன்றிய அரசு. இந்தத் தரவரிசை 2018 பிப்ரவரியில் ஆரம்பிக்கப்பட்டது. அப்போது தரவரிசையில் கீழ்நிலையில் இருந்த தமிழ்நாட்டின் ஸ்டார்ட் அப் வளர்ச்சி 2021 – புதிய அமைச்சரவை மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்களின் தலைமையில் அமைந்தபிறகு வளர்ச்சி பெற்று, இப்போது இந்தியாவின் முதன்மை மாநிலங்களில் ஒன்றாக மாறி இருக்கிறது.
ஜாதி ஒழிப்பும்,பெண்ணடிமை ஒழிப்பும்தான் தந்தை பெரியாரின் இரு கண்களான கொள்கைகள். பெண்கள் மற்றும், பட்டியலின ,பழங்குடி வகுப்பினைச் சார்ந்தவர்கள் தலைமை வகிக்கும் ஸ்டார்ட் அப்- நிறுவனங்களுக்குச் சிறப்பான பங்களிப்பைத் தமிழ்நாடு அரசு மற்ற மாநிலங்களைவிட சிறப்பாகச் செய்திருப்பதாக ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது. அது மட்டுமல்லாது நிறுவனங்களுக்கு ஆதரவு,நிதி ஆதரவு அளித்தல், செயல்படுத்துபவர்களின் திறனை வளர்ப்பது என்னும் மூன்று செயல்பாடுகளில் தமிழ்நாடு ஸ்டார்ட் அப் மற்றும் இன்னோவேசன் மிசன்(Tamil Nadu Start up and Innovation Mission) அதிகப் பட்ச மதிப்பான 100 சதவிகிதத்தை எட்டியுள்ளது என்றும் ஒன்றிய அரசின் சான்றிதழ் குறிப்பிடுகிறது. உண்மை வாசகர்கள் சார்பாக மனமார்ந்த வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தமிழ்நாட்டின் திராவிட மாடல் அரசிற்குத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஸ்டார்ட் அப் என்றால் என்ன? 30 ஆண்டுகளுக்கு முன்பு இல்லாத பல வசதிகள் அறிவியலால் இப்போது உலகத்தில் ஏற்பட்டுள்ளன.செயற்கை நுண்ணறிவு, இணையம், இணைய வழி சூம் போன்ற பல செயல்பாட்டுத் தளங்கள், இயந்திர மனிதர்கள் எனப்படும் ரோபோட்டிக்ஸ் போன்ற பல கண்டுபிடிப்புகள் உலகத்தின் போக்கை மாற்றிப்போட்டுள்ளன. இவற்றைப் பயன்படுத்தித் தொழில்கள் ஆரம்பிப்பதை ஸ்டார்ட் அப் என்று சொல்கிறார்கள்.
இன்று நாம் பயன்படுத்தும் பல கணினிச் செயலிகள் ஸ்டார்ட் அப்-களாக ஆரம்பிக்கப்பட்டவையே.உலகத்தில் உள்ள அத்தனை தகவல்களையும் ஓர் இடத்தில் இருந்துகொண்டு பெற முடியுமா என்ற எண்ணத்தின் விளைவும், அந்த ஆர்வமுமே இன்றைக்குக் கூகுள் என்னும் ஜீபூம்பாவை நமக்கு அளித்துள்ளது. எந்தத் தகவலைக் கேட்டாலும் உடனே கிடைக்கிறது. பறவையைக் கண்ட மனிதன் பறப்பதற்காக ஓர் இயந்திரத்தைச் சிந்தித்து வடிவமைத்து நமக்கு அளித்தான். அந்த விமானம் மனிதர்கள் இன்று உலகம் முழுவதும் பறப்பதற்கு உதவுகிறது. அதைப்போல ஒரு புதிய சிந்தனை, ஒரு புதிய நோக்கு ஒரு மனிதனுக்குத் தோன்றினால் அதனை வடிவமைப்பதற்கு இன்றைக்கு இருக்கிற அதி நவீன தொழில் நுட்பம் உதவுகிறது. அந்தத் தொழில் நுட்பத்தை எப்படிப் பயன்படுத்துவது,அதற்கு எப்படிப்பட்ட அணுகுமுறை வேண்டும்? சின்னச்சின்ன யோசனைகளைக் கூட எப்படிப் பெரிய பெரிய முதலீடாக மாற்றுவது, மனதில் தோன்றிய ஒரு புதிய தொழில் ஆரம்பித்தால் அதனை உலக அளவில் எப்படிக் கொண்டு சேர்ப்பது என்பதற்கு வழிகாட்டும் அரசாகத் தமிழ்நாடு அரசு மாறி இருக்கிறது என்பதுதான் இதன் சிறப்பு.
வாய்ப்பு உள்ளவர்கள் https://startuptn.in/about/ என்னும் இணையதளத்துக்குச் சென்று பாருங்கள். பல செய்திகள், விளக்கங்கள் இந்த ஸ்டார்ட் அப் என்பதைப் பற்றி உள்ளன. இன்றைக்குத் தமிழ்நாட்டின் உயர் கல்வி பெறுவோர் எண்ணிக்கை 50 சதவிகிதத்திற்கு மேல்.இந்தக் கல்வியை,மனித வளத்தைத் தொழில் வளமாக மாற்றுவதற்கான திட்டமே இந்த ஸ்டார்ட் அப் திட்டம் எனலாம்.
ஒரு புதிய தொழில் திட்டத்தைத் தொடங்கவேண்டும் அல்லது ஏற்கனவே இருக்கும் தொழிலை மேம்படுத்தி ஒரு புதிய பங்களிப்பைக் கொடுக்கவேண்டும் என்று எண்ணுகிறபோது, அந்தத் தொழிலை ஏற்கனவே செய்து கொண்டு இருப்பவர்களின் அனுபவம் தேவைப்படுகிறது.கிராமத்தில் வேடிக்கையாகச் சொல்வார்கள், ‘பலசரக்குக் கடை வைக்கவேண்டுமானால், சில ஆண்டுகள் பலசரக்குக் கடையில் வேலையாளாக இரு ‘ என்று.இன்றைக்கு அந்த அவசியம் இல்லாத அளவிற்குப் பலர் தங்கள் தொழில் நுட்பங்களைப் பகிர்ந்துகொள்ள முன்வருகிறார்கள்.
அவர்கள் வழிகாட்டிகள்(Mentor) என்று அழைக்கப்படுகிறார்கள். அப்படி முன்வருபவர்களின் பட்டியல் தனியாக இந்த இணையதளத்தில் இருக்கிறது.அவர்களின் அனுபவப் பதிவும் எழுத்தாகவும் குரலாகவும் இருக்கிறது. மற்றும் இணையவழியாகச் சந்தித்துத் தங்கள் கேள்விகளைக் கேட்கவும், அய்யங்களைத் தீர்த்துக்கொள்ளவும் இந்த அமைப்பே வாய்ப்பு ஏற்படுத்தித் தருகிறார்கள்.
பல குடும்பங்கள் புதிதாகத் தொழில் தொடங்க தன் குடும்பத்து உறுப்பினர்களை ஊக்குவிப்பதில்லை.தொழில் தொடங்குதல் என்றாலே ஒரு தயக்கம் இருக்கிறது. ஒரு தொழிலைத் தொடங்கிச் செய்து கொண்டிருப்பவர்களே தங்கள் பிள்ளைகளோ, உறவினர்களோ தொழிலுக்குள் உள்ளே வருவதற்கு ஊக்குவிக்கிறார்கள்.இந்த ஸ்டார்ட் அப் அமைப்பு ‘தொழில் முனைவோர்களுக்குச் சமூக ஆதரவை விரிவாக்குதல் என்னும் நோக்கத்தையும் கொண்டுள்ளது எனக் குறிப்பிட்டுள்ளனர்..
புதிய தொழில் நுட்பங்கள் ஓர் உலகலாவிய அணுகுமுறையை அளிக்கிறது. இணையத்தின் வழியாக எளிதாக நாம் இன்று வெளி நாட்டில் இருப்பவர்களோடு பேச முடிகிறது. உங்கள் ஊரில் பொருட்களின் விலை என்ன, இங்கு உள்ள ரூபாய்க்கு அங்கு எவ்வளவு மதிப்பு என்று இயல்பாகப் பலரும் பேசுவதைக் கேட்க முடிகிறது.வெளி நாட்டில் வாழும் மனிதர்களுக்கு என்ன தேவை என்பதை ,இங்கிருந்து போய் வெளி நாட்டில் வசிக்கும் நம் தமிழ்நாட்டைச் சார்ந்தவர்கள் சொல்கிறார்கள். பகிர்கின்றார்கள். அப்படிப்பட்டவர்களுக்குத் தேவையான பொருட்களை, தொழில்நுட்பத்தைத் தயாரிக்கும் பணியை ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் செய்கின்றன.வெளி நாட்டவர்களும், வெளிநாட்டுக் குடி உரிமை பெற்றவர்களும் நம் நாட்டு ஸ்டார்ட் அப் நிறுவனங்களில் பங்குதாரர்களாக ஆவதற்கான தமிழ் ஏஞ்சல்கள் என்னும் அமைப்பையும் இந்த அமைப்பு ஏற்படுத்தி இருக்கிறது.இதன் மூலம் உலக அளவிலான இணைப்புகளும், கூட்டாண்மைகளும் ஏற்படும் பெரும் வாய்ப்புக் கிட்டுகிறது.
தமிழ்நாட்டில் 7500க்கும் மேற்பட்ட பதிவு செய்யப்பட்ட ஸ்டார்ட் அப்கள் இருப்பதாக அந்த இணையதளம் குறிப்பிடுகிறது. அவற்றில் 2250 ஸ்டார்ட் அப்கள் 2022ஆம் ஆண்டில் பரிசீலிக்கப்பட்டு, பதிவு செய்யப்பட்டவை என்று குறிப்பிடுகிறது.
தமிழ்நாடு அரசின் தொழில்துறைச் செயலாளர் வி.அருண்ராய் அவர்கள், “சென்னைக்கு வெளியே உள்ள இடங்களில் ஸ்டார்ட் அப்களில் கவனம் செலுத்தியது தமிழ்நாட்டிற்கு உதவியது.நாங்கள் புறப்பகுதிகளிலும் வளர்ச்சியை விரும்பினோம். ஆகையால் மதுரை,ஈரோடு போன்ற இடங்களிலும் மய்யங்களைத் தொடங்கினோம்.சமூக நீதி எங்களுக்கு உதவிட்ட மற்றொரு அம்சமாகும்.பட்டியலின, பழங்குடி(SC/ST) களுக்காக நிதி உள்ள வேறு எந்த மாநிலமும் இந்தியாவில் இல்லை.இது எங்களைத் தனித்து நிற்கவைத்தது” என்று குறிப்பிட்டு இருக்கிறார். (தி ஹிந்து ஆங்கில நாளிதழ்- 17.01.2024 ,சங்கீதா கந்தவேல் அவர்களின் கட்டுரை)
ஸ்டார்ட் அப் நிறுவனங்களின் வளர்ச்சியைப் பற்றி உரையாற்றிய தமிழ்நாடு முதலமைச்சர் மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்கள்” கல்வியில் சிறந்த தமிழ்நாடு என்பது மட்டுமல்ல
தொழிலில் சிறந்த தமிழ்நாடு” என்னும் நிலையை உருவாக்குவோம் என்று குறிப்பிட்டுள்ளார்.உண்மைதான்.தந்தை பெரியாராலும் திராவிட இயக்கத்தாலும் பண்படுத்தப்பட்டுள்ள மண் இந்தத் தமிழ்நாடு மண்.வேறு வேறு மத நம்பிக்கைகள் இருந்தாலும் ஒருவரை ஒருவர் மதித்து உறவு கொண்டாடி மகிழும் மண் இந்தத் தமிழ் நாட்டுமண்.
ஸ்டார்ட் அப் என்றால் என்ன? அதன் மூலமாக எப்படித் தொழில் முனைவோர் ஆவது? அதற்கான பயிற்சி பெறுவது எப்படி? அதற்கான முயற்சிகளை எப்படி மேற்கொள்ளுவது போன்ற பல்வேறு செய்திகள் தமிழ் நாட்டு மாணவர்களுக்குச் சென்று சேரவேண்டும்.ஒவ்வொரு கல்லூரியிலும், மேல்நிலைப்பள்ளியிலும் இதற்கான கருத்தரங்குகள் நடைபெறவேண்டும்.இது ஓர் இயக்கமாக நடைபெறவேண்டும். இன்னும் கேட்டால் தந்தை பெரியார் அவர்கள் ஆங்கிலம் நம் முன்னேற்றத்திற்கு வேண்டும்,வீட்டில் கூட ஆங்கிலத்தில் பேசுங்கள் என்று சொன்னதைப் போல ஒவ்வொரு வீட்டிலும் இந்த ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் பற்றிப் பேச வேண்டும். ஒடுக்கப்பட்ட மக்களிடம், பட்டியலின மற்றும் பிற்படுத்தப்பட்ட மாணவ, மாணவிகளிடம் இன்னும் விரிவாக இந்த நிறுவன்ங்கள் பற்றிய செய்திகள் போய்ச் சேரவேண்டும்.இன்னும் கேட்டால் திராவிட இயக்கங்கள் நடத்துகின்ற அரசியல் மேடைகளில் கூட ஓர் அய்ந்து நிமிடம் இந்த ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் பற்றி உரையாற்றவேண்டும்.
ஏனெனில், உலக அளவில் எதிர்காலம் என்பது இந்த ஸ்டார்ட் அப் நிறுவன்ங்கள் கையில்தான் என்று வல்லுநர்கள் குறிப்பிடுகின்றனர். தமிழ்நாடு அரசு ஸ்டார்ட் அப் பற்றி எடுத்திருக்கும் அத்தனை
நல் முயற்சிகளையும் மக்களிடத்தில், மாணவர்களிடம் கொண்டுபோய்ச் சேர்ப்போம்.